வெக்கையும், வறட்சியும் நிலவும் நிலப்பகுதியில் அமர்ந்துக் கொண்டு, பனி பொழியும் ஊசியிலைக் காடுகளைப் பற்றியும், ஸ்டெபி புல்வெளி பற்றியும், பனி படர்ந்த ஜன்னல் கதவுகளைப் பற்றியும், குளிர் இரவின் ஊதற் காற்றினை பற்றியும் மிக எளிதாக புரிந்து கொள்ள முடிவதற்கு டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி, புஷ்கின், துர்கனேவ், போன்ற கால தேச எல்லைகள் கடந்த தீவிர எழுத்தாளர்களின் உயிர்ப்பு மிகுந்த எழுத்துக்கள் காரணமாய் அமைந்து இருக்கின்றன.
குறிப்பாக ரஷ்ய இலக்கியங்கள் தமிழ் நிலத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மகத்தானவை. சோவியத் ரஷ்யா உயர்ந்து மிளிர்ந்து விளங்கிய காலகட்டங்களில், ஏராளமான ரஷிய செவ்விலக்கியங்கள் தமிழில் மொழிப்பெயர்ப்பாகி வெளிவந்தன. மாஸ்கோ பதிப்பகம், ராதுகா பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் உயர்ந்த தாளில், அழகிய ஓவியங்களில், தரமான மொழிபெயர்ப்பில், ரஷ்ய இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் வாசகனுக்கு அளித்தன.
தமிழ் நிலப்பரப்பின் பருவநிலை, பண்பாட்டு கூறுகளுக்கு நேர் எதிரான பண்புகள் கொண்டது ரஷ்ய நிலப்பரப்பு. ஆனாலும் தாஸ்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” படித்துவிட்டு தமிழ் வாசகனால் காதல் மயக்கத்தோடு’கனவுலகவாசியாக’ எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் திரிய முடிந்தது. 
ரஷ்ய இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களில் எண்பதுகளின் தலைமுறையினர் பார்த்து வியந்தது அதன் தாள்களின் தரம், செய்நேர்த்தி கெட்டி அட்டை போன்றவை. குறிப்பாக சிறுவர் இலக்கியங்களில் ரஷ்ய கதைகள் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. ஆயிரக்கணக்கான ரஷ்ய சிறுவர் கதைகள் அப்போது வெளியானது. அதையெல்லாம் யாராவது சேகரித்து வைத்திருந்து இப்போது அதே தரத்தில் வெளியிட்டால் மிகுந்த வரவேற்ப்பை பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி.
சில வருடங்களுக்கு முன்பாக உலக இலக்கியப் பேருரைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் “டால்ஸ்டாயின் அன்னாகரீனினா” நூலைப்பற்றி பேசிய பேச்சின் ஒலி வடிவத்தை ரஷ்ய இரவு போன்ற ஒரு குளிர் இரவில் கேட்டபோது, நான் ஒரு காலத்தில் படித்த டால்ஸ்டாயின் அன்னாகரீனினா வேறொரு பெண்ணோ என்கின்ற திகைப்பினை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. காரணம் எஸ்.ரா டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவை சதையும் ரத்தமும் கொண்ட ஒரு அசல் பெண்ணாக தனது பேச்சின் மூலமாக‌ உருவாக்கியிருந்தார்.
ஏற்கனவே நான் படித்த அன்னா கரீனினா என்பவளை விட, எஸ்.ரா‌ நிறுவிய அன்னா கரீனா இன்னும் வலி மிகுந்தவளாக, நிராகரிப்பின் வேதனை சுமப்பவளாக மாறி நின்றாள். எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் ரஷ்ய இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாசிக்க வாய்ப்பு கிடைத்த தமிழ் வாசகர்கள் தாங்கள் எந்த காலத்திலிலேயோ சந்தித்த தங்கள் மனம் கவர்ந்த அன்னாகரீனினாவை மீண்டும் நிகழ்காலத்தில் ரத்தமும் சதையுமாக சந்திக்க நேர்ந்தது போல ஒரு வாய்ப்பினை எஸ்.ரா தமிழ் வாசகர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.
குறிப்பாக டால்ஸ்டாய் பற்றி எஸ் ராமகிருஷ்ணன் நிறைய எழுதியிருக்கிறார். ஒரு எழுத்தாளனின் தனி மனித வாழ்க்கைக்கும், அவனது புனைவு எழுத்துக்கும் உள்ள இடைவெளியை எஸ்.ரா டால்ஸ்டாய் மூலம் இந்த நூலில் ஆய்வு செய்கிறார்.
