சமூக வலைதளங்களில் 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டிருக்கும் சில பலரது பதிவுகளை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில் தங்கள் அலைபேசி திரைக்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். யாராவது நினைவூட்டினால் மறுத்துவிடுவார்கள்.
இதில் தான் அவர்களுக்கு சகலமும். நகைச்சுவை கிண்டல் கேலி கோபம் காதல் காமம் நட்பு உறவு பாராட்டு விலகல் புலம்பல் என சர்வ உணர்ச்சிகளின் சதிராட்டத்தை அலைபேசி திரைகளுக்கு உள்ளாகவே அவர்கள் அடக்கி விடுவார்கள்.
எங்கள் பகுதியில் அலைபேசியில் மட்டும் எங்கள் கட்சியில் இயங்கிய ஒருவர் இருந்தார். அவர் அலைபேசி வாயிலாகத் தான் கட்சியில் இணைந்தார். அலைபேசியில் தான் கருத்து சொல்வார். அந்த அலைபேசியிலேயே விமர்சனம் செய்வார். கட்சிக்காரர்கள் யாருக்காவது ஏதாவது குறை என்றால் இவர்தான் முதலில் சென்று அந்தக் குறை என்ன என கேட்டு தனக்கு யாரைப் பிடிக்கவில்லையோ அவரை அந்தக் குறையில் சம்பந்தப்படுத்தி திட்டுவார். நேரில் கலந்தாய்வு கூட்டத்திற்கு வாருங்கள் என்று அழைத்தால் ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை அன்றைய தினம் தான் ஊரில் இல்லை என்பார். போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் அன்று அவரது அலைபேசி அமைதியாகிவிடும். நாங்களும் முடிவு செய்து எப்படியாவது அவரை நேரில் பார்த்து விட வேண்டும் என பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. ஆனால் விமர்சன அலைகளுக்கு மட்டும் அவரிடத்தில் என்றும் குறை இருக்காது. ஒருமுறை அண்ணன் எங்கள் ஊருக்கு வந்தபோது இந்த முறையாவது அந்த “அலைபேசி நபரை” பார்த்து விடுவோம் என முயற்சித்து நேரில் வாருங்கள் அண்ணனை சந்திப்போம் என அழைத்தோம். ஆனால் தலைவர் ‘நைசாக’ எஸ்கேப் ஆகி வந்திருந்த ஒரு தம்பி அண்ணனோடு ஒரு புகைப்படம் எடுத்து பதிவு போட்டதில் சென்று “பலர் படம் எடுக்க முடியவில்லை” என இந்தப் பக்கமே வராத இவர்(!) குறை சொல்லி ‘இவர்கள் இப்படித்தான்’ என பொறுப்பாளர்களை திட்டி தன்னிச்சையாக பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
பிறகு விசாரித்து பார்த்த போது தான் தெரிந்தது. அவருக்கு அலைச்சல் வெயில் மழை இரவு பயணம் போராட்டம் சிறை கட்சி என பலவற்றிலும் மிகுந்த அச்ச உணர்வு. அவர் எதற்கும் வர மாட்டார். வரவும் அவருக்கு அச்சம். ஆனாலும் கருத்து சொல்லியே ஆக வேண்டுமே.. அதற்குதான் அந்த அலைபேசி. இவர் போல எங்கள் அமைப்பில் மட்டுமல்ல. பல அமைப்புகளிலும் பல நபர்கள் இவ்வாறு இருக்கிறார்கள்.
இப்படி அலைபேசி உரையாடல்களை உண்மை என நம்பி அதிலேயே வாழ்க்கையை தொலைத்த சிலரை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக முகநூல் ஆதிக்கம் பெருகிய போது இதுபோன்ற நபர்களும் உருவானார்கள். முகநூலிலேயே அவர்களுக்கு சொந்த பந்தங்கள் ஏற்பட்டன. அதிலேயே அன்பு.அதிலேயே விரோதம். அதிலேயே பிரிவு. இப்படி உலகம் அவர்களுக்கு அந்த அலைபேசி திரைக்குள்ளாகதான்.
ஏன் நேரில் வரவில்லை என யாரும் அவர்களை கேட்க முடியாது. ஏனெனில் அவர்கள் நேரில் வர மாட்டார்கள். ஒரு பொறுப்பு எடுத்து செய்யவும் அவர்களால் முடியாது. செய்பவர்களையும் அவர்களுக்கு பிடிக்காது. என்ன செய்வது.. தங்கள் கற்பனை படகில் ஏறி அலைபேசி முழுக்க புலம்பல்களை நிரப்பித் தள்ளுவார்கள்.
அமைப்புக்குள்ளாக இருக்கிற முரண்களை ஒரு அலைபேசி அழைப்பின் மூலமாக தனிப்பட்ட முறையில் அழைத்து பேசிவிட முடியும் தான். அப்படி பேசினால் அது இருவர் சம்பந்தப்பட்ட உரையாடல் மட்டுமே. அதற்கு வாய்ப்பு இருந்தும் பொதுவெளியில் பேசவும் எழுதவும் தான் அவர்களுக்கு விருப்பம்.
