ஆதித்தமிழர் தமிழ் இன உணர்வோடு தமிழ்த்தேசியப் பாதையில் திரளத் தொடங்குவதை மறுத்து..எதிர்த்து..இறுதிவரை அவர்களை ‘தலித் தாகவே வைத்து’ பராமரிக்க விரும்புவது …ஆதிக்கச் சாதி உணர்வாளர்கள் கொண்டிருக்கும் அதே ஆதிக்குடிகளை தனிமைப்படுத்தும் உளவியல் தான்..
இந்த நுட்பமான விசித்திர ஒற்றுமைதான் சாதிகளை காப்பாற்றும் முக்கிய கருவி.
சுய சாதியை மறுத்து.. தமிழர் என்ற இன அடையாளத்தில் திரளும் சாதி மறுப்பாளர்களையும்… சாதிதான் தமிழர் இன ஓர்மைக்கு எதிரான முக்கிய காரணி என தன் சுய சாதி பெருமிதத்தை அழித்து தமிழர் என்று இரண்டு இளைஞர்களையும்…
எதிரான சக்திகளாக காட்ட முனைவது..
ஆதிக்கசாதி உணர்வாளர்களுக்கு ஆதரவான செயல் மட்டுமல்ல… நேரடியாக இந்துத்துவ உணர்ச்சியை ஊக்குவிக்கிற செயலும் கூட.
வெளிப்படையாகப் பேசுவோம்.
நம் சமூகத்தில் சாதி நிலைகளை காப்பாற்றுவதில் முதன்மையாக திகழ்வது எது..?
கடந்த 50 ஆண்டு கால திராவிட அரசியலே சாதி நிலைகளை காப்பாற்றும் மகத்தான அரசியல் தத்துவமாக திகழ்கிறது. பார்ப்பனர்களுக்கு எதிரான பார்ப்பனரல்லாதோரின் அரசியல் கருத்தாக்கமான திராவிடத்தின் அரசியல் பார்ப்பனர் அல்லாதோரான தமிழர்களின் இடைநிலை சாதிக்க்குழுக்களை வளர்த்தெடுப்பதில் மிகுந்த கவனம் காட்டியதை வரலாற்றின் ஏடுகளில் நாம் பார்க்கலாம்.
ஒருபக்கம் பார்ப்பனரை சுட்டிக் காட்டிக் கொண்டு.. மறுபக்கம் தமிழரை சாதியாக பிரித்து வைத்துக்கொண்டு.. தான் பிழைப்பதற்கான நுட்பமான வேலையை திராவிடம் செய்து வருகிறது.
எல்லாத் திராவிட கட்சிகளும் சாதியை பார்த்தே நகர ,ஒன்றிய ,மாவட்ட ,மாநில பொறுப்புகளை வழங்குகின்றன. சாதியை பார்த்தே வேட்பாளர் தேர்வு நடைபெறுகிறது. சாதியை பார்த்தே உள்ளாட்சி மன்ற பொறுப்புகள் அளிக்கப்படுகின்றன.
இந்த சாதிக்கட்டமைப்புகளை எள்ளளவும் மீறிவிடக் கூடாது என்பதில் திராவிட அரசியல் கட்சிகள் மிகுந்த கவனம் கொண்டிருக்கின்றன. ஏனெனில் சாதி கட்டமைப்புகளை மீறினால் வெகுஜன அரசியல் வாக்கு தங்களுக்கு கிடைக்காது என்ற எண்ணத்தினால் சாதியை பாதுகாக்கின்ற மகத்தான அரணாக திராவிடம் திகழ்கிறது.
வட மாவட்டங்களில் பறையரும் வன்னியரும் இணைந்து மண்ணின் மைந்தர்கள் என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிட கட்சிகளை எதிர்த்து தேர்தலை சந்தித்தால்.. திராவிடக் கட்சிகள் அடையாளமின்றி அழியும்.
இதே நிலைதான் தென் மாவட்டங்களில் தேவேந்திரரும் தேவரும்.
எனவேதான் தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மை சாதிகளுக்கிடையிலான முரண்களை தன் அரசியல் அதிகாரம் மூலமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடம் தக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.
