பட உதவி : ம.செ.பகலவன்

கொரனா காலம் வழங்கியிருக்கிற முதன்மை பரிசு நமக்கு வாய்த்திருக்கிற தனிமை. இந்த தனிமை தான் நமது கடந்த காலத்தை பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறது.எவ்வளவு சரியாக நடந்து இருக்கிறோம் என்பதைத் தாண்டி எவ்வளவு தவறாக நடந்து இருக்கிறோம் என்பதுதான் ஆக்கிரமிக்கிறது. உண்மையில் தவறுகளும் மீறல்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொள்ள முடிகிறது.

யாரும் பூரணத்துவம் பெற்ற சரியான நபர்கள் என்று இதுவரை பிறக்கவில்லை. உங்களில் எவன் யோக்கியவானோ அவன் எடுத்து முதல் கல்லை அடியுங்கள் என தேவகுமாரன் கேட்டபோது கூட அப்போது தேடப்பட்ட அந்த முதல் கல் இப்போது வரை கிடைக்கவில்லை.எனவேதான் நாம் சரியானவர், நாம் சொல்கின்ற வார்த்தைகள் சரியானது என்றெல்லாம் நமக்கு நாமே நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் சக மனிதனின் மீது வன்மம் கொண்டு அலைய மனது தயாராகிறது. இந்த தனிமைப்பொழுதில் யார்மீதும் பெரிதாக கோபம் ஏற்படாமல் போவதை என்னுள் நிகழ்ந்திருக்கிற மாற்றம் என உணரத் தொடங்கி இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு என்கிற உணர்ச்சி மறந்துபோய்.. எதையும் சகித்து கடக்கும் மனநிலை தான் வசதியாக இருக்கிறது.வெறுப்பும், வன்மமும் உறுத்தலாகவே இருப்பதை தாண்டி உண்மையில் தொடர்ந்து பயணிக்க முடியாத பெரும் சுமையாக மாறி விடுகிறது.இங்கே யாரும் 100% சரியானவர்கள் இல்லை என்பதில் நானும் உள்ளடக்கம் என்றே நான் புரிந்து வைத்திருக்கிறேன்.அப்படி சரியாகவும் இருந்துவிட முடியாது. ஆனால் நான் சொல்வது தான் சரி, நான் தான் சரியானவன் என்றெல்லாம் நினைக்கத் தொடங்கும் போதுதான் வெறுப்பின் விதை ஊன்றப் படுகிறது.பலரை நம்மால் பார்க்க முடிகிறது. மனம் முழுக்க வெறுப்பினை சுமந்து, வார்த்தைகள் முழுக்க வன்மம் சுமந்துகொண்டு அலைகிற அவர்களது வெறுப்பின் பயணம் அவர்களையே துளித்துளியாக வீழ்த்திக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.

விட்டுக்கொடுத்து போனால்தான் என்ன.. என்ற கேள்விக்கு இங்கு வெறுப்பின் பாடலை முணுமுணுத்துக் கொண்டு இருப்பவர்களிடத்தில் எவ்வித பதிலும் இல்லை. விட்டுக் கொடுத்தவர்கள், மன்னித்தவர்கள் பலமாகி கொண்டே போவதையும், வெறுப்பையும் வன்மத்தையும் சுமப்பவர்கள் சுய வதைக்கு உள்ளாக்கி பலமிழந்து தவிப்பதையும் காணமுடிகிறது.நிகழ்ந்தது தானே என சிந்தித்து கடக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் கடலையும் கடந்துவிடலாம். வெறுப்பை மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தால் நம் வீட்டை கூட தாண்ட முடியாது. அப்படியெல்லாம் வெறுப்பினை சுமந்துகொண்டு இந்த வாழ்வினை கடக்க முடியாது.சமீபத்தில் கூட நம்மை விட்டு பிரிந்த ஒருவர் நம்மைக் குறித்து பேசி வருகிற கருத்துக்கள் பற்றி ஒரு வலையொளித் தளத்தில் பதிலளிக்க என்னை அழைத்தார்கள் நான் மறுத்துவிட்டேன். அதில் பங்கேற்பது தரக்குறைவு என்பது மட்டுமல்ல, பதிலுக்கு நானும் அந்த வெறுப்பின் போர்வையைப் போர்த்திக் கொள்ள வேண்டும். ஏறக்குறைய அவரின் மனநிலைக்கு நானும் மாற வேண்டும். அது ஒருவிதமான தற்கொலை.உண்மையில் வெறுப்போடு அலைபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் தோற்றவர்களாக உணர்ந்திருக்கிறார்கள். ஏதோ இழந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். எனவேதான் தங்களுக்குள் ஊறுகிற வெறுப்பை அடுத்தவர் மீது அள்ளி இறைத்து தங்களை ஆற்றுப்படுத்தி கொள்கிறார்கள். அதில் பதில் சொல்ல ஏதுமில்லை. அலட்சியப்படுத்தி நகரத்தான் நிறைய இருக்கிறது. எதையும் எளிமையாக கடக்க கற்று தேர்ச்சி அடைவது தான் உண்மையான ஞானம் என்கிறார்கள். நிதானித்து பார்க்கும் போதுதான் நாம் எல்லாம் இன்னும் கொஞ்சம் கவனமாக சற்றே பக்குவத்தோடு இந்த வாழ்க்கை அணுகி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இனிமேலாவது அவ்வாறு வாழ முயற்சி செய்வோம்.ஆதியிலிருந்து நாம் மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்கிற ஒரே பாடம்தான்..”எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.”இந்தப் பதிவு எழுத காரணமான ஒரு பதிவை எழுதிய என் அன்புத் தம்பி Vadivel Geevan க்கு என் உறக்கத்தை பறித்த என் சாபங்களும், என்னை சிந்திக்க வைத்த நன்றிகளும் ஒருசேர போய் சேரட்டும்.