உலகின் மகத்தான எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் வாழ்வில் போகிற போக்கில், இரண்டே சொற்களில் அடங்கி விடுகிற அக்ஸின்யா, திமோ‌ஃபி என்கிற இருவரைப் பற்றி எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய பெருங்கதைதான் “மண்டியிடுங்கள் தந்தையே”

அவர் சொன்னது போல தமிழில் எழுதப்பட்ட முதல் ரஷ்ய நாவல் இது  என்பதாக உணர்வதற்கான அனைத்து வசீகரங்களையும், படைப்பாக்கத் திறன்களையும் உள்ளடக்கிய புனைவெழுத்து அதிசயமாக இந்த நூல் திகழ்கிறது.
நாவல் தொடங்கும் முதல் புள்ளியிலேயே நாம் ரஷ்யாவின் போல்யானா பண்ணைக்கும் , பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்கும் சென்று விடுகிறோம். கிறிஸ்மஸ் மாத பனி மாத இரவில் டால்ஸ்டாய் தனது அறையில், தனிமையில், மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் எழுதிக் கொண்டிருக்கின்ற காட்சி நம் கண்முன்னால் விரிகிறது.
முதல் சில பத்திகளிலேயே, டால்ஸ்டாய்க்கு மிக அருகில் தமிழ் வாசகன் ஒருவன் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு, அவரை உற்றுநோக்கி கவனிக்கிற அனுபவம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.
எந்த பண்டிகை கொண்டாட்டங்களிலும் பெரிதாக ஆர்வம் இல்லாத டால்ஸ்டாய் எழுதுவது ஒன்றையே நிரந்தர கொண்டாட்டமாக, நிகரற்ற சந்தோஷமாக கருதுகிறார். பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் விரியும் தனது கதாபாத்திரங்களின் குண நலன்கள் குறித்த புதிரான எதிர்பாராமை தான் அவரது ஒரே சுவாரசியம்.
சூதாடி இழந்த பெரும் சொத்துக்களில் இருந்து மிஞ்சிய அவரது பண்ணையையும், அங்கே வேலை செய்கின்ற பண்ணை ஆட்களையும் நிர்வகிக்கின்ற அவரது மனைவியான சோபியாவிற்கு டால்ஸ்டாய் குறித்தான சந்தேகங்கள் எப்போதும் உண்டு.
குறிப்பாக டால்ஸ்டாயின் திருமணத்திற்கு முந்தைய தனது உறவுகள் குறித்தும் டால்ஸ்டாயே தன் மனைவியிடம் தெரிவித்திருந்தார். அந்த உறவுகளில் ஒன்றுதான் அக்ஸின்யா. அந்த உறவில் பிறந்தவன்தான் திமோஃபி. இந்த விபரங்கள் அனைத்தும் சோபியாவுக்கும் தெரியும்.
அக்ஸின்யாவின் மரணச் செய்தியோடு தொடங்கும் நாவல் முன்- பின் காலங்களில் பயணித்து, மனித உளவியல், ரஷ்ய நிலத்தின் பருவ நிலை சூழல்கள், அக்காலத்து அரசியல் போக்குகள், டால்ஸ்டாய் காலத்து சக எழுத்தாளர்கள், அவர்களது எழுத்து முறைமைகள் , என பல செய்திகளை உரையாடல்கள் மூலமாக வழங்கி அக்ஸின்யாவின் மரணத்தை எவ்வாறு டால்ஸ்டாய் எதிர்கொள்கிறார் என்பதோடு முடிவடைகிறது.
எந்த சூழ்நிலையிலும் பழுதடையாத இலக்கிய ஆன்மாவை கொண்ட மாபெரும் எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். அவர் சொந்த வாழ்வில் எப்பேர்ப்பட்ட மனிதனாக இருந்தார், அவரது அகச் சிந்தனைகள் எவ்வாறு இருந்திருக்கும் , அக்காலத்து ரஷ்ய நாட்டின் பண்ணை முறைமைகள் எவ்வாறானது என்பது போன்ற நுட்ப செய்திகள் பல இதில் உண்டு.
