பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: பிப்ரவரி 2020

எம்.எஸ்.வி -இசையால் நிறைத்த பெருமழை..

 

 

எழுபதுகளின் இறுதியிலும் , எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்தவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான கட்டமைக்கப்பட்ட மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாங்களெல்லாம் இளையராஜாவோடு வளர்ந்தவர்கள். ஏறக்குறைய எம்எஸ்வி காலம் அப்போது இறுதி காலத்தை எட்டியிருந்தது.நாட்டுப்புற அழகியலோடு இளையராஜா அள்ளிக்கொடுத்த மென் சோக செவ்வியல் இசை இரண்டு தலைமுறை காலத்து தமிழ்ச் சமூகத்தை கட்டிப்போட தொடங்கியதும் அந்த காலகட்டத்தில்தான் .

இளையராஜாவின் இசை கேட்கத்தான் காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதாகவே நாங்கள் நம்பினோம். அவரது சமகாலத்து எத்தனையோ நல்ல இசையமைப்பாளர்கள் எங்களது அதிதீவிர இளையராஜா இசை நம்பிக்கைகளால் திரை உலகை விட்டே நகர்ந்து போய்விட்டார்கள். அதுபற்றி எல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்ததே இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் இளையராஜா தான் எங்களுக்கு சர்வ மயம்.

அந்தக்காலத்தில் எம்எஸ்வி முன்னொரு காலத்தின் இசையமைப்பாளராக மாறியிருந்தார். 60களின் ஆகப்பெரும் இசையரசன் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி தான். அவரும் ராமமூர்த்தியும் இணைந்து விஸ்வநாதன்-ராமமூர்த்தியாக‌ பல இசை உச்சங்களை தொட்டார்கள். நாங்கள் இந்த காலகட்டத்தை கடந்து பிறந்தவர்கள். எங்கள் பால்ய காலத்தில் எம்எஸ்வி பாடல்களை கேட்பது என்பது பழைய காலத்து ஆள் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் என்பதால் இளையராஜா தவிர நாங்கள் எதையும் கேட்பதில்லை.

ஆனாலும் எங்களுக்கும் ஒரு மூத்த தலைமுறை எங்கள் வீட்டிலேயே இருந்ததால் வேறுவழியின்றி அவ்வப்போது எம்எஸ்வி பாடல்களையும் கேட்க நேரிட்டது. அப்போது வானொலி தான் வீட்டுக்கு வீடு இசைக்கச்சேரி வைக்கின்ற முக்கிய பாடகர்.

“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..” என்ற பாடல் வானொலியில் ஒலிக்க தொடங்கினால் போதும். அதுவரை ஏதேதோ பேசிக் கொண்டிருந்த என் அம்மாவும், அப்பாவும் அமைதியாகி விடுவார்கள்.

என் பதின்பருவத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான என் தோழி ஒருவள் டி கே ராமமூர்த்தி (விஸ்வநாதன்) இசை அமைத்து வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் வருகிற” கண்கள் எங்கே.. நெஞ்சமும் அங்கே .. என்ற பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பாள். “என்ன இருக்கிறது அதில்..? “என அந்தக் காலத்தில் நான் கேட்டபோது “என்ன இல்லை இதில் ..?”என சிரித்துக் கொண்டே சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் இன்று கேட்கிறபோது அவள் சொன்னது உண்மையாக தான் இருக்கிறது.

எனது சிறுவயதில் “நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா..” என்று சுசீலா வானொலியில் கசிந்துருகும் பொழுதில் என் தந்தையின் கண்கள் கலங்குவதை நான் கண்டிருக்கிறேன். ஒரு பாடலைக் கேட்டுவிட்டு கண் கலங்குவது என்பதை என் தந்தையார் மூலம் தான் முதன் முதலாக நான் அறியத் தொடங்கினேன்.

பிற்காலத்தில் நான் வளர்ந்த பிறகு தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்தது அழகி திரைப்படம். இளையராஜாவின் இசை அந்தப்படத்தை ஒரு காவியமாகவே மாற்றி இருக்கும். அத் திரைப்படத்தில் படத்தின் நடுவில் வருகின்ற “உன் குத்தமா, என் குத்தமா..” என்ற பாடல் ஒலிக்கத் தொடங்குவதற்கு முன்பாக காட்சி அமைப்பில் ஒரு சிறிய மௌனத்தை உணர்வுத் தூண்டலுக்காக இயக்குனர் திட்டமிட்டு வைத்திருப்பார். பால்யக் கால காதலியான தனலட்சுமியை எதிர்பாராமல் சந்தித்த பார்த்திபன் அந்தப் பெண் வாழும் இடமான தெருவோரத்தில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கும்போது மழைத்தூறல் தூறத் தொடங்கும். பார்த்திபன் நனைந்து விடக்கூடாது என்பதற்காக அவரது காதலியான தனலட்சுமி ஆக நடித்த நந்திதா தாஸ் உணவுத் தட்டை குடை போல பிடிக்க.. அதை நிமிர்ந்து பார்க்கும் பார்த்திபன்.. என விரியும் அந்தக் காட்சியில் ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு திரையரங்கமே அமைதியாக இருக்கும் அப்பொழுதில், தனித்து ஒலிக்கும் இளையராஜாவின் குரல்” உன் குத்தமா.. என் குத்தமா.. ” என கேட்கத் தொடங்க
படத்தை பார்த்துக் கொண்டிருந்த என் பக்கத்தில் அமர்ந்து இருந்த ஒருவர் அந்த சிறு மௌனத்தையும், அதற்குப் பிறகு வந்த இளையராஜாவின் குரலையும் கேட்டு தேம்பித் தேம்பி அழத்தொடங்கினார். அதுவரை நாகரீகம் கருதி கட்டிவைத்திருந்த எனது விழிகளின் கோட்டை தகர்ந்து கண்ணீர் எனக்கும் பெருக்கெடுத்தது.

ஒரு நல்ல இசை அப்படித்தான். அழ வைக்கும். ஒரு Guide போல நம் கரம்பிடித்து கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும். நாம் வேண்டுமென்றே நினைக்க தவிர்த்தவை எல்லாவற்றையும் வருந்தி அழைத்து நம் மனதில் அமர வைக்கும்.

அந்தச் சமயத்தில் எனக்கு பாதர் மார்ட்டினின் நினைவு வந்தது.
நான் பள்ளி பயின்ற காலங்களில் ஃபாதர் மார்ட்டின் என்கின்ற பாதிரியார் மன்னார்குடியில் இருந்தார். வானம் உயர்ந்திருக்கும் புனித ஆண்டவரின் தேவாலயத்தின் பக்கத்திலேயே அவரது வசிப்பிடம் இருந்தது. எனக்கு நிறைய கிருத்தவ நண்பர்கள். புனித பைபிளின் கவித்துவ தமிழில் நான் என்னையே இழந்து அலைந்து கொண்டிருந்த காலம் அது. அந்தத் தமிழை கேட்பதற்காகவே நான் தேவாலயங்களுக்கு செல்வேன்.

