நாம் தமிழர் கட்சி வரலாற்றில் திருப்பூருக்கு என்றுமே தனி இடம் தான். 13 வருடங்களுக்கு முன்பாக ஒரு மழை நாளில் திருப்பூரில் அண்ணன் சீமான் கொட்டும் கொட்டும் மழையில் உணர்வு தீ கொதிக்க அனல் தமிழில் முழங்கிய ஆவேச பேச்சு இன்றும் நம் நினைவலைகளை விட்டு நீங்க வில்லை.
இன்றும் மழையின் மிரட்டலோடு நடந்த இந்த கூட்டத்தில் அண்ணன் சீமானின் பேச்சு இதுவரை இல்லாத மகத்துவம் நிறைந்த தனித்துவம். கூடி நின்ற மக்கட் பெருங்கடல் திரண்டு இருந்த அந்த மாபெரும் இடம் அண்ணன் சீமானின் கம்பீர தமிழுக்கு முன்னால் ஒரு மாபெரும் வகுப்பறையாக மாறிப் போனது. ஒரு தேர்ந்த பொருளாதாரப் பேராசிரியர் போல புள்ளிவிபரங்களோடு, அவ்வப்போது துள்ளி வருகின்ற நகைச்சுவை கிண்டல்களோடு அவர் நடத்திய சூழலியல் பொருளாதார வகுப்பு கடல் போல் திரண்டு இருந்த ஒரு வெகுஜன கூட்டத்திற்கு மிக மிகப் புதிது.
ஒரு தலைமைத்துவம் நிறைந்த மாபெரும் பேச்சாளர் ஒருவர் “தற்சார்பு பொருளாதாரம்” என்ற மிகக் கடுமையான தலைப்போடு ஒரு வெகுஜன கூட்டத்தை அணுகுவது என்பது மிக மிக ஆபத்தானது. எந்த நேரமும் பேச்சு தன் அலைவரிசையில் இருந்து மாறி, மக்களின் ஆர்வத்தை தூண்டாமல், திசை மாறுமானால் அந்தக் கூட்டம் அப்படியே கலைகின்ற சங்கடமும் நிகழ்ந்துவிடுகிற சூழல்.
ஆனால் நம் அண்ணன் சீமான் தான் “சொல்வல்லான்” ஆயிற்றே. கட்டமைக்கப்பட்ட தேர்ந்த சொற்கள் மூலம் ஆங்காங்கே இடையில் தூவப்பட்ட நகைச்சுவை துணுக்குகள் மூலம் அந்த மக்கட்பெரும் கடலை தனது தன்னிகரற்ற மொழியாற்றலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கட்டிப்போட்டு வைத்திருந்தார் அவர்.
வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். பலர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். தங்கள் துயர் துடைக்க இறுதியாக பிறந்த நம்பிக்கையோடு காலங்காலமாய் வீழ்த்தப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் கைகோர்க்க தயாராகி வந்து நின்றார்கள்.
கூட்டத்தில் உணர்வு அலைவரிசையை அண்ணன் சீமான் தான் தீர்மானித்தார்.அவர் சிரித்தால் கூடியிருந்த மக்கள் கூட்டமும் சிரித்தது. அவர் கம்பீரமாய் கை உயர்த்தினால் அங்கே கூடி இருந்த அவ்வளவு பேரும் தங்கள் கைகளை உயர்த்தினார்கள். அவர் புள்ளி விவரங்களை துல்லியமாக அடுக்கிக் கொண்டே விவரிக்கும் போது முன்வரிசை மாணவன் போல ஒவ்வொருவரும் உன்னிப்பாக கவனித்தார்கள்.
தொலைக்காட்சியில் இதை கவனித்துக் கொண்டிருந்த என் தந்தை மூத்த தமிழ் பேராசிரியர் முனைவர் ச.மணி மிகுந்த வியப்புக்கு உள்ளானார். அவர் சுமார் 45 வருடங்கள் பேராசிரியராக, கல்லூரி முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஒரு பேராசிரியருக்கு இருக்கும் பெரும் சவாலே வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்களோடு ஒத்த அலைவரிசையில் தொடர்பாவதுதான். அந்த அலைவரிசை சிறிது பிசகினாலும் மாணவர்கள் வெறுக்கத்தக்க வகுப்பாக அந்த வகுப்பு மாறிவிடும் என்பது மட்டுமில்லாமல் அந்தப் பேராசிரியரும் தங்களுக்கான நம்பிக்கையை இழந்து விடுகின்ற துயரமும் நேர்வது உண்டு என அவர் சொன்னார்.
