ஒரு போலீஸ்காரர் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன.. தொப்பை வயிறு.. இறுக்கி அணியப்பட்ட சட்டை, எண்ணைப் போட்டு பளபளக்க வைத்திருக்கும் லத்தி, ஏதாவது கவனிச்சிட்டு போ.. என்கிற வார்த்தை, ஏட்டையா என்கிற சொல், இவை போன்றவை தானே.. அப்படியானால் நீங்கள் அவசியம் இத் திரைப்படம் பார்க்க வேண்டும்.
இந்திய நிலத்தில் மலையாளத் திரைப்படங்களுக்கு எப்போதும் இயல்பின் அழகியல் உண்டு. ஈரமும் மழையும் நிரம்பிய நிலக் காட்சிகள், மலையாள மண்ணின் பாரம்பரிய வீடுகள், யதார்த்தமான மனிதர்கள், எண்ணெய் பூசிய தலையோடு சந்தனப் பொட்டிட்டு வேட்டி முண்டு கட்டிய அழகான பெண்கள், கேரள பண்பாட்டை எதிரொலிக்கிற கதை சித்திரங்கள் என மலையாளத் திரைப்படங்கள் அந்த மண்ணின் மனிதர்களை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடிகளாக திகழ்ந்து வருகின்றன.
மம்முட்டி மோகன்லால் ,திலீப் என உச்ச நட்சத்திர படங்களாகட்டும்.. அவர்கள் வரிசையில் தற்போது நட்சத்திரங்களாக ஜொலிக்கிற பிரித்திவிராஜ், துல்கர் சல்மான், பகத் பாசில், நிவின்பாலி என வளரும் நடிகர்களாகட்டும் … எவரும் இயல்பை மீறிய கதை ஓட்டத்தை விரும்புகிற கலைஞர்கள் இல்லை என்பதுதான் மலையாள திரைப்படத்தின் தரத்தை தீர்மானிக்கிற முக்கிய காரணி.
மலையாளிகள் தமிழர்களைப் போல திரைப்படத்தை எல்லா துக்க துயரங்களுக்கும் ஆகப்பெரும் தீர் வழியாக கண்டடைவதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் திரைப்படம் என்பது திரையில் விரிகிற ஒரு நிகழ்கலை அவ்வளவுதான். ஏனெனில் அவர்கள் திரையில் தங்கள் நாட்டின் தலைவர்களை தேடுவதில்லை.
அதனால் தான் ஒரு சாதாரண எளிய இன்ஸ்பெக்டரை பற்றி உண்டா போன்ற திரைப்படங்களை எவ்வித சாகச உணர்ச்சியும் இல்லாமல் இயல்பாக அவர்களால் படமாக்க முடிகிறது.
………
கொளுத்துகிற வெயிலில், குளிர்கிற இரவில், வெகு நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு இடத்தையோ பிணத்தையோ காவல் காக்கிற எந்த போலீஸ்காரரையோ நாம் நினைத்துப் பார்த்ததுண்டா.. அதிகாலைகளில் முழு விரைப்பாக நின்று கொண்டு போக்குவரத்தினை ஒழுங்கு செய்து கொண்டு நிற்கின்ற அவர்கள் எத்தனை மணிக்கு எழுந்து தயாராய் இருப்பார்கள் என்று நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா.. பொங்கல் தீபாவளி திருவிழா என எந்த விசேஷ நாட்களிலும் வீட்டுக்குப் போக முடியாமல் மனைவி குழந்தை குட்டிகளை மறந்துவிட்டு வீதிகளில் விதியற்று நின்று கொண்டிருக்கிற அவர்களை என்றாவது கருணைப் பார்வை பார்த்திருக்கிறோமா…
ஏன் வாழ்க்கை அவர்களுக்கு மட்டும் அவ்வாறு விதிக்கப்பட்டு இருக்கிறது என்று யோசித்திருக்கிறோமா.. வாழ்தல் வேண்டி வெறும் பிழைப்பின் நிமித்தமாகத்தான் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்களா.. ஊதியம் பெறுகிற அரசதிகாரத்தின் எவ்வித பொறுப்புணர்ச்சியும் கடமை உணர்ச்சியும் இல்லாத வெற்று அடியாட்களா அவர்கள்.. என்றெல்லாம் நினைக்க நினைக்க நமது சிந்தனை சுழி விரிவடைந்து கொண்டே போகிறது.
எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிகளை எடுத்து சுட்டுக்கொண்டு திரைப்படங்களில் நாம் பார்க்கிற சாகச போலீஸ்காரர்களுக்கும்.. அன்றாடம் நாம் சாலையில் பார்க்கிற பணி முடிந்து களைத்து போய் சைக்கிள் கேரியரில் லத்தியை வைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்புகிற அலுத்துப்போன ஏட்டையாக்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..நாம் நமது வாழ்வில் இயல்பாக காணும் சாதாரண சப்-இன்ஸ்பெக்டர் திரைப்படங்களில் வருகிற மாதிரி ஒரு விஜயகாந்த் போல ஒரு அர்ஜுன் போல ஒரு சூர்யா போல எப்போது மாறுவார் என்று நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா…
தமிழ் சினிமா போலீஸ்காரர்களை சித்தரிக்கின்ற விதம் மிகவும் விசித்திரமானது. ஆரம்ப காலம் தொட்டு தமிழ் திரைப்படங்களுக்கும் காவல்துறைக்கும் மிகுந்த நெருக்கமான உறவு இருந்து வந்திருக்கிறது. காவல் துறையை பற்றி அதி புனைவுகளை உருவாக்கியதில் திரைப்படங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. போலீஸ்காரர்களை ஆபத்பாந்தவனாக, அனாதை ரட்சகனாக, சாகசக்காரனாக உரு மாற்றியதில் திரைப்படங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. எல்லா நட்சத்திரங்களுக்கும் தன் தனிப்பட்ட வாழ்வில் ஒரு ஒருமுறையேனும் போலீஸ்காரராக நடித்து விட வேண்டும் என வேட்கை இருக்கிறது.
எம்ஜிஆர் நடித்து புகழ் பெற்ற மலைக்கள்ளன் திரைப்படத்தில் வருகிற இன்ஸ்பெக்டர் விபூதி பட்டை அணிந்து தொந்தியோடு வருகிற நடுத்தர வயதுக்காரர். போலீஸ்காரர் மகள் என்று ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. எம்ஜிஆர் நடித்த காவல்காரன், சிவாஜி நடித்த தங்கப்பதக்கம், ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம், கமலஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், விஜயகாந்த் நடித்த பல படங்கள், சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு ,சூர்யா நடித்த காக்க காக்க, சிங்கம் வரிசைப் படங்கள், விக்ரம் நடித்த சாமி வரிசை படங்கள்.. என உச்ச நட்சத்திரங்கள் நடித்து காவல்துறையை பற்றி சமூக அளவில் ஒரு பிரமிப்பினை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்.
தனிப்பட்ட அளவில் ஒரு சாதாரண போலீஸ்காரரை மிக இயல்பான மனிதராக காட்டிய திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. ஒரு போலீஸ்காரரை மிக நெருக்கமாக அணுகி தனிப்பட்ட வாழ்வினை ஆராய்ந்து எழுதப்பட்ட இயல்பான திரைப்படங்கள் தமிழில் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். இயல்பான போலீஸ்காரரின் வாதைகளை பற்றி கடந்து போகும் சில காட்சிகளில் பேசப்பட்ட திரைப்படங்கள் உண்டு.
சமீபத்தில் வெளியாக இருக்கிற நண்பர் சுரேஷ் காமாட்சியின் மிக மிக அவசரம் என்ற திரைப் படத்தின் திரைக்கதையை நான் வாசிக்க நேர்ந்தது. அத்திரைப்படத்தை படமாக்குவதற்கு முன்பாகவே திரைக்கதையை மின்னஞ்சல் மூலமாக நண்பர் சுரேஷ் காமாட்சி எனக்கு அனுப்பி வைத்திருந்தார். ஒரு பெண் கான்ஸ்டபிளின் பணி சார்ந்த வாதைகளைப் பற்றி மிக நுட்பமாக எழுதப்பட்ட திரைக்கதை அது. திரைப்படமாக திரையில் மலர இருக்கும் தருணங்களுக்காக நான் காத்திருக்கிறேன்.