அங்குதான் பாதிரியார் மார்ட்டின் எனக்குப் பழக்கம். பள்ளி முடிந்து அவருடன் சென்று பேசிக்கொண்டிருப்பேன்.
அவர் தீவிரமான மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதனின் ரசிகர். பிராத்தனை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் அவர் ஏதோ ஒரு எம்எஸ்வி பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்.

ஒரு பின் மாலை நேரம். தேவாலயத்தை கடந்து நான் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது தூரத்தில் ஒலித்த “மாலைப் பொழுதின் மயக்கத்திலே.. ” என்கின்ற அந்த தெய்வீகப் பாடலை நான் கேட்டேன். பேனாசோனிக் டேப் ரிகார்டரில் கேசட் போட்டு கேட்டுக் கொண்டு தேவாலயத்தின் பக்கவாட்டுப் பகுதியில் இருந்த தனது வசிப்பிடத்திற்கு முன்னால் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே மார்ட்டின் பாதர் மாலைப் பொழுதின் மயக்கத்தில் கண்மூடி மூழ்கியிருந்தார். ஏறக்குறைய முழு இருட்டு. அருகில் இருந்த ஒரு சிறு பீடத்தில் ஒரே ஒரு பெரிய மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. மெழுகுவர்த்தியின் மஞ்சள் நிற ஒளி பாதர் மார்ட்டின் முகமெங்கும் பரவி பரவச ஜோதியில் அவர் நிறைந்திருந்தார்.

நான் அமைதியாக சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு அவரின் எதிரே முன் இருந்த ஸ்டுலில் அமர்ந்தேன். அந்த வளாகத்தில் நானும், பாதரும், புனித ஆண்டவரும் மட்டுமே தனித்து இருந்தோம். நான் வந்தது கூட தெரியாமல் அவர் எம்எஸ்வியின் இசையில் மூழ்கிக் கிடந்தார். அந்த மாபெரும் வளாகம். தனிமை. சூரியன் மங்கிய மாலைப் பொழுது. மெழுகுவர்த்தி ஒளி,தனித்துவமான அந்த இசை என பலதும் சேர்ந்து என் மனநிலையை வேறு மாதிரி ஆக்கத் தொடங்கியது. முன்னொரு பிறவியில் எங்கேயோ கேட்ட பாடல் போல அந்தப் பாடல் இருந்தது.

இருந்தாலும் இளையராஜா தவிர இன்னொரு இசையையும் ரசிக்க முடியும் என்கின்ற ஒரு நிலையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனவே அந்தப் பாடலை கேட்பதில் இருந்து என்னை விலக்கிக் கொள்ள முயற்சித்தேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் ஒரு சுழி போல அந்த தெய்வீக இசை என்னை இழுக்கத் தொடங்க.. நானும் அமைதியாக அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒருவழியாக அந்த பாடல் முடிவடைந்தது. கலங்கியிருந்த கண்களோடு பாதர் கண்களைத் திறந்தார்.

சின்னப் புன்னகையோடு எனது வருகையை அங்கீகரித்து விட்டு அமைதியாய் இருந்தார். ஒரு நிறைவுக்கு பிறகான அமைதி போல அந்த உணர்ச்சி . சில கணத் துளிகளுக்கு பிறகு நிமிர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார்.

இந்த எம்எஸ்வி இசை பெரும் போதைடா.. இந்த உலகத்தையே துறந்து விட முடிகிறது. ஆனால் எம்எஸ்வியை மட்டும் விட முடியல என்று எனக்கும் அவருக்குமாக சேர்த்து சொல்லிக் கொண்டார்.

நான் சற்றே வீம்புடன்.. அப்படி எல்லாம் இதில் ஒண்ணும் இல்ல. இப்ப இதையெல்லாம் தாண்டி வேற வடிவத்திற்கு இளையராஜா இசையைக் கொண்டு போய்விட்டார் என்றெல்லாம் நான் பேச தொடங்கினேன்.

இளையராஜா நல்லாதான் பண்றார். அவர் எம்எஸ்வியோட தொடர்ச்சி என்று பாதர் பதிலளிக்க.. அதிதீவிர இளையராஜா ரசிகனான என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இளையராஜா பெரிய ஆளா எம்எஸ்வி பெரிய ஆளா என்பது போல நான் குறைகுடம் போல தளும்பி விவாதிக்கத் தொடங்க.. பாதர் அமைதியாக எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பிறகு கிறிஸ்துமஸ் காலம் முடிந்து மார்ட்டின் பாதரை பார்க்க நான் சென்றிருந்தேன். ஊரிலிருந்து அவரைப் பார்க்க உறவினர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். மார்ட்டின் பாதர் அமைதியாய் தலைகுனிந்தவாறு அமர்ந்து இருந்தார். வந்திருந்தவர்களில் வயதான அம்மா ஒருவர் மார்ட்டின் ஃபாதரின் தோளைத் தட்டி அவருக்கு ஆறுதலாக ஏதோ சொல்லிவிட்டு கிளம்பலாம் என்பதுபோல மற்றவர்களைப் பார்க்க.. மற்றவர்களும் அமைதியாய் அங்கிருந்து வெளியேறினர். வாசலில் நின்று கொண்டிருந்த நான் எப்போதும் உற்சாகமாக இருக்கிற மார்ட்டின் பாதர்
எதற்காக தலைகவிழ்ந்து சோகமாக இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள உள்ளே சென்றேன். அவர் என்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

நான் குரலைக் கனைத்தவாறு என்ன பாதர் என்ன ஆச்சு.. என கேட்டேன்.
பாதர் அமைதியாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். மெதுவாய் நிமிர்ந்து பார்த்தபோது அவரது கண்கள் முழுக்க கண்ணீர். என்ன பாதர் என்ன ஆச்சு என்று நான் பதட்டமாய் கேட்க.. எனக்கு வேண்டியவங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி இறந்து போயிருக்காங்க.. எனக்கு இப்பதான் தெரிய வருது என்று சொல்லி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அமைதியாய் எழுந்து சென்ற அவர் வழக்கமான அவரது டேப் ரிகார்டரில் எங்கிருந்தோ தேடி ஒரு கேசட்டை எடுத்துப் போட்டார். சுசீலா அவர்களின்
நீண்ட ஹம்மிங்கோடு அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

அதுதான் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” என்ற புதிய பறவை திரைப்படத்தின் பாடல். அதற்கு முன்னால் அந்தப் பாடலை நான் சில முறை கேட்டிருந்தாலும் இப்போது முதல்முறையாக கேட்பது போன்ற ஒரு மன உணர்ச்சி. பாதர் பாடலை ஒலிக்க விட்டு விட்டு அவரது சாய்வு நாற்காலியில் அப்படியே கண்மூடி சாய்ந்தார். பாடல் ஓடிக்கொண்டே இருந்தது. மூடிய மார்ட்டின் பாதர் கண்களிலிருந்து சாரை சாரையாய் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. பாடல் முடிந்த பிறகு இறந்துப்போனது யாரது என கேட்கலாம் என நான் காத்திருந்தேன்.

