❤️

சூழ வரும் சூழ்நிலைகளால், பிழையாகி போன வாழ்க்கை முறைகளால் அலைக்கழிக்கப்படும் மனித உளவியலை நிலைநிறுத்த மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் காலம் காலமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.தியானம் என்றும் தவம் என்றும் அவரவருக்கு ஏற்ற ஒரு வடிவத்தை பயிற்சி செய்து பார்த்து, ஏதோ ஒரு வகையில் மனித மனம் அலைக்கழிப்பு எனும் பேரலையில் இருந்து விடுதலை பெறாதா என மனிதர்கள் ஏங்கிக் கொண்டும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஏறக்குறைய மெய்யியல் தேடலுக்கும் இதுதான் அடிப்படை என்றே கருதுகிறேன்.

தனக்குள்ளாக ஏற்படும் கொந்தளிப்புகளை ஏதோ ஒரு வகையில் அடக்கி விட வேண்டுமென மனிதர்கள் தத்தளிப்பதுதான் இறை தேடலுக்கும் மூலமாக நான் நினைக்கிறேன். உலகத்தில் பிறந்த அனைவரும் மனநோயாளிகள் தான் என்கிறார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். மனநோய் என்பது ஒன்றுமே அல்ல. அதுவும் ஒரு மனம் என்கிறார் அவர். ஏன் இப்படி அலைகிறோம், தவிக்கிறோம் என்ற கேள்விகளுக்கெல்லாம் நம்மிடம் விடை இல்லை.எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பதிலும் தெளிவு இல்லை. பதட்டமும், குழப்பமும் நீக்கமற நிறைந்திருக்கும் நம் வாழ்வில் நிதானித்துப் பார்க்க நம்மிடத்தில் விழிகள் இல்லை.ஆசையே அழிவிற்கு காரணம் என போதித்தது பௌத்தம். நீ எல்லாவற்றிலும் இருந்து நீங்கி இரு என போதிக்கிறது சமணம்.

நீண்டகாலமாக பௌத்த, சமண வழிபாட்டுத் தத்துவங்களின் மீது எனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு உண்டு. அம்பேத்கரின் மாணவனாக நான் பவுத்தத்தை அணுகியபோது பவுத்தம் மிகப்பெரிய வசீகரம் கொண்ட காந்தம் போல என்னை இழுத்தது.‌ குறிப்பாக இந்து மதத்தின் மூடத்தனங்களிலிருந்து, சாதிய ஏற்றத்தாழ்வுகளில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள பவுத்தம் ஒரு மாபெரும் வழி என்றே எனக்குத் தோன்றியது.குறிப்பாக அம்பேத்கரின் “சாதியை ஒழிக்கும் வழி”(காலச்சுவடு வெளியீடு) என்கின்ற நூல் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் இருந்த தர்க்க மோதல்தான் இந்தியாவில் காலங்காலமாக நடந்து வருகிற சமூக முரண்களின் தோற்றுவாய் என நானே புரிந்து கொண்டதாக கருதினேன்.

ஒரு அம்பேத்கரியனாக என்னை நானே உணர்ந்து என் மகனுக்கு சிபி கௌதம் என பெயரிட்டேன். சிபி என்பது நான் சார்ந்து இருக்கின்ற தமிழ்த் தேசிய இனத்தின் கொடைப் புகழ் மன்னன் பெயர். கௌதம் என்பது தத்துவார்த்தமாக நான் தேடி அடைந்த புத்தத்தின் வழி நான் கண்டடைந்த பெயர்.இவ்வாறெல்லாம் சிந்தனைகளை வளர்த்துக் கொண்ட எனது வாழ்வில் 2009 இன அழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை நான் கொண்டிருந்த மெய்யியல் கோட்பாடுகளை ஏறக்குறைய மறுபரிசீலனை செய்யும் நிலைமைக்கு என் விழிகள் முன்னால் நிகழ்ந்த பெரும் இன அழிவு என்னை உந்தித் தள்ளியது.

