சொல்லுக்குள்
தன் மொழியை
தன் நிலத்தை
தமிழர் வாழ்வை
சுருக்கி உட்புதைத்து
தைத்த வித்தகனுக்கு.‌..
முதல் மரியாதை

❤️

வான்புகழ் கொண்ட
தனி மொழி தமிழுக்கு
தன் கறுப்பு மண்ணின்
கரும்பு சாறெடுத்து கவிதை
அமுதூட்டியவன்.

பூங்கதவின் தாழ் திறந்து
அந்தி மழை பொழிகையில்
ஆயிரம் தாமரை மொட்டுக்களில்
பாயிரத் தமிழ்க் கும்மி அடித்தவன்.

சின்னச்சின்ன ஆசைகளோடு
சிகரங்களை நோக்கி
தமிழாற்றுப்படையோடு
நடைபோட்டாலும்
கள்ளிக்காட்டில் அமர்ந்து கருவாச்சி காவியம் கண்டவன்.

பழைய பனை ஓலைகளில்
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
என நேற்றுப் போட்ட கோலமாய்
கல்வெட்டுகளில் உறைந்திருந்த
தமிழுக்கு நிறம் கண்டு
வடுகப்பட்டி முதல் வால்கா வரை
எல்லா நதிகளிலும் தமிழ் ஓடங்களை மிதக்க விட்ட திருத்தி எழுதிய தீர்ப்புக்காரன்.

அவன் சொன்னால்..
பெய்யெனப் பெய்தது மழை.

அந்த குளத்தில் கல்லெறிந்தவர்களுக்கும்..
இதனால் சகலமானவர்களுக்கும்..

எப்போதும் மீண்டும் தன் தொட்டிலுக்கு திரும்பி விடத் துடிக்கும்
அவன் தன் வாழ்வு மூலம் தெரிவித்துக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

வானம் தொட்டுவிடும் தூரம்தான்.

❤️

கவிப்பேரரசு அவர்களுக்கு..

இன்றைய நாளில் என் தம்பி என்னோடு தரையில் இருந்தால்
உங்களுக்கோர் தமிழ்த் தோரணம் கண்டிருப்பான்.

துரை சிறையில் இருக்கிறான்.

அவன் சிந்தை முழுக்க நிறைந்திருக்கும் கவி தந்தை
தங்களை.. அவன் எண்ண அலைகளோடு என்னையும் இணைத்து இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

❤️

மணி செந்தில்.