என் கல்லூரி காலத்தில் நான் கண்ட ஒரு புத்தகத்தின் பெயர் “குணா-பாசிசத்தின் தமிழ் வடிவம்.” அந்த புத்தகத்தை எழுதியவர்கள் அப்போது ஆய்வுத் துறையில் புகழ்ப்பெற்று இருந்த பேராசிரியர்கள் அ. மார்க்ஸ் மற்றும் கோ.கேசவன். இருவரும் என் தந்தையின் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் மூலமாக என் தந்தை அந்த புத்தகத்தை வாங்கி வந்தார். ‘பாசிசம்’ என்பது அழிவு அரசியலின் மிகப்பெரிய கலைச்சொல். அதை போகிற போக்கில் ஒரு தனிநபர் அல்லது ஒரு சிறு நூல் மீது யாரும் சொல்லி விட முடியாது என்று நினைக்கும் போது அதைப் பற்றி தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வமாக இருந்தது. அந்தப் புத்தகம் எதைப் பற்றியது என வாசிக்க தொடங்கும் போது அறிஞர் குணா எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற சிறு நூலுக்கான எதிர்வினையாக அது எழுதப்பட்டிருந்தது என தெரிந்தது. அப்போது அந்த நூல் எனக்கு எங்கும் கிடைக்கவில்லை.

கடந்த 2007 ஆம் ஆண்டு குடந்தை தமிழ் கழகத்தின் தலைவர் அண்ணன் பேகன் அவர்கள்‌ அந்தப் புத்தகத்தை கொடுத்து என்னிடம் வாசிக்க சொன்னார். அந்தப் புத்தகம் என்னிடம் வழங்கப்பட்ட நாளில் நான் கடுமையான ‘திராவிட மயக்கத்தில்’ சிக்குண்டு கடும் பித்தில் இருந்தேன்.தமிழீழத்தில் போர்ச்சூழல் தீவிரமாகும் காலகட்டத்தில் என்னைப் போன்று திராவிடத்தை இறுகப்பற்றிக் கொண்டிருந்த பலரும் களைப்படைந்தார்கள். வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்த திராவிட அரசியல்வாதிகளின் போக்கு என்னை போன்ற பலருக்கும் மிகப்பெரிய வலியை கொடுத்த நாட்களில் ஒரு நாள் அந்த புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன்.

உண்மையில் தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் பதட்டமாக தான் இருந்தது. அதுவரை உயிரென நம்பிய ஒரு தத்துவத்தை, தலைகீழாக மறுபரிசீலனை செய்து ‘பாம்பு தன் தோலை தானே உரிப்பது போல’ தன்னை புதிதாக்கிக் கொள்கிற ஒரு வேலையை ஒரு நூல் வாசிப்பு நிகழ்த்தப் போகிறது என உணர்ந்த தருணம் அது.

சிறிய நூல். மொத்தம் 76 பக்கங்களே உடைய , ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும் போது இத்தனை காலமும் நம் இதயத்தில் ஏற்றி வைத்திருந்த எல்லா சிந்தனைகளையும் உதறி போட சொல்லுகின்ற, அணுகுண்டு போல அடர்த்தியான நூல் அது.

தமிழரின் அறிவு பரப்பில் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற நூலை போல அதிர்வுகள் ஏற்படுத்திய படைப்புகள் மிக மிகக் குறைவு. ஏறக்குறைய மூன்று தலைமுறைகளாக அழுத்தத் திருத்தமாக சொல்லப்பட்டு, சொல்லப்பட்டு நம் உதிரம் வரை உருவேற்றி, நம் மூளையின் ஒவ்வொரு செல்லிலும் பதிவேற்றம் செய்யப்பட்ட சொல்லான ‘திராவிடத்தை’ வெறும் 76 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் பசி கொண்ட ஓநாய் போல வேட்டையாடுவதை உணரும் போது அது வசீகரமான,மனதிற்கு நெருக்கமான அனுபவமாக மாறிப்போனது.