மீண்டும் அமைதியற்ற இரவுகள் சூழ தொடங்கின. தனிப்பட்ட வாழ்விலும் எங்கெங்கோ அமைதி தேடி அலைந்து பல இடங்களில் தோற்றுப் போய் , சொல்லப்போனால் தீவிரமான மன அழுத்தத்திற்கு உள்ளாகி உறக்கத்திற்கான மாத்திரைகள் எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.உறக்க மாத்திரைகள் ஒரு தப்பிப்பு என நான் அறிவேன். ஆனாலும் அந்த தப்பிப்பு எனக்கு பிடித்திருந்தது. பகல் நேரத்திலும் மன பதட்டத்தை குறைக்கும் அல்ப்ராக்ஸ் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது எனக்கு வாழ்வியல் முறையாக மாறிப்போனது ‌. இசையிலும், திரைப்படங்களிலும், இலக்கியங்களிலும் முழுமையாக மனதை செலுத்த முயன்று கொண்டிருந்தேன். அதே சமயத்தில் அரசியல் கடமைகளும் சூழ எதிலும் நிறைவு இல்லாமல் உழன்று கொண்டிருந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் தனிப்பட்ட அழுத்தங்களால் என் கவனத்தை திசை திருப்ப முயன்று நான் தோற்றுக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் மறக்க தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு இரவு பகல் பாராது அலைந்துகொண்டிருந்தேன்.என் மனதிற்கு மிக நெருக்கமானவர்கள் இதை உணரத் தொடங்கியதும் இன்னும் நான் பதட்டமானேன். அவர்களுக்குத் தெரியக்கூடாது என நினைத்து நான் கடுமையாக அலைச்சல்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த தவிப்பும், எனக்குள் ஏற்பட்ட போதாமையும் ஒரு அலை போல சூழ்ந்து கொண்டிருந்தபோதுதான் தற்செயலாக புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய “முதன் முறையாக மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை” என்கின்ற ஒரு சிறு நூல் எனக்குள் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அந்த நூலை எழுதியவரை நான் ஏற்கனவே அறிந்து இருந்தேன் ‌. 2009 இன அழிவு போராட்ட காலங்களில் எங்களோடு அவரும் களத்திலே நின்று இருந்தார். ஒருசமயம் தஞ்சாவூரில் ஒரு மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவரை நெருங்கி பார்க்கின்ற ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது. மிகவும் ஆவேசமான அதே சமயத்தில் சற்று அறிவுப்பூர்வமான ஒரு இளைஞன் அவர்.ஐயா மணியரசன் தலைமையிலான ஒரு மாநாட்டிலும் அவரை நான் கண்டிருந்தேன். அவரை ஐயாவின் மகன் என நான் அறியத் தொடங்கினேன்.

சில காலங்களுக்கு பிறகு அவரைப் பற்றியும் அவர் இயக்கிய “”பாலை” என்ற திரைப்படத்தை பற்றியும் நான் அறிந்திருந்தேன். நான் அறிந்திருந்த வகையில் அவர் தீவிரமான ஒரு அரசியல் களத்தில் ஒரு ஆளுமையாக வெளிப்படுவார் என்று அப்பொழுதுகளில் நான் நம்பினேன். சில வருடங்களுக்கு அவரைப் பற்றி எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒருமுறை ஆனந்தவிகடனில் அவரைப் பற்றிய சிறு செய்தி ஒன்றும், அவர் நடத்தி வருகிற செம்மைவனம் கூடல் பற்றிய செய்தி ஒன்றும் படித்தேன்.பிறகு ஆனந்த விகடனில் தொடர் ஒன்றை அவர் எழுதியபோது , படித்தேன். நிச்சயமாக அவர் நான் கண்ட ஆவேசமான இளைஞன் அல்ல. இவர் வேறொரு மனிதர் என நான் நினைக்க தொடங்கி இருந்தேன்.

