கொஞ்சம் நீண்ட பதிவு தான். நேரம் ஒதுக்கிப் படியுங்கள். குறிப்பாக நாம் தமிழர் கட்சி உறவுகள் அவசியம் படியுங்கள். படித்துவிட்டு கருத்தினை தெரிவியுங்கள். சிறந்த கருத்துக்கள், எண்ணங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் பகிருங்கள். இந்தப் பதிவை பல இடங்களில் பகிருங்கள். நன்றி .

############################################################

அன்பு உறவுகளுக்கு, வணக்கம்.

நம்மைச் சுற்றி சூழ்ந்து வரும் அரசியல் நிலைமைகள் குறித்து மிக கவனமாக உற்றுநோக்க வேண்டிய காலம் இது. திட்டமிட்டு திமுக பாஜகவை வளர்த்து வருகிற வேலைகளில் இறங்கி இருக்கிறது. ஊடக ஆதரவு தொடங்கி , போராட்டம் கூட்ட அனுமதிகள் மற்றும் பத்திரிக்கைகள் வரைக்குமான திமுகவின் பாஜக பாசம் கள்ள உறவாக நீண்டு வருவதை அரசியல் களத்தில் பணியாற்றுபவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

குறிப்பாக வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொண்டு வருகிற தீவிர அரசியல் நடவடிக்கைகளுக்கு திமுக அரசு எங்கேயுமே முட்டுக்கட்டை போடுவதில்லை என்பது கவனத்திற்குரியது. நாம் தமிழர் கட்சி கூட்டங்கள் நடத்தினால் தன் கட்சி ஆட்களை விட்டு மேடைகளில் பிரச்சனை செய்வது, பதாகைகளை கிழிப்பது போன்ற ரவுடி தனங்களில் ஆர்வம் காட்டும் “திராவிட மாடல்”(?) அரசு நடத்தும் திமுக தன் சித்தாந்த எதிரியாக வடிவமைக்கும் பாஜக மீது எவ்வித எதிர்ப்புணர்வும் இல்லாமல் அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வது என்பது மிக மிக திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.

கடந்த தேர்தலில் திமுக அரசியல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் வடிவமைக்க வந்தபோதே இதுபோன்ற அபாயங்களை பலர் சுட்டிக் காட்டியதை இந்த நேரத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். பாஜக ஆளாத வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தில் கிடைப்பது போன்ற ஆளும் அரசின் அனுசரணை கிடைப்பதில்லை என்பது ஆழமான உண்மை.

திமுகவிற்கு மற்ற எல்லாவற்றையும் விட பாஜகவை எதிரியாக உருவாக்கி நிலை நிறுத்துவது வசதியானது மட்டுமல்ல எளிதானதும் கூட. பெரும்பாலான அரசியல் சிந்தனைப் போக்கில் திமுக ஏறக்குறைய மென்மையான இந்துத்துவ சார்பு நிலையை எடுத்துவிட்ட நிலையில், அதன் மற்றொரு நிலையாக உறுதியான இந்துத்துவ சக்தியான பாஜக இருப்பதுதான் அதற்கு வசதியானது. எனவேதான் கருப்பு பலூன் பறக்கவிட்ட திமுக இன்று “வெல்கம் மோடி” பாடல் பாடுகிறது.

உண்மையில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு சொன்னதுபோல பாஜக திமுகவிற்கு ” இனிப்பான எதிரியாக” (Sweet Enimies) ஆக காட்சியளிக்கிறது. எனவேதான் நாம் தமிழர் போன்ற அமைப்புகள் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டால் காலம் தாழ்த்துவது, மறுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள “திராவிடமாடல் திமுக அரசு” பாஜக தமிழ்நாடு எங்கும் நடத்துகிற எல்லா நிகழ்வுகளுக்கும் உடனுக்குடன் அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்குகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இன்று செயல்படாத ஒரு நிலையில் இருப்பதால், அந்த அமைப்புகள் ஏற்படுத்தும் வெற்றிடத்தை திமுக உதவியோடு பாஜக நிரப்பத் துடிக்கிறது. இந்த நிலையில்தான் ஒரே நேரத்தில் திராவிடத்தையும், ஆரியத்தையும் சமமான எதிர் புள்ளிகளில் வைத்து இயங்க வேண்டிய தமிழ்த் தேசியர்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக பணியாற்ற வேண்டிய கடமைக்கும், சுமைக்கும் உள்ளாகி இருக்கிறோம்.

அடுத்து வருகின்ற காலங்களில் குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தீவிர அரசியல் பணியாற்றுதலுக்கு நாம் உட்படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். இன்று தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் பாஜக நடத்தி வருகிற போராட்டங்கள் நிகழ்வுகளை உற்று நோக்கிப் பாருங்கள். மத்திய அரசு வங்கிகளில் கடன் வசதி, குற்ற பின்புலம் உள்ளவர்களுக்கு வழக்கிலிருந்து பாதுகாப்பு, மிகப்பெரிய பொருளாதார ஆதரவு, சாதி சமய அமைப்புகளின் பின்புல வலிமை, போன்ற பல சலுகைகளை காட்டி ஆட்களை ஈர்க்கின்ற காட்சிகளை நம்மால் காண முடிகிறது. மாற்று சக்திகளாக திகழ வேண்டிய அதிமுக இடதுசாரிகள் போன்றவை ஏறக்குறைய செயலற்ற முடக்கத்தில் இருப்பதால் , தமிழ்த் தேசியர்கள் தான் மிகுந்த நம்பிக்கையோடு இந்த காலகட்டத்தை திறமையாக பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகளுக்கு ,

1. அந்தந்தப் பகுதி சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்து போராட்டங்களை மாதத்திற்கு இரு முறையாவது நடத்துங்கள்.

