ஜன்னல்களை கடந்து நான் நகரும்போது …
என் அரவம் கேட்டு
கண்களை உயர்த்தி
கேட்கிறார்கள்..
“நான் கடலைச் சென்று அடைவது எப்படி..?”
அப்போது
கடலின் நட்சத்திர எதிரொலிகளை .. நுரையின் சிதறல்களை..
மணற் சுழல்களின் சிதறலை..
பின்னொதுங்கும் உப்பின் முனகலை ….
கரையில் ஒதுங்கும் கடற்பறவைகளின் கூக்குரலை…
எதுவும் பேசாமல் ஒலிபரப்புவேன்.
அவ்வாறு என்னில் ஊடே..
சுதந்திரமும் கடலும்
மூடப்பட்ட இதயத்திற்கு
பதில் அளிக்கும்.
-பாப்லோ நெருடா (தமிழில் சுகுமாரன்)
நிறமற்ற பல நிறங்களின் அடர்த்தியே இருட்டு. அதுவும் சிறைச்சாலை கொண்டிருக்கின்ற இருட்டு இன்னும் தனித்துவமானது. பகலிலும் சூழ்ந்திருக்கும் இருட்டு. விழிகளிலும் படர்ந்திருக்கும் இருட்டு. அடைப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனதிலும் அடி ஆழ ஏக்கமாய்.. விடுதலை விம்மலாய் விரிந்திருக்கும் இருட்டு. அந்த இருட்டு ஒரு திரவம் போன்றது. ஏறக்குறைய பாதரசம் போல. சிறைபட்டு கிடக்கின்ற அவர்களின் உடலில் அந்த இருட்டு கொடிய அமில மழையாய் தூறிக் கொண்டு இருக்கின்ற வடிவம் கொண்டது.
சிறையின் நோக்கம் குற்றம் செய்தவர்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தி தடுத்து வைப்பதல்ல. மாறாக அவர்களை உளவியலாக சிதைப்பது .நீ சமூகத்திற்கான மனிதன் இல்லை என்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொண்டே இருப்பது. நீ உயிருள்ள பிணம். உனக்கென்று உணர்ச்சிகளோ எண்ணங்களோ இல்லை என்று அடைப்பட்டு கிடப்பவரின் ஆன்மாவில் சதா அலறிக் கொண்டே இருப்பது.
உடையிலிருந்து ..உணவிலிலிருந்து ..
இயல்பான பழக்கவழக்கங்களில் இருந்து.. ஒரு மனிதனை அப்புறப்படுத்தி நீ அதிகார கரங்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு கைதி ஒரு அடிமை என அவருக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பது.
இன்னமும் ஜனநாயக முறைமைகளுக்கு உட்படாத இந்திய சிறைச்சாலைகள் சர்வாதிகாரத்தின் வடிவமாக ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மிச்சமாக இருக்கின்றன. வெட்டவெளி வானத்தையும்.. எப்போதாவது வீசி தழுவி பார்க்கும் காற்றையும் மட்டுமே அனுமதிக்கின்ற சிறை வளாகங்கள் சிறைப்பட்டவரின் கனவினை காயப்படுத்தும் கத்தி முனைகளாக இருந்து வருகின்றன.
27 வருடங்கள். ஒரு முடிவடையாத வழக்கு. செய்யாத குற்றம். ஆதாரங்களை புறக்கணித்த தண்டனை. இன்னும் முழுமையான உண்மை வெளிவராத சூழல். தண்டனை அளித்த நீதிபதிகளுக்குள்ளாகவே மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருக்கிற விசித்திரம். இதுதான் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு.
“அடி தளரும்போது ..
பேச்சு தடுமாறும்போது..
மனம் கஷ்டத்தை விழுங்குகிறது.
மௌனம் இருப்பாகிறது.”
