இந்த நொடியில் நினைத்துப் பார்த்தால் அப்படி ஒரு காலம் இருந்தது என யாராலும் சிந்திக்க முடியாது. ஏனெனில் அப்போது இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டிருந்தார். நாடெங்கிலும் பதற்றம். தமிழ் உணர்வு தடை செய்யப்பட்ட உணர்வாக மாறி அது தேசத் துரோகமாக கருதப்பட்ட காலம். தமிழர்கள் இந்திராவின் மகனை கொலை செய்து விட்டார்கள் என எல்லோரும் பழி சுமத்தி, ஒரு தேசிய இனத்தேயே தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கி தாழ்த்திய நேரம்.

அப்போதுதான் மதுரைக்குப் பக்கத்தில் திருபுவனம் வட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து சட்டம் பயின்று உயர்நீதிமன்றத்தை தனது தேர்ந்த ஆங்கிலப் புலமையினால் அதிர வைத்துக் கொண்டிருந்த ஒரு தமிழன் தலை நிமிர்ந்தான்.

உயரமான தோற்றம். தோற்றத்திற்கு ஏற்றாற் போல் இன உணர்வின் கொற்றம்.

சந்திரசேகர் என்கின்ற அவரது பெயருக்கு பின்னால் தடா சட்டத்தில் இருந்து தமிழர்களை காப்பாற்றிய சட்ட மேதமை இணைந்ததால் அவர் தடா சந்திரசேகர் ஆனார். துணிச்சல் அவரது உடன் பிறந்த பெருங்குணம். இன உணர்வு அவரது உதிரத்தில் ஊறிக் கொண்டே இருக்கின்ற அருங்குணம். சீற்றமும் துணிச்சலும் சட்டப் புலமையும் நிறைந்த வாதங்களால் ராஜீவ் கொலை வழக்கில் சிக்குண்டு அன்று ஒட்டுமொத்த உலகமே கைவிட்டிருந்த தமிழர்களை காப்பாற்ற துணிந்தார்.

உலகமே கைவிட்டிருந்தபோது இருள் நிறைந்த குழிக்குள் விழுந்து கிடந்த 26 தமிழர்களுக்கு கிடைத்த ஒற்றை நம்பிக்கை அந்தப் பெருமனிதர் தடா சந்திரசேகர் தான். அக்காலங்களில் இயக்கப் பெயரை யாரும் பயன்படுத்த முடியாது. தலைவர் பெயரை யாரும் சொல்ல முடியாது ‌. காவல்துறை உளவுத்துறை மத்திய அரசு மாநில அரசு என எல்லா திசைகளிலும் நெருக்கடி. எதற்கும் அந்த மனிதர் அஞ்சியதில்லை. தடை செய்யப்பட்ட இயக்கம்.தடை செய்யப்பட்ட தலைவர். தடை செய்யப்பட்ட மனிதர்கள்.

ஆனாலும் அவர்தான் இயக்கத்தின் வழக்கறிஞர். தலைவரே மதிக்கின்ற சட்டத்தரணி.

தலைவரின் பெற்றோர் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்தபோது தேடி வந்துப் பார்த்த பெருந்தகை நமது மூத்தவர் தான். தலைவரின் குடும்பத்திற்கு அவ்வளவு நம்பிக்கை அவர் மேல். அதேபோல் அன்னை பார்வதி அம்மாள் இறந்த போது ஈழத்திற்கே சென்று இறுதிச்சடங்குகள் செய்ய உடன் இருந்தவர் நமது மூத்தவர் தடா சந்திரசேகர் அவர்கள்.

தமிழர்களின் ஆன்ம உணர்ச்சியான ஈழ விடுதலை உணர்வு என்பது என்றும் தமிழ்நாட்டில் மங்கி விடக் கூடாது அது சுடர் விட்டு பெரும் தீயாய் பரவ வேண்டும் என்ற நோக்கில் நாம் தமிழர் கட்சியை அண்ணன் சீமான் அவர்கள் உருவாக்கிய போது அதன் முதுகெலும்பாய் மாறி கட்சியின் பொதுச்செயலாளராய் வழிநடத்தியவர் நம் மூத்தவர்.

கம்பீரமான மனிதர் அவர். எந்த விமர்சனத்தையும் முகத்திற்கு நேராக சொல்வதற்கு அவர் என்றுமே தயங்கியதில்லை. அவரைப் பொறுத்த வரையில் ஒரே ஒரு கருத்துதான். அது தன் தம்பி சீமானின் நலம். அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார். ராஜிவ் கொலை வழக்கில் சிக்குண்டு 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து தற்போது முகாமில் வதைப்பட்டு வருகிற அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்கள் பரோல் மூலம் வெளிவரும்போது ஈழ நாட்டவரான அவர் இங்கே தமிழ்நாட்டில் யார் வீட்டிற்கு செல்வது என சிந்தனை ஏற்பட்டபோது.. “உடன் பிறந்த அண்ணன் மூத்தவன் நான் இருக்கிறேன்.. வா தம்பி என் வீட்டிற்கு..” என அழைத்த எங்களது மூத்தவர் போல யார் உண்டு.. இனி எங்களுக்கு..

