விவாதங்களில் பலவகை உண்டு என நான் அறிந்திருக்கிறேன். எந்த வகை விவாதங்கள் என்றாலும் ஏதோ சிலவற்றைக் கற்றுக் கொள்வதற்கான வழிகளாகவும், பகிர்ந்து கொள்வதற்கான முறைகளாகவும் தான் கடந்த சில ஆண்டுகள் வரை விவாதங்கள் நிகழ்ந்து வந்தன. கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்டிருக்கிற தமிழ் தேசிய எழுச்சி சமூக வலைதளங்களிலும் பிரதிபலிக்க, ஆட்சியிலும், அதிகாரத்திலும், கருத்து தளத்திலும், அறிவுத் தளத்திலும் அதுவரை “ஒரே அடியாளாக” இருந்த திராவிடக் கருத்தாக்க ஆதரவு கூட்டத்திற்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. கட்டமைத்து வைத்திருக்கிற கனவுக் கோட்டை எங்கிருந்தோ வந்த எளிய இளைஞர்களால் செங்கல் செங்கலாக பெயர்க்கப்படும் என்பதை அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எனவே அவர்களிடம் வழக்கமாக இருக்கும் அவர்களுக்கே உரித்தான கலையான அவதூற்று வசவுகள் மூலம் இந்த விவாதங்களை எதிர் கொள்ளத் தொடங்கினார்கள்.திராவிட ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்களை “வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் மேடைகளாக” மாற்றத் தொடங்கினார்கள். அதற்கு பதில் அளிக்கிறேன் என்று முறையில் சில இளைஞர்களும் இறங்கத் தொடங்க “அறிவார்ந்த பரிமாறல்”என்கிற முறையில் நிகழ்ந்து வந்த விவாதங்கள் வசவுகள் கணக்கு வழக்கின்றி வாரி இறைக்கப்படும் வெறும் கூச்சல்களாக மாறிப்போயின.இப்போதெல்லாம் திட்டமிட்டு விவாதங்கள் சில பல “கணக்குகளோடு” உருவாக்கப்படுகின்றன. நாம் தமிழர் கட்சி பெரியாரைப் பற்றி எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டு இருக்கிறது என்பதை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் ஏற்கனவே பலமுறை மிகத்தெளிவாக அழுத்தம் திருத்தமாக விவரித்திருக்கிறார்.ஆயினும் இது போன்ற விவாதங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப் படுவதன் “அரசியலை” முதலில் நாம் கற்றுணர வேண்டியிருக்கிறது. இது நோய் தொற்றுக் காலம். தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அளித்தல், கபசுர குடிநீர் வழங்கல் போன்றவற்றைச் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். இந்த மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக கட்சியில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் இணைந்து வருகிறார்கள் என்பதை தகவல் தொழில்நுட்ப பாசறை புள்ளிவிபரங்களோடு வெளியிட்டிருக்கிறது. சாத்தான்குளம் படுகொலைகள் இயல்பான எளிய மனிதர்களையும் பதட்டத்திற்கு உள்ளாகியிருக்கிறது.அதிகாரம் நிகழ்த்தியிருக்கிற இந்த ஆணவ படுகொலைக்கு எதிராக வீதிகளில் இறங்கி தனிமனித இடைவெளி யோடு, முகக் கவசம் உள்ளிட்ட நோய்த்தொற்று கட்டுப்பாட்டோடு நமது இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.இதையெல்லாம் விட்டுவிட்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டு மக்களோடு இணைந்து களங்களில் நிற்கிற இக்காலகட்டத்தில் பெரியார் பற்றிய விவாதங்கள் திட்டமிட்டு, பல்வேறு கணக்குகளோடு, உருவாக்கப்படும் திசை திருப்பல் களாகவே காணமுடிகிறது. திராவிட கட்சிகள் இன்று மக்களோடு அன்னியப்பட்டு நிற்கின்றன. அதனால் அவர்கள் “கடந்த காலங்களின் பெருமிதங்களை(?)” தூக்கிக் கொண்டு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.வெளிச்சங்கள் தேவைப்படுவோருக்கு வேண்டுமானால் இந்த விவாதங்கள் பயன்படலாம்.