மொழி என்பது ஒரு விசித்திரமான ஆயுதம். அது ஒரு விதை நெல் போல. பயன்படுத்த வேண்டிய காலத்தை தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்தப்படுமானால் அது விரயமாகத் தான் போகும். கொட்டப்படும் தானியங்களைப் போல சொற்களை கொட்டிக்கொண்டே இருப்பவர்களை கவனித்துப் பாருங்கள். அவர்கள் களைப்புற்றவர்களாக, எதையோ இழந்த மனநிலையில் இருப்பவர்களாக உங்களால் உணர முடியும்.மகாபாரதம் இதிகாசத்தில் வருகிற விதுரன் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கிற பெரும் போருக்குப் பிறகு முது வனத்திற்குள் சென்று மறைகிற அவன் சொற்களை இழந்தவன் ஆகிறான். இனிமேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்பது போன்ற ஒரு அமைதியை அவனே பூசிக் கொள்கிறான். விதுரன் குறித்த மிக அற்புதமான வர்ணனையை எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய உபபாண்டவத்தில் நாம் அனுபவிக்கலாம்.

புத்தரிடம் புத்தம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு அவர் அமைதி என்று பதிலளித்தார்.

உலகின் தலைசிறந்த சிம்பொனி இசையமைப்பாளரான மொசார்ட்டிடம் உலகின் தலைசிறந்த இசைவடிவம் எது என கேட்ட கேள்விக்கு அவர் மௌனம் (silence) என பதிலளித்தார்.இசைஞானி இளையராஜாவிடம் இருக்கிற மகத்தான மேதைமை எது என்கிற கேள்விக்கு புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் அவருக்கு எந்த இடத்தில் வாத்தியத்தை இசைக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என்பது இயல்பாக தெரிந்திருப்பது தான் அவரது மேதைமை என்கிறார்.

உலகில் பரந்து பட்டு பரவியிருக்கிற வெவ்வேறு மெய்யியல் கோட்பாடுகள் அனைத்தும் அமைதியை நோக்கிய பயணத்தையே முக்தியாக காட்டுகின்றன.

ஆனால் நவீன உலகம் அமைதியை ஏறக்குறைய இழந்துவிட்டு அனைத்திற்கும் கருத்து உமிழ்ந்து கொண்டிருக்கிறது.

ஏறக்குறைய சொற்கள் அனைத்துமே உமிழப்படும் எச்சிலாக மாறி விட்டன. அந்த எச்சிலும் கூட கால நேர பேதமின்றி எப்போதும் ஊறுகின்ற ஊற்றாக மாறி விட்டதுதான் நவீனம் நமக்கு அளித்திருக்கிற மகத்தான தண்டனை.

“பயனில்சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கட் பதடி எனல்”

என்கிறது வள்ளுவம்.

அற்பமானவற்றை பேசியும், சிந்தித்துமே நம் வாழ்நாளை நரகமாக்கிக் கொள்கிறோம். நாம் யாரைப் பற்றி சிந்திக்கிறோமோ அவர்கள் நம்மைப் பற்றி இவ்வளவு சிந்திக்கிறார்களா என நாம் சிந்திப்பதில்லை.எதைக் கண்டாலும் அதை பற்றிய ஒரு கருத்தை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. அனைத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமில்லை.சில விஷயங்களைப் பற்றி கருத்து இல்லாமல் இருப்பதே ஒரு கருத்துதான்.சமீபமாக எனது தனிச் செய்திகளில்ஏன் அந்த திரைப்படத்தை பற்றி உங்களுக்கு கருத்து இல்லையா,இப்படி நடக்கிறது இது பற்றி உங்கள் கருத்து என்ன.. என்பதான பல கேள்விகளுக்கும் எனது பதில் மௌனம் தான்.நாம் வெகுவாக நேசித்த சிலர் நம்மைப் பற்றி மிகவும் தரக்குறைவாக பேசுகிறார்கள் என்றெல்லாம் செய்தி வரும்போது நாம் படபடப்பாகிறோம். உடனே உளவியலாக நம்மைப் பற்றியான நியாயங்களை நமக்கு நாமே தயாரிக்க தொடங்குகிறோம். வெறுப்பின் வெண்பனி நமது மனதின் புல்வெளிகளில் படியத் தொடங்குகிறது.இது ஒரு வகையான சுயவதை தான். அந்த நேரத்தில்தான் ஒரு அசாத்திய அமைதி தேவைப்படுகிறது.அதை புறக்கணிப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள். எதிர்ப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள். கண்டுகொள்ளாமல் கடந்து போவது என வைத்துக்கொள்ளுங்கள். அவரவருக்கு எது தேவையோ அப்படியே வைத்துக் கொள்ளலாம்.

