மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

அவனைப்போல வேறு யாருண்டு…??

சுயம்

🟥

முதன் முதலாக நாம் தமிழர் கட்சியில் மாணவர் பாசறை உருவாக்கப்பட்டபோது அதன் தொடக்க கூட்டத்தில் தான் அந்த இளைஞனை நான் பார்த்தேன். மிக ஒல்லியான உடல்வாகு. யாரிடமும் முன்வந்து எதையும் கேட்காத கூச்ச உடற் மொழி. அவன் பெயரை அழைத்து மேடையில் ஏற்றிய போது தயங்கியவாறே சென்று பின் வரிசையில் நின்று கொண்ட அந்த நொடியில் என்னை போன்ற பலரது இதயத்தில் முன் வரிசையில் வந்து அமர்ந்து கொண்டவன் அவன். தம்பி என்று அழைத்தாலும் மனதால் எங்கள் எல்லோருக்கும் மகனாகிப் போனவன் அவன்.

திருத்துறைப்பூண்டி பகுதி என்கிறார்கள். நம்ம ஊர் பகுதி ஆயிற்றே.. ஆனால் நாம் இந்த தம்பியை எதிலும் பார்த்ததில்லையே என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தபோது சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நேரடியாக அண்ணன் சீமானை சந்தித்து தன்னை முழு நேர அரசியலுக்கு ஒப்படைத்து கொண்டுவிட்டவர் என்றார்கள்.

கூட்டம் முடிந்த பிறகு அவனை அழைத்து பேசியபோது நெருங்கியே அவன் வரவில்லை.கூச்சமும் தயக்கமும் எதிலும் முன்னிற்காத தன்மை போன்றவை எல்லாம் அரசியல் பாத்திரத்திற்காக அவன் பொருத்திக்கொண்ட ஒப்பனைகள் அல்ல. அவன் இயல்பிலேயே அவ்வாறாகத்தான் இருந்தான். எங்களைப் போன்று சுற்றி இருந்தவர்களுக்கு மிகப்பெரிய சவாலே அவன் இயல்பிலேயே கொண்டிருந்த அந்த தயக்கப் பூட்டுகளை எந்த பேரன்பின் சாவி கொண்டு திறப்பது என்பதுதான்..

அண்ணன் சீமான் மூலம் சிறிது சிறிதாக படிக்க கற்றுக் கொண்டவன் மேடையில் ஏறி பேசத் தொடங்கிய பிறகு மேடைகள் தீப்பற்றி எரியத்தொடங்கின. சில மாதங்களுக்கு முன் எங்களுக்கெல்லாம் பின்வரிசை பேச்சாளராக இருந்த அவன் ஒரு சில மாதங்களில் எங்களை எல்லாம் கடந்து முன்னணி பேச்சாளராக நிமிர்ந்து நின்ற போது யாருக்கும் அவனைப் பார்த்து பொறாமையோ போட்டியோ ஏற்படவில்லை. காரணம் அப்பழுக்கற்ற அவனது உழைப்பு. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத நேர்மையான அவனது வாழ்க்கை.

மேடை ஏறி அவன் பேசுகின்ற மொழியில் அதிரடியாய் வந்து விழுகிற நகைச்சுவை தெறிப்புகளில், அனல் பொழியும் ஆக்ரோஷ மொழியில் கூடியிருந்தோர் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் போது அண்ணன் சீமானின் கண்கள் பெருமிதத்தால் மிளிரும். உண்மையில் அண்ணன் சீமான் தயாரித்த இன விடுதலைக்கான கருவி அவன்.

இடும்பாவனம் கார்த்திக்.

காவிரிச்செல்வன் மன்னார்குடி விக்னேஷ் சென்னையில் நடந்த பேரணியில் தீக்குளித்த போது அண்ணன் சீமானுக்கு பிறகு அவன் தேடியது தம்பி கார்த்தியை தான்.
நானும் தம்பி கார்த்தியும் தான் விக்னேஷ் உடலை அடையாளம் காட்ட சென்றவர்கள். அன்று இரவு முழுக்க தனியே உட்கார்ந்து அழுத தீர்த்தவாறே இருந்த அவனது கண்கள் அதன் பிறகு எதற்கும் அப்படி கலங்கியதில்லை.

அண்ணன் சீமான் பார்த்து பார்த்து உருவாக்கிய தம்பிகள் சாட்டை துரைமுருகனும் துருவன் செல்வமணியும் இடும்பாவனம் கார்த்திக்கும் முன்னணி பேச்சாளர்களாக உருவாகி வருவதற்கு அப்போதைய முன் கள பேச்சாளராக திகழ்ந்த புதுக்கோட்டை ஜெயசீலன் போன்றவர்களின் ஊக்கமும் ஒரு மிக முக்கிய காரணம். போட்டியும் பொறாமையும் மிகுந்த இந்த உலகத்தில் தம்பிகள் வளர்வதற்கு உகந்த நேசமிக்க ஆன்மாவை கொண்ட அபூர்வ மனிதர்கள் அவர்கள்.

