தமிழ் முழக்கம் என் வாழ்வில் செலுத்திய ஆதிக்கம் கொஞ்சநஞ்சம் அல்ல. எழுத்து உலகில் மிக இளையவனான என்னை கண்டெடுத்து தன் பத்திரிக்கைக்கு துணை ஆசிரியராக நியமித்து ஒவ்வொரு இதழிலும் என் எழுத்துக்களை பதிவேற்றம் செய்து என்னை உருவாக்கிய பெருமகன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது என்ற திருமகன்.

நாகப்பட்டினத்தில் நடந்த‌ நாம் தமிழர் கட்சியின் மாபெரும் இளைஞர் பாசறை தொடக்க மாநாட்டில் எங்களை மேடையேற்ற அவர் உழைத்த உழைப்பு இன்னும் என் கண்களிலே நிற்கிறது.

எதற்கும் அயராத மனிதன். அவரது உருவம் போல அவரது நம்பிக்கையும் மகத்தானது. எதுவுமே இல்லாத அடையாளமற்ற எளியவர்களை அவராகவே தேர்ந்தெடுத்து அவர்களை உயரச் செய்கிற குணம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்..??

அவருக்கு வாய்த்தது. அண்ணன் சீமான் தொடங்கி இன்னும் எத்தனையோ என்னை போன்ற எளியவர்களுக்கு உதவி செய்து மேல் ஏற்றிய அவரது கரங்கள் பொற்கரங்கள்.

எதிலும் அவர் பிரம்மாண்டம் தான். விருந்து வைத்தாலும் சரி.. கூட்டம் நடத்தினாலும் சரி, அவருக்கென்று ஒரு மகத்தான பிரம்மாண்டமான திட்டம் இருக்கும். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவர் இரவும் பகலும் ஆக உழைப்பதில் தான் அவர் நிறைவடைவார்.

ஒரு முறை தமிழ் முழக்கம் இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரை காரணமாக கடுமையான எதிர்ப்பு தமிழகம் எங்கும் ஏற்பட்டு அவரது பத்திரிக்கை அலுவலகமே தாக்கப்பட்ட போது, அதைப்பற்றி கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அடுத்த மாதமே எனது அடுத்த கட்டுரையை பதிவேற்றி அதுவே அட்டைப்படமாக மாற்றிக் காட்டிய அந்த நம்பிக்கையை நான் எங்கே கண்டடைவேன்..??

அண்ணன் சீமான் சொற்கள் தான் அவருக்கு வேத மொழிகள். தன் மருமகனின் சொல்லைத் தாண்டி அவருக்கு எல்லை ஏதுமில்லை. சீமான் என்ற மனிதனுக்கு தாய் மாமனாக மாறியதால் உலகம் எங்கும் வாழக்கூடிய இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உயிர் மாமனாக மாறியவர் அவர்.

குறிப்பாக என்னை செதுக்கி, நம்பிக்கை ஊட்டி இயங்க வைத்ததில் அவருடைய பங்கு மிக மிகப் பெரிது. அவரது நினைவுகளை இன்னும் மனதிற்குள் சுமந்து கொண்டு தான் அதிலிருந்து தான் இயங்குவதற்கான ஆற்றலை எனக்குள்ளாக நான் தயாரித்து வருகிறேன்.

இறுதியாக தன் வாழ்நாளில்‌ அவர் கலந்து கொண்ட கடைசி கலந்தாய்வு கூட்டம் என் வீட்டு மாடியில் தான் நடந்தது. அப்போதே அவருக்கு கடுமையான காய்ச்சல் தொடங்கி இருந்தது. வாயெல்லாம் கசக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நிலவேம்பு கசாயம் எடுத்து வந்த என் தாயிடம் வேண்டாம் என மறுத்து சர்க்கரை நிறைய போட்டு காப்பி வேண்டும் எனக் கேட்டார். கூட்டத்தில் நானும் அண்ணன் ஹுமாயூன் உள்ளிடவர்களும் கலந்து கொண்ட போது துணிச்சலான பல முடிவுகளை அவர் தயங்காமல் எடுத்தார்.

அவரை என் வாழ்வில் சந்தித்ததும் அவரால் நான் சந்தித்ததும் நிறைய இருக்கின்றன. முடிவாக ஒன்றே ஒன்று. அவரால் நான் உருவாக்கப்பட்டு இருக்கிறேன். தன் மருமகன் சீமானை அவர் நேசித்தார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அது எந்த அளவு என்றால் தன் வாழ்வின் இறுதி நொடியில் கூட கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு உயிரளவு என்பது அவரது மறைவிற்குப் பிறகு தான் புரிந்தது.

அந்தப் பற்றுறுதி தான் அந்த இலட்சிய விருப்பு தான் எங்களுக்கு அவர் விட்டு சென்று இருக்கின்ற இறுதி செய்தி.

அதை வாழ்நாள் எல்லாம் நாங்கள் கடைபிடிக்க அவர் தெய்வமாக நின்று கருணையின் குடை பிடிக்கட்டும்..

கண்கள் கலங்க என் ஆசானுக்கு கண்ணீர் வணக்கம்.

மணி செந்தில்.