ஒரு முறை நீண்ட பயணத்தின் போது அண்ணன் சீமானிடம் ஒரு கேள்வியை கேட்டேன்.

சமரசம் என்றால் என்ன.. என்னை உற்று நோக்கியவாறு அவர் சட்டென்று பதிலளித்தார்

அது ஒரு சாவு.

உண்மையில் சமரசம் செய்து கொள்ளுதல் என்பது மானுட வாழ்வின் ஒரு அங்கமாக மாறி போனபின் சமரசம் என்பதே மரணத்திற்கு சமமானது என நினைக்கும் அண்ணன் சீமான் தான் தனித்துவமானவர் என்பதை ஒவ்வொரு முறையும் நிருபிப்பவர்.

எத்தனையோ முறை தன்னை நோக்கி வருகின்ற கனிவான அழைப்புகளை தவிர்ப்பது குறித்து அவர் பலமுறை சிந்தித்து இருக்கிறார். சட்டென ஏற்படும் சலனம் கூட தன் கொள்கைக்கான மரணம் என்பதை அவர் மறந்துவிடாமல் நிதானித்து இருக்கிறார்.

நெருங்கிய நண்பர்கள் நலம்விரும்பிகள் ஆகியோர் மூலம் வருகின்ற இந்த அழைப்புகள் தன்னை தவிர்க்கமுடியாத சமரசத்திற்கு உட்படுத்தி விடும் என்று எண்ணி தவிர்த்திருக்கிறார்.

ஊரே அம்மணமாக அலைகிறது.‌ உனக்கு என்ன..என்று பலரும் கேட்டபோது என் மனதிற்கு எது சரியானதோ அதை நோக்கியே போவேன் என்று சொல்லி.. அவர் தனியே சென்று கொண்டிருக்கிறார்.

சமரசமற்ற அரசியல் என்பது சற்றே கடினமானது. அதுவும் வெகுஜன தேர்தல் அரசியலில் சமரசம் என்பது மறுக்க முடியாத அவசிய குணம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஏதோவொரு கூட்டணியில் இணைந்து நாலைந்து சீட்டுகள் வாங்கி இரண்டு மூன்று வெற்றி பெற்று அரசியல் அங்கீகாரம் பெற்றுவிடலாம் என்று சில பெரியவர்கள் ஆலோசனை சொன்னபோது, நான் இரண்டு மூன்று சீட்டுக்காக வந்தவன் அல்ல ..இரண்டு நாட்டிற்காக வந்தவன் என்று சொல்லி தவிர்த்ததை நாங்களெல்லாம் அருகிலேயே இருந்து கவனித்தோம்.

தெரியும். தேர்தல் யுத்தம் கடினம்தான். அதில் உண்மையின் சத்தம் இன்னும் கடினம். எவ்வித சாதிய பின்புலமும் பொருளாதாரப் பின்புலமும் இல்லாத எளிய குடும்பத்தில் பிள்ளைகள் ஒரு மாற்று அரசியலை முன்வைத்து தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது என்பது முதலைகள் வாழும் ஆற்றில் முயல்கள் நீந்தி போவது போல.

ஆனாலும் அந்த நெருப்பாற்றில் இன்முகத்துடன் நீந்த அவர் தயாராகவே இருந்தார். தன் தம்பிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தனி ஒரு மனிதனாய் ஓடி ஓடி பிரச்சாரம் செய்தார். தனித்திருக்கும் இரவு வேளைகளில் கூட ..உளவியலாய் சோர்ந்து இருக்கும் யாரோ ஒருவரை அலைபேசி வாயிலாக அழைத்து வலிமைப் படுத்திக் கொண்டிருந்தார்.

அது அவருக்கென்றே, அவருடன் பிறந்த , அவரது பிடிவாதம். மரணம் எல்லா தவறுகளையும் கழுவி ஒருவரை புனிதர் ஆக்கிவிடும் என்றால்.. இங்கே நீரோ மன்னர்கள் கூட புனிதர்களே என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.