உலகத்தின் மகத்தான அரசியல் நடவடிக்கை எதுவெனில் என்னைப் பொருத்தவரையில் மௌனம் தான்.

மௌனம் என்பது இயலாமையின் வெளிப்பாடு அல்ல. மௌனம் என்பது பதில்கள் இல்லாத முடியாமை அல்ல.

மௌனமாக இருத்தல் என்பது ஒரு தீவிரமான அரசியல் நடவடிக்கை.

70 காலத்திய ப்ரூஸ்லீ படங்களில் தன்னைச் சுற்றி வரும் எதிரியை கண்களால் கவனித்தபடி நின்ற இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு புரூஸ் லீ அமைதியாக கவனித்துக் கொண்டிருப்பார். அவரிடம் தனக்குத் தெரிந்த வித்தைகளைக் காட்டும் அவசரம் இருக்காது. ஆனால் எதிரியோ அவரைச் சுற்றி சுற்றி வந்து சீண்டிக் கொண்டே இருப்பான். புரூஸ் லீயின் கண்கள் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும். மற்ற உறுப்புகள் ஒரு சிலை போல உறைந்து இருக்கும்

இறுதியாக ஒரே அடி. எதிரி கீழே விழுந்து போவான்.

ஏனெனில் ஒரு அமைதிக்குப் பிறகு எழும் அசைவு மிக வலிமையானதாக இருக்கும்.

இந்த நிதானத்தை பற்றிதான் உலகத்தின் பல்வேறு தத்துவங்கள் விவாதித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக ஜப்பானீய ஆன்மீக மரபு இந்த சலனமற்ற நிலை குறித்து ஆழமாக கவனம் செலுத்துகிறது.பாஷோ என்கின்ற ஜப்பானிய ஜென் மரபின் முதன்மைக்கவி எழுதிய கவிதை இது.

“வெட்டுக்கிளியின் சத்தம்..
மலையின் மௌனம்
ஒரு கணம் அசைகிறது. “

மௌனமாக இருத்தல் என்பது ஒரு ஆயத்தம். பதுங்கி பாய்தல் போல அல்ல அது. அது ஒருவகை நிதானித்தல். தனக்கு இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பது குறித்தான ஆழ்ந்த சிந்தனை.மிக நீண்டகாலமாக ஒரு சில மன வேறுபாடுகளால் பிரிந்திருந்த எனது சிறுவயது தோழி ஒருவளை எதிர்பாராதவிதமாக ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் சந்திக்க நேர்ந்தது. அவளுக்கு திருமணமாகி இடுப்பில் குழந்தையோடு ஏதோ பொருள் வாங்கிக் கொண்டிருந்தாள். நான் பார்த்த உடனேயே அவளை யாரென நினைவில் கொண்டு வந்துவிட்டேன்.ஆறாவது படிக்கும்போது எனது வகுப்பின் லீடராக அவள் இருந்தாள். நான் அதிகம் பேசுவதாக ஆசிரியரிடம் போட்டு கொடுத்துவிட.. ஒரு முக்கியமான தருணத்தில் ஹோம் ஒர்க் செய்து வைத்திருந்த அவள் நோட்டினை நானும் எனது நண்பர்களும் திட்டமிட்டு ஒளித்து வைத்துவிட.. அன்று ஆசிரியரிடம் அவள் கடுமையாக திட்டு வாங்கினாள். நாங்கள் நோட்டினை ஒளித்து வைத்த விபரத்தை எங்களுக்குள் இருந்த எட்டப்பன் ஒருவன் அவளிடம் போட்டு கொடுத்துவிட.. அவள் அழுதுகொண்டே ஆசிரியரிடம் நடந்தவைகளை சொல்லி எங்களை மீண்டும் அடி வாங்க வைத்தாள். இது மிகப்பெரிய பகைமையாக நான் நினைத்துக்கொண்டு பத்தாம் வகுப்பு வரை அவளோடு பேசுவதை நான் நிறுத்திக் கொண்டேன். எட்டாம் வகுப்பில் நான் பேசிய பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்றபோது புன்னகையுடன் பாராட்ட நெருங்கி வந்த அவளை முறைத்துவிட்டு நகர்ந்து போனேன்.என்னை மன்னித்துக் கொள் என்று அவள் ஒருமுறை நோட்டில் எழுதி வைத்திருந்ததை அப்படியே கிழித்து எடுத்துச் சென்று நான் எங்களது வகுப்பாசிரியரிடம் போட்டுக் கொடுத்து விட, அவர் பலருக்கு முன்னால் அவளை மிக மோசமாக ஏசி காயப்படுத்தி விட்டார். அதிலிருந்து அவளும் என்னிடம் பேசுவதில்லை.பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரி வாழ்க்கையிலும் அவளை காண சூழ்நிலைகள் இல்லை. ஆண்டுகள் பல கடந்து இப்போதுதான் அவளை மீண்டும் காண்கின்றேன். பேசலாமா சென்று விடலாமா என்ற தயக்கம் எனக்கு.இந்த தயக்கத்திற்கு நடுவில் என்னை யார் என சட்டென அடையாளம் கண்டு கொண்ட அவள் என்னை பார்த்து சிரித்தவாறு ஏய் எப்படி இருக்க.. எனக் கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள்.பிறகு இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அவரவர் குடும்பங்களைப் பற்றி, பார்க்கும் வேலைகளைப் பற்றி என்றெல்லாம் உரையாடல் நகர்ந்தது. பிறகு அவளே மெதுவாக அந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தி கேட்டபோது.. என்னை மன்னித்துக் கொள் என்று நான் சொன்னேன்.அதற்கு அவள் சிரித்துக் கொண்டே.. எதற்கு மன்னிப்பு.. அந்த நேரத்தில் நீ பேசாமல் போனதும் நல்லதுதான்.. ஒருவேளை உடனுக்குடன் பேசி இருந்து அதனால் கூட மன வருத்தம் இன்னும் அதிகமாகக் கூட ஆகியிருக்கலாம். அப்போது அமைதியாக இருந்ததால் தான் இப்போது மனம் விட்டு பேச முடிகிறது என அவள் சொன்ன போதுதான்.. ஒரு அமைதியில் இவ்வளவு இருக்கிறதா என என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