2. கட்சி நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களை நேரடியாக வீட்டிற்கு சென்று சந்தித்துப் பேசுங்கள். கிராமங்களில் இருக்கும் இளைஞர்கள் அண்ணன் சீமான் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அமைப்பில் இணைய தயாராக இருக்கிறார்கள். அவர்களை உறுப்பினர் ஆக்குங்கள்.

3. கட்சி உறுப்பினர்களுக்கு உடனடியாக கட்சி உறுப்பினர் அட்டை வழங்குங்கள். உறுப்பினர் அட்டை பெற்றவரின் வாக்கு ஒரு போதும் மாறாது. அண்ணன் சீமான் அவர்கள் பேசி வருகிற கருத்துக்களை காணொலிகளை சமூக வலைதளங்கள் மூலமாக இன்னும் அதிகமாக பரப்புங்கள். அண்ணன் தான் நமது பலம்.

4. ஒன்றிய நகர கட்டமைப்புகளை பலப்படுத்தி தலைமை மூலம் அறிவிப்புகளை வெளியிட்டு, வித்தியாசமான வடிவமைப்புகள் மூலம் சுவரொட்டிகள் தயாரித்து கட்சிக்கான விளம்பரங்களை செய்யுங்கள்.

5. தனிமனித முரண்களை தள்ளி வையுங்கள். இப்போது மிக மிக முக்கியம் அமைப்பின் வளர்ச்சி. நமது அமைப்பிற்காக அதன் வளர்ச்சிக்காக நாம் எதையும் விட்டுக்கொடுக்கலாம். எல்லோரிடமும் அமர்ந்து பேசுங்கள். மனம் விட்டு பேசினால் முரண் செத்துப்போகும்.

6. சுவரொட்டிகளும் கொடியேற்று நிகழ்ச்சிகளும் நிறைய நடத்துங்கள். கிராமப்பகுதிகளில் அதைத்தான் கட்சியின் வளர்ச்சி என மக்கள் கருதுகிறார்கள். வளர்ச்சி அடையும் ஒரு அமைப்பில் தாங்கள் இடம்பெற வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். எனவே கட்சி சார்ந்த விளம்பர நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். வடிவமைப்புகளில் வித்தியாசம் காட்டுங்கள். சுயப்புகைப்படங்களை பெரும்பாலும் தவிருங்கள். அண்ணன் சீமான் கருத்துக்களை, தலைவர் சிந்தனைகளை தெளிவாக வடிவமைத்து, தொடர்பு எண்களை குறிப்பிட்டு விளம்பரங்களை செய்யுங்கள். பிரதான சாலைகளில் சுவரெழுத்து விளம்பரங்கள் பலரையும் கவருகிறது. அதிலும் நம் கவனத்தை செலுத்த வேண்டும்.

6. அந்தந்த பகுதிகளில் இருக்கும் நிர்வாகிகள் கட்சியின் உறுப்பினர்களை நேரடியாக வீட்டிற்கு சென்று சந்திக்கும் நிகழ்ச்சிகளை நடத்த தொடங்குங்கள். இந்த வாரம் நாங்கள் கூட தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் “உறவுகளோடு ஒரு சந்திப்பு” என்ற நிகழ்ச்சி நடத்துகிறோம்.

7. கட்சி நிர்வாகிகளுக்கு பொறுப்பாளர்களுக்கு கட்சி வகுப்புகளை நடத்துங்கள். மாபெரும் பேச்சாளர்கள், அறிஞர் பெருமக்கள், அரசியல் சிந்தனையாளர்கள் இடம்பெற்றுள்ள அமைப்பு நாம் தமிழர் கட்சி. எனவே விடுமுறை நாளில் ஒரு அரை நாள் நிகழ்ச்சியாக கட்சி வகுப்புகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது நடத்துங்கள். தத்துவ புரிதலும், நடைமுறை அரசியல் தெளிவும் பல உட்கட்சிப் பிரச்சனைகளை தீர்க்கும் வலிமை கொண்டவை.

8. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகளை மேலும் அதிகப்படுத்துங்கள். பொறுப்பாளர்கள் தங்களுக்குள்ளாக சிறந்த நண்பர்களாக இருந்து கொள்ளுங்கள். தனிப்பட்ட அன்பும், நட்பும் ஒரு அமைப்பு ரீதியான செயல்பாட்டில் வெளிப்படும்போது மாபெரும் வெற்றியை தரும்.

மற்றபடி உறுதியாக உழையுங்கள்.

உழைப்பிற்கு நம் அண்ணன் சீமான் அவர்களே உதாரணம்.

அவர் பாதையில் தீவிரமாக உழைப்போம். தமிழ்த் தேசிய அரசியல் வெற்றியாக இந்த மண்ணில் உறுதியாக நாம் தழைப்போம்.

நன்றி.

நாம் தமிழர்.