தேவர் சிலைக்கு மாலை போடுகிற, அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிற திமுக அண்ணா திமுக என்கின்ற கட்சிகளுக்கு தேவரும், அம்பேத்கரும் ஒரு பொருட்டே அல்ல.
அந்த சிலைகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய வாக்குகள் மட்டுமே அவர்களது தேவை. இந்நிலையில் இரண்டு குழுக்களும் அடித்துக் கொண்டால் தான்.. அந்த முரண்பாட்டை முன்னிறுத்தி தாங்கள் வாக்குப் பெற முடியும் என்கின்ற தெளிவு திராவிட கட்சிகளுக்கு என்றும் உண்டு.
இவ்வாறெல்லாம் சாதியை காப்பாற்றுகிற.. பல காரணிகளை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு..
தமிழர் என்கின்ற தேசிய அடையாளத்தின் மீது பாய்ந்து பிராண்டுவது எதன் பொருட்டும் நியாயமல்ல.
ராஜராஜ சோழன் நல்லவனாக இருந்தால் என்ன கெட்டவனாக இருந்தால் என்ன… வரலாற்றின் வீதியில் பின்சென்று அந்தப் பக்கங்களை மாற்ற நமக்கு வலிமை இருக்கின்றதா என்ன…
ராஜராஜ சோழனைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ராஜராஜ சோழன் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் கட்டும் போது அதற்கு இடம் தந்த இஸ்லாமிய தமிழனைப் பற்றி வரலாற்றில் பதிவு இருக்கிறது. ராஜராஜனைப் பற்றி பெருமிதமாகவும், குற்றம் சாட்டவும் சரிசமமான ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இருதரப்பிலும் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் மறைந்துபோன தமிழரின் அடையாளமான ஒரு மாபெரும் மன்னனை இழிவு படுத்துவது என்பது தாழ்த்தப்பட்டு இருக்கிற மக்களின் விடுதலைக்கு எவ்வாறு உதவும் என்று தெரியவில்லை.
ஒரு மன்னனை எடைபோட வேண்டும் என்றால்.. அவன் வாழ்ந்து இருக்கின்ற காலகட்டம்.. அவன் கொண்டிருந்த வாய்ப்பு.. அவன் பெற்றிருந்த நம்பிக்கைகள்.. அவன் அடைந்த வெற்றி, புகழ்..அவன் மீதான விமர்சனங்கள் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டிய செயல். ஆனால் அதற்கெல்லாம் தற்போது என்ன தேவை இருக்கிறது என்பது இதையெல்லாம் கடந்த ஒரு கேள்வி.
குடிசை கொளுத்துபவர்களும், அரசியல் அதிகாரத்தால் நிலத்தை பிடுங்கிக் கொண்டவர்களும், சாதி பார்த்து அரசியல் செய்பவர்களும் உங்கள் கண் முன்னால் தான் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க நாசுக்காக தவிர்த்துவிட்டு..ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் என்றெல்லாம் நோண்டிக் கொண்டிருப்பது.. என்ன சொல்ல..??
ஆதி தமிழர்களின் நிலங்களை ஏற்கனவே பிடிங்கி இன்னுமும் பிடுங்கிக் கொண்டிருக்கிற திராவிட/தேசிய அரசியல்வாதிகளை சட்டையைப் பிடித்து உலுக்கி எடுத்து பஞ்சமி நிலங்களை மீட்டால்.. அது உண்மையான புரட்சி. செத்துப்போன ஒரு மன்னனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது என்பது காலத்தைக் கடத்துகின்ற..தன் மீது வெளிச்சம் பாய்ச்சிக் கொள்கிற ஒரு சாதாரண தந்திரம் அவ்வளவே..
தமிழரின் ஒற்றை அடையாளமாக தஞ்சைப் பெருவுடையார் கோவில் திகழ்கிறது. இந்த உணர்ச்சி சாதி நிலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இன உணர்வு சார்ந்த மரபணு சார்ந்த பெருமித உணர்ச்சி… அதனால் தான் ஆளுக்கு ஆள் ராஜராஜ சோழன் தன்னுடைய சாதி எனக் கொண்டாடிக் கொள்ள போட்டி போடுகிறார்கள்.