பாடலும் முடிவடைந்தது. நான் அவருக்கு ஆறுதல் சொல்லலாம் எழுந்து அவரது அருகே செல்ல முயற்சித்தபோது.. மீண்டும் சுசீலா அம்மாவின் குரல் கேட்கத் தொடங்கியது. ஆமாம் அதே பாடல்தான். மீண்டும் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” ஒலிக்கத் தொடங்கியது.

எழுந்த நான் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் பாடல் முடிய அதே பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஒரு கேசட் முழுக்க ஒரே பாடலை பதிவு செய்து வைத்திருந்தார்கள்.

மார்ட்டின் பாதர் அழுதுகொண்டே இருந்தார். இரண்டு மூன்று முறைகளுக்கு பிறகாக அந்தத் தனிமையும், பாதர் இருந்த மனநிலையின் அழுத்தமும் என்னை ஏதோ செய்ய.. நான் அப்படியே அமைதியாக எழுந்து என் வீட்டிற்கு புறப்பட்டேன்.

அந்த பாடலுக்கும், அவருக்குமான உறவு என்பது எப்படிப்பட்டது என்று என்னால் யோசிக்கவே முடியவில்லை. அவர் அழுததை பார்த்தால் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவருக்காகவே அந்தப் பாடலை உருவாக்கி இருப்பார்கள் போல என நம்பத் தோன்றியது.

கடந்த காலம் கடந்தவை தான் என்றெல்லாம் நாம் ஆயிரத்தெட்டு ஆறுதல்களை, நியாயங்களை, தர்க்கங்களை நமக்குள்ளாக சொல்லிக்கொண்டாலும் கடந்தவை எதையும் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. வாழ்வின் சூட்சம புள்ளிகளில் ஏதோ ஒன்றில் சிக்கிக்கொண்டு, ஒரு உடைபட்ட அணை போல கடந்த கால நினைவுகள்
கட்டவிழ்க்கப்பட்டு பெருகும் போது.. எதனாலும் மறைக்க முடியாதத் துயர் இருட்டில் சிக்கிக் கொள்வது தான் மனிதமனம் கொண்டிருக்கிற துன்பியல் விசித்திரம்..

சில நாட்கள் கழித்து மார்ட்டீன் பாதரை பார்க்க தேவாலயத்தின் வளாகத்திற்கு சென்றிருந்தபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.‌ தொலைதூர ஊருக்கு மாற்றலாகிச் சென்று விட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு அவரை நான் எங்கும் பார்க்கவில்லை.

முதன்முதலாக எம்எஸ்வி இசையில்லாத அந்த வளாகத்தில் புனித ஆண்டவரும் நானும் மட்டுமே தனித்திருந்தோம்.
எப்போதும் கருணையின் கண்களை கொண்டிருக்கிற தேவ குமாரனின் விழிகளில் அன்று சோகத்தின் சாயல் படிந்திருந்ததாக எனக்குத் தோன்றியது.

கணக்கு-வழக்கு

 

நின்று நிதானித்து
திரும்பிப் பார்த்தால்
நிறைவொன்றுமில்லை.
குறையொன்றுமில்லை.

கண் கூசும் வெளிச்சங்களுக்கு,
உச்சுக் கூசும் உயரங்களுக்கு,
புகழ் வார்த்தை தளும்புகிற
போதைகளுக்கு,
அடிமையாகிப்
போன கணக்கினைத் தவிர
மிஞ்சியது ஏதுமில்லை.

கடந்தவை நடந்தவை எல்லாம்
கணக்கிட்டால் நிகழ்ந்தவை தானே
என பெருமூச்சுயன்றி வேறில்லை.

முதுகில் உரசும் கத்திகளுக்கு இடையே..
நெஞ்சில் உறுத்தும் புத்திகளுக்கு இடையே..
விளையாடித்தீர்த்தும் பலனில்லை‌.
ஆயிரம் சூழ போகித்திருந்தாலும்
சத்தியமாய் சொல்கிறேன் நலனில்லை.

இது தானா வாழ்வு என்பதிலும்..
இது நானா – தாழ்வு என்பதிலும்..
இடைவெளி இல்லா பேதமில்லை.

நிகழுலக நினைவுகள்..

 

எங்கிருந்தோ வீசி
என் பின்னங்கழுத்தை
உரசி செல்கிற
காற்றில் உன் மெல்லிய
விரல்கள் ஒளிந்திருக்கின்றன.

எதிர்பாராமல் சிந்துகிற
எதிர்ப்படும் குழந்தையின்
புன்னகை ஒன்றில்
பொன்னெழில் பூசிய
உனது கன்னக்கதுப்புகள்
மலர்ந்து இருக்கின்றன.

அடர்மழை குளிர் இரவில்
கண்ணாடிக் கூண்டினில்
அசையும் மெழுகுச்சுடரில்
நிலா இரவொன்றில்
கிறங்கிப் போயிருந்த
உன் நீல விழிகளின்
வெப்பம் தகிக்கின்றன.

பின்னிரவின் ஒத்திசைவு
லயிப்பில் கேட்கும்
இளையராஜாவின்
பியானோ வாசிப்பின்
இடையே மலரும்
மெளனங்கள்
அடர்த்தியாய்
என் முகம் போர்த்தும்
உன் கேசத்தின் வாசனையை
வாசித்து காட்டுகின்றன..

அசையும் பேருலகில்
சலனமில்லா ஒரு நொடி
திடுக்கிடலில் கழுத்தில்
முகம் புதைத்து நீ சிந்திய
கண்ணீர் துளிகள்
கனக்கின்றன.

எப்போதும் தோள் தழுவி
உறங்கும் என் பால்ய
மகனின் அமைதியில்
உன் மடியில்
நான் அடைந்த
அந்த முன் அந்தி‌
உறக்கத்தின் சாயல்கள்
இயல்பாய் நிகழ்கின்றன.

இப்படியாக
உன்னை தொலைத்தும்
உன்னை அடைந்துமாக
அலைந்து கழிகிறது
இந்த நிகழுலகு.

தேவைப்படுகிற புரிதலின் வெளிச்சம்..

 

 


***

எதையும் புரிந்து கொள்ளாமல் தாங்கள் சொன்னது மட்டுமே சரி என வாதாடுகிற சங்கிகள் மட்டுமல்ல இன்னும் சிலதுகள் இருக்கின்றன. தாய்மதம் மாற சொல்கிறார் சீமான் என இஸ்லாமிய கிருத்துவ மதங்களை தழுவிய தமிழர்களிடம் பதிவுகள் இட்டும் , காணொளிகள் போட்டும் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றன.

