❤️

மனித குணங்களில் வெறுப்பினை போல் விசித்திரமானது ஏதுமில்லை. உண்மையில் வெறுப்பு என்பது கொப்பளித்துக்கொண்டு இருக்கிற நீர்க்குமிழி போன்றது. சில வெறுப்புகளுக்கு காரணங்கள் தேவையில்லை. அப்படி காரணமில்லாமல் ஏதோ ஒன்றை வெறுக்க முடிகிற ஒரு உயிரி இந்த பிரபஞ்சத்தில் உண்டு என்றால் அது மனிதன் மட்டும்தான்.

சகமனிதனின் வெறுப்பு நெருப்பாய் நமது மீது கொட்டும்போது நாம் தவித்து விடுகிறோம். எதனால் இது நேர்ந்தது என்பது குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். நம்மை வெறுப்பவர் அனைவரையும் நாமும் வெறுக்க தயாராகிறோம். சொல்லப்போனால் ஒரு எதிர்வினை போல நமது உளவியல் அதற்கு தயாராகிறது. நாமும் அந்த நொடியே நம்மை வெறுத்தவர் போலாகி பிறரை வெறுக்க தொடங்கி விடுகிறோம். முடிவில்லா தொற்றுநோய் போல வெறுப்பு என்கின்ற குணாதிசயம் காலதேச வரையறைகளைத் தாண்டி எல்லோர் மனதிற்குள்ளும் ஊடுருவிக் கொண்டே இருக்கிறது.

வெறுப்பினை சாத்தான் மொழி என்கிறது பைபிள். பிறரை வெறுப்பது நம்பிக்கையாளர்களுக்கு உகந்ததல்ல என்கிறது திருக்குர்ஆன். பற்றிப் பரவும் நெருப்பை விட கொடியது வெறுப்பு என்று போதிக்கிறது புத்தம்.

சகமனிதர்களின் அர்த்தமற்ற வெறுப்பினை எவ்வாறு கையாளுவது என்று ஒருமுறை அண்ணன் சீமான் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்து அவரைப்போல் விமர்சனங்களை, வசவுகளை, வெறுப்பினை எதிர் கொண்ட மனிதர்கள் மிகமிகக் குறைவு. சமகாலத்தில் அவர் மீதான விமர்சனங்கள் தான் அவர் மீதான ஈர்ப்பிற்கு மூலதனமாக அமைகிறது.

எப்படி அர்த்தமற்ற வெறுப்பினை எதிர்கொள்கிறீர்கள் என அவரிடம் கேட்டபோது.. “நான் ஒருபோதும் வெறுப்பினை எதிர்கொள்வதில்லை. தவிர்த்து விடுவேன் என்றார். மற்றொன்று இன்னொருவரின் வெறுப்பினை எதிர்கொள்வது எனது வேலை அல்ல..” என்றும் கூறினார். இது எனக்கு சுவாரசியமாக இருந்தது.

அவரிடம் நான் பொருட்படுத்த மாட்டேன் என்பது போன்ற பதிலைத்தான் எதிர்பார்த்திருந்தேன். எனக்கு புரூஸ்லி பற்றி நினைவிற்கு வந்தது.

புரூஸ்லீயை பற்றி ஒரு தகவல் கேள்விப்பட்டிருக்கிறேன். தன் மீதான தாக்குதலை பெரும்பாலும் அவர் தவிர்க்கும் மொழியைத்தான் தனது கராத்தே கலையின் முக்கிய அம்சமாக கருதுவதாக அவர் கூறுகிறார். காற்றைக் கிழித்து எதிரியின் பலம் பொருந்திய முஷ்டி நம் தாடையை உடைக்க வேகமாக வரும் போது அதை எவ்வாறு தவிர்ப்பது என்பதில் தான் தன் கவனம் இருப்பதாக சொல்கிறார். இமைக்கும் ஒரு நொடியில் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாக இருக்கும் தன் உடலை மிகக் குறைந்த அங்குலம் நாசூக்காக நகர்த்திக் கொள்வதன் மூலமாக எதிரியின் தாக்குதல் உடலில் படாமல் வீணாகிறது. அந்தத் தாக்குதல் நிறைவேறாமல் போவதில் எதிரி ஏமாற்றம் அடைகிறான். பதட்டம் கொள்கிறான். பலவீனம் அடைய தொடங்குகிறான். இதைத்தான் தனது யுக்தி என்கிறார் புரூஸ் லீ.