ஆனால் தமிழ்த் தேசிய இன வரலாற்றில் நம் இனத்தின் பெருமைக்குரிய அடையாளங்களாக திகழ்கிற பல முன்னோர்களையும் நாம் அவர்கள் செய்த சமூக அறம் சார்ந்த செயல்களுக்காக நினைவு கூறுகிறோம். அந்த முன்னோர்கள் எந்த சாதியாக இருந்தாலும் சரி. அவர்கள் காலத்தில் அவர்களுக்குள் எப்படிப்பட்ட முரண் பட்டவர்களாக இருந்தாலும் சரி.. நாம் இருவரையும் சமமாக மதித்து வணங்குகிறோம்.
அவரவர்களுக்கு சொல்லக்கூடிய ஒரு நீதியும் ,ஒரு கதையும், ஒரு நியாயமும் எல்லோருக்கும் ,எல்லா இடத்திலும் உண்டு. அந்தக் கதையை வைத்துக்கொண்டு வரலாற்றின் வீதிகளில் பின் சென்று நியாயம் தீர்ப்பது நமது வேலையல்ல.
நமக்கு இரண்டு தாத்தாக்கள் இருந்தார்கள். இருவரும் அடித்துக் கொண்டார்கள். தற்போது இருவரும் இறந்து விட்டார்கள். சரி.. இருவரையும் வணங்கி விட்டுப் போவோமே…. என்பதான மனநிலை அது. அதைத்தாண்டி அவர்களுக்குள் இருக்கும் முரண்களில் நியாயம் பார்த்து தீர்ப்பு சொல்வது நமது வேலையல்ல.
நமது தாத்தாக்கள் காலத்து பகையையும் இப்போது கொண்டு வந்து அடித்துக் கொள்வதும், கொலை செய்து கொள்வதும் இருப்பதிலேயே ஆகப்பெரும் முட்டாள்தனமான மூடத்தனம்.
இதுவெல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும். சாதி மறுத்து வருகிற இளைஞர்களை ஒதுக்கி வைத்துவிட்டு.. சாதிக்கு எதிராக உயரும் கரங்களை மறுத்துவிட்டு..
நான் ஜாதியற்றவன். நான் தமிழன் என்கின்ற முழக்கங்களை மூர்க்கமாக எதிர்த்துவிட்டு…
தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விடுதலையை பேசுவது என்பது… அந்தந்த காலகட்டத்தில் நடக்கின்ற சாதாரண மேடை கூத்து.
உண்மையில் யார் சாதிக்கு எதிரானவர்கள்..
சுய சாதியை விட்டு வெளியேறி இன்னொரு சாதியில் திருமணம் செய்தவர்கள்.. தன் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஆதி தமிழர் வீட்டில் மணம் முடித்தவர்கள்.. தான் பெற்றெடுத்த பிள்ளைகளும் சாதிமறுப்புத் திருமணமே செய்வார்கள் என்று உறுதி ஏற்று வாழ்பவர்கள்..
இதனால் அவரவர் பிறந்த சாதியில் ஏற்படும் கலகத்திற்கும் முகம் கொடுத்து.. அந்தக் கலகமே தான் கொண்டு இருக்கின்ற சாதி எதிர்ப்பு உளவியலுக்கு கிடைக்க விருதாக கருதி வாழ்பவர்கள்தான் சாதிக்கு எதிரானவர்கள்.
ஏதேனும் ஒரு சாதியின் பக்கம் நின்று கொண்டு இன்னொரு சாதியை பற்றி பேசிக் கொண்டிருப்பதும் .. சுயசாதி பெருமிதத்தில் .. தன் வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் சாதி உணர்ச்சிகளால் நிரப்பி வைத்துக் கொள்வதும் சாதிய உணர்ச்சிகளை வளர்க்கவே செய்யும்.
மற்றபடி.. ராஜராஜன் ராஜேந்திரன் என்றெல்லாம் பேசி இகழ்வது திட்டுவது.. இது போன்றவை அந்தந்தக் காலத்திற்கேற்ற ஆகச் சிறந்த பொழுதுபோக்கு.
சிரித்து விட்டுப் போவோம்.
மணி செந்தில்.