அண்ணன் சீமான் சொன்னது ஆதித் தமிழரின் நம்பிக்கையை, மெய்யியல் தத்துவங்களை கொள்ளையடித்து இந்துத்துவ மயமாக்கி கொண்ட வருணாசிரம கேடுகளில் இருந்து தமிழர்கள் விடுதலை அடைந்துகொள்ள மீண்டெழும் தமிழர் சமயங்கள் என்கின்ற முழக்கத்தை அவர் முன்வைக்கிறார்.

அது தமிழரின் பண்பாட்டு விழுமியங்களை கொள்ளையடித்த இந்துத்துவ ஆரிய பிழைப்புவாத கொள்கைகளுக்கு எதிரானது.

இதில் எங்கும் இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களுக்கு மாறி இருக்கிற தமிழர்கள் உட்பட மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பிறப்பால் தமிழர்கள். வேறு நாட்டிலிருந்து வந்திருக்கிற மத நம்பிக்கைகளில் ஆர்வம் கொண்டு அந்தந்தப் மதங்களை தழுவி இருக்கிறார்கள். அந்தந்த மதங்களுக்கு உரிய வழிபாட்டு வழிமுறைகளை ஒத்துக் கொண்டுதான் பயணிக்கிறார்கள்.
எனவே மற்ற தமிழர்களாகிய நாங்கள் அந்த நம்பிக்கைகளை மதிக்கிறோம். அவைகள் பிற மதங்கள் என்கின்ற சொல்லுக்கு உட்பட்டவை.

ஆனால் இந்துமதம் என்கின்ற அமைப்பு அவ்வாறல்ல.இந்து என்கிற சொல் ஆங்கிலேயன் உருவாக்கிக் கொடுத்தது. இன்னும் ஆழமாக சொன்னால் ஒரு மதம் அல்லது ஒரு வழிபாட்டுமுறை என்பதற்கான எந்த அடிப்படை தன்மைகளும் இவர்கள் காட்டும் இந்து மதம் என்பதற்கு கிடையாது. மற்ற மதங்கள் யாரோ ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டு ஏறக்குறைய உலகம் முழுவதும் பொதுமையான வழிபாட்டு முறைமைகள் கொண்டவை. அந்தந்த மதத்திற்கான புனித நூல்கள் இருக்கின்றன.

ஆனால் இந்து என்று இவர்கள் சொல்கின்ற மதத்திற்கு அவ்வாறெல்லாம் எதுவும் இல்லை. எடுத்துக்காட்டாக தமிழகத்துக்கு உள்ளேயே பல்வேறு மெய்யியல் நம்பிக்கைகள் இருந்து இருக்கின்றன. இங்கே சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையே பெரும்போரே நிகழ்ந்திருக்கிறது. வைணவ பெருமாள் சிலையை இழுத்து வந்து கடலிலே மூழ்கடித்த சைவ மன்னர்களை தமிழ் நிலத்தில் தமிழர் வரலாற்றில் பரவலாகப் பார்க்கலாம். இதைத்தான் கமலஹாசன் தசாவதாரம் திரைப்படத்தில் காட்சிமயப்படுத்தி இருப்பார். இந்த முரண், இந்த வேறுபாடு தமிழர் நிலத்தில் மிகமிக இயல்பானது. சைவம் வைணவம் மட்டுமல்ல.. ஆசிவகம் சக்தி வழிபாடு காளி வழிபாடு சமணம் பௌத்தம் நாத்திகம் என பல்வேறு நம்பிக்கைகளுக்கு தமிழ் மண்ணில் இடம் உண்டு.

இவைகளை ஒரே சட்டத்தின் மூலமாக ஒன்றாக அடக்கி ஆட்சி செய்ய ஆங்கில ஆட்சியாளர்கள் கண்டுபிடித்த ஒற்றைப் பெயர்தான் இந்து மதம். அது மதம் அல்ல ‌.இந்தியாவை ஒரே குடையின் கீழ் ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கான ஏற்பாடு ‌.

இத்தனை ஆண்டுகாலம் இந்து என்று தமிழர்கள் அடிமைப்படுத்த பட்டதால் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகி போனோம். எங்களது மொழி தீண்டத்தகாத மொழியாகி எங்களது கோவிலுக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டது. எங்களுக்கு எங்களது கடவுளர்கள் இருக்கிற கருவறைக்கு செல்கிற உரிமை மறுக்கப்பட்டது. எங்களது பண்பாட்டு விழுமியங்களில் பல ஊடுருவல்கள் நிகழ்ந்து எங்களது வாழ்வியலே மாறிப்போனது. எனவேதான் நாங்கள் இந்துக்கள் அல்ல என முழங்க தொடங்கியிருக்கிறோம். நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி தனது முதல் தீர்மானமாக தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது.

எனவேதான் தமிழர் என்கின்ற தேசிய நிலத்தின் தொன்மையான மெய்யியல் கோட்பாடுகளை மீட்பதற்காக அண்ணன் சீமான் எழுப்பும் அறைகூவலை இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களுக்கு எதிரான ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது ‌.

எல்லா மதங்களிலும் மத அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பொதுவான ஒரு குணாதிசயம் இருக்கிறது. தேசிய இனம் மொழி போன்றவைகள் மீது பற்றுறுதி கொண்டு ஒரு இனம் மீள எழும்புவது மத அடிப்படைவாதிகளுக்கு பிடிக்காது. தேசிய இனமாக திரள்வது மதம் மீதான பற்றுறுதியை சிதைத்துவிடும் என மத அடிப்படைவாதிகள் அஞ்சுவார்கள். எனவேதான் மத அடிப்படைவாதிகள் அண்ணன் சீமானின் இந்த முழக்கங்கள் குறித்து தேவையற்ற குழப்பங்களை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

அண்ணன் சீமான் மீண்டெழும் தமிழர் சமயங்கள் என்கின்ற முழக்கம் தமிழர் தொன்மை மெய்யியல் கோட்பாடுகளை மீட்டெடுக்க நடத்தப்படுகின்ற புரட்சிகர நடவடிக்கை. இது தமிழர்களை வீழ்த்துகிற வருணாசிரம ஆரிய சாதிய நிலைகளுக்கு எதிரானது‌. தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்ற முழக்கத்தின் தொடர்ச்சிதான் மீண்டெழும் தமிழர் சமயங்கள் , தாய் மதம் திரும்புவோம் போன்ற அறைகூவல்கள். இந்து என்பது ஒரு மதம் என தமிழர்களாகிய நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் தனித்த மெய்யியல் நம்பிக்கைகளை உடைய தொன்மையான தேசிய இனம். சீக்கியர்கள் எப்படி தங்களை இந்துக்கள் என ஒத்துக் கொள்ள மறுக்கிறார்களோ,லிங்காயத்துகள் எப்படி தனி மதமாக தங்களை ஆக்கிக் கொண்டார்களோ அதேபோல நாங்களும் எங்கள் தாய்மதம் நோக்கி திரும்ப தொடங்கியிருக்கிறோம். அதுவும் காலப்போக்கில் நிகழ்கிற சமூக மாற்றத்தில் ஏற்படப் போகின்ற உளவியல் மாற்றம் மூலமாக ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் நிகழப்போகின்ற மாற்றங்கள் இவை. வற்புறுத்தலின் பேரிலோ அதிகாரத்தின் பெயரிலோ கட்டாயத்தின் பேரிலோ நிகழ்பவை அல்ல.