குறிப்பாக தம்பி கார்த்தி மேடையில் பேசி விட்ட அடுத்த நொடியில் பார்வையாளர் பகுதியில் நின்று கொண்டு புதியதோர் தேசம் செய்வோம் இதழை விற்றுக் கொண்டிருப்பான். மாணவர் பாசறை காலத்திலேயே தீ என்ற இதழை வெளியிட்டு அவன் நடத்திக் கொண்டிருந்தான். பெருந்தலைகள் நிரம்பி இருந்த எங்களது இளைஞர் பாசறை சார்பாக ஒரு இதழ் கொண்டு வர வேண்டும் என விரும்பி கடைசி வரை முடியாமல் போனது என்பதெல்லாம் வேறு கதை.

தனிநபராக இருந்து கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்துவது என்பது மிகச் சாதாரணமான வேலை அல்ல. அவன் நடத்திய தீ இதழாக இருக்கட்டும் இப்போது நடத்திக் கொண்டிருக்கின்ற புதியதோர் தேசம் செய்வோம் என்கின்ற இதழாக இருக்கட்டும் எல்லாமே அவனது தனிமனித உழைப்பு தான். எல்லாம் உழைப்பை சிந்திஒரு செயலை செய்வதற்கு எது மூலக்காரணமாக இருக்க வேண்டுமென கேள்விகள் எழுவது இயல்புதான்.

காரணம் பெரிதாக இல்லை. அது ஒரு மனநிலை. ஊதியம் அங்கீகாரம் மதிப்பு உயர்நிலை என எவ்விதமான கோரிக்கையும் இல்லாத மனநிலை அது. தன்னைத் தானே தன் இனத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட எண்ணற்ற மாவீரர்களின் தியாகத்தில் இருந்து, முத்துக்குமார் விக்னேஷ் ஆகியோர் தங்களை எரித்துக் கொண்ட தீயின் நாவிலிருந்து எடுத்துக்கொண்ட உச்சபட்ச வெப்ப மனநிலை.கனன்று கொண்டிருக்கும் அந்த நெருப்பில் இருந்து தான் தனக்கான அர்ப்பணிப்பு வாழ்வு ஒன்றை அவன் சமைத்துக் கொண்டிருக்கிறான்.

என் மனம் திறந்து அவனை என்னால் மிக அதிகமாக நேசிக்க மட்டும் அல்ல, என்னை விட பன்மடங்கு அனைத்திலும் உயர்ந்தவன் என வெளிப்படையாக ஒத்துக் கொள்ள முடியும். ஐபிஎல் வழக்கிற்காக அவன் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஆறு மாதங்களுக்கு மேலாக சிறை கொட்டடியில் அடைக்கப்பட்டபோது அவனுக்காக யாராவது உறவினர் வந்து வாதாட வேண்டும் என நிலை ஏற்பட்ட போது எனது தங்கை மீரா பாக்கியராசன், எனது அம்மா கலையரசி பலரும் முன் வந்து நாங்கள் எம் பிள்ளைக்காக வாதாடுகிறோம் எனக் கூறியபோது அப்பழுக்கற்ற அந்த எளியவன் நாம் தமிழர் என்கின்ற குடும்பத்தில் அடைந்திருக்கின்ற உயரத்தை யாராலும் வியக்காமல் இருக்க முடியாது.

எத்தனையோ நள்ளிரவுகளில் சுகாதாரம் அற்ற பேருந்து நிலையங்களில் இருக்கும் பெஞ்சுகளில் கொசுக்கடியில் படுத்து கிடந்து இரவு பகலாக அரசு பேருந்துகளில் அலைந்து பேச வரைபடத்தில் இல்லாத கிராமங்களில் கூட சிறு மேடையில் ஏறி பேசி நாம் தமிழர் என்கின்ற விதையை நாடெங்கும் விதைத்து வருகிற அவனைப் போன்றவர்கள் தான் இந்தக் கட்சியின் மூலதனம்.

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து பேசியதற்காக நேற்றைய தினம் கூட ஒரு வழக்கினை பெற்று அரசியல் சமூக வாழ்வில் தனக்கான பதக்கங்களை அவன் அடைந்து கொண்டே அலைந்து கொண்டிருக்கிறான். இத்தனை அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில் தனக்கான எந்த அங்கீகாரத்தையும் தேடாமல், தான்மை என்பதே துளி கூட இல்லாமல் தன் அடையாளத்தை இந்த இனத்தின் மீட்சிக்காக இழக்கத் துணியும் என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் போன்றவர்கள் தான் எம் இனத்தின் பெருமை.

சிறுவயதில் என் மகனிடம் சித்தப்பா கார்த்தி போல அப்பழுக்கு இல்லாத கொண்ட கொள்கைக்கு எதையும் இழக்க துணிந்து நேர்மையாக நீ வாழ வேண்டும் என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு.

இன்றும் அதைத்தான் நினைக்கிறேன்.

என்றும் அதைத்தான் நினைப்பேன்.

 12 total views,  1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன