கால்பந்து ஆட்டங்கள் பார்க்கத் தொடங்கிய காலம் தொட்டு என்னுடைய அணி அர்ஜென்டினா. முதலில் மாரடோனா. தற்காலங்களில் என்னுடைய கதாநாயகன் மெஸ்ஸி. ஆனாலும் போர்ச்சுகல் நாட்டின் ரொனால்டோ ஆகச்சிறந்த கால்பந்து வீரனாக உருவாகி வந்த காலகட்டங்களில் ஒரு மெஸ்ஸியின் ரசிகனாக ரொனால்டோவை வெறுக்க முடியாதது ஒன்றுதான் ரொனால்டோவின் ஆகப்பெரும் வசீகரம். ஏனெனில் அந்தத் திறமை வெறுக்க முடியாத, பொறாமை கொள்ள முடியாத உயரம் கொண்டது.

ஒரு பேட்டியில் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த வீரர்களை பற்றி கூறும் போது ரொனால்டோவின் பெயரை கூறாதது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்புவார்கள். அப்போது மெஸ்ஸி சிரித்துக்கொண்டே “நான்தான் அவர். என்னில் இருந்து அவரைப் பிரிக்க முடியாது.. எனவே தான் அவரை நான் தனியே சொல்லவில்லை..” என்று சொல்வார்.

அதுதான் ரொனால்டோ. சிஆர் 7 என்று அவர் டீசர்ட் அணிந்து மைதானத்தில் இறங்கும்போது ஒவ்வொரு முறையும் ஆகச் சிறந்த ஆட்டக்காரரான அவர் தன்னைத்தானே மிஞ்சி காட்டுவதில ஒரு மந்திரக்காரன்.

தன்னை நோக்கி வரும் பந்தை உயரமாக எழும்பி கோலாக மாற்ற அவர் எழும்பும் உயரம் உலகில் இதுவரை யாராலும் முறியடிக்கப்படாதது மட்டுமல்ல, ஒரு கவிதை போல அவ்வளவு வசீகரமானது.

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடியும்போது உலகின் ஆகச்சிறந்த வீரர்களான நெய்மர் , மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்று இனி விளையாட மாட்டார்கள் என செய்திகள் வெளியான போதே கால்பந்து ரசிகர்கள் பலருக்கும் நாடு இனம் கடந்து மனம் வலிக்க தொடங்கியிருந்தது.

இன்றும் அப்படித்தான்.

உலகக் கோப்பையின் கால் இறுதி போட்டியான இன்று போர்ச்சுக்கல் ஆப்பிரிக்க நாடான மொராக்காவை எதிர்கொண்டார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஏனோ முதன்மை வீரரான ரொனால்டோவை போர்ச்சுக்கலின் கோச் இறக்காமல் பெஞ்சில் அமர வைத்து இருந்தது பார்வையாளர்களின் கடுமையான விமர்சனமாக இருந்தது.

இந்த உலகப் பந்தய போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த அணிகளை வென்று வருகிற மொரோக்கா ஆட்டத்தின் முதல் பாதியிலேயே கோல் அடிக்க இதுவரை போர்ச்சுக்களால் அதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை.

இறுதியில் முதல்முறையாக ஒரு ஆப்பிரிக்க நாடு உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும், கால்பந்து போட்டிகளின் கதாநாயகன் 37 வயது நிரம்பிய ரொனால்டோ தன் கடைசி போட்டியில் அழுது கொண்டே களத்தை விட்டு வெளியேறும் போது ,

மெஸ்ஸியின் பரம ரசிகனான என் இளைய மகன் பகலவன் கலங்கி அழுது கொண்டிருந்தான்.

அதுதான் ஒரு சிறந்த விளையாட்டு வீரன் தன் வாழும் காலத்தில் பெறுகிற உயர்வான வெகுமதி.

போய் வாருங்கள் சிஆர் 7.

உங்கள் கால்கள் உலவாத கால்பந்து மைதானங்கள் மெஸ்ஸியின் ரசிகர்களால் கூட விரும்பப்படாதவை தான்.

ஏனெனில் நீங்கள் விளையாடும் காலத்தில்…ஒரு காலத்தை உருவாக்கினீர்கள்.

எப்போதும் மெஸ்ஸியின் ரசிகனாக இருந்து சொல்வேன்..உங்கள் காலத்தில் தன்னிகரற்ற வீரர் நீங்கள் தான்.

❤️❤️❤️