இந்த நடவடிக்கையில் ஏற்கனவே தமிழர் என்கின்ற தேசிய இனத்தில் பிறந்த தமிழர்களில் இஸ்லாம் கிருத்தவம் பௌத்த சமண இன்னும் பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட மதங்களை தழுவியவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை. அவர்களது நம்பிக்கைகளை தமிழராகிய நாங்கள் போற்றி மதிக்கிறோம். அவரவர் அந்த நம்பிக்கைகளோடு அந்தந்த மதங்களை போற்றி வணங்கி அதிலேயே தொடரலாம். அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை.
மீண்டும் அழுத்தமாக சொல்கிறோம். மற்ற மதங்களான கிறித்தவ இஸ்லாமிய பௌத்த இன்னும் பல்வேறு மதங்களை தழுவி இருக்கிற தமிழர்கள் கொண்டு இருக்கிற நம்பிக்கைகளுக்கு மீண்டெழும் தமிழர் சமயங்கள் என்கின்ற எங்களது முழக்கம் எதிரானதல்ல. அது தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் தொன்ம மெய்யியல் நம்பிக்கைகளை மீட்டெடுத்து வரலாற்றின் பாதையில் எங்கள் மீது சுமத்தப்பட்ட இருக்கிற ஆயிரமாயிரம் அடிமைத் தளைகளை உடைத்தெறிய நடக்கிற புரட்சிகர நடவடிக்கை.

பரவச வானை உரசிப் பார்த்த எளிய கரங்கள்..

 

 

 

ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை பொறுப்பேற்று நடத்துவது என்பது ஏறக்குறைய‌ முதன்முதலாக தன் ஒரே மகளின் திருமணத்தை பொறுப்பேற்று நடத்துகிற‌ தந்தையின் வலிக்கு நிகரானது. ஆனால் கும்பகோணம் நாம் தமிழருக்கு பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்துகிற அனுபவம் புதிதல்ல என்றாலும்.. இந்த முறை வேறு வகையான மாறிப்போன சூழல்கள்.

வீரத்தமிழர் முன்னணியில் சாமிமலை கூட்டம் ஒரு வருட காலத்திற்கு முன்பே அண்ணன் சீமானால் அறிவிக்கப்பட்டது என்றாலும் நடுவில் ஏற்பட்ட பல சூழல்கள், குடந்தை நகரச் செயலாளர் கார்த்தியின் மரணம் மற்றும் ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தல் போன்ற பலவற்றால் அதன் வேலைகளை தொடங்கவே முடியாத நிலைக்கு நாங்கள் ஆளாகி இருந்தோம். குறிப்பாக தம்பி கார்த்தியின் மரணம் மிகப் பெரிய உளவியல் சோர்விற்கு என்னையெல்லாம் உள்ளாக்கியிருந்தது. இந்த பின்னடைவுகளுக்கு மத்தியில் தான்
ஜனவரி மாத தொடக்கத்தில் தைப்பூச திருவிழா திருமுருகன் பெருவிழா பணிகள் எங்களுக்கு கட்சித் தலைமையால் மீண்டும் நினைவூட்டப்பட்டது. தொடக்கத்தில் இதை எடுத்து செய்ய முடியுமா என்கின்ற மிகப்பெரிய தயக்கம் சமீபகால சூழ்நிலைகளால் எங்களுக்கு ஏற்பட்டு இருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக வீரத்தமிழர் முன்னணியின் பொறுப்பாளர் தம்பி செந்தில்நாதன் இதை நாங்கள் நடத்தியே ஆக வேண்டும் என வற்புறுத்திக் கொண்டிருந்தான். அவனோ தஞ்சைக் கோபுரத்தின் உச்சியில் தமிழை ஏற்றி வைக்க உற்சாகமாய் உழைத்தவன். இந்த நிகழ்வையும் வெல்ல வைக்க வேண்டுமென எங்களை தூண்டிக்கொண்டே இருந்தான்.

சாமிமலை மிகச்சிறிய சிற்றூர். அந்த ஊரில் மிகப் பெரிய கூட்டங்கள் நடந்ததில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் அந்த ஊர் மக்கள் நடமாட்டம் இல்லாமல் போய்விடும். அந்த ஊரில் ஒரு மாபெரும் மாநாடு போன்ற ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துவது என்பது மிகப்பெரிய சவால். கூட்டத்திற்கு தேவைப்படும் ஒவ்வொரு பொருளையும் பக்கத்து பெரிய ஊர்களான கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்துதான் எடுத்துச் செல்ல வேண்டும்.

இப்படிப் பல சவால்கள். குறுகிய காலம். மிகுந்த பொருளாதார நெருக்கடி.இதையெல்லாம் தாண்டி ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டுமென அண்ணன் சீமானின் அன்பான அறிவுறுத்தல். அந்த மனிதனின் குரல் கேட்ட பிறகு எதையும் செய்துவிட துடிக்கின்ற உளவியல் இயல்பாகவே நமக்கு வாய்த்து விடும். இவ்வாறாக நாங்களும் தயாரானோம்.

காலம் வெவ்வேறு காரணங்களுக்காக தகுதி வாய்ந்த சிலரை தேர்ந்தெடுத்து அதுவாகவே உருவாக்கி அனுப்பி வைக்கிறது.

அப்படி எங்களில் ஒருவனாக இருந்தவன் வீரத்தமிழர் முன்னணி குடந்தை தொகுதி பொறுப்பாளர் தம்பி வெங்கட் ரவி. அதுவரை அவனை சாதாரணமாகத்தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு பொறுப்பினை ஏற்றுக் கொண்டவுடன் 100% அதற்கு நேர்மையாக நின்று உறுதியாக உழைத்த தம்பி வெங்கட்டு தான் இந்த நிகழ்வில் நான் கண்டடைந்த மகத்தான ஆச்சரியம். அவனது காலடி படாத இடம் அந்தக் கூட்டம் நடந்த திடலில் எங்கும் இல்லை.
பிளக்ஸ் அச்சிட்டு மேடையை தயார்செய்ததிலிருந்து நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடுகள் வரை பல வேலைகளை எடுத்துக் கொண்டு செய்தான்.
அவனே நாற்காலிகளை தூக்கிக் கொண்டு ஓடினான். குடிநீர் குடுவைகளை எடுத்துக்கொண்டு ஓடினான். நிகழ்ச்சி தொடங்கி அண்ணன் வர வேண்டிய நேரம். அப்போதுதான் கவனித்தோம். மைக் பொருத்தப்பட வேண்டிய போடியம் இல்லை.ஒரு நொடியில் எங்களுக்கு உலகமே மாறி போய்விட்டது. இதுவரை அறியாத பதட்டம். இவ்வளவு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இப்படிப்பட்ட தவறு ஏற்பட்டது என்பது எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.உடனே பரபரப்பானோம். தம்பி வெங்கட்டு என்னையும் அழைத்துக் கொண்டு இன்னொரு தம்பியையும் அழைத்துக்கொண்டு ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேராக பறந்தான். போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டு இருந்த போடியம் வந்த மினி லாரியை மீட்டெடுத்து தம்பி லிங்க துரையோடு போடியம் மேடையை தூக்கிக்கொண்டு நாங்கள் உள்ளே நுழைந்தபோது அண்ணன் திடலில் நுழைந்தார். உயிர் வந்தது எங்களுக்கு.