….வெகுகாலம் கழித்து கும்பகோணத்தில் நடந்த உழவர் பாதுகாப்பு மாநாட்டின் கருத்தரங்கில் அவர் ஒரு பேச்சாளராக கலந்து கொண்டார். அப்போது அவர்‌ ஒரு சூழலியல் போராளியாக உருவாகி வருகிறார் என நம்பினேன்…..வெகு காலம் கழித்து ஐயா மணியரசன் அவர்களின் தாயார் இறப்பிற்கு சென்றபோது மீண்டும் அவரைப் பார்த்தேன்.‌‌….இந்த முறை நிறைய மாறுதல்கள். அண்ணன் சீமானோடு நான் சென்றிருந்தபோது ஐயாவை சுற்றியும் ,அண்ணனை சுற்றியும் நிறையக் கூட்டம் ‌. இந்தக் கூட்டத்தில் எல்லாம் சிக்கி விடாமல் அவர் தனியாக அமர்ந்திருந்த அந்த விசித்திர காட்சி என்னை மிகவும் ஈர்த்தது. நானும் அவரோடு சேர்ந்து அமர்ந்து கொண்டேன். கொஞ்சமாக பேசினார். நிறைய கேட்டார்.

அதுவே வெகுவாக என்னை ஈர்த்தது….பிறகு சில நேரங்களில் சில அலைபேசி உரையாடல்களை தவிர, அண்ணன் சீமான் அவர்களுக்கு அவர் சொல்ல விரும்பும் செய்தியை என் மூலமாக கடத்தும் ஒரு கருவியாக பயன்பட்டதை தவிர, பெரிய நெருக்கமில்லை…..தம்பி செந்தில்நாதன் தொடங்கிய “தமிழம்” வலையொளி யூடியூப் சேனலில் அவரது உரை ஒன்றை கேட்க நேர்ந்தபோது இதுவரை இல்லாத, எனக்குள் நிகழாத ஏதோ ஒரு சிறிய அதிர்வு எனக்குள் நிகழத் தொடங்கியது. கடைசியில் அலைக்கழிப்புகளுக்கு மத்தியில் துடுப்பு கிடைத்துவிட்டதாக உள்மனம் சொன்னது.மனதிற்குள் நானே ஒரு முறை அழுத்தந்திருத்தமாக சொல்லிக்கொண்டேன்.

“ஆசான்”…..

குறிப்பாக ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைகள் ஏற்பட்ட போது ஐயா மணியரசன் அவர்கள் ஆதாரங்களோடு கடுமையான எதிர்வினை ஆற்றியிருந்தார். அவர் வழியை பின்பற்றி அண்ணன் சீமான் அவர்களும் எதிர்வினை ஆற்ற தயாராகி கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் தான் ஆசான் செந்தமிழன் அழைத்தார்.அவதூறுகளுக்கு எதிர்வினை ஆற்றுவது என்பது அவதூற்றுகளை பலமாக்கும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். அண்ணன் சீமான் இதுபோன்ற கருத்துகளுக்கு பதில் அளிக்க தேவையில்லை என்றும், ஐயா மணியரசன் பதிலளித்தது கூட தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அழுத்தம் திருத்தமாக ஆசான் தெரிவித்தார்.

சொல்லப்போனால் அவதூறுகள் முகவரி அற்றவை என்றும் ,நமது எதிர்வினைகள் தான் அதன் முகவர்களாக மாறத் தொடங்குகின்றன என்றும் , அண்ணன் சீமான் இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாமென்றும் ஆசான் கேட்டுக்கொண்டார்.அதை நான் அண்ணனிடம் தெரிவித்தேன். தம்பி சொல்வது சரிதான். நாம் இராசராசனை கொண்டாடுவோம். போற்றுவோம். இதுபோன்ற அவதூறுகளுக்கு பதில் சொல்லாமல் புறக்கணிப்போம் என்று அவரும் ஆசான் கருத்தை வழிமொழிந்தார்…..இன்னும் நெருக்கமாகி இருந்தோம்.

