“அமைதியான வரலாறு என்ற ஒன்றே உலகில் கிடையாது” என்கிறார் மாமேதை வால்டர். வரலாற்றின் பக்கங்கள் எங்கோ தோன்றிய தனி நபர் விளைவித்த சிந்தனைகளால், கலகங்களால் சதா அதிர்ந்துக் கொண்டே இருக்கின்றன. யாரும் எதிர்பார்க்காத ஒருவரிடம், போகிற போக்கில் நிகழ்ந்துவிடுகிற கால ஓட்டத்தில் இருந்துதான் வரலாற்று அதிர்விற்கான சூட்சமப் புள்ளிகள் தோன்றி விடுகின்றன.

இவர் எங்கிருந்து வந்தார் என யோசிக்கும் முன்னே வரலாற்றுநாயகர்கள் சமகாலத்து சிந்தனைகளை மாற்றிக் கட்டமைத்து புது பாய்ச்சலை நிகழ்த்தி விடுகிறார்கள் ‌.

எப்படி சாத்தியம் என்று நாமெல்லாம் யோசிக்கும்போது நம்மில் ஒருவராக பிறந்து சீமான் என்கின்ற தனி மனிதன் சாத்தியப்படுத்தி சாதித்துக் காட்டியதைத்தான் நாம் 12 வருடங்களுக்கு மேலாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் தமிழர் கட்சி உருவான புள்ளியான மதுரையில் நடந்த “அறுத்தெறிவோம் வாரீர் ..” என்கிற பேரணி நடந்த போது கூட தமிழகத்தில் தமிழ் தமிழருக்கு எதிராக ஏதேனும் தோன்றினால் கலகம் செய்ய ஒரு சிறு அமைப்பாக செயல்படும் எண்ணம் தான் அண்ணன் சீமானிடம் இருந்தது. ஆனால் காலம் வேறு மாதிரி சிந்தித்து வைத்திருந்தது என்பதை அவர் கூட அப்போது உணரவில்லை.

படிப்படியான நகர்வு என்பது போன்ற ஒரு தொடர் ஓட்டத்தில் ஒரு பேரணிக்கு அனுமதி வாங்க உண்டாக்கப்பட்ட அமைப்பு இயக்கமானது. இயக்கம் கட்சியானது. அந்தக் கட்சி தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த் தேசியத்தை அரங்கங்களில் இருந்து விடுதலையாக்கி வெகுஜன அரசியல் பரப்பிற்கு கொண்டு வந்தது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக அசலான எதிர்க்கட்சியாக இன்று களத்தில் நிற்கிறது.

ஓய்வறியா தன் உழைப்பால், கொட்டி முழங்கும் தன் தமிழால், சமூகத்தின் கூட்டு மனசாட்சி அல்லது மக்களின் பொதுவான கருத்தியல் போன்றவற்றின் திசையை மாற்றி, தமிழ்த் தேசிய இனத்தின் சிந்தனை ஓட்டத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியவர் அண்ணன் சீமான்.

2009 க்கு பிறகான காலகட்டத்தை திராவிடத்தின் பெருமிதங்களை, தேசியத்தின் தோற்ற மயக்கங்களை தன் அனல் தமிழால் தகர்த்தெறிந்த காலமாக அவர் மாற்றினார்.

ஒரே நேரத்தில் தமிழர்கள் இந்துக்கள் அல்லர், தமிழர்கள் திராவிடர்கள் அல்லர் என்று அரசியல் கணக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு துணிந்து அண்ணன் சீமான் முழங்கியது அசலான கருத்தியல் புரட்சி.

இது எதுவுமே அவர் திட்டமிடவில்லை. அதுவாகவே ஒவ்வொரு படியாக நிகழ்ந்ததையும், நகர்ந்ததையும் நாங்கள் அனைவரும் விழிகள் வியக்கக் கண்டோம்.

ஒரு மாயவிசை ஒன்று அவரை இயக்கிக் கொண்டே இருந்ததை நாங்கள் உணர்ந்த போது அவர் தன் லட்சிய பயணத்தில் வெகு தூரம் கடந்து வந்து விட்டார். அந்த மாயவிசையை அவரும் தனக்குள் உணர்ந்திருக்கிறார்.

எல்லாவற்றையும் விட ஒரு இனப்படுகொலைக்கு பின்பான இந்த காலகட்டத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.‌.எல்லோரும் அதைக் கடந்து விடுவோம் என அவருடன் பயணித்த பலர் சமரசமாகி சரண் அடைந்த பிறகும் கூட, இன்றளவும் துளியும் சமரசம் இன்றி அதே உக்கிரத்தோடு போராடிவரும் அண்ணன் சீமான் எங்கள் அண்ணன் என்பதில் எங்களுக்கு பெருமிதம் உண்டு.

இன்று தமிழகம் கண்டு இருக்கும் பல்வேறு மாற்றங்களுக்கு குறிப்பாக தமிழ்- தமிழர் உணர்வேற்றத்திற்கு அண்ணன் சீமானே முதன்மைக் காரணம்.

அவரோடு நிற்பதும் , அவரோடும் பயணிப்பதும், எம் இனத்திற்காக எம் மொழிக்காக நாங்கள் செய்யும் பிறவிக் கடன்.

அண்ணன் சீமான் நீடூழி நலத்தோடு வாழட்டும்.

தமிழர் நிலம் தலை நிமிரட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.