எனக்கு முன்னால் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கின்ற அந்தப் புத்தகம் மெதுவாக அசைகிறது. நான் தலை சாய்த்து படுத்திருந்த மகிழம்பூ மரத்தடியில் பூக்கள் அதிகம் உதிர தொடங்குகின்றன. உச்சி வேளை வெயில் பொழுதில் வயற்க் காட்டில் யாரும் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு அசைந்து கொண்டிருந்த அந்தப் புத்தகத்தையே நான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கவிழ்த்து வைக்கப்பட்ட அந்தப் புத்தகத்திலிருந்து அக்காக்கள் சொற்களாக கசிந்துக் கொண்டிருந்தார்கள். கசிந்த சொற்கள் உதிரா முதிர்எலுமிச்சை பழத்தின் வாசனையை காற்றில் பரப்பிக் கொண்டு இருந்தன. என் விழிகளில் நீலம் பாவியதை என்னால் உணர முடிந்தது.
அந்த புத்தகத்தை வாங்கி வந்த நாளில் இருந்து இதே பாடுதான். நள்ளிரவில் வாசித்துவிட்டு உறங்கத் தொடங்கும்போது தலையணைக்கு அருகில் யாரோ ஒரு அக்கா குத்துக்காலிட்டு அழுவது போன்ற உணர்வு. பொழுது சாயும் வேளையில் மாடியில் தன்னந்தனியாக சூரிய மறைவை கண்டு கொண்டிருக்கும் போது பின்னால் இருக்கும் தென்னை மர சலசலப்பில் யாரோ ஒரு அக்கா அணத்துவது போன்ற ஒரு சலசலப்பு.
அந்த நூலில் வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் அக்காக்கள் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். பல அக்காக்கள். வெவ்வேறு கதைகள் வெவ்வேறு சித்திரங்கள். அந்த அக்காக்களை நமது வீடுகளில் வீதிகளில் என எளிதில் சந்தித்து விடலாம். கழுத்தறுக்கப்பட்ட ஏதோவொரு அக்காதான் குலசாமியாக, மரப்பாச்சி பொம்மையாக, நினைவு பெயர்களாக, சுமைதாங்கி கற்களாக,நாள்களில் வணங்கும் வெவ்வேறு காரணங்களாக நம்மிடையே வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.
அக்காக்கள் மறைக்கப்பட்டதற்கும்,
மறக்கடிக்கப்பட்டதற்கும் பெரிய காரணங்கள் ஏதுமில்லை. அவர்கள் கழுத்தறுக்கப்பட்டதற்கான காரணங்களாக சாதியோ,வர்க்கமோ இன்னும் பிறவோ இருக்கக்கூடும். ஆனாலும் யாரோ ஒருவரின் நினைவில் சட்டென உதிர்ந்துவிடும் ஒற்றை கண்ணீர் துளியாகத்தான் வெய்யிலின் அக்காக்கள் உறைந்திருக்கிறார்கள்.
ஒரு பக்கம்/ சிலவரிகள்/ ஒரு வாழ்க்கையை ஒரு சித்திரமாக நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டி வித்தை காட்டியிருக்கிறார் வெய்யில். எளிய சொற்களில் சட்டென கடக்க முடியாத திடுக்கிடல்களை நிகழ்த்தி விட்டு அக்காவின் இன்னொரு உலகிற்குள் சென்று புதைந்திருக்கிற அக்காக்களின் எலும்புகளில் ரத்தவாடை தேடி அலையும் சிற்றெறும்பாய் அலைந்துக் கொண்டி இருக்கிறார்.
ஒரு கவிதை..
“அக்கா ஆகாத வயதில் வயசுக்கு வந்தவள்.
ஏவல் கைகூடியவள்
சிறு செருமலில் பனம்பழங்களை விழச் செய்கிறவள்
குளவிக் கூட்டு மண்ணை விரும்பி உண்பவள்
செய்வினை செய்து கழித்த கண்ணாடியில்
முகம் பார்த்தவளை
பின்பு யாரும் பார்க்கவே இல்லை.
தவச நாளில் வைக்கும் தளுவை
பொங்கி வழியும்போது
குலவைச் சத்தத்துக்கு நடுவே அப்பா ரகசியமாய் அழுவார்.”
