கடந்த சில நாட்களாக திமுகவினர் நம்மை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் பதிவுகளில் குறிப்பிட்ட சில அம்சங்கள் காணப்படுகின்றன.

இது வரை இல்லாத மூர்க்க எதிர்ப்பினை பதிவு செய்து வரும் அவர்களது பதிவுகள் நாம் தமிழர் கட்சி கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியலில் பெற்றிருக்கின்ற மறுக்க முடியாத வளர்ச்சியை ஒரு குறியீடாக குறியிட்டு காட்டுகின்றன.

இப்படி விமர்சிக்கும் எந்த திமுகவினரும் நாம் தமிழர் கட்சி முன்வைக்கிற சுற்றுப்புற சூழல் சார்ந்த பசுமைப் பொருளாதாரத்தை பற்றியோ, தற்சார்பு பொருளாதாரம் குறித்தோ, பல்லுயிர் பெருக்கம் குறித்தோ பேச மாட்டார்கள். பல்வேறு தேசிய இனங்கள் உள்ளடக்கிய ஒரு நாட்டில் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஏதுவாக சுழற்சி முறை பிரதமர், மக்களை சந்திக்காது தேர்தலில் போட்டியிடாதவர்களுக்கு மக்களை நிர்வகிக்க பதவிகள் மறுக்கப்படும் சூழல் உள்ளிட்ட மாற்று அரசியல் சிந்தனைகளை பற்றியோ அவர்கள் பேசுவதில்லை. நாம் தமிழர் சாதித்திருக்கிற பெண்களுக்கு சரி சமமான 50 சதவீத இட ஒதுக்கீடு, தமிழகத்தில் நிலவி வந்த ஈழ விடுதலைக்கான ஆதரவு மீதான அரசு அதிகாரம் சார்ந்த அச்சத்தை அகற்றல், ஈழவிடுதலையை தாயக தமிழக இளைஞர்களின் பொதுவான லட்சியமாக மாற்றல், தேசிய இனங்களுக்கான அதிகாரங்களை கோரும் வண்ணம் மாநில தன்னாட்சி போன்ற எது குறித்தும் இவர்கள் பேச மாட்டார்கள்.பணம் வாங்கிக்கொண்டு பதிவுகள் எழுதும் இவர்களுக்கு இது குறித்த எந்த சிந்தனையும் கிடையாது.

நாம் தமிழரைப் பற்றி இழிவான வார்த்தைகள் மூலம் திமுக ஆதரவு பதிவுகள் எழுதும் பெரும்பாலானவர்கள் பதிவு எழுதுவதையே முழு நேர வேலையாக கொண்டிருப்பவர்கள். அதன் மூலமாக ஊதியம் பெற்று சம்பாதிப்பவர்கள். ஒரு கேவலமான பதிவு எழுதி அதன் மூலமாக இன்சென்டிவ் உள்ளிட்ட ஊதிய உயர்வு பெறுகிறவர்கள். அவர்களுக்கு வாசிப்பு அறிவோ, குறிப்பிட்டவை குறித்தான ஆய்வு அறிவோ எதுவும் கிடையாது.

பிழைப்பின் காரணமாக பதிவுகள் எழுதி ஏசி கொண்டிருப்பவர்களை நம்மைப் போன்ற இலட்சியத்தால், இன அழிவின் உறுதியால் அரசியலுக்கு வந்தவர்கள் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்.

சுபவீ போன்றவர்களுக்கு நம்மை எதிர்த்தால் தான் பிழைப்பு. திமுகவில் அவருக்கு என எந்தப் பணியும் கிடையாது. திமுக சார்ந்த ஒரு கிளை அமைப்பினை உறுப்பினர்கள் இல்லாத ஒரு சிறு அமைப்பினை கொண்டு இருக்கிற அவருக்கு சீமான் போன்ற திமுகவின் பிரதான எதிரியை எதிர்த்து பேசுவதன் மூலமாக திமுகவில் தனக்கான இடம் இருக்கிறது என்கின்ற பிம்பத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம். எனவே நம்மை அழிப்பதாக சவால் விட்டுக் கொண்டு காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

சுபவீ யோடு மிக நெருங்கி பழகி அவரது இனத்துரோக செயல்களால் விலகி வந்து நாம் தமிழரில் பயணித்துக் கொண்டிருக்கிற அண்ணன் அன்பு தென்னரசன், ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது உள்ளிட்ட பலர் சுபவீ பற்றி அனைத்து உண்மைகளையும் அறிந்தவர்கள் இருக்கிறார்கள். இது சுப வீக்கும் தெரியும். நாம் பேசினால் எதிர்விளைவு மிகக் கடுமையாக பாயும் என்பது சுபவீக்கு தெரியாததல்ல. ஆனாலும் அவர் பேசியாகவேண்டும். அவருடைய இருப்பு, பிழைப்பு ஆகியவை அவருக்கு முக்கியமானவை. எனவே பேசிக் கொண்டு திரிகிறார்.