ஆசானது காணொளி இல்லாத குரல் பதிவுகள் ஒவ்வொன்றையும் தேடிப்பிடித்து கேட்கத் தொடங்கி இருந்தேன். நள்ளிரவில் விளக்குகளை அணைத்துவிட்டு ஆசான் குரலோடு அமைதியாக எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து செவி எடுக்க கற்றுக் கொண்டிருந்தேன். ‌பேசுவதை குறைத்து கேட்க கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.‌…மீண்டும் சென்னையில் நடந்த “தமிழரா திராவிடரா” கருத்தரங்கிற்கு ஆசான் வந்தபோது ஈடு இணையற்ற அவரது பேராற்றல் என்னை முழுவதுமாக இழுத்துக் கொண்டதை உணர்ந்தேன் ‌. தம்பி செந்தில்நாதன், தம்பி லிங்கதுரை ஆகியரோடு ஆசானை செம்மை வனத்தில் சந்தித்து உரையாடி கொண்டிருந்த அந்த ஒரு நாள் என் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியது.

ஆசான் எழுதிய அனைத்து நூல்களையும் வாங்கிக்கொண்டு படிக்கத் தொடங்கியபோது முற்றிலுமாக வேறு உலகத்திற்கு ஆசான் கைப்பிடித்து அழைத்துச் செல்வதை உணர்தேன்……அந்த மென்மையான குரலில், எதையும் எளிமைப்படுத்தும் வலிமை இருந்தது. புரிந்துகொள்ளவே சிக்கலாக இருக்கின்ற செய்திகளைக் கூட எளிமையாக்கி தருகிற வித்தையை ஆசான் பெற்றிருந்தார்.ஒரு மனஅழுத்தம் மிகுந்த ஒரு நாளில் ஆசானுக்கு அழைத்தேன்.

வெகுநேரம் நான் தான் பேசிக்கொண்டு இருந்தேன். சின்ன சின்ன வார்த்தைகளில் ஆசான் எனக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.மூடிக்கிடந்த கதவுகள் ஒவ்வொன்றாய் திறந்து கொண்டே வந்தன.ஒரு கடற்கரை ஓரம் ஜன்னல்கள் அதிகம் வைத்து கட்டப்பட்ட ஒரு மாடி அறை போல மனம் மாறத் தொடங்கியது. ஆசான் கதவுகளைத் திறக்க தொடங்கினார். அதுவரை நம் மீது படாத காற்று நம்மீது பட்டு உடல் சிலிர்க்கத் தொடங்கியது. நம்மீது படாத வெளிச்சம் நமக்குள் ஆழத் தொடங்கியது…..ஒட்டுமொத்தமாக ஆசான் என்ன சொல்ல வருகிறார் என புரிந்து கொள்ள முயன்றபோது அவர் எதுவும் சொல்ல வரவில்லை என்பதாகவே நான் புரிந்து கொண்டேன். மாறாக ஒரு கடல் போல அவர் இருந்தார். அவரை பின்பற்ற தொடங்கியவர்கள்தான் அவரிலிருந்து எடுக்க தொடங்கினோம். அந்த ஆழ் கடல் எடுக்க எடுக்க தீராத புதையல்களை கொண்டது என உணரத் தொடங்கிய கணத்தில் தான் ஆசான் என் அருகில் இருந்தார்……

நேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்ற வீரத்தமிழர் முன்னணியின் நாங்கள் தமிழர்கள் ஏன் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள ஆசான் வந்திருந்தார். “தமிழரா திராவிடரா” என்ற தலைப்பில் ஏற்கனவே நாங்கள் நடத்திய கருத்தரங்கின் தலைப்பின் மீது அவருக்கு உடன்பாடில்லை. தேவையில்லாததை பற்றி ஏன் வினா எழுப்பி அதை அடையாளப் படுத்துகிறார்கள் என்று எங்களிடம் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த முறையும் எனக்கு அந்த அச்சம் இருந்தது….ஆசான் வந்திருந்தார். குடும்பத்தோடு வந்திருந்தார். வழக்கம்போல் அவர் ஓரமான ஒரு இருக்கையில் அமைதியாக அமர சென்றார். நம்மவர்கள் அவரை விடவில்லை. அவர் யாரிடமோ நின்று பேசிக் கொண்டிருந்தார். தூரத்தில் இருந்து அவரை நான் பார்த்தேன். அவர் இடத்திற்கு நான் செல்லவேண்டும் என நினைக்க தொடங்கினேன். சற்று நேரத்தில் அந்த நினைவு தீவிரமடையத் தொடங்கியது. தம்பியிடம் சொல்லி அனுப்பினேன்.என்னைப் பார்த்ததும் ஆசான் கையை உயர்த்தி புன்னகைத்தார். ஆனால் மேடைக்கு நேர் எதிரே அமர்ந்திருக்கும் எனது அழைப்பை அவர் ஏற்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அவர் வரவில்லை என்றால் நாம் சென்றுவிடுவோம் என முடிவெடுத்தேன்.