(சிறைப்பட்ட கற்பனை என்ற நூலில் வரவர ராவ்))
அப்படி மௌனத்தையே இருப்பாக.. மன வலியையே உடையாக.. எதிர்காலம் குறித்த ஏக்கத்தையே வாழ்வியல் இயக்கமாக 27 வருடங்களாக கொண்டிருக்கின்ற ஏழு தமிழர்களின் விடுதலை தமிழர்களின் கையாலாகாத காரணத்தினால் இன்னும் கானல்நீராகவே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
உலகில் வேறு எந்த இனத்திற்கும் நேராத துயரம். இதை ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி தான் நமது தாய் மண் முற்று முதலுமாக அழிக்கப்பட்டது. இதே ராஜீவ்காந்தி கொலையை காரணமாக காட்டிதான் நம் உடன் பிறந்தார் லட்சக்கணக்கில் கொலை செய்யப்பட்டு
உயிர் துறக்கும் போது நம் உதடுகள் கூட அசையாமல் கவனமாக கண்காணிக்கப்பட்டு ..தடை செய்யப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை தமிழர்கள் மீது கவிழ்ந்து இருக்கிற குற்ற உணர்வாக இந்திய அரசு கட்டமைத்து வருகிறது. எந்த உரிமைக்கு குரல் எழுப்பினாலும் நீங்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் என்று ஏகாதிபத்தியத்தின் விரல்கள் நம்மை நோக்கி நீண்டு கொண்டிருக்கின்றன. எவ்வளவு மனித உரிமைகள் பேசுகிறவர்கள் மனித உரிமைகளுக்காக போராடுபவர்கள் ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு 28 வருடங்களாக சிறைபட்டு கிடைக்கின்ற அந்த ஏழு தமிழர்களைப் பற்றி பேச மறுக்கிறார்கள். இன்னமும் நம் தமிழ்நாட்டிலேயே கூட ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டு விடுதலை கேட்கிறார்கள் என்றெல்லாம் குரல்கள் எழுவதை நம்மால் வேதனையுடன் கவனிக்க முடிகிறது.
ஏனெனில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது மிக நுட்பமாக கட்டமைக்கப்பட்ட ஒரு பெரும் கதை. கதை எழுதி அவர்களே கதைக்கான கதாபாத்திரங்களை உருவாக்கினார்கள் . கதைக்கான வில்லன்களை தயார் செய்தார்கள் . வில்லன்களாக சித்தரிக்கப்பட்டவர்களுக்கு அவர்களே தண்டனையும் வழங்கினார்கள். இந்தப் பெரும் கதையை புனைவு செய்யப்பட்ட காட்சியை நம்பியே தீர வேண்டுமென நாம் அனைவரும் கட்டாயப்படுத்தப்பட்டு இறுதியில் நம்பியும் இருக்கிறோம்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரிகளான கார்த்திகேயன் ரகோத்தமன் ஆகியோர் எழுதிய நூல்களிலேயே ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு நிற்கின்ற விசித்திரமான காட்சியை நாம் பார்க்கிறோம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தடா சட்டம் இவ்வழக்கிற்கு பொருந்தாது என்றும் ராஜீவ் காந்தி கொலை என்பது தனிப்பட்ட பகையின் காரணத்தால் ஏற்பட்ட கொலையே தவிர அது பயங்கரவாத செயல் இல்லை என்றும் ராஜீவ் கொலை இந்திய நாட்டிற்கு இந்திய மக்களுக்கு எதிரானது இல்லை என்றும் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கினை உச்சநீதிமன்றத்தில் விசாரித்த நீதியரசர்களான வாத்வா மற்றும் தாமஸ் ஆகியோர் இடையே தீர்ப்புரையில் பெரும் முரண்கள் இருந்ததை இந்திய நீதி சமூகமும் சட்ட வல்லுனர்களும் கவனிக்காதது போல கள்ள மௌனம் காத்தது இந்த வழக்கில் நிகழ்ந்திருக்கிற இன்னொரு கொடுமை.
பூந்தமல்லி தடா நீதிமன்றம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்க 26 தமிழர்களுக்கும் தூக்கு தண்டனை அளித்தது. இந்தத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் இன்று சதைப்பற்று இருக்கிற 7 தமிழர்களை தவிர மற்ற 19 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை இவர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் சொன்ன காரணம் இவர்கள் யாரும் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. உதவி செய்தவர்கள் மட்டுமே அந்த உதவிக்கான தண்டனையும் கூட இவர்கள் ஏற்கனவே அனுபவித்து விட்டார்கள் என்று தெளிவாக அறிவித்தது.
ஆனால் இதில் என்ன மாபெரும் கொடுமை என்றால்.. இப்போது சிறைபட்டிருக்கிற ஏழு தமிழர்களும் கூட கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அதற்கான ஆதாரமும் யாரிடத்திலும் இல்லை. வழக்கை ஜோடித்த சிபிஐ கூட இன்று சிறைபட்டு இருக்கிற இந்த ஏழு தமிழர்கள் ராஜீவ் கொலையில் நேரடியாக தொடர்பு கொண்டதற்கான ஒழுங்கான சாட்சியம் எதையும் முன்வைக்கவில்லை. பிறழ் சாட்சிகள், முரண் ஆதாரங்கள் ,கவனக்குறைவான வாக்குமூலங்கள், என்றெல்லாம் மிக தகுதிகுறைவான ஒரு வழக்கை சிபிஐ தாக்கல் செய்து இன்று ஏழு தமிழர்கள் வாழ்வினை முடக்கிப் போட்டு வைத்திருக்கிறது.
காவல்துறையின் பிடியில் இருக்கக்கூடிய ஒருவர் அளிக்கும் வாக்குமூலத்தை நீதிமன்ற சாட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என இந்திய சாட்சிய சட்டம் தெளிவாக கூறுகிறது. ஆனால் இவ்வழக்கிலோ காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான அடி உதை களுக்கு நடுவே பெறப்பட்ட வாக்குமூலங்கள் தான் இவ்வழக்கின் அடிப்படை ஆதாரங்களாக பயன்படுத்தப்பட்டன .
இதுவரை இந்திய நீதி முறைமை கொண்டிருந்த அனைத்து மரபுகளையும் இந்த வழக்கு காற்றில் பறக்க வைத்தது. செத்துப் போனவன் யாரோ ..சிக்கியவனை சிறைப்படுத்து என்பதுபோல ஏதோ காரணங்களால் சிக்கியவர்களை 27 வருடங்களாக அநியாயமாக சிறைபடுத்தி வைத்திருப்பது என்பது ஒட்டுமொத்த மானுட தன்மைகளுக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கிற பெரும் கொடுமை.
27 வருடங்களை இந்த மனிதர்கள் எவ்வாறு கடந்திருப்பார்கள் என்று நினைக்கும் போது .. நம்மால் வேதனை படாமலும்.. அதேசமயம் நம்பிக்கை கொண்ட குறிப்பாக தமிழர்கள் மீது தமிழர்களின் போராட்ட உணர்வின் மீது நம்பிக்கை கொண்ட அவர்களின் மன உரம் குறித்து நம்மால் வியக்காமலும் இருக்க முடியாது.
நான் அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான விடுதலைக்கு விலங்கு எழுதியபோது சிறையில் அவரை சந்தித்து பல மணி நேரம் பேசிக்கொண்டிருக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரோடு அண்ணன் பேரறிவாளனும் வருவார். இருவரும் இணைந்து அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களை ,புன்னகை தவழும் முகங்களோடு.. ஆழமான சொற்களோடு .. ஏதோ கிண்டலாக பேசுவது போல துயரத்தையும் நகைச்சுவையாக மாற்றி என் தோளில் கை போட்டவாறே கதைசொல்லி முடிப்பார்கள். கேட்கும் நமது விழிகள்தான் கலங்குமே ஒழிய, அவர்கள் விழிகள் எவ்வித உணர்வுமற்று.. சலனமற்று அமைதியாக இருக்கும்.
ஏனெனில் அவர்கள் அழுவதற்கு இனி அவர்களது கண்களில் கண்ணீரும் இல்லை . உள்ளுக்குள் ஊறிக்கொண்டிருக்கும் சோகத்தை வார்த்தைகளில் வடித்தெடுக்க அவர்களுக்கு வலிமையும் இல்லை.
அண்ணன்கள் முருகன் சாந்தன் ஜெயக்குமார் ஆகியோரோடு நான் மிக நெருக்கமாக பழகியிருக்கிறேன். அண்ணன் ரவிச்சந்திரன் மதுரை சிறையில் இருப்பதாலும் ,அண்ணி நளினி அவர்கள் மகளிர் சிறையில் இருப்பதாலும் பார்க்க வாய்ப்பில்லாமல் போனது.
குறிப்பாக அண்ணன்கள் ராபர்ட் பயஸ் மற்றும் பேரறிவாளன் ஆகிய இருவரும் என் குடும்பத்தின் உறுப்பினர்களாக மாறிப் போனவர்கள். எம் அம்மா அற்புதம் அவர்கள் தன் மகனை மீட்க வயதான தன் கால்களால் நடந்து நடந்து..அடைக்கப்பட்டிருக்கிற கதவுகளை எல்லாம் தட்டி தட்டி ..எங்கெங்கெல்லாம் விடுதலைக்கான குரல்கள் எழும்புகிறதோ அங்கெங்கல்லாம் ஓடிப்போய் உடன் நின்று சோர்ந்தவர். தனது வயதான காலத்திலாவது தனது ஒரே மகன் வீடு திரும்ப மாட்டானா என்று அழைப்பு மணியை ஏங்கி பார்த்துக் கொண்டிருக்கின்ற அந்த தாயின் கண்ணீருக்கு இங்கு எவரிடத்திலும் பதில் இல்லை.
அண்ணன் ராபர்ட் பயஸ் மிகுந்த மனவலிமை கொண்டவர். எதையும் புன்னகையால் வென்று விட முடியும் என்று நம்புகிறவர். அவர் கட்டி அணைக்கும் போதே தெரியும் அவர் பேரன்பின் முகவரி என.. என் தம்பி இடும்பாவனம் கார்த்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அண்ணன் இராபர்ட் பயஸையும், அண்ணன் பேரறிவாளனையும் பார்க்க நான் சென்ற போது…அப்பொழுதுகளில் மிக இளையவனான தம்பி கார்த்தியை அண்ணன்கள் வயசும் பேரறிவாளனும் செழுமைப்படுத்திக் கொண்டே இருந்ததை என்னால் கண்ணால் காணமுடிந்தது. சிறை மீண்டு வந்த தம்பியும் அதைத்தான் பிரதிபலித்து கொண்டிருக்கிறான்.