ஏனெனில் அவர் கடந்து வந்த பாதை ஏமாற்றங்களும் துயரங்களும் நிரம்பியது. இனம் அழிந்த காலத்தில்
… பிணம் பிணமாய் விழுந்த பொழுதில் யாராவது தன் மக்களுக்காக போராட வரமாட்டார்களா என ஏங்கித் தவித்து ஒவ்வொரு மேடையாக ஏறி அனைவருடனும் கைகோர்த்து ஏதாவது நல்லது நடக்காதா என்று ஏங்கி ஏமாந்தவர் அவர்.

அந்த வலி தான் அவர் ஆழ்மனதிற்குள் அப்படியே இருக்கிறது. தன் கண் முன்னே தனது உடன் பிறந்தார்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிர்விட்ட பெரும் துயர் கதை அவரை எப்போதும் நிம்மதியுடன் இருக்க விடுவதில்லை. கவிதையும் ,பாடலும் ,இசையும் ,கதையும் பொங்கிய சீமான் என்ற இளைஞன் உறைந்துப் போனான். பெரும் கோபமும், சீற்றமும் ,ஆற்ற முடியாத காயமும், உடைய தலைவரின் தம்பி சீமான் எழுந்து நின்றார்.

எனவேதான் ஊர் உலகமே திமுக தலைவரின் மரணத்தை புனிதப்படுத்தி துயர இசை வாசித்துக் கொண்டிருக்கும் போது.. இவர் அமைதியாக இருந்தார். இதுவரை உலகத்திலேயே நிகழாத ஒன்று நம் உள்ளூரில் நிகழ்ந்து விட்டது போல ஆளாளுக்கு துடிக்கும் துடிப்பை பார்த்து.. நடிக்கும் நடிப்பை பார்த்து.. நாங்களெல்லாம் மிரண்ட போது.. அண்ணன் தடுமாறாமல்.. தடம் மாறாமல் .. அமைதியாக இருந்தார்.

அது ஒரு வித்தியாசமான ஒரு அமைதி. எதனாலும் அச்சுறுத்த முடியாத.. அபகரிக்க முடியாத.. ஆழ்கடலின் சலனமற்ற நிலை போன்ற அமைதி. இந்த மரணம் மட்டுமல்ல ..எந்த மரணமும் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது .ஏனெனில் நாங்களே மரணத்தின் தொட்டில்களில் பிறந்தவர்கள் என்ற புரிதலில் ஏற்பட்ட அமைதி.

இதோ ..இவர்கள் அடுத்த மீட்பரை தயார் செய்துகொண்டு எங்கள் முன்னால் களத்தில் நிற்கிறார்கள். வழிவழியாய் பரம்பரை பரம்பரையாய் தொடரும் சங்கர மட வாரிசுகளாய் வரிசை கட்டி நிற்கிறார்கள். நேற்றுவரை ஏசியவர்கள் இன்று.. புதிய தலைவரை புனிதராக்கி விடுவதில் மும்முரமாய் இருக்கிறார்கள். வாரிசு அரசியல் தகுதியற்ற தலைமை என்றெல்லாம் தாறுமாறாக பேசிவிட்டு சிலபல சீட்டுகளுக்காக ஒரே மேடையில் தமிழை அடமானம் வைக்க தயாராகிவிட்டார்கள்.

நாங்கள் இதையும் புன்னகையோடு ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

ஏனெனில் எதையும் சமரசமில்லாத சமரர்களாக அணுகி சமர் செய்வது எப்படி என்பதை சரித்திரம் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

மேலும் அந்த சரித்திரமே எங்களுக்கு சரியான ஒருவனை அண்ணனாக அளித்திருக்கிறது.

கம்பீர விழிகளோடு. ஒரு இளைய தலைமுறையின் பயணம் தொடர்கிறது.