தமிழில் வெளிவந்திருக்கிற இலக்கிய வரிசைகளில் போலீஸ்காரர்களை பற்றி மிக நேர்மையாக நுணுக்கமாக ஆராய்ந்து இருக்கிற இலக்கியப் பிரதிகள் ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறேன். லாக்கப் போன்ற பாதிக்கப்பட்டவர்களின் குரல் சார்ந்து நிறைய புத்தகங்கள் பட்டுள்ளன. ராமச்சந்திரன் நாயர் என்கின்ற சிஆர்பி போலீஸ் பிரிவின் கான்ஸ்டபிளின் வாழ்க்கை கதை நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி என்ற தலைப்பில் தமிழில் குளச்சல் மு யூசுப் அவர்களின் மொழிபெயர்ப்பினால் வெளிவந்திருக்கிறது. நக்சல்பாரிகளை வேட்டையாடுவதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு படை பிரிவில் பணிபுரிந்த ராமச்சந்திரன் நாயர் தன் பணி சார்ந்த செய்திகளை மிக நுட்பமாக தெரிவித்து எப்படி அதிகாரவர்க்கம் காவல்துறையை அடியாட்களாக பயன்படுத்துகிறது என்பதை தெரிவிக்கிற மிக முக்கியமான நூல் இது.
சமீபத்தில் வெளிவந்து இருக்கிற உண்டா என்ற மலையாளத் திரைப்படம் இந்த வகை முறைமைகளில் ஒரு முக்கியமான படைப்பு. கேரளாவின் புகழ்பெற்ற நடிகர் மம்முட்டி நடித்து வெளிவந்த இத் திரைப்படம் ஒரு நடுத்தர வயது சப்-இன்ஸ்பெக்டரை பற்றியது.
கேரளாவில் இருந்து தேர்தல் பணிக்காக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மாவோயிஸ்ட் ஆதிக்கம் உடைய ஒரு மலைவாழ் கிராமத்திற்கு செல்லும் சாதாரணமான போலீஸ்காரர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி மிக நுட்பமாக தயாரிக்கப்பட்ட படம்.
சாதாரணமாக நாம் எதிர்கொள்ளும் ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியை கையாள தெரிந்தவரா.. ஒரு பிரச்சனை வரும்போது எதிர் கொள்ளும் பயிற்சிகள் அவருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறதா.. என்கிற பல கேள்விகளை முன்வைக்கிற இத்திரைப்படம் காவல் துறை நிர்வாக சீர்கேட்டையும் பகடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மம்முட்டி. நடுக்காட்டில் எந்த உதவியும் இல்லாத இடத்தில் நெஞ்சுவலியை எதிர்கொள்ளும் ஒரு நடுத்தர வயதுகாரர் எப்படி அதை சமாளிப்பார் என்பதையும் சாந்தமாக இருக்கின்ற இயல்பான மனிதனை சுற்றி நெருக்கடி சூழல் சூழும் போது அசாதாரண தன்மைகள் அவனுக்குள் எப்படி ஏற்படும் என்பதையும் நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பது அவருக்கே உரியது.
சின்ன சின்ன கதாபாத்திரங்களும் மனதை ஈர்க்கிறார்கள். அந்த மலைவாழ் பகுதி பள்ளியின் ஆசிரியர், துப்பாக்கி குண்டுகளை எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் பயணிக்கும் காதலிக்கும் போலீஸ்காரர், மனைவியோடு முரண்பட்டு விவாகரத்து வரை செல்கின்ற அந்த கோபக்கார கான்ஸ்டபிள், எல்லாவித அவமானங்களையும் சகித்துக் கொண்டு ஒரு நொடியில் தாங்கமுடியாமல் வெடித்து கொதிக்கிற அந்த தாழ்த்தப்பட்ட கான்ஸ்டபிள் என ஒவ்வொருவரும் திரைக்கதையின் வலிமைக்கு அழகு சேர்த்திருக்கிறார்கள்.
உண்மையில் நக்சல்கள் ஏன் தோன்றுகிறார்கள்.. சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் என்னதான் நடக்கிறது.. மக்கள் எப்படி அந்த வன்முறை நிலத்திற்குள் வாழ்கிறார்கள் என்பதை எல்லாம் போகிறபோக்கில் சில காட்சிகள் மூலம் அழுத்தமாக இத்திரைப்படம் பதிவு செய்கிறது.
வித்தியாசமான நிலம். பாதிக்கப்பட்ட மக்கள். மிக சாதாரணமான கதாநாயக தன்மையற்று விளங்குகின்ற கதாநாயகர்கள் என ஒரு அட்டகாசமான திரைக்கதையோடு மிக நேர்த்தியான ஒரு திரைப்படத்தை மம்முட்டி என்ற மகா கலைஞன் மூலம் வழங்கியிருக்கிறார்கள்.
அவசியம் அனைவரும் காணுங்கள். அமேசான் பிரைம் இல் கிடைக்கிறது.