சமீபமாக எனது மிக நெருக்கமான நண்பர் கவிஞர் கண்ணகன் இறந்துவிட்டார். என் கவிதைத் தொகுப்பை ஏறக்குறைய அவர் தொகுத்து வைத்திருந்தார். சில கவிதைகளை திருத்தம் கோரி எனக்கு திருப்பி அனுப்பி வைத்திருந்தார். என் மீது மிகுந்த தனிப்பட்ட அக்கறை கொண்ட நெருக்கமான நண்பன் அவர். திடீரென அவர் இறந்த செய்தி கேட்டபோது.. ஏறக்குறைய நான் அப்படியே உறைந்துப் போனேன். இரங்கல் பதிவு கூட எழுத என்னால் முடியவில்லை. எனக்கும் கண்ணகனுக்கும் வேண்டிய என் நண்பன் விஷ்ணுபுரம் சரவணனிடம் கூட எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இறுதி சடங்கிற்கு கூட அவரைப் பார்க்க நான் செல்லவில்லை.இறுதியாக அவரை சந்திப்பது என்கின்ற மனநிலையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.செய்தி கேள்விப்பட்டு பதறிக் கேட்ட பாக்யராசனிடமோ, ஒட்டக்கூத்தனிடமோ சொல்லக்கூட எதுவுமில்லை. அந்த அழுத்தத்தை சொற்களால் கூட என்னால் விவரிக்க முடியவில்லை. அப்படியே அமைதியாக இருந்துவிட்டேன்.என் தந்தையாரின் மாணவர் அவர். என் தந்தையார் தனது சிறந்த மாணவனை இழந்து கலங்கிப் போய் அமர்ந்து இருந்தார்.

கண்ணகன் வீட்டிற்கு போவோமா என்கின்ற எனது கேள்விக்கு அவரிடமும் எந்த விதமான பதிலும் இல்லை. அவரும் அந்த நொடியில் சொற்களை இழந்தவர் தான்.கலங்கிய கண்களோடு என்னை பார்த்துவிட்டு அப்படியே அவர் நகர்ந்து சென்றுவிட்டார்.நான் எனக்குள்ளாக கேட்டுக்கொண்டேன்.

அங்கே சென்று யாரைப் பார்ப்பது..??

அப்படித்தான் சமீபத்தில் எதிர்பாராமல் மறைந்த கவிஞரும், தோழியுமான சவீதாவின் மரணத்தின் போதும் எனக்கு ஏற்பட்டது.ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்கிற கேள்வியை விட நடந்திருக்கிறது என்கின்ற உண்மைதான் நம்மை மெளனிக்க வைக்கிறது.அப்படித்தான் பல சமயங்களில் மௌனித்திருப்பது நிகழ்கிறது. சலனமற்ற அந்த நிலைதான் பல சமயங்களில் இயல்பாகி விடுகிறது.அப்போதுதான் சொற்களைத் தொலைத்த விதுரன் போல நாமும் எப்போதும் இருந்து விடலாமோ எனத் தோன்றுகிறது.