ஆனால் சீமானுக்கு அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களோடு தனிப்பட்ட முறையில் ஒத்த உணர்வு அலைவரிசையில் எளிதாக தொடர்பானது ஒரு பேராசிரியர் என்கின்ற முறையில் அவருக்கு மிகுந்த வியப்பாக இருந்தது என்று சொன்னார். அது வெறும் கூட்டமல்ல. மாநாடு போல மக்கள் திரண்டு இருந்த அந்த இடம் தன்னைப் பொறுத்தவரையில் ஒரு வகுப்பறையாக நினைத்துக் கொண்டுதான் சீமான் அங்கே தற்சார்பு பொருளாதாரம் என்கின்ற தலைப்பில் பொருளாதார வகுப்பு எடுக்கிறார் என அவர் நுட்பமாக சொன்ன போது ஒரு அரசியல் மேடையை வகுப்பறையாக மாற்றிக் கொண்ட ஒரு நம்பிக்கை தலைவன் நம்மிடையே பிறந்து விட்டான் என்கின்ற பெரு மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.
குறிப்பாக மறைந்த பொருளாதார மேதை ‘ஜே சி குமரப்பாவின் தாய்மை பசுமை பொருளாதார கொள்கையை’ மிக மிக நுட்பமாக அதே சமயத்தில் எளிமையாக விளக்கிய அவரது தமிழ்
மேதமை நிறைந்தது.
இத்தனைக்கும் அவரைச் சுற்றி ஆயிரத்தெட்டு விமர்சனங்கள், அவதூறுகள் என பொய்மையும், சூழ்ச்சியும் நிறைந்த ஏச்சுபேச்சுகள் படையெடுக்கின்ற காலம் இது. நம்பிக்கை கொண்ட அந்த மனிதனை இது போன்ற வெறும் விமர்சனங்களால் வீழ்த்தி விட முடியாது என ‘திராவிடத் திருவாளர்’ ஒருவரே கட்டுரை ஒன்றை எழுதியிருந்த காட்சியையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.
அவரது கண்கள் முழுக்க அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் மீள் எழுச்சிக்கான நம்பிக்கை மிகுந்த துடிப்பினை மட்டுமே காண முடிந்தது. இந்த பயணத்தில் முதல் இரண்டு நாட்கள் நானும் அவரோடு இருந்த அந்த நேரத்தில் கூட உணவு உண்ணும் பொழுதுகளில் கூட அரசியலை மட்டுமே பேசிக்கொண்டே இருந்தார். அவர் பேச்சில் அவர் சொல்வது போல அவரது எண்ணம் செயல் மூளை அனைத்திலும் இன நலன்/ இன மீட்சி போன்றவை நிறைந்து இருந்து அவரை உறங்கவிடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றன.
நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் மேடையை வேறு திசைக்கு அண்ணன் சீமான் திருப்பி இருக்கிறார். கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று இனி உளற முடியாது. வெறும் துண்டு சீட்டை வைத்துக்கொண்டு “ஆக அந்த வகையிலே..” என பேசி வளர முடியாது.ஒவ்வொரு மேடையையும் அண்ணன் சீமான் போல வகுப்பறையாக மாற்றுகின்ற வல்லமை கொண்ட தலைவன் தான் இந்த மண்ணுக்கு தேவை. இதில் முக்கியமானது என்னவென்றால் சமகாலத்தில் அவர் மட்டும்தான் அவ்வாறு இருக்கின்றார். அவருக்கு போட்டியாக வாசிப்பறிவு கொண்டு மேடைகளை வகுப்பறைகளாக மாற்றி பேராசிரியராக முழங்க இங்கே யாருமே இல்லை.
இனி காலமும் அவர்தான். களமும் அவர்தான்.
இனி அவர் தீர்மானிக்கிற திசையில் தான் தமிழகத்து அரசியல் அமைய இருக்கிறது என்பதுதான் இன்றைய திருப்பூர் கூட்டம் மூலம் அண்ணன் சீமான் விடுத்திருக்கின்ற செய்தி.
மறுமொழி இடவும்