தான் அடிமை என உணர்ந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான விழிப்பும், எழுச்சியும் நீங்களெல்லாம் நினைப்பது போல அவ்வளவு நாகரீகமாகவும்,நாசூக்காகவும் இருக்காது தான்.

இதுவரை மொட மொட வெள்ளைச்சட்டைப் போட்டுக் கொண்டு சட்டைப்பையில் கட்சித் தலைவன் படத்தை வைத்துக்கொண்டு பெரிய பெரிய கார்களில் பவனி வந்து, பிளக்ஸ் அடித்து,போஸ்டர் அடித்து வட்டம்,நகரம்,ஒன்றியம் ,கட்டம், சதுரம் என பொறுப்பு வாங்கி பஞ்சாயத்து பண்ணுவதுதான் அரசியல் என்பதை தலைகீழாக மாற்றத் துடிக்கும் படித்த இளைஞனின் அரசியல் அவ்வளவு பரவசமாக இருக்காது தான்..

வீழ்ந்த கதையை அறிந்து,. வீழும் நிலையை உணர்ந்து,இனி எழ வேண்டிய நிலை அறிந்து பதவி,பட்டம்,பணம் என எதையும் எதிர்பாராமல் உடல் முழுதும் வியர்வை வழிய வீதி தோறும் அலைந்து எளிய மக்களின் புரட்சியை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்க உழைப்பவர்களின் உழைப்பு அவ்வளவு உவப்பானதாக இருக்காது தான்.

உள்ளன்போடு தாய் மண்ணை நேசித்து, உதிரம் வழிய இறந்த உடன் பிறந்தவர்கள் நினைவை சுமந்து, இனம் அழிய உடன் நின்ற துரோகிகளுக்கு இனி எழ முடியாத வீழ்ச்சியை அளித்து, எதிரிகளின் பகை முடிக்க விலை தலையே ஆனாலும் தரத்துடித்து, இனம் அழிந்த வலி ஈந்த கடும் சினத்தையே அரசியல் மூலமாகக் கொண்டு ,மூர்க்கமாக நிற்கும் எங்களின் எழுத்தோ,கருத்தோ,பேச்சோ, மூச்சோ நீங்கள் நினைக்குமளவிற்கு அவ்வளவு மென்மையானதாக இருக்காது தான்.

இதுவரை இருந்ததே இனிமேலும் இருக்க வேண்டும்.. அதே துருப்பிடித்த உங்களது தகர தத்துவம்,
அதே நீர்த்துப் போன உங்களது வாய்க்கரிசி வாக்குறுதிகள், அதே யாருக்கும் பயன் படாத பட்டுப்போன வசனங்கள்,அதே காலத்தை கடத்தும் உங்களது தவறுகள் இன்னும் இனி வரும் தலைமுறைக்கும் நீடிக்க வேண்டும் என்ற உங்களது ஆத்மார்த்த பிராத்தனைகளுக்கு வெடிகுண்டு வைக்கும் எங்களை உங்களால் சற்றும் சகிக்க முடியாதுதான்..

முடியாது தான்..முடியாது தான்

எங்களது உடையும்,எங்களது படையும் உங்களை வெறுப்பேற்றும் தான்..

எங்களது மொழியும்,எங்களது வழியும்
உங்களை உறங்க விடாது தான்..

எங்களது தர்க்கமும்,எங்களது தத்துவமும்
உங்கள் கோட்டைகளை தகர்க்கும் தான்..

ஆமாம் . திட்டமிட்டுதான் நகர்கிறோம்.

வன்மம் கொண்டுதான் வளர்கிறோம்.

முடிந்தால் எதிருங்கள்.

இல்லையேல் நகருங்கள்.

எதுவும் முடியவில்லை யா..

இப்படியே உங்கள் மனதிற்குள்ளாகவே
பதறுங்கள்.கதறுங்கள்.

ஏனெனில் நாங்கள் வானையே உரச
வளரும் சிகரங்கள்.

நாம் தமிழர்.