இந்தத் தேர்தலைப் பொறுத்து சில சந்தேகங்கள் நமக்கு எழுந்திருக்கின்றன. இதையே சந்தேகங்கள் இன்னும் நம்மில் பலருக்கும் இருக்கலாம். இந்த சந்தேகங்கள் குறித்து இதுவரை எந்த ஊடகமும் எவ்விதமான விவாதங்களும் மேற்கொள்ளாமல் கடந்து போக முயற்சிப்பதில் இருந்தே இந்த சந்தேகங்கள் மீதான வலிமை அதிகரிக்கிறது.
உரையாடல்கள்/ கேள்விகள்/ விவாதங்கள் எதுவுமற்ற சந்தேகங்கள் உண்மைகளுக்கு நெருக்கமானவை என்பதுதான் அச்சமாக இருக்கிறது.
1. பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி சேர்ந்த மாநிலத்தை ஆளுகின்ற அண்ணா திமுக அரசிற்கு தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள 8 சட்டமன்ற தொகுதி இடங்கள் தேவைப்பட்டன. நடந்த சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மிகச் சரியாக ஒன்பது இடங்களை பிடித்து இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்த அண்ணா திமுக சட்டமன்ற இடைத்தேர்தலில் மட்டும் வலுவான திமுகவை எதிர்த்து ஒன்பது இடங்களை பிடித்து இருப்பது மிகுந்த சந்தேகத்திற்குரியது. ஒரு சட்டமன்ற தொகுதி வாக்காளர் சட்டமன்ற தொகுதிக்கு இரட்டை இலைக்கும் பாராளுமன்ற தொகுதிக்கு உதய சூரியனுக்கும் வாக்களித்திருப்பார்கள் என எண்ணும் போது உண்மையில் சந்தேகமாக இருக்கிறது. அப்படி முற்றிலும் எதிரான முரண்பட்ட இரண்டு கட்சிகளுக்கு ஒரே தேர்தலில் ஒரே வாக்குச்சாவடியில் இரண்டு ஓட்டுக்களை அளித்த ‘விசித்திர’ வாக்காளர்கள் குறித்த எந்தக் கேள்வியையும் ஊடகங்கள் எழுப்பாதது மிகுந்த சந்தேகத்திற்குரியது.
2. மக்கள் நீதி மய்யம் நாம் தமிழர் கட்சி போலவோ அம முக போலவோ பரவலான கிளைப் பொறுப்பாளர்களை கொண்ட கட்சி அல்ல. நாம் தமிழர் கட்சிக்கு இருந்த பரவலான ஆதரவைப் குறைத்து காட்டவே மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிட வைக்கப்பட்டது. சொல்லப்போனால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் எங்கும் சரியாக வாக்கு கேட்டதாக கூட தகவல்கள் இல்லை. அதன் தலைவர் கமலஹாசனும் அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்ததாக தெரியவில்லை.ஆனாலும் மக்கள் நீதி மையம் 3 சதவீத வாக்குகள் பெற்று இருப்பது என்பது கமலஹாசனின் மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பதன் அரசியலிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. எவ்விதமான பிரச்சாரமும் செய்யாத மக்கள் நீதி மய்யம் பெற்றிருக்கின்ற வாக்கு சதவீதம் கமலஹாசன் மோடி அந்த இரண்டு தனி நபர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
3. முற்றிலுமாக மின்னணு வாக்கு எந்திரத்தின் மீதான சந்தேகங்கள் எழுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தென்மாநிலங்களில் பாஜக தோல்வியுற்றது போல ஒரு காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சந்தேகம் எழுகிறது. வட இந்தியாவில் தனது ஆட்சி அதிகாரத்திற்கு தேவையான பெரும்பான்மையை பெற்றுக் கொண்ட பாஜக தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் தன்னை வீழ்த்திக் கொண்டு தான் பெற்றிருக்கிற மாபெரும் வெற்றியின் மீதான சந்தேக நிழலை தடுக்க முயற்சித்திருக்கிறது.
4. திமுக அடைந்திருக்கின்ற வெற்றி அரசியல் ரீதியாக கொண்டாடப்பட முடியாமலும் அதிமுக அடைந்திருக்கின்ற தோல்வி கொண்டாடப்பட கூடியதுமாக இருப்பதும், நாம் தமிழர் அமமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வளர்ச்சிக்கு இணையாக எவ்வித கட்டமைப்பும் கிளையும் இல்லாத மக்கள் நீதி மய்யம் பொருட்படுத்த வேண்டிய வாக்குகளை பெற்று இருப்பதும் திட்டமிட்டு கணக்குப் போட்ட ஒரு சாணக்கியனின் சதியாகத்தான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
5. நீண்டகாலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்தான சந்தேகங்களை நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது. இந்தத் தேர்தலிலும் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கடத்தப்பட்டதும், பல வீடுகள் கடைகள் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் காணப்படுவதுமான வருகிற செய்திகள் வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை குலைக்கின்றன.ஆரம்பத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்திய நாடுகள் கூட தற்போது அதை கைவிட்டு வாக்குச்சீட்டு முறைக்கு மாறி விட்ட பிறகு இன்னும் பிடிவாதமாக இந்த சந்தேகத்திற்கு இடமான முறையை கடைபிடித்து வருவது என்பது பெரும் முதலாளிகளுக்கு பன்னாட்டு வர்த்தகத்திற்கு ஆதரவான ஒரு ஆட்சி அமைப்பினை உருவாக்க நடத்தப்படும் பெரும் நாடகமே இந்த தேர்தல் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
6. தேர்தல் ஆணையம் என்ற ஒன்று செயல்பட்ட மாதிரியே தெரியவில்லை. வழக்கம்போல வேட்பாளர்கள் பணம் கொடுத்தார்கள். வாக்காளர்கள் பெற்றுக் கொண்டார்கள்.வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்குகின்ற முறைதான் தேர்தல் என்றால்.. நாங்களெல்லாம் சொல்வது போல ஒரு பெரிய ஏலத்தினை ஏற்பாடு செய்து அந்த ஏலம் மூலம் வாக்காளர்களை விலைக்கு வாங்கும் ஏதோ ஒரு பணக்கார கட்சிக்கு வெற்றியை கொடுத்து விடலாம். பணம் அளித்ததாக சொல்லி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற வேலூர் தொகுதியில் கூட பணம் அளித்ததாக ஒரு வேட்பாளர் மீது கூட வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஒரு சந்தேகம் நிரம்பிய ஒரு தேர்தல் முறையை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் உலகிலேயே பெரிய ஜனநாயக நாட்டின் ஜனநாயகத் தன்மையை உறுதிப்படுத்துவதாக நாடகம் நடத்தப் படுவதும்..அதை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட எதையும் கண்டுகொள்ளாமல் கடந்து போவதுமான காட்சிகள் பெரும் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு பாசிஸ ஆட்சி முறையை நோக்கி நகர்வதற்கான அறிகுறிகளாகும்.
மணி செந்தில்.
www.manisenthil.com