இப்படியாக ஒவ்வொரு வேலையிலும் தம்பி வெங்கட்டு உழைத்துக் கொண்டே இருந்தான். கூட்டம் முடிந்த பிறகு அவனை நெஞ்சார தழுவினேன். கண்கலங்கி என்னை இறுக்க கட்டிப்பிடித்தான். நெருக்கடிகள் தான் ஒரு களத்தின் நாயகனை உருவாக்கும் என்பதற்கு அவன்தான் உதாரணம்.

அவனோடு துணையாக நின்ற பல தம்பிகள், பாபநாசம் கும்பகோணம் திருவிடைமருதூர் தொகுதிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் என பலருக்கும் இந்தக் கூட்ட வெற்றியில் பங்கு இருக்கிறது. அதேபோல இறுதிநேரத்தில் நிதி நெருக்கடி மிகுந்த போது அதை ஓரளவுக்கு சரி செய்ய உதவிய ஒருங்கிணைந்த சோழ மண்டலத்தின் நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள், வளைகுடா நாடுகளின் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய ராச்சிய பொறுப்பாளர்கள் முருகன் சிலைக்கு தொகை கொடுத்து உதவிய கோவை மண்டலச் செயலாளர் அப்துல் வகாப் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

தம்பி முனைவர் செந்தில்நாதன் கடுமையான தனது உடல் நலிவிற்கு மத்தியிலும் எங்களுடன் நின்றான். தேர்ந்த அறிவோடு நிகழ்ந்த அவனது திட்டமிடல்கள் எங்களை வழி நடத்தின.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் செயலாளர் தம்பி தூயவன், சாமிமலை பொறுப்பாளர் பிரபு, வீரத்தமிழர் முன்னணி அப்துல்கலாம், எப்போதும் காவல் துறையோடு மல்லுக்கட்டி ஓடியாடி உழைத்த என் உயிர் இளவல் வழக்கறிஞர் மோ ஆனந்த் , தம்பிகள் , மாவட்ட செயலாளர் அரவிந்தன் ,ஜஸ்டின், திருவிடைமருதூர் தொகுதி செயலாளர் புஷ்பராஜன் , ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா,லிங்கதுரை ,கார்த்திக் நிமலன், அசோக், சக்தி, சிவபாலன், அஸ்வின், பார்த்தா, ஹரி, ராம், ராஜா, சாமிநாதன், மாவட்டத் தலைவர் முருகன், பரணி, விஜி,பிச்சுவா மணி, காளிமுத்து ,பூசாரி வேடமிட்டு கலக்கிய விஜி,முத்து,பழனிவேல் உணவு ஏற்பாடுகள் செய்த மதிபாலா, அருண், விஜய் சங்கர், நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கு சென்னையில் இருந்தாலும் தனது உறவினர் மூலமாக மதிய உணவு ஏற்பாடுகளை செய்த ராஜா ராம்தாஸ் என பலருக்கும் இந்த நிகழ்வின் வெற்றியில் பெரும் பங்கு இருக்கிறது.

பெரும் தமிழறிஞர்கள் பெருந்தமிழர் கிருஷ்ணகுமார், இறைநெறி இமயவன், ஆய்வறிஞர் ம.சோ.விக்டர், சத்தியவேல் முருகனார் ஆகியோர் வரலாற்று சிறப்புரைகளை வழங்கி பெருமை சேர்த்தனர்.

இந்த நிகழ்வின் கதாநாயகன் அண்ணன் சீமான். வழக்கம்போல எங்களை கண்காணித்து நிறை குறைகளை சுட்டிக்காட்டி வழிநடத்தி தன் தமிழால் தகுதி சேர்த்த அண்ணனுக்கு எப்போதும் தம்பிகளாய் உடன் நிற்பதில் பெருமை கொள்கிறோம்.

இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடக்க வேண்டுமென என் உயிர்த் தம்பி மறைந்த குடந்தை நகர செயலாளர் மோ. கார்த்திக் விருப்பப்பட்டான். நிகழ்வு நடக்கும் போது அவனது மூச்சுக்காற்று அங்குதான் உலவியிருக்கும் என எனக்கு நன்கு தெரியும். இந்த நிகழ்வுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு தடைகளையும் ஒரு இறை போல அரூபமாக நின்று தகர்த்துக் கொண்டே இருந்தான். அவனது கனவிற்கு நிறைந்த எங்களது உழைப்பின் மூலமாக எங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினோம்.

தமிழகமெங்கும் பல ஊர்களிலிருந்து பேருந்துகள் வாகனங்கள் எடுத்துக்கொண்டு எம் நாம் தமிழர் உறவுகள் அந்த சிறிய ஊரில் குவிந்து நிகழ்வினை மாற்றிக் காட்டினார்கள். கும்பகோணத்தையே அதிரச் செய்த காலையில் நடைபெற்ற வேல் ஊர்வலத்தில் இருந்து மாலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம் வரை நாம் தமிழர் கட்சி உறவுகள் நாடெங்கிலும் திரண்டு வந்துகொண்டே இருந்தார்கள்.
நிகழப் போகின்ற பெரும் அரசியல் மாற்றத்திற்கு இந்தக் கூட்டமே ஒரு வரலாற்று சாட்சியாக மாறிப் போயிருக்கிறது.

கூட்டம் முடிந்தது. கடுமையான உடல் சோர்வு, எதிர்நோக்கி இருக்கிற பொருளாதார நெருக்கடிகள் என கூட்டம் நடத்துகிற அனைவருக்கும் வருகிற வழக்கமான சிக்கல்கள் எங்களுக்கும் இருந்தன. ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு வரலாற்று நிகழ்வில் நாங்களும் உழைத்தோம் என்கின்ற நிறைவு எங்களிடம் என்றும் நிற்கும்.

கூட்டம் முடிந்து அனைவரும் சென்று விட்ட பிறகு எதையோ சாதித்தது போல தம்பி வெங்கட் முகம் நிறைந்த புன்னகையோடு என் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.உண்மையில் அவனைப் போன்ற எளிய தம்பிகள் தான் நாம் தமிழர் கட்சியின் பலம்.

