காலங்கள் கணக்கில்லாமல் கடந்தாலும்,வருடங்கள் வரிசையாக நகர்ந்தாலும் கண் முன்னால் நடந்த நம் இனத்தின் அழிவு,உலராத குருதியாய் உள்ளுக்குள் வடிகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடி பாரினை ஆண்ட பைந்தமிழ் இனம்,கேட்பாரும் மீட்பாரும் இல்லாமல்,உலகத்தார் அனைவராலும் கைவிடப்பட்டு அழிந்த கதை உள்ளத்தில் உறைகிறது.

கண்ணுக்கு எட்டிய தொலைவில் சொந்த இனம் அழியும்போது,கைகட்டி வேடிக்கை பார்த்த கையாலாகாத தனம் குற்ற உணர்வாய் இதயத்தில் குமைகிறது.

உடன் பிறந்தவள் உடை விலகினால் கூட மற்றவர் அறியாமல் மறைவாய் சரி செய்த ஒரு இனத்தின் கூட்டம் எதிரி அம்மணமாக்கி சொந்த சகோதரியின் பிறப்புறுப்பை
படம் பிடித்து உலகத்திற்கு ஒளிபரப்பிய கோரம் தாங்காமல் விழிக்குள் சிவப்பை தேக்குகிறது.

நம் உடன் பிறந்த அண்ணன் நம் இனத்தின் மன்னன் பெற்றெடுத்த பாலகன் தன் நெஞ்சில் தோட்டா வாங்கி வீழ்ந்து கிடக்கும் போது இனி இந்த இனம் வாழ்ந்து என்ன பயன் என வினாக்கள் விளைந்து ஆன்மா அழுகிறது.

நம் நாடு என்று நினைத்த இந்திய தேசியம் என் உடன் பிறந்தாரை அழிக்க நின்றதும், இவர்கள்தான் நம்மை காப்பார்கள் என்று நினைத்த திராவிடம் நம் கழுத்தை அறுத்ததும், இப்போது நினைத்தாலும் சினத்தால் சீற்றம் பெருகுகிறது.

நாம் வாழும் காலம் முழுதும் இரவோ பகலோ இந்த வலியோடு தான் வாழ போகிறோம் என்கின்ற நினைவு நித்தம் நெஞ்சுக்குள் சத்தமாய் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

விடுதலைக்காக விண்ணை ஏகிய
மாவீரர்கள் சுவாசித்த மூச்சுக்காற்று
இன்னமும் இந்த உலகில் உலவி
நடந்தவைக்கெல்லாம்
கணக்குத் தீர்க்க
களம் அமைக்க கதைக்கிறது.

தேச கனவிற்காக இன்னுயிரை
ஈந்தவர்களுக்கும்..
இனவாத அழிப்பில் சிக்குண்டு
இன்னுயிரை இழந்தவர்களுக்கும்..
கண்ணீர் வணக்கம்.

⚫️

மணி செந்தில்.
மே 18-2023
தூத்துக்குடி