அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் கதாநாயகன் கார்த்திக்கும் கதாநாயகி ராதாவும் அவரவர் மத அடையாளங்களை அறுத்து தெரிவது போல ஒரு காட்சி வரும். இதேபோல சாதியை அறுத்தெறிய முடியுமா என்றால்.. முடியாது. ஏனெனில் சாதி வெறும் அடையாளங்களால் பின்னப் பட்டது அல்ல. இந்தியச் சமூகத்தின் ஒவ்வொரு இழையும் சாதிய உணர்வினாலேயே பிணைக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக வருணாசிரம அடுக்குகளை இந்த சாதிய பெருமித உணர்வே மிக கவனமாக பாதுகாத்து வருகிறது.
உங்கள் முன்னால் அன்புடன் கைகுலுக்க வரும் கரங்கள் ஏதேனும் தனிப்பட்ட காரணத்தினால் தயங்கி இருக்கிறதா.. உங்கள் சாதி வெளிப்படையாகத் தெரியாத வெளியூரில் நீங்கள் மேற்படியா என்று விசாரிக்கப்பட்டு இருக்கிறீர்களா.. நீங்கள் படித்த பள்ளியிலோ கல்லூரியிலோ வேலை பார்க்கும் இடத்திலோ எந்த காரணமும் இல்லாமல் நீங்கள் ஏதேனும் ஒரு குழுவில் சேர்க்கப்பட்டு இருப்பதை நினைத்து கூசி இருக்கிறீர்களா… உங்களை எதிர்கொள்ளும் ஆசிரியரோ அல்லது மேலதிகாரியோ பக்கத்து வீட்டுக்காரரோ உங்களது சொந்த ஊர் பற்றி வணங்கும் குல சாமி பற்றி தெரிந்து கொள்ளும் அதீத ஆர்வத்தை என்றேனும் சந்தேகித்து இருக்கிறீர்களா.. உங்களது சுய சாதி அடையாளம் எப்போதும் உங்கள் முதுகுத்தண்டுவடத்தில் ஊருகிற அருவருப்பான மொசுக்கட்டை என உணர்கிறீர்களா..
உங்கள் பதில்கள் ஆம் எனில் நீங்கள் பரியேறும் பெருமாளை புரிந்துகொள்ள தகுதியானவர் என்று பொருள்.
…..
படத் துவக்கத்தில் வரும் கருப்பியின் கழுத்தில் கட்டப்பட்டு தண்டவாளத்தோடு இணைக்கப்பட்டுள்ள அத்துண்டு வெகு சாதாரணமானது அல்ல. அத்துண்டு சிலருக்கு தலையில் இருக்கிறது. அத்துண்டு சிலருக்கு தோளில் இருக்கிறது. அத்துண்டு சிலருக்கு இடுப்பில் இருக்கிறது. அந்த துண்டு உங்கள் உடலில் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்பதில்தான் சாதிய பெருமிதத்தின் கொடூரம் ஒளிந்திருக்கிறது.
படத்தின் முடிவில் 2 காலியான டீ கிளாஸ்கள் சமத்துவத்தின் குறியீடாய் காட்டப்படுகின்றன. அந்த இறுதிக் காட்சியில் கதாநாயகன் பரி பேசும் ஒரு உரையாடல் குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு எல்லாம் மனதில் பட்டதை நேரடியாக சொல்லி விட முடிகிறது. ஆனால் என் மனதில் உள்ளதை சொல்ல கூட நான் இவ்வளவு அடி உதை அவமானம் ரத்தம் ஆகியவை பட வேண்டியிருக்கிறது என்பதான அந்த வசனம்.
அப்படி என்றால் அந்த சமமான 2 தேநீர் கோப்பைகள் ஒருவித பாவனையா.. பாசாங்கா.. என்றால் .. ஆம் அது ஒரு பாவனை தான். பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிற ஒரு கேட்டினை ஒரே ஒரு உரையாடல் மூலம் தகர்த்து விட முடியாது என்று பரியேறும் பெருமாளுக்கும் புரிந்திருக்கிறது . அதனால்தான் அவன் மெளனிக்கிறான்.
நான் படத்தைப் பற்றி அதிகம் பேசப்போவதில்லை. ஏனெனில் படம் அதிகமாகப் பேசி விட்டது. மனிதனாக தன்னை உணர்கிற ஒவ்வொருவரும் திரையரங்கிற்குச் சென்று இப்படத்தை அவசியம் காண வேண்டும். கோடிகளில் கொழுப்பெடுத்து மாபியாக்களின் கதையை படமாக எடுத்து உதிரக் கறைகளால் திரையை சிவக்கவைக்கிற வேலை அல்ல இது. நாம் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கிற அசலான மக்களின் வாழ்வியல்.