பாவாணரின் தனித்தமிழில் எழுதப்பட்ட அந்த நூல் எழுப்பும் கேள்விகளை போகிற போக்கில் யாராலும் கடந்து விட முடியாது. ஒரு நூற்றாண்டு காலமாக சிம்மாசனமிட்டு, தனக்கு இணையாக தோன்றிய எல்லா சிந்தனை போக்குகளையும் தின்று, செரித்து, அரசியல் ஆட்சி அதிகாரம் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, செழித்து இருக்கிற திராவிடத்தின் உச்சிக்குடுமியை பிடித்து கேள்வி கேட்ட முதல் நூல் அறிஞர் குணா எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்.”

1994 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூல் பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. 1994 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அமைப்பு நடத்த இருந்த ஒரு கருத்தரங்கிற்காக அறிஞர் குணா அவர்களால் தயாரிக்கப்பட்டு பின்பு விரிவாக்கப்பட்ட உரையின் எழுத்து வடிவம் தான் “திராவிடத்தால் வீழ்ந்தோம்”.

அந்த நூல் இப்படி தொடங்குகிறது..

“காலம் தாழ்த்தி நாம் கண்விழிக்கின்றோம். மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த தமிழ் மக்கள் விழியிழந்து வழி இழந்து நாடோடி இனமாக கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம். பெயருக்கு ஒரு தமிழ்நாடு. ஆனால் அங்கு தமிழரிடம் ஆட்சியும், அரசும், கொற்றமும் கொடியும், நிலமும் கடலும் வானும் இல்லை. தமிழனின் மானத்தை மறைக்க உதவிய நான்கு முழத்துண்டும், பறி போனக் கதையாய் தாய்த் தமிழகமே இன்று வேலியில்லாத நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.”

நூலின் முதல் பாராவிலேயே ‘இத்தனை ஆண்டு காலம் உறக்கத்திலே கிடந்த நம் செவுளில் ஓங்கி யாரோ அறைந்தது போல’ ஓர் உணர்வு. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்த பாராக்களில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் இந்த நூல் தமிழ் /தமிழர் என்று பேசினால் இனவெறி என பேசுகின்ற கூட்டத்தினரை காறி உமிழ்கிறது. ஆரியக் கொள்கையும் அதற்கு எதிராக தோன்றியதாக காட்டிக் கொள்கிற திராவிடக் கொள்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லுவதோடு மட்டுமில்லாமல் இவைதான் இனவெறிக் கொள்கைகள் என கூறி அதிர வைக்கிறது.

ஆரியப் படையெடுப்பு தமிழர் மேல் நிகழ்ந்ததில்லை எனக் கூறும் இந்த நூல், அதைத் தாண்டிலும் பக்கத்தில் இருக்கின்ற கன்னடர்கள் தெலுங்கர்கள் மராத்தியர்கள் போன்ற பிற மொழியாளர்கள் தமிழர் நிலத்தில் நிகழ்த்திய படையெடுப்புகள், அதிகம் என்கிறது. ஆரியப் பூச்சாண்டியை காட்டியே தன்னை தமிழர் மண்ணில் கன்னடர்களும், தெலுங்கர்களும் வலுப்படுத்திக் கொண்டார்கள் என்பதற்கான பல்வேறு வரலாற்றியல் சான்றுகளையும் முன்வைக்கிறது.

தமிழ்நாட்டில் அதிகரித்த மார்வாடி- பனியாக்களின் வருகைக்கும் திராவிடத் தத்துவத்தின் மேலெழுச்சிக்கும் உள்ள உறவினை, 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பெரியார் நடத்திய வடவர் கடை முன் நடத்திய போராட்டத்தினை முன்வைத்து ஆய்வு செய்கிறது. ஐயா பெரியார், அண்ணா போன்றவர்களது தத்துவ தடுமாற்றங்களையும், சிந்தனைத் தெளிவின்மை குறித்தும் உரத்து பேசுகின்ற இந்த நூல், பெரியாருக்கு பொருளியல் பார்வை இல்லை என கூறுகிறது. 1957 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக முதல் முதலாக வென்று 15 சட்டமன்ற உறுப்பினர்களை வென்ற பிறகு ஏற்பட்ட தத்துவ சறுக்கல்களை, கொள்கை முரண்களை , அரசியல் சமரசங்களை விவரிக்கும் அறிஞர் குணா அவர்கள், 1948 ஆம் ஆண்டு பெரியார் தமிழர்- திராவிடர் என்ற சொற்களுக்கான வரையறையை கீழ்கண்ட வாறு வகுத்ததாக கூறுகிறார்.