ஆனால் எப்போதும் தனித்திருந்து ஓரமாக அமரும் அவர் ஏதோ ஒன்று உணர்ந்து அவரே என்னை நோக்கி வர தொடங்கினார். மெதுவாக வந்து என் பக்கத்தில் அமர்ந்தார். என்னை ஆசான் உணர்ந்திருக்கிறார் என நினைக்கும்போது நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்.அக்கணத்தில் தான் இதுவரை வாழ்வில் நாம் கண்டவர்கள், பழகியவர்களை விட மிக நெருக்கமான ஒருவரோடு நாம் அமர்ந்திருக்கிறோம் என்கின்ற ஒரு நிதானம் எனக்குள் மலரத் தொடங்கியது. எனக்குள் எப்போதும் வர மறுக்கிற பாதுகாப்பு உணர்வு ஆசான் அருகில் இருக்கும்போது நான் அடைய தொடங்கியிருந்தேன். சொல்லப்போனால் மிகவும் லேசாகி இருந்தேன்.தம்பி செந்தில்நாதனும் இதே போன்ற அனுபவங்களை அடைந்திருந்ததால் அவன் கண்கள் மினுக்க என்னை பார்த்துக் கொண்டிருந்தான்.அண்ணன் சீமான் வந்தவுடன் தன் தம்பியை இறுக்க அணைத்துக் கொண்டார் ‌. தன் தம்பியை பற்றி நிறைய பெருமிதம் அவருக்கு.

எங்களிடம் எப்போதும் ஆசானைப் பற்றி பெருமிதம் பட்டுக்கொள்ள அவருக்கு நிறைய காரணங்கள் இருந்தன…..ஆசான் பேச தொடங்கினார்.அமைதியாக. அதேசமயத்தில் உள்ளுக்குள் உரத்த குரலில்.நாம் நம்பிக் கொண்டிருந்த எல்லா நம்பிக்கைகளையும் மறு பரிசீலனை செய்ய வைக்கின்ற செய்திகளோடு அவர் பேசத் தொடங்கினார்.

இந்த முறையும் அவர் தலைப்பில் முரண்பட்டார். நாம் தமிழர்கள் தான். ஏன் என்ற விளக்கம் யாருக்கும் அளிக்க தேவையில்லை என்றார் உறுதியான குரலில்.பவுத்தம் குறித்தும் சமணம் குறித்தும் அவர் பேசியபோது புழுதி படர்ந்த இருட்டு அறையில் எப்போதும் படராத வெளிச்சப் புள்ளிகள் விழத் தொடங்கின.எந்தவிதமான புகழ்ச்சியும் இகழ்ச்சியும் என்னை பாதிக்காது என்றார் ஆசான். அவைகள் அல்ல நான் என்றார்.

இந்தப் பதிவு கூட அப்படித்தான்.

இது அவர் அல்ல . ஆனால் இதிலும் அவர் இருக்கிறார்

…….ஆசான் பேசிக்கொண்டிருந்தார்.எனக்குள் நான் மலரத் தொடங்கி இருந்தேன்…..அதே போல் பலரும் இருந்தார்கள் என நான் நினைக்கிறேன்.

ஒருவேளை இதற்கு அப்பாலும் இருக்கலாம்.

அந்தக் கணத்தில் அந்த இடம் ஒரு பூந்தோட்டமாக மாறத் தொடங்கியிருந்தது என்பதை மட்டும் நான் அறிந்திருந்தேன்.