அவர் எதிரியின் தாக்குதலை பொருட்படுத்தாமல் இருப்பதில்லை. ஆனால் தவிர்த்து விடுகிறார். அந்தத் தவிர்ப்பு நிலைதான் அவரது மேதைமை.

தவிர்ப்பது என்பது வேறு/ பொருட்படுத்தாமல் போவது என்பது வேறு.

அண்ணன் சீமானும் அப்படித்தான் தன்மீதான நேர்மையற்ற விமர்சனங்களை தவிர்க்க கற்றிருக்கிறார் ‌.அதைத் தன் மீது அன்பு பாராட்டும் உறவுகளும் கடைபிடிக்க வேண்டும் என எண்ணுகிறார். ஆனால் நாம் யாரும் அவ்வாறு இருப்பதில்லை.

அண்ணன் சீமான் பற்றிய ஒரு அவதூறு காணொளி வரும்போது அவர் மீது அன்பு பாராட்டும் எண்ணற்ற தம்பி தங்கைகள் அந்தக் காணொளிக்கு பதில் சொல்ல தயார் ஆவதற்காக அந்த காணொளியை பார்க்கின்றனர். பலரும் பதில் சொல்ல வேண்டும் என நினைத்து அவர்களே பரப்புகின்றனர். இது ஒரு வகையில் அவதூறு காணொளி வெளியிட்டவர் நோக்கத்திற்கு உதவி செய்வது போல் ஆகிவிடுகிறது.

அண்ணன் சீமான் பற்றி ஏதேனும் அவதூறு அல்லது வசவு போன்ற அம்சங்களைக் கொண்ட காணொளி வெளியிடுகிற பலருக்கு மிக முக்கிய நோக்கமே தங்கள் காணொளியை பலரும் பார்க்க வேண்டும் என்பதுதான். கண்டிப்பாக இதற்கு பதில் சொல்ல சீமான் தம்பி/ தங்கைகள் வருவார்கள் என்ற நோக்கத்தில்தான் அவர்கள் இதுபோன்ற காணொளிகளை வெளியிடுகிறார்கள். சொல்லப்போனால் அந்தக் காணொளியை எதிர்க்க வேண்டி பார்க்கின்ற பார்வையாளர்கள் கூட்டம் தான் அந்த காணொளிக்கான விளம்பரம். அதன் மூலம் வருமானம்.

அண்ணன் சீமான் குறித்து அவதூறு பரப்புகிற காணொளியை நாம் தீவிரமாக எதிர்க்கிற அரசியல் கட்சியினர் கூட அதிகம் பார்ப்பதில்லை. ஆனால் நமது ஆட்களோ அதில் என்ன இருக்கிறது பதில் சொல்ல வேண்டும் என்ற பரபரப்பில் அந்தக் காணொளியை அதிகம் பார்வையாளர்கள் பார்த்து காணொளியாக மாற்றி விடுகிறார்கள்.
பார்வையாளர்கள் வருகை அதிகம் இருக்கும்போது அந்த காணொளிக்கான வருவாய் கூடுகிறது.

எனவேதான் இதுபோன்ற காணொளிகளை வெளியிடுவதில் அதன் மூலமாக விளம்பரம் ஆகி பொருளீட்ட பலரும் துணிகிறார்கள். இந்த இடத்தில் அந்த காணொளியை நாம் தவிர்க்க கற்றுக் கொண்டு விட்டோமானால் காணொளி வெளியிட்டவர் நோக்கம் வெற்றி பெறாமல் ஏமாற்றம் அடைவார்.