கலையும் நேரம் வந்தது. மிகச்சிலரே அந்த நள்ளிரவில் அந்த திடலில் மீதம் இருந்தோம். எந்த அடையாளமும் இல்லாத இந்த எளிய பிள்ளைகள் ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்திய பரவசத்தில் முகம் நிறைந்த புன்னகையோடு ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டோம்.

மீண்டும் இன்னொரு இதேபோன்ற பரவசத்திற்காக, அந்த மகத்தான உணர்ச்சி வெள்ளத்தை மீண்டும் அனுபவிக்கும் லட்சிய வேட்கையோடு எங்களது பயணத்தை அந்த நொடியிலிருந்து அதே இடத்திலிருந்து தொடங்கினோம்.

காலியாக இருந்த அந்த மேடை பதாகையில் கம்பீரமாக நின்ற முருகன் எங்களை சிறு புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

அண்ணன் சீமானின் “அன்பு”

அந்த கிராமம் இந்திய வரைபடத்தில் தான் இருக்கிறதா என்பது போன்ற சந்தேகங்களை எழுப்புகிற ஒரு நிலப்பகுதி. தஞ்சை கடைநிலை பகுதியான சீர்காழி என்கின்ற ஒரு சிறிய நகரத்தைத் தாண்டி தில்லை நத்தம் என்கின்ற உள்ளடங்கிய ஒரு குக்கிராமம். ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனம் வழி விட முடியாத அளவிற்கு குறுகிய ஒற்றைச் சாலை. அந்தக் கிராமத்தின் தெருவில் கடைசி வீடாக அந்த பச்சை வண்ணம் பூசப்பட்ட எளிய வீடு இருந்தது.‌ மிகச் சிறிய வீடு.

அந்த வீட்டில்தான் தம்பி அன்பு கிடத்தப்பட்டு இருந்தான். அந்த வீடு கூட தம்பி அன்பிற்கு சொந்தமானது இல்லை. அது அவனது அண்ணன் வீடு . அண்ணன் சீமானையும் உலகம் முழுக்க வாழ்ந்து வருகிற நாம் தமிழர் உறவுகளை மட்டும் சம்பாதித்தால் போதும் என்று நிறைவுற்று இருந்த அந்த ‌ புன்னகை மாறாத முகத்துடையவன் அமைதியாய் சலனமின்றி படுத்திருந்தான். அவனது இயற்பெயர் சுரேஷோ.. ரமேஷோ.. அண்ணன் சீமான்தான் அவனுக்கு அன்புச்செழியன் என பெயர் சூட்டியிருந்தார்.

உள்ளடங்கிய அந்த நிலத்திலிருந்து ஏதோ ஒரு அழுத்தத்தில் எகிறித் தாவி அன்பு அண்ணன் சீமானை வந்து சேர்ந்திருந்தான். அந்த ஊருக்கு சென்றபோது எனக்குத் தோன்றிய ஒரே ஒரு சிந்தனை.. இங்கிருந்து எப்படி இவன் அண்ணன் சீமானிடம் வந்து சேர்ந்தான் என்பது தான்.

பூர்வக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை தான். ஆனாலும் அவனுக்கும் அண்ணன் சீமானுக்கும் இருந்த பிணைப்பு பூர்வக் கதைகளுக்கே உரிய காவிய பூர்வமானது.

அண்ணன் சீமானுக்கும் அவனுக்குமான உறவு மிகவும் தனித்துவமானது. அண்ணன் சீமான் என்ன சிந்திக்கிறார் என்பதை அவர் சிந்திக்கும் நொடியின் தொடர்ச்சியிலேயே அன்பு உணர்ந்து கொள்வான். அண்ணன் சீமானுடன் நெருங்கி இருக்கிற எங்களுக்கெல்லாம் அகப்படாத பிரத்யோக அலைவரிசை அவனுக்கு மட்டும்‌ அண்ணனோடு அமைந்திருந்தது.

அதை கண்சாடையாக எல்லாம் அர்த்தப்படுத்த முடியாது. அது ஒரு சிமிட்டல் அவ்வளவே. அந்த மெல்லிய விழி அசைவு அண்ணன் சீமானிடமிருந்து பிறந்த நொடியிலேயே அன்பு புரிந்து கொள்வான். அவர் எத்தனை மணிக்கு எங்கே செல்லவேண்டும் என்பதில் தொடங்கி அவரது உடை உணவு மருத்துவம் என அனைத்திலும் அன்பு முழுமையாய் நிறைந்திருந்து நிறைவேற்றுவான். அதுமட்டுமே அவனது வாழ்க்கை என அவன் அர்த்தப்படுத்தி இருந்தான்.

அவனுக்கு யாரைப்பற்றியும் எவ்வித குறையும் இல்லை. அடுத்தவரைப் பற்றி எந்த குறையும் இல்லாத அவனது ஆன்மா தெய்வத்தின் சாயல் உடையது. எவரைப் பற்றியும் அண்ணனிடம் அவன் தவறாக சொன்னதாக எங்களுக்கு தகவல் இல்லை. அதேபோல் அண்ணனிடம் அவனுக்குள்ள நெருக்கத்தை எங்கேயும் அவன் பயன் படுத்திக் கொண்டதில்லை. அவனது ஒரே தேவை.. அண்ணனின் நலம்.

ஒரு அரசியல் தலைவரின் ஓட்டுநர் என்கிற பொறுப்பு சாதாரணமானதல்ல. தொடர்ச்சியான நள்ளிரவு பயணங்கள், கடுமையான அலைச்சல்கள், ஓய்வின்றி கடும் உழைப்பை கோருகிற சூழல்கள் என மாபெரும் சவால்களை கொண்ட அந்த பொறுப்பினை அன்பு புன்னகையோடு நிர்வகித்து வந்தான்.

2016 சட்டமன்ற தேர்தல். ஒரு நாளைக்கு அண்ணன் சீமான் குறைந்தது 5 கூட்டங்கள் பேச வேண்டும். ஒவ்வொன்றும் இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் பயணத்தொலைவு உள்ள பகுதிகள். குறித்த நேரத்திற்கு அண்ணன் சென்றாக வேண்டும். வேட்பாளர்களும், மக்களும் காத்துக் கொண்டிருப்பார்கள். அண்ணன் உணர்ச்சி வேகத்தில் ஒரு ஊரில் அதிக நேரம் பேசி விட்டால் அடுத்த ஊரின் கூட்டம் பாதிக்கப்படும். மேடு பள்ளமான சாலைகள், சாலை விதியை சற்றும் மதிக்காமல் எதிரே வரும் வாகனங்கள் இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சீறிப்பாயும் அந்த வாகனம் பாதுகாப்பாகவும் பயணிக்க வேண்டும். ஏனெனில் உள்ளே இருப்பவர் எதிர்கால தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை. இதையெல்லாம் உணர்ந்து கொண்டு அன்பு அண்ணன் சீமானின் கருப்பு நிற அந்த வாகனத்தை ஒரு பறவையாக கருதி அவனுக்கே உரிய கவித்துவ ஓட்டுதல் மொழியோடு ஓட்டும்போது பார்க்கிற எங்களுக்கு அவ்வளவு பரவசமாக இருக்கும். அந்தத் தொலை தூரப் பயணங்களில் அண்ணன் ஓய்வு எடுத்துக்கொண்டோ, படித்துக்கொண்டோ இருக்கும்போது அது பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பிரேக்கை அழுத்தும் போது கூட நாசூக்காக அழுத்தி வேகம் எடுக்கிற அந்த அழகு அண்ணன் மீதான அவன் கொண்டிருந்த தாய்மைக்கு நிகரான மகத்தான பேரன்பின் வெளிப்பாடு.