இதையெல்லாம் தாண்டி கொடும்பாலையில் தாகத்தை சுமக்கின்ற ஒட்டகம் போல நிகழ்காலத்தில் தனது கடந்தகாலத்தை சுமக்கின்ற எளிய மனிதனாய் டால்ஸ்டாய் அடைகிற குற்ற உணர்வும், வாழ்வு பற்றிய போதாமையும் நம்மில் ஒருவராக அவரை பார்க்கச் செய்கிறது.
“காலம் தான் மனிதர்களின் பிரச்சனை. ஒருபோதும் நிகழ்காலத்தில் மனிதர்களால் வாழ முடியாது.” என ஒலிக்கும் எஸ்.ரா வின் எழுத்து வீச்சுகள் நாவல் முழுக்க சிதறிக் கிடக்கின்றன.
“ஒருவன் மற்றவர்களுக்கு இல்லை என்றாலும் தனக்குத் தானே உண்மைகளைச் சொல்லி கொள்ளத்தானே வேண்டும்..” என இந்த படைப்பு முழுக்க நிரம்பி தளும்பும் இது போன்ற கேள்விகளால் மனம் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
“ரகசியங்கள் இல்லாத மனிதன் யார்.. மனிதர்களுக்கு புதைக்கப்படும் போது அவர்களது ரகசியங்களும் புதைக்கப்படுகின்றன” என்றெல்லாம் வரிகள் தென்படும்போது படிப்பவரின் உள்மனம் அதனதன் ரகசியங்களை எடை போட தொடங்கிவிடுகிறது.
உண்மையில் ஒரு படைப்பின் வேலைதான் என்ன என்ற கேள்விக்கு எஸ்.ரா  இந்த நாவலில் சொல்வது போல “ஒரு கலையின் வேலை‌, மனிதர்களை மகிழ்ச்சி படுத்துவது மட்டுமல்ல.., நெறிப்படுத்துவதும், வழிகாட்டுவதும், மேம்படுத்துவதும்,.தான்.”
“மண்டியிடுங்கள் தந்தையே”  என்கின்ற  இந்த உயரிய படைப்பு சாதித்திருப்பது என்னவென்றால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ரகசியங்களை புதைத்துக்கொண்டு, நிகழ்கால சமரசங்களோடு வாழக்கூடிய ஒரு டால்ஸ்டாய் இருக்கிறார் என்பதை உணரச் செய்வதுதான். 
இலக்கியம் என்கின்ற உயரிய கருவியால் மட்டுமே ரஷ்யாவில் என்றோ வாழ்ந்த டால்ஸ்டாய் என்ற இலக்கிய ஆளுமையோடு, நம்மை பொருத்திப் பார்க்க தூண்ட முடிகிறது. 
காயங்களும், ஏக்கங்களும், நிரம்பிய மனித வாழ்வில் குற்ற உணர்வும், வாதைகளும் நிரம்பி இருக்கின்றன என்பதை யோசிக்கும் அதே நேரத்தில் அவல காலதேச மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பொதுமைவயப்பட்டவை என்பதோடு மட்டுமில்லாமல், அவைகள்தான் உலக இலக்கியத்தின் ஊற்றுக் கண்களாக திகழ்கின்றன என சிந்திக்க வைப்பதுதான் இந்த நாவலின் உச்சப்புள்ளியாக கருதுகிறேன்.Hell is empty.all devils are here.(நரகம் காலியாகி விட்டது. எல்லா சாத்தான்களும் இங்கேதான் இருக்கின்றன) என்பார் ஷேக்ஸ்பியர். ஆனால் இந்த நாவலில் வரும் டால்ஸ்டாய்  மனிதர்களின் மனம் சொர்க்கத்தில் நுழைவாயிலாக இருக்கிறது என்கிறார்.
மனிதர்களின் மனம் ஒரே சமயத்தில் சொர்க்கத்தின் நுழைவாயிலாகவும், நரகத்தின் இருப்பிடமாக திகழ்வதை தான் நாம் மானுட வாழ்வு என அர்த்தப்படுத்திக் கொள்கிறோம் என நாம் நமக்கு நாமே உணரும் புள்ளியில்தான் கலையின் மேன்மை ஒளிர்கிறது.
(மண்டியிடுங்கள் தந்தையே- நாவல், எழுதியது:திரு எஸ் ராமகிருஷ்ணன். பக்கங்கள் 248, வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம், டி-1, கங்கை அப்பார்ட்மெண்ட், 110, 80 அடி ரோடு, சத்யா கார்டன், சாலிகிராமம், சென்னை 93044-23644947)