“தமிழ் என்பது மொழிபெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமிழர் என்ற தலைப்பில் கூறி விட முடியும். ஆனால் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் திராவிடராக ஆகிவிட முடியாது”

இதன்படி திராவிடத்தை தனித்த மெய் இனமாக(Race) பெரியார் வரையறுத்ததின் போதாமையை,

போலிமையை தீர்க்கமாக விமர்சிக்கும் ஆசிரியர் குணா இன வரையறைக்கான உலகளாவிய அளவு கோல்களையும் ஒன்றாக ஆய்வு செய்து “திராவிடம் என்பது ஒரு இனம் அல்ல” என்று நிறுவுகிறார்.

குறிப்பாக பெரியாரின் மொழிக் கொள்கை பற்றி தீவிரமாக ஆய்வு செய்து, அவருக்கு இருந்த தமிழ் மொழி வெறுப்பு பற்றி இதுவரை வேறு எந்த நூலும் பேசாத பரப்பில் இந்த நூல் ஆய்வு செய்கிறது. “நமது மொழி தமிழ் . எனது மொழி கன்னடம்” என்று சொன்ன பெரியார் மொழி வழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது கொண்டிருந்த தடுமாற்ற கொள்கைகளால் தமிழ்நாடு அடைந்த இழப்புகளை நூலாசிரியர் குணா பக்கத்திற்கு பக்கம் உரத்தக் குரலில் எடுத்துரைக்கிறார்.

பெரியார் மீது குணா வைக்கின்ற விமர்சனங்கள் அனைத்தும் போகிற போக்கில் காற்றில் மிதக்கின்ற சொற்களை ஒன்றாக கோர்த்து பொத்தாம் பொதுவில் வைக்கப்படும் கருத்துக்கள் அல்ல. மாறாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் பெரியாரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களில் இருந்து தனக்கான தர்க்கத்தை எடுத்தாண்டு ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல தன் வாதத்தை முன்வைக்கின்ற நூலாசிரியர் குணா, வரலாற்று ரீதியாக தமிழர் வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் சுரண்டல்களையும், பிழைகளையும் சுட்டிக் காட்டுகிறார். இட ஒதுக்கீடு என்ற பெயரில் தமிழர் நிலத்தில் தமிழர் அல்லாதவர் மட்டுமே சலுகை பெறுகிறார்கள் என்பதை சட்டநாதன் குழு சுட்டிக்காட்டிய பிறகும் கூட அதன் பரிந்துரைகளை தொடர்ச்சியாக ஆண்டு கொண்டிருக்கின்ற திராவிட அரசுகள் உள்நோக்கத்தோடு நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் தமிழர்கள் இழுந்திருக்கின்ற பொருளாதார இழப்புகளை சுட்டிக்காட்டும் அறிஞர் குணா தமிழ் தேசத்தின் மீது நிகழ்த்தப்படும் எல்லா சுரண்டலுக்கும் திராவிடத்தின் பிழைப்பு வாதம் தான் மிக முக்கியமான காரணம் என நிறுவுகிறார். தமிழக கனிம வளங்கள் மட்டுமல்ல தமிழக நிலங்கள் எப்படி தமிழரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக களவாடப்படுகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தும் இந்த நூல், மண்ணின் பூர்வக்குடி மக்களான தமிழர்கள் தாய் தமிழகத்தில் தங்கள் சொந்த நிலத்திலேயே எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்பதற்கான அனைத்து செய்திகளையும் உள்ளடக்கி அடர்த்தி மிக்கதாக இருக்கிறது. எழுதப்பட்ட ஒவ்வொரு சொல்லையும் வாசிப்பவர் சிந்தித்து தன் பட்டறிவோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற அனுபவத்தை இந்த நூல் ஏற்படுத்துகிறது.

கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா போன்ற திராவிட கட்சிகளின் தலைவர்கள் தமிழர் நிலத்தை ஆண்டதால் தமிழுக்கும், தமிழர் வாழ்விற்கும் ஏற்பட்டுள்ள கேடுகளை ‘நெற்றி பொட்டில் அடித்தாற் போல’ சொல்வதோடு மட்டுமில்லாமல் தொடக்க காலத்தில் திராவிடம்/ திராவிட நாடு/ திராவிடர் என்றெல்லாம் பாடிய பாவேந்தர் பாரதிதாசன் பாவாணரின் முதன் மொழிக் கொள்கைக்கு தந்த ஒப்புமையை சுட்டிக்காட்டி பாவேந்தர் கவிதைகள் மூலமாகவே தமிழ்த்தேசிய தத்துவத்தின் உறுதியை குணா கட்டமைக்கிறார்.

அறிஞர் குணா ஆயிரக்கணக்கான பக்கங்களில் தமிழரின் வரலாறு, மெய்யியல், அரசியல், அறிவியல், தேசிய இனச் சிக்கல், போன்ற பல தலைப்புகள் சார்ந்து பல நூல்களை எழுதி இருக்கிறார். அவரது வள்ளுவத்தின் வீழ்ச்சி தமிழில் எழுதப்பட்ட மகத்தான படைப்புகளில் ஒன்று. வள்ளுவப் பார்ப்பாரியம், தமிழின மீட்சி, தமிழரின் தொன்மை, மண்ணுரிமை, தமிழியத்தால் எழுவோம், முன் தோன்றிய மூத்த குடி, ஒரே நேரத்தில் இந்தியத் தேசியத்தையும் திராவிடத் தேசியத்தையும் முற்றும் முதலுமாக மறுக்கின்ற அவரது “இந்தியத் தேசியமும்,திராவிடத் தேசியமும்” போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அவரது அனைத்து நூல்கள் அனைத்தும் படித்து தமிழர் உணர்ந்து தெளிய வேண்டிய முக்கியமான ஆக்கங்கள்.

தமிழரின் ஓர்மையை தடுக்கின்ற, தமிழகத்தில் நிலவுகின்ற கொடுமையான சாதிய உணர்வுகளுக்கு வலு சேர்க்கின்ற வகையில் சாதிகள் குறித்தான அவரது பார்வை, சாதிகளை முன்வைத்து இனத்தை வரையறை செய்கின்ற அவரது முடிவு போன்ற கருத்துக்களில் நமக்கு அழுத்தமான மறுப்பு இருக்கிறது என்றாலும் தமிழர் வரலாற்றுயியல் ஆய்வாளர்களில் அறிஞர் குணாவின் இடம் மிக மிக முக்கியமானது. அவர் எழுதிய இந்த சிறு நூலின் தர்க்கங்கள் தாங்க முடியாமல் திராவிட ஆதரவாளர்கள் பக்கம் பக்கமாய் இன்றைய தேதி வரை எழுதிக் குவித்துக் கொண்டிருப்பதே இந்த நூலுக்கான வெற்றியாக நாம் உணரலாம்.

கன்னடருக்கென்று ஒரு கன்னடநாடு இருப்பது போல, தெலுங்கர்களுக்கு ஒரு தெலுங்கர் நாடு இருப்பது போல, தமிழருக்கு ஏன் தமிழ்நாடு இல்லை என சிந்திக்கத் துண்டும் இந்த சிறு நூல் திராவிட மயக்கங்களில் இருந்து நாம் வெளிவருவதற்கு பயன்படுகின்ற பேராயுதம்.

திராவிடத்தால் வீழ்ந்தோம்- அறிஞர் குணா. முதல் பதிப்பு 1994 ‌.

வெளியீடு:தமிழக ஆய்வரண், பெங்களூர். விலை 42/-