19.03.2022 இரவு 12.01.

எனது அன்பு மகன் சிபிக்கு..

துளித்துளியாய் நகரும் இந்த இரவில், கண்கள் முழுக்க நெகிழ்ச்சியோடு, உள்ளம் முழுக்க பேரன்போடு உனக்காக எழுதுகிறேன்.முதலில் உன்னை உச்சிமோர்ந்து கண் கலங்க முத்தமிடுகிறேன்.கலீல் ஜிப்ரான் சொல்வதுபோல நீ என்னில் இருந்து வந்தவன் தான். ஆனால் நீ நான் அல்ல. என் கனவுகளை உன் மீது சுமத்தி நான் வளர்க்கும் ஒட்டகமாய் உன்னை திரிய வைக்க நான் எப்போதும் விரும்பியதில்லை. உனது சுதந்திரத்தையும், உனது தேர்வுகளையும் நான் பெரிதும் மதிக்கிறேன். அவற்றையும் எனக்கானதாய் கருதி நான் விரும்ப கற்றுக் கொள்கிறேன்.இவ்வளவும் நான் உன் மீது வைத்திருக்கிற பேரன்பினால் மட்டும் விளைந்தது அல்ல. மாறாக அப்பழுக்கற்ற நம்பிக்கையினால்.ஆம். நான் மட்டுமல்ல. இந்த கலையகத்தில் இருக்கும் ஒவ்வொரு துரும்பும் உன்னை நம்புகிறது. உனது புன்னகைக்காக ஏங்குகிறது.

18 வருடங்களுக்கு முந்தைய ஒரு மாலை நேரத்தில் அது வரை எதுவுமே அற்ற என் வாழ்க்கையில், ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அள்ளிக்கொண்டு நீ வந்தாய் ‌.அந்த நொடி இன்னும் என் விழிகளுக்குள்ளாக பசுமையாக இருக்கிறது. உனது பிஞ்சு கால்களின் மென்மையை இப்பொழுதும் எனது உள்ளங்கை உணருகிறது.எந்த நொடியிலும் நீ கலங்கி விடக்கூடாது என்பதை என் வாழ்க்கையின் நோக்கமாக அன்றைய நாளில் தான் நான் மாற்றிக் கொண்டேன்.நான் அடைந்த எந்த இருண்மையும் உன்னைத் தொட்டு விடக்கூடாது என்பதற்காக எப்பொழுதும் உனக்காக துடிக்கும் என் ஆன்மா உன் மீது அன்பின் நிழல் வேய்ந்திருக்கிறது.நீ நடக்கும் போதும், ஓடும் போதும், மண்ணிலிருந்து விண்ணை நோக்கி பாய்ந்து தாவும் போதும் நானே நடப்பதாக ஓடுவதாக பறப்பதாக உணர்ந்தேன். எனக்கு இந்த உலகம் எதை எதை மறுத்ததோ , அவை அனைத்தையும் உன் மூலம் நான் அடைந்து விட்டேன். அதில் நான் இந்த உலகையே வென்று விட்டேன்.

❤️

தாத்தா ஆத்தா அம்மா தம்பி என்று ஒரு பாதுகாப்பான வேலிக்குள் ஒரு தோட்டத்து மல்லிகைச் செடி போல இதுவரை நீ இருந்து விட்டாய்.அதைத் தாண்டிய ஒரு உலகம் உன்னை இந்த நொடியில் கையசைத்து அழைக்கிறது. நீ அங்கு போய் தான் ஆக வேண்டும். ஒவ்வொரு நொடியும்விரிவடைந்துகொண்டே போகின்ற அந்த உலகம் இதுவரை வாழ்ந்த உன் வீடு போல எளிமையும் பாதுகாப்பும், முறைமையும் கொண்டது அல்ல.எல்லா திசைகளிலும் திருப்பங்களை கொண்ட அந்த உலகில் அலைந்து திரிந்து உனக்கு நீயே ஆசிரியனாய் அனுபவங்கள் வாயிலாக கற்று கொள்ள இதோ ஒரு வாசல் கதவு திறக்கிறது.ஒரு சிட்டுக்குருவியை போல நீ பறந்துப் போக ஒரு பெரிய வானம் காத்திருக்கிறது.

ஒரு வெண்புறா போல அகத்தூய்மை கொண்ட நீ அப்படியே இருந்து விடாதே.கழுகைப் போல பார்வையும், வல்லூறைப் போல வலிமையும் உனக்குத் தேவை.இனி நிறைய பயணப்படு. தனியே ஊர் சுற்று. தினந்தோறும் உடற்பயிற்சி செய். மிக சாதாரண எளிய மக்களோடு மிக எளிய வாழ்க்கை ஒன்றை வாழ பழகிக் கொள். கிடைத்தவற்றை, கிடைத்த நேரத்தில் சாப்பிட்டு செரித்துக்கொள்ள உறுதியான வயிறு ஒன்றினை பயிற்சியின் மூலம் கண்டடை. உடலை,மனதை கெடுக்கும் எதனையும் தீண்டாதே.எல்லோருக்கும் உதவு. இரக்கப்படு. நீதிக்காக உரத்துக் குரல் கொடு. அநீதியை ஒருபோதும் சகித்துக் கொள்ளாதே.புத்தகங்களோடு வாழப் பழகிக் கொள்.மற்றபடி இந்த வாழ்க்கை உன்னுடையது. உறுதியோடு நம்பிக்கையோடு வசீகரமான பயணம் போல இந்த வாழ்க்கையை வாழ்ந்து அனுபவி.‌ கொண்டாட்டங்களின் ஊடாக சக மனிதர்களை நேசி.இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்பதற்கான சட்டக விதிகள் இவைகள் அல்ல. உனது பயணம் தங்கு தடையில்லாமல் வெற்றிகரமாக அமைய ஏற்கனவே பயணப்பட்ட ஒருவனின் அனுபவக் குறிப்புகள். முள் பட்ட கால்களின் முன் தீர்ப்புகள்.

உன்னை மகிழ்ச்சியோடு இறுக்க கட்டிப் பிடித்துக் கொள்கிறேன். மிகச்சிறந்த தோழனாய் இந்த நொடியில் உன்னை நான் உணருகிறேன். நமது பல ரசனைகள் ஒன்றாகவே அமைந்திருப்பது கண்டு நான் ஒருபோதும் வியந்ததில்லை ‌. உனது நிழலாக நானிருக்கிறேன் என்பதும், எனது நகலாக நீ இருக்கிறாய் என்பதும் நாம் அறிந்தவை தானே.மற்றபடி 17 முடிந்து 18 யை தொட்டுவிட்டாய். இனி புதிய உலகம். புதிய வாழ்க்கை. புதிய அனுபவங்கள்.சென்றுவிட்டு, வென்று விட்டு, எப்பொழுது ஆனாலும் வீட்டுக்கு வந்துவிடு‌.பரவசமாய் உனது வெற்றிகளை கேட்க, பார்க்க நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்.அதோ தூரத்தில் கைதட்டல் ஓசை கேட்கிறது.

சென்று வா.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சிபி.