❤️

அவனை வாழ்த்த சென்று வாழ்த்தாக தெரிவித்தது ஒன்றே ஒன்றுதான்…

“இதையாவது வணிகமாக மட்டும் செய். “

….

உண்மையில் அவன் பெற்றிருக்கின்ற பலவற்றை வணிகமாக்க மறுத்ததை நானே பலமுறை எதிர்த்து இருக்கிறேன். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாட்டில் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் பெரும் வாய்ப்பினை, அறிவை வணிகமாக்க மறுத்து, வெளிநாட்டு வாழ்வு, பொருளாதார உயர்வு என பலவற்றை இழந்து விட்டு, சொந்த ஊரில் கடை திறக்கும் அவனைப் பார்த்தால் ஒரே நேரத்தில் கோபம் கொள்ளவும், ஆழமாக நேசிக்கவும் தோன்றுகிறது.

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான தம்பி முனைவர் செந்தில்நாதன் எனக்கு 2007 2008 காலங்களிலேயே பழக்கம். ஆர்குட் பக்கங்களில் அப்போது அவர் மதிமுக ஆதரவாளர். நானோ திமுகவின் போர்வாள். எனவே அப்போதே அவரது நண்பராக இருந்த சக்திவேல் மற்றும் செந்தில்நாதனோடு எனக்கு கடுமையான மோதல் (?) உண்டு.

அதன் பிறகு தமிழ்த் தேசிய தளத்தில் அண்ணன் வழக்கறிஞர் நல்லதுரை மூலமாக தம்பியாக செந்தில்நாதன் மாறுகிறான். எதை எடுத்தாலும் இப்போது கடை தொடங்கி இருக்கும் நிகழ்வு வரை ஆர்வத்தின் உச்சத்தோடு அணுகும் அவனது மனோபாவம் ஆச்சரியகரமானது. குறிப்பாக தமிழ்த் தேசிய தளத்தில் அவனது பங்களிப்பு மகத்தானது. தொடர்ச்சியான பண்பாட்டு மீட்சிப் போராட்டங்களில் உச்சங்களை தொட்டு வரும் வீரத்தமிழர் முன்னணி யின் ஒவ்வொரு அசைவிலும் அவனது உழைப்பின் உதிரம் நிறைந்திருக்கிறது.இன்று நாம் தமிழர் அடைந்திருக்கும் பல எல்லைகளை அன்றே தொட முயற்சித்து எங்கள் பலரின் எதிர்ப்பினை அவன் அடிக்கடி சம்பாதிப்பான். ஆனாலும் உற்சாகம் குறைந்ததில்லை.

பல இடங்களில் அவனோடு நான் முரண்பட்டு இருக்கிறேன். முடிந்த அளவு மோதி இருக்கிறேன்.‌ அடுத்த நொடியே சமாதானமாகி இன்னொரு வேலையில் இருவரும் இணைந்திருப்போம். முரண்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு கல்விப் புலத்தில் அவன் மேதமையைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். செங்கிப்பட்டிக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ஏழை குடும்பத்து இளைஞன் தன் மேதமையால் ஜெர்மனி பிரான்ஸ் இத்தாலி நோபல் கமிட்டி என்றெல்லாம் உச்சத்தை தொட்டு விட்டு மீண்டும் செங்கிப்பட்டிக்கு திரும்பி வந்திருப்பது ஒரு திரைப்பட கதைக்கே உரிய சுவாரசியம் என்றாலும், அதற்குப் பின்னால் கொள்கை நேசிப்பு சார்ந்த, பிடித்த வேலையை செய்ய எண்ணி, பிடித்த பிடிவாதத்தால், ரத்தமாய் துயரம் கவிழ்ந்த ஒரு அசலான வாழ்க்கை இருக்கிறது.

ஆனாலும் அவன் ஜீவிதம் யார் முரண்பட்டாலும் அவனளவில் மிக நேர்மையானது. அவன் வாழ்வில் இருக்கும் மிகப்பெரிய உன்னதமே அதுதான். அதற்காக அவன் இழந்ததெல்லாம் மிக மிக அதிகம் என்றாலும் அதை துளித் துளியாய் ரசித்து விரும்பி இழந்திருக்கிறான்.

எத்தனையோ முயற்சிகளை சலிப்பில்லாமல் சங்கடமில்லாமல் தொடர்ந்து செய்ய முடிகிற அவனது ஆன்ம பலம் , எப்போதும் எல்லாவற்றிலும் இருந்து விலகிக் கொள்ள இடம் தேடும் எனது உளவியலுக்கு நேர் எதிரானது என்றாலும், நான் கற்றுக்கொள்ள

விரும்புவது.

இப்போதும் “சேயோன்”என்ற முயற்சியோடு நம் முன்னால் தம்பி செந்தில்நாதன் நிற்கிறான். தவிர்க்கவே முடியாத நம்பிக்கை கண்களோடு அவனை இன்று கடைவாயிலில் பார்த்த போது வாழ்கின்ற போராட்டத்திற்கான ஆழமான வேட்கையை வரும் எல்லோருக்கும் வழங்குகிற கருவியாக அவன் மாறி இருந்தான்.

பல இடங்களில் கிடைக்காத நல்ல புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கிறான். உடலுக்கும் மனதிற்கும் எப்போதும் கெடுதல் செய்யாத இயற்கை உணவு பொருட்களை எங்கெங்கோ அலைந்து திரிந்து வாங்கி வைத்திருக்கிறான். ஒவ்வொன்றிலும் சமூக நலம் சார்ந்து சிந்தித்து இருக்கும் அவனுக்காகத்தான் நான் இந்த பத்தியின் மூன்றாவது வரியில் சொன்ன அறிவுரை.

“இதையாவது வணிகமாக செய்..”

சமூக நலமும் வணிக வெற்றியும் முரண்பாட்டு புள்ளிகள் என்பதை அவனது வெற்றி தான் மாற்றி அமைக்க வேண்டும்.

…..

கடை திறப்பு விழாவிற்காக குழந்தைகளோடு குடும்பத்தோடு அவன் எங்கள் எல்லோரையும் வரவேற்று நின்று கொண்டிருந்த காட்சி நோபல் பரிசு கமிட்டியில் விவாதித்து உலகப் புகழ் அடைந்தவர்களோடு, ஒரே தகுதி இருக்கையில் அமர்ந்து உச்சம் தொட்டவனுக்கானது அல்ல என்றாலும், இந்த வாழ்வினை அசலாக வாழ விரும்பும் தமிழ்த்தேசியப் பற்றாளனுக்கானது என்ற வகையில் அவன் உறுதியாக வென்றாக வேண்டும் என நான் உளமார விரும்புகிறேன்.

ஏனெனில் அவனது வெற்றி என்பது இந்த களத்தில் நிற்கின்ற எண்ணற்ற இளைய புரட்சியாளர்களுக்கான வெற்றியாக கருதப்படும்.

வெளிச்சமாய் அவன் மாறட்டும்.

உள்ளம் நெகிழ அணைத்து வாழ்த்துகிறேன்.

அவசியம் அனைவரும் செல்லுங்கள்.

அவனை வாழ்த்துங்கள்.

சேயோன் வெல்வான்.

சேயோன் அங்காடி, கந்தர்வகோட்டை சாலை, செங்கிப்பட்டி.

தொடர்புக்கு..9442248351.