தனக்குள் ஆழ்ந்திருந்த தியானத்திலிருந்து கால நழுவலின் ஒரு நொடியில் கண் விழித்த புத்தர் மௌனத்தின் உரமேறி இருந்த ஞானத்திலிருந்து சிந்தப்போகும் சொற்களுக்காக எதிரே தன் முன்னே காத்திருந்த சீடர்களைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தார்.
ஒரு இலை உதிர்தல் கூட அங்கே சூழ்ந்து இருக்கும் அமைதியின் ஒழுங்கை சிதைத்து விடுமோ என்ற சிந்தனையில் சீடர்கள் மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
எங்கும் அமைதி . எங்கும் அமைதி.
முன்வரிசையில் அமர்ந்திருந்த நந்தன் எழுந்து நின்றான்.
புத்தரின் கனிவுமிக்க பார்வை தன் உச்சி முதல் பாதம் வரைக்கும் உடலில் ஒரு திரவம் போல படர்வதை உணர்ந்த அவன் ஞான உணர்வில் சிலிர்பேறினான்.
“நந்தா” என்று புத்தர் மென்மையாக அழைத்த போது கனிவேறிய அவரது சொல்லால் தனது பெயர் ஒலிக்கப்படுவதை எண்ணி மனம் உருகினான்.
என்ன வேண்டும் என புத்தர் சிரித்துக் கொண்டே கேட்டபோது… நீங்கள்தான், நீங்கள் சுமந்திருக்கும் அமைதி தான்.. என்று அவனால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.
உள்ளுக்குள் ஏதோ ஒன்றை சுமந்து கொண்டு அவன் துடிப்பதை பார்த்த புத்தர்…
“கேட்க வந்ததை கேட்டு விடு . இல்லையேல் கேட்க வந்தது தேங்கி ஒரு நாள் அதில் நீயே முழ்கி விடுவாய்..” என்றார்.
ஐயனே.. எனக்குள் அலைமோதும் எண்ண அலைகள் பலவற்றை ஒன்று சேர்த்து ஒரே ஒரு கேள்வியாக தயாரித்து வைத்திருக்கிறேன்.
நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்.
உலகத்தின் மகத்தான வலி எது..??
நந்தா கேள்வியை கேட்டுவிட்டு புத்தரின் முகத்தை பார்த்தான்.
புத்தர் மீண்டும் மென்மையாக சிரித்தார். தன் முன்னே குழுமி இருந்த சீடர்களை பார்த்து .. “இதற்கு என்ன பதில் உங்களுக்கெல்லாம் தோன்றுகிறது சொல்லுங்கள்..” என்றார்.
தலைமைச் சீடர்களில் ஒருவரான அசிதர் எழுந்து.. “மரணத்தின் போது ஏற்படுகிற வலி” என்றார்.
இன்னொரு சீடர் எழுந்து “சகிக்க முடியாத தனிமை” என்றார்.
பூரணர் எழுந்து நின்று “பிரிவு” என்றார்.
இப்படி ஆளாளுக்கு மழைத்துளிகள் போல பதில்களால் அங்கே அவரவர் ஆன்ம அறிவினை நிரூபித்துக் கொண்டிருந்தனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு அனைவரும் பதில் அளித்த சூழலில் மீண்டும் மௌனம் அங்கே சூழ்ந்து கொண்டது.
புத்தர் மீண்டும் தியானத்திற்குள் போனார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு கண்விழித்தவர் அமைதியாக சொன்னார்.
“மிகவும் நேசித்தவரின் துரோகம்.”
ஆழ்கடலின் அமைதி சீடர்களை சூழ்ந்தது.
????
மறுமொழி இடவும்