அண்ணன் மீது நாம் கொண்டிருக்கிற பேரன்பு நம் எதிரிக்கு சாதகமாக மாறத் தொடங்குகிற விசித்திரமான புள்ளி அது. எனவேதான் எதை ஏற்பது, எதைத் தவிர்ப்பது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என நம் அண்ணன் சீமான் வலியுறுத்துகிறார்.

மறைந்த எனது மூத்த வழக்கறிஞர் பலராமன் ஒருமுறை அவசரமாக நீதிமன்றத்திற்கு கிளம்பிச் செல்லும்போது அவரது வீட்டு வாசலில் குடித்துவிட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தவரை கவனிக்காமல் கடந்து போனது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அவர் ஒருமுறை அதட்டி இருந்தால் அந்த குடிகாரன் அங்கிருந்து போயிருப்பான் இப்படி கேட்காமல் கடந்து போகிறாரே என்று நினைத்து நீதிமன்றத்திற்கு வந்த பிறகு அவரிடம் கேட்டேன்.
அவர் என்னை உற்று நோக்கிவிட்டு எந்த பதிலும் எனக்குச் சொல்லவில்லை.

மீண்டும் நாங்கள் வீட்டிற்கு திரும்பிய போது அந்தக் குடிகாரன் சாக்கடை ஓரம் விழுந்து கிடந்தான்.
என்னை பார்த்து சிரித்த அவர்
“இவனிடம் சண்டை போடுவதா நமது வேலை.. இன்று காலை நாம் சண்டை போட்டிருந்தால்.. ஒருவேளை அவன் ஏதாவது எதிர்த்துப் பேசி இருந்தால்.. நாம் அடித்து இருக்க வேண்டியிருக்கும். ஏதாவது பெரிய அளவில் தகராறு ஏற்பட்டு இருந்தால்.. நீதிமன்றத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் போயிருக்கும். இன்று பார்த்த எந்த வேலையும் நம்மால் பார்த்திருக்க முடியாது. எனவே சில இடங்களில் தவிர்த்துவிட்டு முன்னகர்ந்து விடுவதுதான் அறிவுத்தனம்” என்றார்.உண்மைதான். நான் உணர்ச்சி வசப்பட்டது போல அவரும் பட்டிருந்தால் உண்மையில் அந்த நாள் அன்று வீணாகி இருக்கும்.

வெற்று விமர்சனங்களுக்கு பதிலளித்து பதிலளித்து எத்தனை பக்கங்களை நாம் வீணாக்குகிறோம் .. நேரத்தை செலவழிக்கிறோம் என்று நினைத்தால் உண்மையில் அச்சமாக இருக்கிறது. அந்த வீணாய் போன விமர்சனங்களுக்கு நாம் பதில் அளிப்பதால் விமர்சிப்பவர்கள் அடங்கப் போவதில்லை. அவர்கள் மாறப் போவதுமில்லை. எனவே இதுபோன்ற விமர்சனங்களை தவிர்க்கக் கற்றுக்கொள்வது தான் நீண்ட நெடிய இந்த அரசியல் பயணத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை குணாதிசயம்.

நம்மை அழிக்க நினைக்கும் சிலரை வாழ்க்கையில் பெயர் சொல்லாமல் கடப்பது ஒருவகையான நிறைவு என்றால்.. அவர்களை நினைக்காமல் வாழ்வதென்பதுதான் முழுமையான வெற்றி.

எதை ஏற்பது என்பதைவிட எதைத் தவிர்ப்பது என்பதில் தான் வாழ்வின் முழுமை அடங்கி இருக்கிறது.

கவிப்பேரரசு வைரமுத்து செல்வது போல.‌.

“ஊரார் வாய்களை தைப்பது கடினம். உங்கள் செவிகளை மூடுவது சுலபம்.”

செவிகளை மூடுங்கள்.
அறிவினை திறவுங்கள்.

❤️