ஆனால் நாம் அவ்வாறல்ல. அரசியல் என்பது நமக்குத் தொழில் அல்ல. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அனைவருக்கும் ஒவ்வொரு தொழில் இருக்கிறது. நமது வயிற்றுப் பிழைப்பிற்கான வேலையை செய்து விட்டு அதில் நேரம் ஒதுக்கிக் கொண்டு மக்கள் பணி செய்ய நாம் வருகிறோம். நமது தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் கூட இதுவரை அவருடைய வாழ்க்கைப் பாடுகளுக்காக திரைப்படங்களில் நடித்துக் கொண்டும் திரைத்துறை சார்ந்த பணிகளில் இயங்கிக் கொண்டு அவரது சொந்த ஊரில் விவசாயம் செய்து கொண்டும் தான் இருக்கிறார்.

திமுகவில் இயங்குகிற 80 சதவீதம் பேர் அரசியலை முழு நேர தொழிலாக கொண்டவர்கள்.அதன் தலைவர்கள் ஏற்கனவே பலமுறை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்து கல்வி நிறுவனங்கள் திரையரங்குகள் தொழில் நிறுவனங்கள் அசையும் அசையா சொத்துக்கள் என இன்னும் பல தலைமுறைகளுக்கு வசதியாக வாழுகின்ற பொருளாதார பலத்தை கொண்டவர்கள்.

எனவேதான் முழு நேரமாக ஊதியத்திற்காக பதிவு எழுதும் ஆட்களை நியமித்துக் கொண்டு அவர்கள் சார்பாக இவர்கள் எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள்.

திமுக இன்று தத்துவ பின்புலமற்ற பிழைப்புவாத அரசியல் கட்சியாக மாறிவிட்டது. அவர்களது தலைவர் தொடங்கி அடிமட்ட தொண்டன் வரை எவ்விதமான தத்துவ புரிதலும் மற்றவர்கள். திராவிட கட்சி என்று சொல்லிக்கொண்டு கோவில் கோவிலாக அலைந்து யாகம் வளர்ப்பவர்கள். திமுக தலைவரே என் கட்சியில் இருக்கிற பெரும்பாலானோர் இந்துக்கள் என்று பேசுபவர். இதுதான் இவர்களது தத்துவ புரிதல் மட்டம்.

கருணாநிதி என்கின்ற தனிமனிதனுக்கு பிறகு திமுகவில் இருக்கிற பெரும்பாலான தலைவர்கள் வாசிப்பு அறிவு இல்லாதவர்கள். திராவிடம் பெரியார் என்றெல்லாம் பேசுவதில் அதிகம் விருப்பம் இல்லாதவர்கள். அது மக்களின் ஆதரவைப் பெறாத தத்துவம் என்று புரிந்தவர்கள்.

திமுகவில் இருவகையான தலைவர்கள் இருக்கிறார்கள் ‌. ஒன்று ஏற்கனவே திமுகவின் தலைவர்களாக இருந்தவர்களின் வாரிசுகள். மற்றொன்று பிழைப்பதற்காக வயிறு வளர்ப்பதற்காக உள்ளூரில் ரவுடித்தனம் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவை செய்து பெரிய ஆளாக காட்டிக் கொண்டவர்கள்.

இவர்களுக்கு ஈழ விடுதலை குறித்தோ, மாநில உரிமைகள் குறித்தோ சுற்றுப்புறச் சூழல் குறித்தோ , உலக அரசியல் நிலைகள் குறித்தோ, எதுவும் தெரியாது. திமுகவில் இருக்கின்ற வாசிப்பறிவு உள்ள மிகச்சிலரான திருச்சி சிவா, ஆ ராசா போன்றவர்களுக்கும் இந்தக் கொடும் நிலை நன்கு தெரியும்.வேறு வழியில்லாமல் பிழைப்பிற்காக அவர்களும் பாராட்டிக் கொண்டு இந்த கொடும் நிலையை ஆதரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எனவே நாம் இப்படிப்பட்டவர்களை எதிர்த்துதான் இந்த களத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

ஒரு எளிய நாம் தமிழரின் இளைஞன் தன்னை வாசிப்பு அறிவு மூலம் மெருகேற்றிக்கொண்டு தனக்கும் சமூகத்திற்கும் பயன்படுபவராக மாறி கொள்வதையே தனது முக்கியமான செயல்பாடு என கருதுவதுதான் நாம் தமிழர் கட்சியின் முக்கியமான வெற்றி.

தொடர்ந்து நாம் முன்னேறுவோம்.

ஆயிரம் தடைகள், ஆயிரம் விமர்சனங்கள் சுற்றி சூழ நாம்தமிழர் தனது இலக்கை வென்றே தீரும்.

அதன் லட்சிய பயணத்தில் சுபவீ கரு பழனியப்பன் திண்டுக்கல் லியோனி பிரசன்னா போன்ற ஈசல்கள் ஒரு போதும் தடையாக இருக்கப்போவதில்லை.

ஜஸ்ட் லைக் தட் ..

காறித்துப்பிவிட்டு போய்க்கொண்டே இருப்போம் ‌.