அன்றொரு நாள் சன் தொலைக்காட்சியில் படித்த செய்தி ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது
ப.சிதம்பரத்தை எதிர்த்து ராஜீவ்காந்தி போட்டி.
ஈழ அழிவு உச்சத்தில் இருந்தபோது நம் இனத்தை அழிக்க சிங்கள பேரினவாத அரசிற்கு ஆயுதம் கொடுத்து ஆலோசனை கொடுத்து எல்லாமுமாய் இருந்த இந்திய ஏகாதிபத்திய அரசிற்கு பாடம் புகட்ட கல்லூரி மாணவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள் உள்ளிட்டோர் முடிவெடுத்தார்கள். ஒரு தமிழனாய் பிறந்து தமிழின அழிப்புக்கு துணை போகிற இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தோற்கடிக்க ஒரு ஆயுதத்தை அவர்கள் கண்டெடுத்தார்கள்.
அதன் பெயர் ராஜீவ் காந்தி. அந்த ராஜீவ் காந்தி ….ராஜீவ் காந்தியைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க போராடும் என பெயர் வைத்த போது எங்கள் தந்தையார் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
தம்பி அருண் ஷோரி மூலமாய் அவனை என் அலைபேசியில் பிடித்தேன். சிக்கன மொழி. மெல்லிய குரல். தோழர் என்ற அறிவுஜீவி உரையாடல்.
.
பிறிதொரு நாள் மதுரையில் அண்ணன் சீமான் நடத்திய அறுத்தெறிவோம் வாரீர் என்ற நிகழ்வின் மேடையில் மெல்லிய உருவமாய் ஏறக்குறைய சிறுவனாய் ஓடியாடி கொண்டிருந்த அவனை மீண்டும் சந்தித்தேன். தோழனாய் அறிமுகமானவன் தம்பியாகி இருந்தான்.
எனது மனைவி ஊர் திருமயம் . சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இதைச் சொல்லி அவனிடம் …தம்பி உன் அண்ணிகிட்ட சொல்லி இருந்தேன் அவ கூட உனக்கு தான் ஓட்டு போட்டாளாம்.
அட போங்கண்ணே ஒரு ஓட்டை வீணாக்கிட்டீங்களே.. கண்ணப்பனுக்கு ல ஓட்டு போட்டு இருக்கணும். என்று சிரித்தவாறு சொன்ன அவனை குழப்பமாக பார்த்தேன்.
அது ஒரு மாய சிரிப்பு. கண்கள் மினுக்கும் பூக்கும் புன்னகை.வேறெங்கும் காண முடியாத அந்த முகத்திற்கே உரிய வசீகர தனித்துவம்.
அண்ணா.. நான் வெல்ல தேர்தலில் நிற்கவில்லை. ப.சிதம்பரத்தை தோற்கடிக்கவே நான் தேர்தலில் நின்றேன். போங்கண்ணே…ஒரு ஓட்டை வீணாக்கிட்டீங்க. என்று சொன்ன அவனை யாராலும் விரும்பாமல் இருக்க முடியாது.
ஏறக்குறைய ஒரு கரும்புலிக்கான மனநிலை அது. இன அழிவு அவனை
உன்மத்தனாக ஆகியிருந்தது. விழிகளில் கனலேறி இருந்தது. மொழிகளில் அனல் ஏற்றி மேடையிலே கொட்டத் தொடங்கினான். புதுக்கோட்டை பாவாணன் போல உணர்ச்சி மொழி. மறைந்த அறிஞர் வலம்புரிஜான் போல வார்த்தைகளின் ஊடே வரிசையில் வரும் புள்ளிவிபரங்கள்.
அறிவும் , உணர்ச்சியும் ஒரே புள்ளியில் இணைகிற அதிசயக்காரன் அவன் தான்.
இப்படியாக ராஜீவ். என்னுள் நுழைந்தான்.
…….
கட்சி மேடையிலேயே அடுக்குமொழி வசனத்தோடு தொடர்ச்சியான முடிவுறாத வாக்கியங்களோடு ஆவேச மொழி மழை பொழியும்.. வழக்கறிஞர் அறிவுச்செல்வன் எல்லோருக்கும் அறிமுகமானவன்.
எனக்குத் தெரிய இன்னொருவன் இருந்தான். ஒரு மழைக்காலத்தில் தேநீரோடு புலர் காலைப் பொழுதை தொடங்கி பிடித்த புத்தகத்தின் வாசிப்பு மயக்கத்தில் கிறங்கி… அலையலையாய் வருகின்ற அலைபேசியை அணைத்து போட்டுவிட்டு… தலையணையை அணைத்து கிடக்கிற ராஜீவ் என்கிற வாசிப்புக் காரனை எனக்குத் தெரியும்.
எளிய சுமையோடு.. கண்கள் மின்ன ..கால்கள் கடுக்க.. தன்னந்தனியாய் வனாந்தரங்களில் சுற்றியலைந்து ..சிகரங்களில் ஏறி , நிலவை ரசித்து.. சட்டென எதிர்படும் அருவியில் தலையை நுழைத்து..
