“சுழலும்

வாழ்வென்ற

இசைத்தட்டில்

அடுத்த வரி

தாண்ட

மறுக்கிறது

என் ஆன்ம முள்.

கீறல் விழுந்த

இசைத்தட்டை

கேட்க முடியாது

என்பதை யார்

அதற்குச் சொல்லுவது..?”

என்கிற எனது பழைய கவிதை ஒன்று

நினைவுக்கு வருகிறது. கடந்த காலம் என்கிற பொக்கிஷ மினுமினுப்பில் உறைந்து நிகழ்கால அந்திச் சிவப்பை தரிசிக்காமலேயே தவறவிடுகிறோம்.

எத்தனையோ உரையாடல்களில் பலரும் சொல்வது இறந்தகால பசுமை நினைவு ஒன்றைதான். எப்போது தவிப்பு ஏற்பட்டாலும் இறந்தகால கிடங்கிற்குள் ஓடி ஒளிந்து கொண்டு அதன் நினைவுச் சூட்டினில் கதகதப்பாய் கிறங்கிக் கிடக்கிறோம்.

பால்யமோ, பதின்வயதோ , கல்லூரியோ, முதல் வேலை பார்த்த இடமோ, நாம் நினைத்தால் ஓடி புகுந்து கொள்ளும் மாய கதவு ஒன்றினை நினைவுகளின் வாயிலாக நாம் பெற்றிருக்கிறோம். காதலோ காமமோ காயமோ எல்லா உணர்ச்சிகளுக்கும் நம்மிடத்தில் நினைவுகள் இருக்கின்றன.

அப்படி நினைவுகளுக்கும், நிகழ்காலத்திற்கும் நடக்கிற ஊசலாட்டத்தில் தன்னையே இழந்து தானே மீட்டு எடுத்துக் கொள்கிற ஒரு வயதான பெண் மற்றும் ஒரு இளைஞனின் கதைதான்

My beautiful wringles.

சரிகா (Dilber) இந்தக்கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அவருக்கு மிக மிக எளிமையாக இருந்திருக்கும். போகிற போக்கில் அசாத்தியமாக உணர்ச்சிகளை முகத்தில் கொண்டு வந்துவிடுகிறார். இளைஞன் கதாபாத்திரத்தில் தனேஷ் ராஸ்வி (Kunal )என்ற நடிகர் நடித்திருக்கிறார்.

Wringles என்றால் வயதான காலத்தில் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை சொல்கிறார்கள். அந்தந்தக் காலகட்டத்தை வாழாமல் தவற விடுவதும், வாழ முயற்சிக்கும் புள்ளிகளில் குற்ற உணர்வு கொள்வதும் , பிறகு நேர்மையாக அனைத்தையும் உணர்ந்து கொண்டு

கடப்பதும் பற்றிய மனித உணர்வுகள் பற்றிய கதை இது.

பல்வேறு வலிகளுக்கும் ,ஏக்கங்களுக்கும் பின்னால் ஒரு சிறு புன்னகை முடிவாக இருக்கிறது என்பதை மிகமிக கவித்துவமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு சூழலில் இருந்து தப்பித்துக்கொள்ள அதன் போக்கிலேயே கடந்து போவது மிக மிக முக்கிய குணாதிசயம். தேங்கி நிற்க நிற்க வலி மட்டுமே மிச்சம். இந்த படத்தில் காட்டப்படும் ஒரு பழைய கார் போல நம் அனைவருக்கும் நம் மனதில் ஒரு பழைய கார் ஒன்று இருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் அதன் கதவைத் திறந்து அதன் இருக்கையில் அமர்ந்து நாம் கலங்கவோ, மகிழவோ தொடங்கி விடுகிறோம்.

நிகழ்காலத்தில் வாழ்வது குறித்து ஆன்மீகம் பேசுகிறது. அந்தந்த நொடிகளை ஆழமாக கவனித்து வாழ்வது என்பதுதான் வாழ்வியல் என்று வாழ்க்கை பாடங்கள் போதிக்கின்றன. ஆனாலும் நாம் யாருமே அவ்வாறு இருப்பதில்லை.

‘நினைவோ ஒரு பறவை..’ என்ற புகழ்பெற்ற பாடல் வரி இருக்கிறது. நினைவு பறவையின் சிறகடிப்பில் நிகழ்கால நீல வானத்தின் வசீகரத்தை நாம் இழந்து விடுகிறோம் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

பிரைம் வீடியோவில் Modern love தொகுப்பில் கிடைக்கிறது.