விடுதலைக்கு விலங்கு என்ற‌ அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதத் தொடங்கும் போது வழக்கு கோப்புகளை பெற அவரது அலுவலகத்திற்கு சென்ற போது முக்கியமான மனிதர்கள் அவருக்காக காத்திருந்தார்கள். சிறியவனான என்னை அழைத்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். “முக்கியமான நிறைய மனிதர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் மூத்தவரே..” என சொன்னபோது.. “அது பணத்திற்காக.. உன்னிடம் பேசுவது என் இனத்திற்காக . என் இனத்தை தாண்டி எனக்கு எதுவும் இல்லை..” என சொல்லிவிட்டு அவருக்கே உரிய கம்பீரமான சிரிப்பை சிரித்தார்.

வேலூர் சிறையில் அண்ணன் சீமான் அடைக்கப்பட்டு இருந்த காலத்தில் கட்சி தொடங்கி சில நாட்களே ஆகியிருந்தது. அண்ணன் இல்லாத சூழலில் இனி என்ன செய்வது என்கின்ற ஒரு கையறு நிலை. அந்த நேரத்தில் மூத்தவர் மீதுதான் அனைவரின் நம்பிக்கையும். அவரும் அண்ணனையும் மீட்டு கட்சியையும் காத்தார்.

அவர் அருகில் இருந்தாலே ஒரு பாதுகாப்பு உணர்ச்சி எங்களுக்கெல்லாம். அமைப்புத் தொடர்பாக மாநில பொறுப்பாளர்கள் யாரிடமாவது அண்ணன் சீமான் 10 சொற்கள் பேசினால் அதில் இரண்டு “மூத்தவரிடம் கேட்டு விடுங்கள்..” என்பது தான்.

அண்ணன் சீமானுக்கும் அவருக்குமான உறவை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. ‘மூத்தவர்’ என்று அண்ணன் சீமான் என்று அழைத்தாரோ தமிழ்நாட்டில் இருக்கின்ற லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அவர் ‘மூத்தவராக’ மாறிப் போனார்.

கம்பீரமான மனிதர் அவர். தோற்றமும் குரலும் எதிரே நிற்பவரை சட்டென சிறியவராக்கி காட்டும் கம்பீரம் அது.

ஈரோட்டில் கிழக்கு இடைத் தேர்தல் நடந்த நேரத்தில் பிரச்சாரப் பணிக்கு வந்திருந்த போது நானும் தம்பி ஆனந்தும் மூத்தவரை அவர் தங்கும் இடத்திற்கு சென்று விடுவதற்காக அழைத்துச் சென்ற அந்த இரவில் “என் பசங்கடா நீங்க‌..” என்று சொன்ன அந்த சொற்கள் இன்னும் காற்றில் மிதந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு நள்ளிரவில் தமிழின உணர்வாளர்களுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரை அலைபேசியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிளாசிக் ஆங்கிலத்தில் புரட்டி எடுத்து கேள்விகள் கேட்டு திகைக்க வைத்த அவர் ஆளுமை பார்த்து நான் எல்லாம் மிரண்டு போயிருந்தேன்.

யாரிடமும் ஒரு அலைபேசி அழைப்பு மூலம் அவரால் ஆணையிட முடிகிற அளவிற்கு ஆளுமை. ஆனால் அண்ணன் சீமானிடம் மட்டும் எதையும் எதிர்பார்க்காத அடி மன ஆழமான அன்பு.

தனது சட்ட ஆற்றல் மூலம் தடுப்பு முகாமில் இருந்து எத்தனையோ தமிழர்களை மீட்டு புலம் பெயர் தேசத்திற்கு அவர்தான் அனுப்பி வைத்தார். தமிழின உரிமை களங்களில் தமிழர் யார் பாதிக்கப்பட்டாலும் அவருக்காக வாதாட “தடா சந்திரசேகர்” என்கின்ற நம்பிக்கை எப்போதும் நங்கூரமிட்டு அமர்ந்திருந்தது. அதுதான் இன்று இந்த இனத்திற்கு இல்லாமல் போய்விட்டது.

இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் இப்படித்தான் நம்மை தவிக்க விட்டு சென்றார். பிறகு தாய் மாமன் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது. இப்போது மூத்தவர்.

எங்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்ட மூத்தவர் அவர் உடல் நலனையும் கொஞ்சம் பார்த்துக் கொண்டிருந்து இருக்கலாம். என்ன செய்வது.. இரக்கமற்ற கொடியவனாக இந்தக் காலம் நம் கழுத்தில் ஏறி நிற்கிறது.

மூத்தவரே சென்று வாருங்கள். உங்கள் உயிர் தம்பியோடு உயிருள்ளவரை நாங்கள் நேர்மையாக உடன் இருப்போம்.அதுதான் உங்களுக்கு நாங்கள் காட்டும் மரியாதை என்பதை அறிவோம்.

எந்தக் கனவின் மூலமாக எங்களுக்கு நீங்கள் மூத்தவரானீர்களோ அந்த விடுதலை கனவிற்காக எம் உடல் மண்ணில் சாயும் வரை உங்களைப் போன்றே புலிக்கொடி ஏந்தி போராடுவோம்.

கண்ணீர் வணக்கம்.