அண்ணன் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் போதெல்லாம் அன்புவின் அலைபேசி எண் என் அலைபேசி திரையில் ஒளிரும். அண்ணன் விமான நிலையத்துக்குள் சென்றுவிட்டார்கள். நீங்கள் எங்கே அண்ணா இருக்கிறீர்கள்.. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அண்ணன் திருச்சி வந்துவிடுவார். அதற்கு முன்பாக நீங்கள் விமான நிலையம் சென்று விடுவீர்களா என்றெல்லாம் தொடர்ச்சியாக கேள்விகளை அன்பு வைத்துக் கொண்டே போவான். அவன் திருப்திப்படும் வரை நாங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அதேபோல அண்ணனோடு அவன் பயணிக்கும் காலங்களில்.. அண்ணன் குளித்துவிட்டு வரும்போது அவரது உடைகள் மற்றும் அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், என அனைத்தும் ஒருவித ஒழுங்கில் அன்பு வைத்திருப்பான். அந்த ஒழுங்கு அவனுக்கு மட்டுமே உரியது.

தேவையற்ற ஒரு சொல்லை அன்பு பேசியதாக நான் கவனித்ததில்லை. என்னுடைய பதிவுகளை அவனுக்கு பகிரியில் அனுப்பும் போதெல்லாம் படித்துவிட்டு உடனே பாராட்டி பேசுவான். அதுவும் அண்ணன் சீமானை பற்றி எழுதும் போதெல்லாம் அவனது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

ஏனெனில் அண்ணன் சீமான் தான் அவனது உலகம். அதைத்தாண்டி அவனுக்கு எதுவும் இல்லை. அவன் குடும்பத்தைப் பார்க்க அதிகம் ஊருக்கு போனதாகக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. அண்ணன் சீமான் ,அண்ணியார் கயல்விழி, மகன் மாவீரன் பிரபாகரன் என்ற அவனது உலகம் மிகச் சிறியது. இன்று அந்த உலகத்தை விட்டு தான் அவன் பிரிந்து போய் இருக்கிறான்.

அவனது உடலை கண்டு அண்ணன் சீமான் கதறி அழுதது சுற்றியிருந்த எங்களையெல்லாம் உலுக்கி எடுத்து விட்டது. தன் உடலிலிருந்து ஒரு பாகம் பிரித்து எடுக்கப்பட்டது போல அண்ணன் கதறித் துடித்தார். இந்த பிரிவினை எதனாலும் அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவர் திரும்பி பார்க்கும் பொழுதெல்லாம் அன்பு நின்றுகொண்டிருந்தான். இன்று அவன் இல்லாத வெறுமை அவருக்கு தாங்க முடியாத உயிர் வலியை தந்து விட்டது. இடுகாட்டிற்கு அவனை அவரை தூக்கிச் சென்றார். இத்தனை ஆண்டுகாலம் அவரை சுமந்து அன்பு அலைந்து திரிந்தான். அவனது இறுதிப் பயணத்தில் அவன் உயிராக நேசித்த அவனது அண்ணன் சீமான் அவனை சுமந்து எடுத்துச் சென்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவனுக்கு நுரையீரலில் புற்று நோய் என்று நான் கேள்விப் பட்டபோது உண்மையில் பதறிப்போனேன். அவனை நேரில் சந்திக்கும்போதெல்லாம் இதுபற்றி விசாரிக்க எனக்கு மிகுந்த தயக்கமாக இருக்கும். ஆனாலும் அதை புரிந்து கொண்ட அவன் நான் நல்லா இருக்கேன்னே.. என்று சொல்லி விட்டு சிரித்துக்கொண்டே கடந்து விடுவான். அண்ணன் சீமான் எங்கெங்கோ அவனுக்காக மருத்துவம் தேடி பேசிக்கொண்டிருந்தார். எப்படியாயினும் எவ்வளவு செலவு செய்தாலும் அவனை காப்பாற்றி விடவேண்டும் என துடித்தார். அவன் இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்க்கவே அவரால் முடியவில்லை. ஆனால் அவர் எதை நினைத்து அச்சப்பட்டு துடித்தாரோ அது நடந்தே போனது.

கடைசியாக அவனை நான் பார்த்தது மகன் மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளில்.. என் கையை இறுகப் பிடித்தவாறே என்னோடு போட்டோ எடு அண்ணா என்றான். நான் என் அலைபேசியை அதற்காக தயார் செய்தபோது.. அவனே சொன்னான்.. இந்த போட்டோ ஒரு நாள் நீ எழுதுகிற பதிவுக்கு உனக்கு பயன்படும் அண்ணே.. என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.
சட்டென யாரோ என்னை சாட்டையால் அடிப்பது போல உணர்வு.. லூசு மாதிரி பேசாதடா.. என்று போட்டோ எடுக்காமல் நான் கோபத்தோடு திரும்பிவிட்டேன்.
என்னை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

நானும் அந்த புகைப்படம் எடுக்காமலேயே திரும்பிவிட்டேன்.

ஆனால்..அந்த நொடியில் சின்னப் புன்னகையோடு சிரித்திருந்த அவனது முகம் என்றும் மாறாமல் ஒரு புகைப்படம் போல என் ஆன்மாவில் உறைந்து விட்டது.

அன்பு காற்றோடு காற்றாய் கலந்துவிட்டான்.

தனது உதிர உறவை பறிகொடுத்துவிட்டு அண்ணன் சீமான் கண்கலங்கி தனியே அமர்ந்து இருக்கிறார்.

நினைவுகளின் அழுத்தத்தால்.. அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொள்கிறார் அவர்.

அந்த மூச்சுக்காற்றில்தான் அன்பு கலந்து இருக்கிறான் என்ற சிறு ஆறுதல் அவருக்கு ‌ வாழ்நாள் முழுக்க நீடிக்கப் போகிற அவன் இல்லாத வெறுமையின் துயரத்தை சற்றே ஆற்றட்டும்.

Powered by WordPress & Theme by Anders Norén