குறியீடுகளால் நிரம்பி வழிகிறது பரியேறும் பெருமாள். கருப்பி, தண்டவாளம்,கெளசல்யா,இளையராஜாக்கள்,அம்பேத்கரிய கல்லூரி முதல்வர் ,தேனீர் குவளைகள் என விரியும் குறியீட்டுக் காட்சிகளில் சாதி என்கிற சொல் எங்கும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதி எங்க சார் இருக்கு.. என மேலோட்டமாக பேசி போகிறவர்களை செவுளில் அறைந்து வாயை மூடி உட்கார வைத்து இருக்கும் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் ஒரு திரைப்படம் மட்டுமல்ல. நம் சமூகத்தை நாமே பார்த்து வெட்கி தலைகுனிந்து கொள்கிற சுயபரிசோதனை.
சுயசாதி பெருமிதத்தை தன்னுள் ஒழிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இத்திரைப்படம் ஒரு ஆத்ம நியாயம்.
சாதி கட்டமைப்புகளில் இருந்து வெளியேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இத்திரைப்படம் ஒரு பெருவழி. துளியேனும் சாதி என்னும் அழுக்கு ஒட்டியிருக்கும் எவருக்கும் இத்திரைப்படம் ஒரு இதய சுத்திகரிப்பு.
நானெல்லாம் என் சாதியை சொல்ல மறுத்ததாலேயே தமிழன் இல்லை என்று பட்டம் கட்டப்பட்டு தெலுங்கனாக சௌராஷ்டிரா வாக அலைந்து திரிபவன்.
என்னைப் போல அண்ணன் சீமான் , பாக்கியராசன் போன்ற பலர் மலையாளிகளாக தெலுங்கராக பட்டம் கட்டப்பட்டு திரிபவர்கள் தான்.
சாதிதான் என்னை தமிழன் என்று அடையாளப்படுத்தும் எனில்.. நான் தமிழனே இல்லை என்று முன்னொரு நாள் நான் முகநூலில் பதிவிட்டதற்கு அண்ணன் சீமான் தான் சிரித்துக் கொண்டே சொன்னார்.
அப்படி சொல்லாதே. சாதி கேட்பவனை, சாதி சொல்பவனை தமிழன் இல்லை என்று சொல்லப் பழகு.
உண்மைதான். சுய சாதி மறுப்பாளர்களும், காலம் காலமாய் இந்த மண்ணில் சாதியத்தால் அடக்கி ஒடுக்கி ஆளப்பட்டு வந்திருக்கிற இம்மண்ணின் பூர்வகுடி மக்களும் ஒன்றாக கூடிநின்று..
நம்மை அடிமைப் படுத்தும் சாதியத்திற்கு எதிராக.. வர்ணாசிரம மதத்திற்கு எதிராக பெரும் கலகம் புரிய வேண்டி இருக்கிறது. இதைத் தாண்டி நிற்கின்ற முரண் புள்ளிகளை இதன் பொருட்டாவது நாம் தள்ளிவைத்துவிட்டு ஒன்றாகக் கூட வேண்டியிருக்கிறது. மேலும் தமிழர் என்ற சொல்லே சாதி மறுத்த, சாதியத்திற்கு எதிரான ஒரு அரசியல் சொல்லாக நாம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
சுய சாதிப் பெருமிதம் என்பது ஒரு வித மனநோய். அந்த மனநோய் கொண்டவர்களை ஒன்று குணப்படுத்த வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் அவர்களை நாம் எல்லாம் கூடி எதிர்க்க வேண்டும்.
உங்களுக்கு மனிதனாக வாழ..
மனிதனாக உணர.. இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒன்று பரியேறும் பெருமாள் ஆக இருப்பது. இல்லையேல் சாதி மறுத்த அவனது நண்பன் ஆனந்தாக இருப்பது.
மாரி செல்வராஜுக்கும்… அவரது படக்குழுவினருக்கும் என் கண்களில் இருந்து வழியும் நெகிழ்ச்சி துளிகளைக் கொண்டு என் மனமார்ந்த அன்பினை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைப்படத்தை தயாரித்த இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கு பூங்கொத்து களுடன் கூடிய கை குலுக்கல்கள்.