ஆனால் நமக்கு அப்படி அல்ல. நாம் நிகழ்காலத்தின் மைந்தர்கள். மக்களோடு நிற்பவர்கள். கட்சியின் தத்துவ நிலைப்பாடுகளை கட்சியின் தலைமை அறிவிக்கும். ஏற்கனவே அறிவித்தும் இருக்கிறது. இதில் தனிநபர்கள் விவாதித்துக் கொள்ளவோ, சண்டை போட்டுக் கொள்ளவோ ஏதுமில்லை. எனவே நமது உறவுகள் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த நோய்த்தொற்று காலத்தில், பாதுகாப்பாக இருந்துக்கொண்டு அலைபேசி வாயிலாக அவரவர்களால் முடிந்த அளவிற்கு கட்சி வளர்ச்சிப் பணிகளை தொடர்ச்சியாக எடுத்துச் செல்வோம். சமூக வலைதளங்களில் ஏற்படும் அர்த்தமற்ற கடந்த காலங்கள் குறித்தான விவாதங்கள் கடந்த கால “பெருமிதங்களில்” (?) வாழ்கிற திராவிட ஆதரவாளர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம். நமக்கு வேறு வேலை இருக்கிறது. இன்னும் நேர்மையாக அண்ணன் சீமான் சொற்களில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால்.. “நல்ல பழங்களைக் கூட நாம் முழுமையாக உண்பதில்லை. தோலை சீவி விதைகளை நீக்கி பிறகுதான் உண்கிறோம்.நம் பலவற்றிலும் முரண்படுகின்ற ஹிட்லர், முசோலினி போன்றவர்களிடம் கூட நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்கிறோம். “பாதை இல்லை என வருத்தப்படாதே.. இறங்கி நட.. அதுவே பாதையாகி விடும்.” என்கிறார் ஹிட்லர். நம் உயிர்த் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் “பாதையை தேடாதே.. உருவாக்கு” என்கிறார்.விவேகானந்தர் போன்ற நமக்கு கருத்து முரண்கள் உள்ள பெரியோர்களிடம் கூட எடுத்துக் கொள்ள வேண்டிய நல்ல கருத்துக்கள் இருக்கின்றன.எல்லா மனிதர்களிடமும் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தேவையானதை எடுத்துக் கொண்டு தேவையற்றதை தவிர்ப்பதுதான் அறிவுடைமை. அது ஐயா பெரியார் அவர்களுக்கும் பொருந்தும். இதைப் புரிந்துகொள்ளாமல் தேவையற்ற விவாதங்களில் நம்மை சிக்க வைத்துக்கொள்ளக்கூடாது. “நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள, நல்ல புத்தகங்களை வாசிக்க, நல்ல திரைப்படங்களை தேடி தேடி கண்டு தரிசிக்க, எழுத்து திறமையை வளர்த்துக்கொள்ள கவிதை, கட்டுரை போன்றவற்றை எழுதப் பழக இந்த ஓய்வு காலத்தை பயன்படுத்துவோம். உடலை உறுதி செய்ய உடற்பயிற்சி என்பதை வாழ்நாள் பழக்கமாக்க முயற்சி செய்வோம். மன உளைச்சல்கள், தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுத்தும் எல்லாவற்றிலும் இருந்து தள்ளி நிற்போம்.இதனடியில் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பாசறை கருத்தரங்கில் அண்ணன் சீமான் அவர்கள் ஐயா பெரியார் குறித்த தனது நிலைப்பாட்டினை தெளிவாக அறிவித்த உரையின் எழுத்து வடிவம் இருக்கிறது. இத்தோடு முடிப்போம்.. இதனையும் கடப்போம்.******தகவல் தொழில்நுட்பப் பாசறை கூட்டத்தில் அண்ணன் பேசியது! ( நன்றி: தமிழினியாள்.)பெரியாரை எதிர்க்கிறோமா?நம்மை பெரியாருக்கு எதிரியாகக் கட்டமைக்கிறார்கள். திராவிடக் கட்சிகளும், ஆட்சிகளும் இம்மண்ணுக்கு விளைவித்த வஞ்சகங்களையும், துரோகங்களையும் பேசுவதால் நம்மைப் பெரியாருக்கு எதிரியாக மடைமாற்றுகிறார்கள். தகப்பன் என்பவன் பெற்றவனாக இருக்க வேண்டும். தலைவன் என்பவன் இரத்தவனாக இருக்க வேண்டும். எனது மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது. எனது வலி உணராதவன் எனக்குத் தலைவனாக இருக்க முடியாது. இது நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவு. உலகெங்கும் ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு, உரிமைக்கு, மேம்பாட்டுக்குப் போராடிய அத்தனைப் பேரையும் நமது வழிகாட்டியாக ஏற்கிறோம். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ஏங்கல்ஸ், இங்கர்சால், சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, புத்தன், பூலே, மாசேதுங், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா உள்ளிட்ட யாவரையும் நமது பெருமைக்குரிய வழிகாட்டியாக ஏற்கிறோம். அதனைப் போலவே, அறிவாசான் அம்பேத்கரையும், ஐயா பெரியாரையும் பெருமைக்கும், வணக்கத்துக்குரிய வழிகாட்டியாக ஏற்கிறோம். அண்ணல் அம்பேத்கரை வழிகாட்டியாக ஏற்கிறோம். ஆனால், நமது தாத்தா அயோத்திதாசப்பண்டிதரையும், தாத்தா இரட்டைமலை சீனிவாசனையுமே தலைவராக ஏற்கிறோம். மாமேதை மார்க்சை வழிகாட்டியாக ஏற்போம். ஆனால், நமது இனத்தைச் சேர்ந்த ஜீவானந்தத்தையும், சிங்காரவேலரையும், நல்லக்கண்ணுவையுமே தலைவராக ஏற்போம். சேகுவேராவை நான் கொண்டாடுகிறேன். பிடல் காஸ்ட்ரோவைப் புகழ்ந்துப்போற்றுகிறேன். ஆனால், தலைவர் பிரபாகரன்தான் எனக்குத் தலைவர். ஆகவே, ஐயா பெரியாரை தமிழ்த்தேசியத்தின் எதிரியாகவும் கருதவில்லை; தமிழ்த்தேசியத்தின் தலைவராக ஏற்கவுமில்லை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.கற்றதைப் பற்ற வையுங்கள்!**********************************எது நல்லதோ அதனை எடுத்துக் கொள்வதும், எது அல்லதோ அதனைத் தவிர்த்துவிடுவதும்தான் அறிவு. இணையத்தில் நாம் எழுதுகிறபோது மிகுந்த கண்ணியத்தோடும், கவனத்தோடும் கருத்துகளைப் பதிவுசெய்ய வேண்டும். நாம் பிரபாகரன் எனும் மனிதப்புனிதரை தலைவராக ஏற்றிருக்கிறோம். நாம் கண்ணியக்குறைவாகப் பதிவு செய்தால் அவரின் பெயரைச் சொல்வதற்கே தகுதியற்றவர்களாகிவிடுவோம். நான் எனது தம்பிகளை சரியாக வழிநடத்தவில்லை என்றாகிவிடும். ஐயா வலம்புரிஜான் அவர்கள் கூறியது போல, “நமது எழுத்துக்கள் எடைக்குப் போடுவது போல இருக்கக்கூடாது. எடை போடக்கூடியதாக இருக்க வேண்டும்”. தேவையில்லாதவற்றை ஒருபோதும் எழுதாதீர்கள்! தவிர்த்துவிடுங்கள். அறிவிற்சிறந்த பிள்ளைகள் உங்களது அறிவும், ஆற்றலும் இனமேம்பாட்டுக்கும், மீட்சிக்குமே பயன்பட வேண்டும். ஆபிரகாம் லிங்கன் தனது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டு ஆசிரியர்களுக்குக் கடிதம் எழுதுகிறபோது, “குற்றங்குறை சொல்வோரைப் புறந்தள்ளக் கற்றுக்கொடுங்கள்” என்று கூறுகிறார். அதனைத்தான் நானும் எனது தம்பிகளுக்குக் கற்றுக்கொடுக்கிறேன். தேவையற்றவற்றைப் புறந்தள்ளுங்கள். நற்செய்திகளையும், உயர்ந்த நெறிகளையுமே பதிவிடுங்கள். நல்லதொரு கவிதையைப் படித்தால் அதனைப் பதிவிடுங்கள். தினமும் ஒரு குறளைப் பதிவிடுங்கள். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் பதிவிடுங்கள். பாவலேறு பெருஞ்சித்திரனார் பாக்களைப் பதிவிடுங்கள். ஆகப்பெரும் அறிஞர்கள் கூறியவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள். கற்றதைப் பற்ற வையுங்கள். தீயவற்றைத் தீயிடுங்கள். இணையத்தை நாம் தமிழர் வசமாக்குங்கள். இதுதான் சமூக வலைத்தளங்களில் நமது செயல்பாடாக இருக்க வேண்டும்-அண்ணன் சீமான்.எனவே திட்டமிட்டு கட்டமைக்கப்படும் விவாத வலைகளில் சிக்கிக் கொள்ளாமல் கட்சிப் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் நம் கவனத்தை செலுத்துவோம்.