திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்விற்கு பாஜக தலைவர் அமித் ஷா வரவேண்டுமென திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், கனிமொழியும் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது வருகை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் நமக்கு கண்முன் சில காட்சிகள் நிழலாடுகின்றன.

சென்ற வாரத்தில் தமிழகத்தின் புகழ்ப்பெற்ற எழுத்தாளர்கள் இலக்கிய ஆளுமைகள், கவிஞர்கள் பங்கேற்ற மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது .அதில் பேசிய பலரும் திராவிட இயக்கம்தான் இந்துத்துவாவிற்கு எதிராக செயல்பட்டிருக்கிறது ,இனியும் செயல்பட இருக்கிறது, எனவே திமுகவை காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் உணர்வு பொங்க பேசினார்கள்.

திமுக தலைவர் மு கருணாநிதி உயிருடன் இருந்தபோது கூட அவர் மேடையில் ஏற மறுத்தவர்கள் அவர் இறந்த பிறகு அவரைப் பற்றி புகழ்ந்து பேசியது இலக்கிய முறைகளுக்கு ஏற்புடைய பண்புநலன் என்றும்.. திரு மு கருணாநிதி வெறும் அரசியல் தலைவராக செயல்பட்டது மட்டுமில்லாமல் அவர் ஒரு எழுத்தாளராகவும் இயங்கியிருக்கிறார் எனவே இலக்கியத்துறை அஞ்சலி செலுத்துவது என்பது முறையானது என்றெல்லாம் ஆயிரத்தெட்டு சமாளிப்புகள் சொல்லப்பட்டன.

இது குறித்து நமக்கு எவ்வித அக்கறையோ கவலையோ இல்லாவிட்டாலும் கூட.. எப்போதும் இந்துத்துவாவோடு நேரடியான கூட்டில் இருக்கும் திமுகவை இந்துத்துவ -பார்ப்பனிய கோட்பாடுகளுக்கு எதிரான ஒன்றாக நிறுவத் துடிக்கும் .. அறிவுஜீவித்தனம் தான் நம்மை வியக்க (?) வைக்கிறது.

முதன்முதலாக பாஜக என்ற கட்சியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது இதே திராவிட இயக்கத்தினர்தான். அவர்கள் மந்திரிசபையில் இடம் பிடித்து மருமகனுக்கு ஒரு பதவி.. தன்னுடன் மாங்காய் பறித்தவருக்கு ஒரு பதவி என பலருக்கும் பதவி வாங்கி கொடுத்து ,பதவி சுகம் அடைந்து பல்லாயிரக்கணக்கான கோடி ஊழலில் பங்கு போட்டதும் இதே திராவிட இயக்கத்தினர் தான். குஜராத் மதவெறி படுகொலையின் போது பாராளுமன்றத்தில் இதே ஆரிய பார்ப்பனிய இந்துத்துவ பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததும் இதே திராவிட இயக்கத்தினர் தான்.

இதில் எந்த லட்சணத்தில் ஆரிய பார்ப்பன தனத்திற்கு எதிரானவர்கள் இந்த திராவிட இயக்கத்தினர் என்று நீண்ட நாட்களாக கற்பிதம் செய்யப்பட்டு வருகிறது என்பது புரியவில்லை.

இன்று திராவிட இயக்கத்தின் ஒப்புயர்வற்ற தலைவர் , திராவிட இனத்தின் அடையாளம்..மு.க விற்கு புகழுரை உரைக்கவும், கலைஞர் கானா பாடவும் பாஜக தலைவர் அமித்ஷா வருவது பற்றி நமக்கெல்லாம் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இதுதான் அவர்களது குணம் .இதுதான் அவர்களது நிறம். இதுவரை காவியை கருப்பாக எண்ணிக்கொண்டிருந்தது நமது கண் குருடு.

ஆனால் கண் குருட்டினை கண் குருடாக ஒப்புக்கொள்ளாமல் அதை பார்வை வெளிச்சமாக மாற்றி பேசுவதுதான் அறிவுஜீவித்தனம் போல. என்ன விலை கொடுத்தேனும் திராவிட இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என முழங்கியவர்கள் இன்று அமித்ஷா வருகை பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்..??

எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் நாம் தமிழர் என்றால் அது இனவாதம் , இந்துத்துவத்திற்கு ஆதரவானது , காவி அரசியலின் மறைமுக வடிவம் , சாதி பயங்கரவாதத்தை சாடாதது என்றெல்லாம் சரமாரியாக பேசி எழுதி தாக்கியவர்கள் இன்று வாய் மூடி மன்னிப்பது தான் உலகத்திலேயே ஆகப்பெரும் கள்ளத்தனம். வழக்கம் போல இது ஒரு இரங்கல் நிகழ்ச்சி தானே.. அகில இந்தியத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் அந்த நிகழ்வில் அமித்ஷாவும் கலந்து கொள்கிறார் அதில் என்ன வந்தது.. திமுக என்ன கூட்டணியா வைத்து விட்டது.. என்றெல்லாம் சமாளிபிகேஷன்களை நாம் எதிர்பார்க்கலாம் ஆனால் இந்த சமாளிப்புகள் சொல்லும் உதடுகள் தங்கள் ஆன்மாவிற்கு நேர்மை செய்கிறார்களா என்று அவர்களுக்குள்ளாகவே கேட்டுக் கொள்ளலாம். அதுசரி. பெரியார் – ராஜாஜி நட்புக்கே நாம் பெருமை பட்டவர்கள் தானே..

நல்ல வேளை.. இவர்களெல்லாம் நம்மையும் புகழவில்லை . மாறாக ஏசி இகழ்கிறார்கள் என்பது நமக்குள்ள ஒரே தகுதி. நாம் சரியாகத்தான் இருக்கிறோம் என்பதற்கான அளவீடு.

இனிமேலும் திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிரானது, கலைஞர் என்பவர் பார்ப்பனர்களுக்கு எதிரானவர் , அவர் தத்துவம் பார்ப்பனியத்திற்கு எதிரானது என்றெல்லாம் விசுவாச வரலாறு எழுதாமல்… செஞ்சோற்று சொற்கள் பேசாமல்.. நேரடியாக அமித்ஷா மேடையிலும், ஆர்எஸ்எஸ் மேடையிலும் இடம்பிடித்து தங்களுக்கென ஒரு சாகித்ய அகாதமி விருதையோ ,ஒரு பத்மபூஷன் விருதையோ பெற போட்டி போடுவது மேலானது. நேர்மையானது. அப்படி வந்தால் கூட ஜெயமோகன் போல மறுத்து வேண்டாம் என சொல்லி சீன் காட்டலாம்.

திராவிடம் என்பதே திருட்டுத்தனம் தான். இனிமேலும் அதை ஆரியத்திற்கு இந்துத்துவத்திற்கு எதிரான ஒன்றாக கட்டமைப்பது குருட்டுத்தனம்.

கூடிய விரைவில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து பிள்ளையார் சதுர்த்திக்கு ஊர்வலம் தொடங்கும் என்கின்ற செய்திக்காகவும் நாம் காத்திருப்போமாக.

அப்போதும் சில எழுத்துக்கள் இது ஒரு அரசியல் தந்திரம் என்றெல்லாம் பேசுவதையும் நாம் கண்டு களித்திருப்போமாக.

ஜெய் ஸ்ரீராம்.