முகநூல் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் நம்மை, நம் திறமைகளை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான அல்லது நமது செய்திகளை, வாழ்த்துக்கள் , ஆழ்ந்த இரங்கல் போன்ற உணர்வுகளை குறிப்பிட்ட நோக்கில் பரப்புவதற்கான ஊடகங்கள் மட்டுமே. இந்த மெய்நிகர் ஊடகங்கள் மூலமாக நமக்கான வாசகர்கள் நமக்கான பார்வையாளர்கள் போன்றவற்றை எளிதில் பெறுகிறோம். அந்த ஒரு வசதியை தவிர இதில் வேறு எந்த புண்ணாக்கும் இல்லை.
கட்சிக்கு உழைப்பவர்கள் எப்படி இருந்தாலும் ஊர் ஊராக அலைந்து கொண்டு போராடிக் கொண்டு எங்கேயோ கொடியேற்றிக்கொண்டு பலரை சந்தித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களும் நிறை குறைகள் நிரம்பிய மனிதர்கள் தான். குறைகள் ஏதேனும் இருப்பின் ஒரு அலைபேசி உரையாடல் மூலம் எளிதில் சொல்லி அதை களைந்து விடலாம் தான். ஆனால் பொதுவெளியில் எழுதி அவர்கள் குறைகளை மட்டுமே ஊதிப் பெருக்குவதன் அரசியல் வன்மம் தனிப்பட்ட கோபம் போன்ற மனித உணர்ச்சிகளை எல்லாம் தாண்டி அது ஒரு உளவியல் கோளாறு.
அலைபேசியை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள 1008 வழிகள் இருக்கின்றன. அதை விடுத்து விட்டு புறம் பேசுவதையும் குறை கூறுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் அன்பர்களை காணும் போது உண்மையில் பாவமாக இருக்கிறது. இவர் அடுத்தவரைப் பற்றியே யோசிக்கிறாரே, தன்னிலை குறித்து என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்பாரா என சிந்திக்கும் போது பரிதாபம் மிஞ்சுகிறது.
மணிரத்தினம் இயக்கிய “குரு” திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தன்னை அதிகமாக விமர்சிக்கும் பத்திரிக்கைக்கு குருபாய் அதிகம் விளம்பரம் கொடுக்க சொல்வார். அது ஒரு வகையான எதிர்மறை செல்வாக்கு. (Negative publicity). மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த குணாதிசயம் அதிகம் இருப்பதாக சொல்வார்கள். பாராட்டோ விமர்சனமோ அது தன்னை சுற்றி தான் நடக்க வேண்டும் என திட்டமிட்டு சில வேலைகள் செய்வார் என்பார்கள். இது போன்ற மனிதர்கள் இணைய உலகிலும் உண்டு.இதில் ஒருவரை வெறுப்பேற்றுவதற்காக 24 மணி நேரமும் சிந்தித்து பக்கம் பக்கமாய் எழுதி விமர்சிப்பவர்களை பற்றி யோசித்துப் பாருங்கள். உண்மையில் விமர்சிக்கப்படுபவர் விமர்சிப்பவர்களை பயன்படுத்திக் கொண்டு வளர்ந்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறார். மற்றொருவரோ பதிவு போட்டுக் கொண்டு தனக்குத்தானே மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.இதில் யார் புத்திசாலி …??
ஒருவரை எதிர்ப்பதற்காக பக்கம் பக்கமாக பதிவு பதிவாக போட்டு தள்ளும் பலரும் தங்களை அறியாமல் தாங்களே பலியாகிக் கொண்டிருப்பதை உணராமல் இருக்கிறார்கள்.
உண்மையில் நமது உணர்ச்சிகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அலைபேசி ஊடாக அடுத்தவர் கையில் அதற்கான பொத்தானை கொடுத்துவிட்டு அடுத்த பதிவு என்ன வருகிறது என வேடிக்கை பார்ப்பது போல பைத்தியக்காரத்தனமானது எதுவும் இல்லை.
நமது உள்ளூர்களில் விளம்பர செய்தி தாள்கள் இலவசமாய் வரும் இல்லையா… இங்கே வீட்டுமனை கிடைக்கும் இங்கே இந்த பொருள் கிடைக்கும் என்றெல்லாம் விளம்பரங்கள் நிறைய காணப்படும் அந்த செய்தித்தாள்கள் போலத்தான் இந்த முகநூல் மற்றும் சமூக வலைதளங்கள்.
அளவற்று அதில் மூழ்கி போய் உணர்ச்சிகளை கொட்டிக் கொண்டே இருப்பது என்பது.. ஒரு காலத்தில் அதிகம் குடித்துவிட்டு உடல் நலனை கெடுத்துக் கொண்டவர் பின்னர் இறுதி காலத்தில் வருத்தப்படுவது போல ஆகிவிடும்.
நமக்கு முன்னால் அலைபேசி தாண்டிய காலத்தின் ஒரு பியானோ இருக்கிறது. அதை இசைக்க அலைபேசியை தவிர்த்த ஒரு உளவியல் தேவை.ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அனுபவித்து உறவுகளோடு கொண்டாடி, சமூக அரசியல் பணிகளுக்கு வீதியில் நின்று வியர்க்க வியர்க்க போராடி அதையும் ரசித்து செய்து அனுபவிக்க 1008 உணர்ச்சிகள் நமக்கு இருக்கின்றன.
சுய மேதமையை போதிக்கும் அலைபேசி திரை சத்தியமாக போலியானது என உணரும் ஒவ்வொருவரும் தாங்கள் இதுவரை இதற்காக செலவு செய்த நேரத்தை யோசிக்கும் போது கண்டிப்பாக வருத்தப்படுவார்.
மறுமொழி இடவும்