கூழாங்கற்களை தழுவி ஓடும் நதிக்கரைகளில் கால்களை நனைத்து..
இயற்கையை பனிக்கால கதகதப்பு தேநீராய் பருகும் ராஜீவை நான் அறிவேன்.
இந்த அலைகழிக்கும் வாழ்க்கை பொழுதுகளிலிருந்து சட்டென ஒரு நொடியில் தன்னை துண்டித்துக் கொண்டு..
அலைபேசி அலைவரிசையில் சிக்காமல்.. யாருக்கும் அகப்படாமல் துறவியின் மனநிலையோடு ஏரிக்கரைகளில் சுற்றித் திரியும் ராஜீவை நான் அறிவேன்.
ஏதோ ஒரு வறண்ட நாளில்.. நீர் பார்த்து வருடங்கள் ஆன அந்த ராமநாதபுரத்தின் காய்ந்த குட்டை ஒன்றில் பச்சை தேடி அலையும் ஆட்டு மந்தை ஊடே தானும் ஒரு ஆடாய் ..நம்பிக்கைகளோடு நகரும் அந்த கீதாரி ராஜீவை நான் அறிவேன்.
…..
திடிரென ஒரு நாள் அவனிடம் இருந்து அலைபேசி வரும். மகிழ்ச்சியோ துக்கமோ வலியோ, கோபமோ ,எதுவாக இருந்தாலும் முதலில் பகிரப்படும் மனிதனாக.. அவன் என்னை வைத்திருந்தான். இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டு இருப்பான். படித்த புத்தகங்களை, பார்த்த திரைப்படத்தை என நீளூம் அந்த உரையாடல் எப்போதும் முடிவுறாத திருப்தியின்மையை முடிவாக கொண்டது. பேசி அலுக்காத காதலர்களைப் போல நாங்கள் மாறி இருந்தோம். உச்ச மகிழ்ச்சியில் உண்மையாக அவன் சொல்வான் என் மனைவியை விட ..ஏன் இந்த உலகத்தில் இருக்கின்ற எல்லாரையும் விட ..உன்னை தான் அதிகம் நேசிக்கிறேன் அண்ணா ..
இந்த நேசிப்புக்கு நான் நேர்மை செய்திருக்கிறேனா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனாலும் அவனது அன்பு மாசு மருவில்லாத புனிதம்.
அதுதான் ராஜீவ். என்னிடம் உள்ள பிரச்சனையை மிக நேர்மையாக கண்டறிந்தவன் அவன். முடிவில் தெளிவாக சொன்னான் . கடந்துப்போக கற்றுக் கொள்.
…just go ahead.
இன்னொருமுறை சொன்னான் எல்லாவற்றிற்கும்.. எப்போதும் அழுது கொண்டே இருக்க முடியாது என. அப்போது எனக்கு ஒரு புத்தகத்தை பரிசளித்தான் . வையத் தலைமைகொள்.
வசந்தத்தை மட்டுமே பரிசளித்துக் கொண்டு.. வரங்களை மட்டுமே வாரி இறைத்துக்கொண்டு.. எப்போதும் பசுமையாய் ஒளிர வாழ்க்கை ஒன்றும் தேவதைகளின் முகத்தில் மின்னும் விழிகள் அல்ல. அது சாத்தானின் பாம்பு.
வசீகரமானது தான் .ஆனால் வலிக்கக்கூடியது. அழகானதுதான். ஆனால் அழிக்கக்கூடியது. எனவேதான் பூமியில் எது நடந்தாலும் அதை உயரத்திலிருந்து கவனித்து விட்டு .அனைத்தையும் அலட்சியமாக கடக்கின்ற மேகம் போல ஒரு மனநிலை தேவைப்படுகிறது. இந்த மனநிலை சாதாரணமாக வாய்க்கக்கூடியது அல்ல. அது அருகிலிருந்து நமது தோளைப் பற்றிக்கொள்ளும் விரல்களின் அன்பிலும் நம்பிக்கையிலும் பூப்பது.
அப்படி ஒரு பூத்தலை தான் ராஜீவ் என்னுள் நிகழ்த்தினான். ஒரு பெரு மழைக் காலம் முடிந்து வரும் அமைதி போல வாழ்வில் அலைக்கழிக்கப்பட்டு தடுமாறி கீழே விழுந்து.. பிறகு எழுந்து.. அலைந்து திரிந்து ஒரு நிதானத்திற்கு வரும் போது உள்ளுக்குள்ளாகவே ஊறும் ஒரு அமைதி ..
போல.. நிதானமானவன் ராஜீவ்..
எனக்கு நிரந்தரமானவன்.
.
இந்த வானவில் யுகத்தின் வல்லாண்மை பேரரசர்கள் நாம். நம் முன்னால் நுரையோடு கொப்பளித்து கொண்டு இருக்கிற வாழ்வெனும் அமுதத்தை நம் அன்பெனும் வைர கோப்பைக் கொண்டு பருகி தீர்ப்போம்.பருகிய அலுப்புத் தீர ஆதி வனம் தேடி பெரும் பயணம் போவோம். காற்றாய் திரிவோம். கடலாய் மிதப்போம்.
சியர்ஸ் ராஜீவ்.