இப்பிரதியில் வருகின்ற அக்கா யாரையும் எவராலும் எதனாலும் கட்டுப்படுத்த முடியாது. திசைவழி பேதயறியா அவள் சன்னதம் வர வைக்கிற அம்மனாக கம்பீரமாக நம் முன்னால் அமர்ந்து இருக்கிறாள். நம் குற்ற உணர்வின் மீது நமது வியப்பின் மீது கட்டப்பட்டு இருக்கிற பெரும்அச்சக்கோட்டையின் மகாராணியாக வீற்றிருக்கிறாள்.
வரலாற்றின் வீதியெங்கும் வெறித்த பார்வையோடு பாம்பின் நாக்கு போல பிளவு உற்ற கழுத்து வெட்டு காயத் தழும்போடு உதிர கவிச்சை வாசனை உலராமல் அக்காக்கள் பல கதைகளாக,பல நினைவுகளாக கிடக்கிறார்கள் .
சட்டென வரும் ஒரு நேசத்தில் அவர்கள் உயிர் கொள்கிறார்கள். எதிரே வரும் சிறுமியின் முகத்தில் அவர்கள் வெட்க நிழலாய் மஞ்சள் பூசுகிறார்கள்.
இன்னொரு கவிதை
“மண முறிவுற்ற அக்கா குறிஞ்சிப் பூக்களை காண விரும்பினாள்; சூடவும்.
மிகத் தாமதமாகத்தான் புரிந்து கொண்டோம்.
நள்ளென் யாமமே தான்
துயில் கலைந்திடாது மெல்ல அரிந்து அவள் தலையை எடுத்துச் சென்றோம் அங்கே நிலைத்த விழிகளில் நீலம் திரும்புவதை புகைபிடித்தபடி அப்பா பார்த்துக் கொண்டிருக்கிறார்.”
அக்காக்களுக்கு கால வேறுபாடு இல்லை. சங்ககாலம் தொட்டு சாதி ஆணவக் காலம் வரை கழுத்தறுப்பட்ட அக்காக்களின் பெருமூச்சுதான் இந்த நிலப்பரப்பு முழுக்க ஊழி காற்றாய் அடித்துக் கொண்டிருக்கிறது.
அக்கா வெறும் நினைவாய் மட்டும்தான் நம்முள் தேங்கி இருக்கிறாளா.. சொல் வழி கதையாக மிஞ்சி இருக்கிறாளா என்றால்.. நிகழ்காலத்து அக்காவிற்கும் கவிதை இருக்கிறது. அதில் ஒன்று.
“ஆறு வருஷமாகிறது
புழங்காமல் பரணில் கிடந்த பித்தளைக்குடத்தை விளக்க
எடுத்துச் செல்கிறாள் அக்கா.
வம்படியாக உச்சிக்கிளையேறி
புளியம்பழங்களை பறித்துக் கொடுக்கிறார் அவர்.
ஆற்று நீரில் புளி கொண்டு அவள் விளக்குகிற குடத்தின் பொன்மினுக்கத்தில் சூரியன் மங்குகிறது.
குடவாய் நீர் வாங்கும் ஒலியில் ஊர் திகைக்கிறது”
அக்கா வெறும் பாடல் மட்டுமல்ல வெய்யில் சொல்வதுபோல அவளே வளரி சீவிய பாளையிலிருந்து தீராமல் சொட்டுகிற யாவருக்குமான கள்.
.
கண்மூடி படுத்து இருக்கின்ற என் இமைகளில் ஏதேதோ நினைவு வந்து அழுத்த.. அப்படியே தூங்கிப் போகிறேன். விழித்துப் பார்க்கையில் காற்றின் விரல்கள் அக்காளின் எலும்புகளைப் படித்துக் கொண்டிருக்கின்றன.
உள்ளங்காலில் பார்த்தால்.. கட்டெறும்பு கடித்தத் தடங்கள்.
அக்காக்களின் நினைவினால் / வெய்யில் மொழி தந்த வலியினால் மனம் பிசகி காலம் நழுவிப் போன அக்கணத்தில் தான்.
எனக்கு கத்தி அழ வேண்டும்போல இருந்தது.
அந்தப் புத்தகத்தை அப்படியே மூடி வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் வரப்பு வழியே நான் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினேன்.
.
அக்காளின் எலும்புகள்/ கவிதைகள்/ ஆசிரியர் வெயில்/ கொம்பு வெளியீடு/ விலை 75.