பட்டீச்சுரம் என்பது கும்பகோணம் மற்றும் பாபநாசம் தொகுதிகளின் நடு எல்லையில் இருக்கின்ற ஊர். ராஜராஜ சோழன் சமாதி இந்த ஊருக்கு அருகிலுள்ள உடையாளூரில் இருக்கிறது. அண்ணன் சீமானைத் தவிர எந்த அரசியல் தலைவரும் அந்த இடத்திற்கு இதுவரை வந்ததில்லை. வந்தால் அரசியல் சரிவுகள் ஏற்படும் என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மூட நம்பிக்கைகள் உண்டு.மூடநம்பிக்கை என்றாலே திராவிடம் தானே.அதனால்தான் எந்த திராவிடத் தலைவர்களும் அங்கு வருவதில்லை.

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த இந்த மண்ணில்தான் இன்று கும்பகோணம் மற்றும் பாபநாசம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.சற்றே ஊர் எல்லைக்கு வெளியே தான் எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அண்ணன் சீமானின் கூட்ட ஒலிபரப்பு தொடங்கிய உடன் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர தொடங்கினர்.கூட்டம் தொடங்கியவுடன் இளம் பேச்சாளர்கள் பேசத் தொடங்க ‌ அதன் பிறகு நான் பேசினேன். எனக்குப் பிறகு‌ வேட்பாளர்களான ‌ பெருந்தமிழர் கிருஷ்ணகுமாா் அவர்களும் வழக்கறிஞர் மோ ஆனந்தும் பேசினர்.நான் பேசிக் கொண்டிருக்கையில் ‌ நீண்ட நேரமாக ஒருவர் என்னை கவனித்துக் கொண்டே இருந்தார்.

நான் பேசியபோது திமுக, அண்ணா திமுக காரர்கள் போல அரசியல் என்பது எங்களுக்கு தொழில் அல்ல. காலையில் வேலைக்குப் போய்விட்டு மாலை தேர்தல் பணிகளுக்காக எங்கள் தம்பிகள் ஒவ்வொரு நாளும் வருகின்றார்கள். இனத்திற்காக தங்கள் பணத்தை செலவழித்து இன விடுதலைக்காக உறுதியாக நிற்கிறார்கள் என்று பேசினேன்.நீண்ட நேரமாக அவர் என்னை கவனித்துக் கொண்டே இருப்பதாக எனக்குத் தோன்றியது.எனக்குப் பிறகு ஐயா கிருஷ்ணகுமார் பேசிக் கொண்டிருக்கையில் தயங்கியவாறே அருகில் வந்தார்.என்ன நினைத்தார் என தெரியவில்லை.51 ரூபாய் பணமும் ஒரு சீட்டையும் தந்து விட்டு சென்று விட்டார். அதை பிரித்து பார்த்தால் திருவாளர் பொதுஜனம் 51 என எழுதி இருந்தது.

அதில் அவரை தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணும் எழுதியிருந்தது.அது வெறும் பணம் அல்ல. எளிய மனிதனின் நம்பிக்கை. அது அவருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நம்பிக்கை பிறந்த கணம். அது ஒரு பரஸ்பர நம்பிக்கை கொடை.அதே நபர் கூட்டம் முடிந்து நாங்கள் செல்லும் வரை ஓரமாக நின்று எங்களை கவனித்துக் கொண்டே இருந்தார்.‌‌ நாங்கள் அந்த இடத்தில் விட்டுக் கிளம்பும்போது நெஞ்சம் நிமிர்த்தி அவர் கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவரது பெயர்.திருவாளர் பொதுஜனம்.