ஆகச் சிறந்த மனிதர்கள். விடுதலையாகி வெளியே இருந்தால் நாட்டை வழி நடத்தும் திறன் கொண்ட தலைவர்கள். அண்ணன் பேரறிவாளன் பெயருக்கு ஏற்றாற் போல மிகுந்த வாசிப்பறிவு கொண்டவர். பயஸ் அண்ணன் சிறை வளாகத்தில் புறா வளர்த்து ஓவியங்கள் வரையக்கூடிய மயிலிறகு மனது கொண்ட கலைஞன்.
இப்படி ஒவ்வொருவரும் தனித் திறன்கள் கொண்ட தனிப்பெரும் ஆளுமையாக திகழ்பவர்கள். ஆனால் காலம் அவ்வளவு கருணையானதல்ல. வாழ்வு ஒன்றும் வசந்த பூக்களால் நிரம்பிய பூக்கூடை அல்ல. பெரும் சாபமே கொண்ட ஆழ்கிணறு என்பதனை அவர்களது 27 வருட சிறை வாழ்க்கை உணர்த்துகிறது.
அவர்கள் பட்டிருக்கும் சிறை என்பது தமிழ்த் தேசிய இனம் பட்டிருக்கும் கடன். நம் ஒவ்வொருவரின் மீது சுமத்தப்படுகின்ற சுமை. உறக்கத்தின் போது கூட நம் கனவிலும் நம்மை வெறிநாய் போல துரத்துகின்ற கொடும் நினைவு.
அவர்களைச் சந்தித்த பிறகு மகிழ்ச்சியான பொழுதுகளில் கூட குற்ற உணர்வோடு நான் இற்றுதான் போய் இருக்கிறேனே ஒழிய… இயல்பானவனாக இருந்ததில்லை.
இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம். இருக்கிறது.
அதை உணர்ந்துதான் தங்கை செங்கொடி தீக்குளித்தாள். உடன் பிறந்த அண்ணன்கள் எவ்வித ஆதரவும் மற்றும் தூக்கில் தொங்க விடக்கூடாது. நீதி செத்து விடக்கூடாது… அநியாயமாக கைது செய்யப்பட்ட 7 தமிழர்களுக்கு ஆதரவாக 12 கோடி தமிழ்த்தேசிய இனத்தில் ஒருவர் கூட இல்லை என்ற பழிச்சொல் இந்த இனத்தின் மீது விழுந்து விடக்கூடாது என்ற பரிதவிப்பில் தான் எம் தங்கை செங்கொடி தீக்குளித்தாள். அவள் காலம் காலமாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறாள். விடுதலை என்ற கனவு நிறைவாகும் வரை அவள் எரிந்து கொண்டுதான் இருக்கிறாள். அவள் எரியும் தீயில் உறைகிறது விடுதலைக் கனவு.
ஒரு ராஜீவ் காந்தி இறந்தற்காக இன்னும் எத்தனை தமிழச்சி தாலி அறுக்க வேண்டும் ..???
இன்னும் எத்தனை தமிழர் கொல்லப்பட வேண்டும்..???
ஈழம் போல இன்னும் எத்தனை தேசங்கள் அழிய வேண்டும்..???
இன்னும் எத்தனை விழிகள் கண்ணீர் விட வேண்டும்..???
உண்மையான குற்றவாளிகளை உலகத்திலே உலவ விட்டு விட்டு.. தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்தினால்.. ஏழு தமிழர்கள் அநியாயமாகச் அடைபட்டுக் கிடப்பது என்பது ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் மீது விடுக்கப்பட்டிருக்கிற சவால்.
இதை உணர்ந்துதான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 7 தமிழர் விடுதலையில் உறுதியாக நின்றார். காரியங்களை நகர்த்தினார். அவரது வழியில் ஆட்சி செய்வதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி உண்மையில் ஜெயலலிதாவுக்கு கட்ட வேண்டியது மணிமண்டபம் அல்ல ….அவரது பெரும் கனவான 7 தமிழர் விடுதலையை சாத்தியப்படுத்துவது.
7 தமிழர் அடைப்பட்டு இருக்கின்ற ஒவ்வொரு நொடியும் தமிழர்களின் இயலாமை உலகிற்கு உரத்த குரலில் அறிவிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
இனத்தின் பெருங்கடன் 7 தமிழர் விடுதலை.
கடனை அடைக்க களத்தில் கூடுவோம்.
ஏழு தமிழர் விடுதலையே.. இனத்தின் விடுதலை.
தங்கை செங்கொடிக்கு வீரவணக்கம்.