வாழ்வென்பது அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப வரைந்து கொள்ளும் ஓவியமா அல்லது எதிர்பாரா மின்மையையே சூட்சமமாக கொண்டு எதனாலோ கிறுக்கப்படும் கிறுக்கல் தான் வாழ்க்கையா.. என்று நினைக்கும்போது இரண்டும் தான் என நினைக்கத் தோன்றுகிறது.

இந்த வாழ்வு என்பது நிரந்தரம்.. ஒரு பாதுகாக்கப்பட்ட பெட்டியில் நாமும் நமது குடும்பத்தினரும் பத்திரமாக இருக்கிறோம் என்றெல்லாம் பலர் நினைத்துக் கொண்டிருப்பதால் தான்.. சின்னஞ்சிறு விதியின் பிசகில் கூட மானிட வாழ்வு பலருக்கு நரகமாகி விடுகிறது.

ஆனாலும் மாற்றி எழுதப்பட்ட ஒரு வாழ்வின் சோக அத்தியாயத்தை இயல்பாக எதிர் கொண்டவர்களும் இவ்வுலகத்தில் இருக்கிறார்கள். நோய்மையின் காரணத்தால் வீழ்ச்சியுற்ற அவல வாழ்வின் கதையை நாம் ஏராளமான திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அதுவும் புற்றுநோயைப் பற்றி தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ஆராய்ச்சியே நடந்திருக்கிறது என்கிற அளவிற்கு நிறைய புற்றுநோய் கதைகள் திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன.

அதில் ஒரு பிரபலமான திரைப்படம் வாழ்வே மாயம். படத்தின் இறுதிக் காட்சிகள் இருமி இருமி ரத்த வாந்தி எடுத்து கமல் படிப்படியாக இறக்கும்போது… மிடறு விழுங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தாய் கொண்டு வந்ததை நோய் கொண்டு போகுதம்மா என்று கமல் பாடும்போது புற்றுநோய் எதிரிக்கு கூட வந்து விடக்கூடாது என்று அனைவரும் நினைத்தார்கள்.

ஆனால் இன்றைய வாழ்க்கை அப்படி இல்லை.குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் வருவது என்பது மிக சாதாரண ஒன்றாக மாறிவிட்ட உலகில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். எனது குடும்பத்தில் எனது பெரியப்பா ஆசிரியர் ச. இராசதுரை அவர்களுக்கு புற்றுநோய் வந்ததை என் கண்ணால் கண்டேன். எனது தாத்தாவிற்கும் புற்று நோய்த் தொற்று இருந்ததாகச் சொல்கிறார்கள். எனவே புற்றுநோய் அபாயம் எங்கள் குடும்பத்தின் மீது ஒரு கரும் நிழலாக சுழன்று கொண்டிருக்கிறது.

என் வீட்டின் எதிரே இருக்கின்ற பெட்டி கடை வைத்திருக்கிற பெரியவருக்கு புற்றுநோய். வயிற்றில் ஏதோ கட்டி என்று சொன்னார்கள். அது புற்று நோயாக இருக்கக்கூடும் என பயாப்சி எடுக்க சொன்னார்கள். ஆனால் பெரியவர் மறுத்துவிட்டார். அது எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.வலிக்கு மட்டும் மாத்திரை கொடுங்கள் என்று வாங்கி விட்டு வந்து விட்டார். தினந்தோறும் அந்தப் பெரியவர் கடையைத் திறந்து வியாபாரம் செய்து சாதாரணமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வருகிறார். அவரிடம் இது குறித்து கேட்டபோது.. அதை ஏன் சார் நோண்டுவானேன்.. அது இருந்து விட்டு போகட்டும்.. இல்லை என்றால் மட்டும் நான் நூறு வயது வாழ்ந்துவிட போகிறேனா.. போங்க சார்.. என்று சிரித்துவிட்டு அவர் கடந்து விடுகிறார்.

உண்மைதான். அச்சமும், எதிர்கால இருப்பு பற்றிய எண்ணங்களுமே உண்மையான நோய் என உணரமுடிகிறது. ஒரு நோய்மையை நேருக்கு நேராக எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு அதை வெல்லும் எத்தனையோ நபர்கள் சாதாரண வாழ்வில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இதயத்தை திருடாதே திரைப்படத்தில் கதாநாயகிக்கு இதயத்தில் பழுது. அவளுக்கு ஏற்பட்டிருக்கிற நோயை குறித்து கதாநாயகன் கலங்கி நிற்கும் போது.. எதற்கு நீ கவலைப்படுகிறாய்.. இதோ என் தங்கை அவள் சாகப் போகிறாள்.. என் பாட்டி சாகப் போகிறாள் என் அம்மா சாகப் போகிறாள்.. இதோ விளையாடிக் கொண்டிருக்கும் என் குட்டி தங்கை சாகப் போகிறாள்.. நானும் சாகப்போகிறேன் அவ்வளவுதான் என மிக எளிமையாக கூறும் ஒரு வசனம் ஒன்று உண்டு.

அப்படி மரணம் விளைவிக்கக்கூடிய நோய்மையை அதன் போக்கில் எதிர்கொண்டு வலி மிகுந்த வாழ்வின் அவலத்தை கூட இயல்பாக சந்திக்க முனைகிற இருவரைப் பற்றிய ஒரு அசத்தலான காதல் கதைதான் இக்ஃலு.

இன்றைய நவீன வாழ்வில் இணையம் வழி பொழுதுபோக்குகள் மிகுந்திருக்கின்றன ‌. இணையம் வழி திரைப்படங்களும் தமிழிலும் வெளிவரத் தொடங்கிவிட்டன. திரையரங்குகளில் காண இயலாத இணையம் வழி மட்டுமே காண முடிகிற ஒரு திரைப்படம் தான் இது.

முதலில் இத்திரைப்படத்தைப் பற்றி என்னிடம் சொன்ன என் மைத்துனர் பாக்கியராசன் கட்டாயம் பாருங்க தல என்று அவசர படுத்தினார். இது ஒரு வெப் மூவி என்பதால் நாடகத்தனமாக இருக்குமோ என்று எனக்கு ஒரு அச்சம். ஏற்கனவே நெட் பிளிக்ஸில் lust stories போன்ற படங்களைப் பார்த்து இருந்தாலும்.. தமிழில் இது போன்ற முயற்சிகள் புதிதானவை என்பதால் அணுக எனக்கு ஒரு தயக்கம். பிறகு அன்று மாலையே நாம் தமிழர் மாணவர் பாசறையின் குடந்தை செயலாளர் தம்பி விக்கி தமிழனும் இத்திரைப்படத்தைப் பற்றி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா என்று என்னை ஆர்வப் படுத்தினான். இத்திரைப்படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான என் தம்பி அருண் “உன் தம்பி ஒரு படத் தயாரிப்பில் ஈடுபட்டு அந்த படம் வெளிவந்திருக்கிறது. இதுவரை அண்ணனாகிய நீ பார்க்கவில்லை” என்றாலெல்லாம் என்னை நோக்கி ஏற்கனவே குற்றம் சாட்டி என்னை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி இருந்தான்.

அதற்காகவே வந்த சேர்ந்தது ஒரு அடர் மழை பெய்த மாலை.

மிக சாதாரணமாக எடை போட்டு நான் பார்க்கத் தொடங்கிய அத் திரைப்படம் முடியும்போது என்னை விழுங்கி இருந்தது. உண்மையில் பிரமித்துப் போனேன். A Feel Good திரைப்படம்.

ஒரு திரையரங்கில் நாம் சாதாரணமாகக் காண நேரிடும் ஒரு திரைப்படத்திற்கு தேவைப்படுகின்ற உழைப்பு பொருளாதாரம் நேர்த்தி என அனைத்தும் இவ்வகை திரைப்படங்களுக்கும் தேவைப்படுகின்றன என்பதை இக்‌ஃலு வை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

நேர்த்தியான கதை. சுவாரசியமான வசனங்கள். நோயைப் பற்றிய திரைப்படமாக இருந்தாலும் கொஞ்சம் கூட அவலச் சுவை தட்டாத திரைமொழி. கதாபாத்திரங்களுக்கு மிகுந்த நேர்மை செய்திருக்கிற நடிகர்கள். சின்ன சின்ன விஷயங்களிலும் செலுத்தி இருக்கிற நுட்பமான கவனம் என அனைத்தும் சேர்ந்து இத்திரைப்படத்தை காண்பதற்கு தகுந்த ஒரு மாபெரும் அனுபவமாக மாற்றி விடுகின்றன.

குழந்தை கதாபாத்திரம் முதல் வயதானவர்கள் வரை யாரும் இயல்பை மீறி நடிக்காதது மிகுந்த ஆறுதல். கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு.

கதையை காட்சி காட்சியாக இங்கே நான் விவரிக்க விரும்பவில்லை. ஒரு நாள் ஒரு பொழுதில் நேரத்தை ஒதுக்கி இத்திரைப்படத்தை அவசியம் காணுங்கள். இந்த வாழ்வின் மீதான உங்கள் கண்ணோட்டத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உங்களை கண் கலங்க வைக்கவும், புன்னகைக்க வைக்கவும் உகந்த ஒரு மனநிலையை இக்ஃலு உங்களில் ஏற்படுத்தும் என்பது உறுதி. படத்தின் இறுதிக் காட்சி ஒரு நிமிடம் உங்களை உலுக்கி திகைக்க வைத்து உறையவைக்கும் அனுபவத்தை உடையது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் பரத்திடம் இத்திரைப்படம் கண்ட இரவில் பிரமிப்பு நீங்காமல் பேசினேன். பார்வையாளர்களை தன் வசப்படுத்தும் ஒரு கதை சொல்லும் முறை உங்களுக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கிறது. மாபெரும் படைப்பாளிகள் கூட ஏங்குகின்ற மேஜிக் உங்களுக்கு முதல் படத்திலேயே வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்கள் என்றேன்.

நன்றி சார் என்றார் எளிமையாக.

அந்த இளைஞனை கவனித்து வைத்துக் கொள்ளுங்கள். சமீபகால திரை உலக நம்பிக்கை இக்ஃலு திரைப்பட இயக்குனர் பரத் நான் மிகைப்படுத்தாமல் முன்மொழிகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

ஒரு நல்ல திரைப்படத்தை லாப நோக்கமின்றி செறிவுடன் தயாரித்திருக்கிற drumstick production குழுவினருக்கும்.. அக்குழுவில் இடம் பெற்றிருக்கிற எனது ஆருயிர் இளவல் அருணிற்கும் எனது வாழ்த்துக்கள்.

இத்திரைப்படம் zee5 ஆப் பில் காணக் கிடைக்கிறது. நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளர் ஆக இருந்தால்.. ஏர்டெல் டிவி என்கிற ஆப் பிலும் காணக் கிடைக்கிறது. அவசியம் பாருங்கள்.

நிறைய இது போன்ற முயற்சிகளை செய்யுங்க அருண் சார்..

 

.