“மனிதன் தாங்கக்கூடிய அளவிற்கே கடவுள் துன்பத்தை தருகிறான்” என்கிறது புனித நூல் திருக்குர்ஆன்.அது என்ன தாங்கக் கூடிய அளவு.. அப்படி துன்பத்திற்கு அளவுகோல்கள் இருக்கிறதா என்ன.. துன்பத்தில் எது பெரிய துன்பம் எது சிறிய துன்பம்.. துன்பம் என்பதே வலி தானே என்றெல்லாம் சிந்தனைகள் விரிந்து கொண்டே போகின்றன.

10 ஆண்டுகள் கடும் போராட்டத்திற்கு பிறகு பிறந்த குழந்தை 1 1/2 வயதில் இறந்துவிட்ட கொடுமையை சமீபத்தில் என் குடும்பம் சந்தித்தது. என் வீட்டுப் பெரியவர்கள் விழிகளில் வலியை சேமித்து உறைந்து விட்டார்கள். கண்ணீர்/கதறல் போன்ற உணர்ச்சி கொந்தளிப்புகளை எல்லாம் தாண்டி உறைந்து விடுவது என்கிற நிலையை என் வீட்டிலேயே நான் கண்டேன். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எவருக்கும் தெரியவில்லை.இன்று காலை எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் சட்ட உதவிக்காக என்னை அழைத்தார். அவருக்கு மூன்று மகன்கள். இரண்டாவது மகன் மட்டும் கொஞ்சம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலம் குறைந்தவர்.அவரை தனது மூத்த மகன் மிகவும் மோசமாக நடத்துவதாகவும், அடிக்கடி தாக்கி விடுவதாகவும், அதை அவர் மிகுந்த வலியோடு என்னிடம் தெரிவித்தார். மூத்தமகனை அழைத்து வாருங்கள் நான் பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.வாழ்வின் மிகக் போராட்டம் எதுவென்று சிந்திக்கும்போது உடல் நலமில்லாத குழந்தைகளை வளர்க்க பெற்றோர் நடத்துகிற போராட்டம் தான் என்பதை உணர முடிகிறது. எந்த நேரம் எது நடக்கும் என்று குழந்தைகளின் உடல்நலத்தைப் பொறுத்து எதுவும் தெரியாது. தன் கண் எதிரே தன் குழந்தைகள் படும் பாடு கண்டு பெற்றோர் அடையும் துயரத்தின் உயரம் எவரெஸ்ட்டை விட பன்மடங்கு பெரியது.

என் குடும்பத்திலேயே “ஆட்டிசம்” பாதிக்கப்பட்ட குழந்தை ஒருவன் இருக்கிறான். அவனை உருவாக்க அவனது தாய் படும் பாட்டை நான் அருகில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அந்தப் பெண்ணுக்கு அச்சுஅசலாக என்னுடைய தாய் முகம். சிறுவயதில் என் அம்மா எப்படி என்னை தூக்கிக்கொண்டு அலைந்தாரோ அதேபோல அவளும் ஒரு சுமைத் தாங்கியாக மாறி இருப்பது வாழ்வின் அசலான மனிதர்கள் நகலெடுத்துக் கொண்டது போல இருக்கிறது. அவள் எப்போதும் நோயற்ற குழந்தையைப் பெற்று வென்ற என் அம்மாவின் கண்களில் இருந்து நம்பிக்கையை பெற்றுக் கொண்டே இருக்கிறாள். அவளது வெற்றிக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்.

முழுமையான உடல் நலம் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் வரம் வாங்கியவர்கள். அமைதியாக உறங்கும் இரவுகளை அடைந்தவர்கள்.அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் சாலையை கடந்து செல்லும் முடி இழந்த சில குழந்தைகளை பார்க்க நேரிட்டது. தனக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்று தெரியாமலேயே உலவும் அந்த குழந்தைகளின் விழிகளை பார்த்துவிட்டு நிதானமாக இருக்க முடியவில்லை.ஒரே சமயத்தில் பால்யத்தின் குறுகுறுப்பும், நோயின் தீவிரம் தரும் வலியின் நிழலும் கொண்ட அந்த விழிகள் எப்போதும் தன் தாய் தந்தையரையே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.

நோய்மை நிறைந்த குழந்தைப் பருவம் மிகத் துயரமானது. நோய் தருகிற வலி, உறக்கமற்ற இரவுகள் இதுவெல்லாம் ஒருபுறம், இன்னொரு புறம் நண்பர்கள் தோழிகள் விளையாட்டுகள் இல்லாத தனிமை. மருத்துவமனையின் வெளிறிய சுவர்களை பார்த்து களைப்படையும் கண்களோடு இருந்த எனக்கு என் தந்தை புத்தகங்கள் மூலம் விடுதலைப் பெற்றுத் தந்தார். இந்த ஆன்ம விடுதலை அனைவருக்கும் கிடைப்பதில்லை.

“The Miracle”( 2015) என்கின்ற துருக்கி நாட்டு திரைப்படம் ஒன்று இருக்கிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த திரைப்படம் “Mahsun Kırmızıgül” என்பவர் இயக்கி இருந்தார். பள்ளிக்கூடம் இல்லாத ஒரு கிராமப்புறத்திற்கு பணிக்காக செல்லும் ஒரு ஆசிரியர் அங்கே நோய்மையால் பாதிக்கப்பட்ட பேச்சுத்திறன் இழந்த சரிவர நடக்க முடியாத ஒரு வாலிபனை சந்திக்கிறார். அந்த ஆசிரியர் மற்றும் எதிர்பாராத விதமாக அவனுக்கு அமைந்த மனைவி மூலம் அந்த வாலிபன் உலகின் அனைத்து உயரங்களையும் அடைவது தான் அந்த கதை. எனது ஆருயிர் தம்பி கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களில் ஒருவரான தம்பி விக்கி தனிமை உணர்ச்சி வெகுவாக ஆட்கொண்ட ஒரு நாளில் எனக்கு இந்தத் திரைப்படத்தை பரிந்துரைத்தார். இரண்டு பாகங்களையும் முழு வீச்சில் பார்த்து முடித்த எனக்கு அதற்கடுத்த இரண்டு நாட்கள் படம் தந்த தாக்கத்திலேயே கழிந்தன. எல்லோரும் மிக முக்கியமாக காண வேண்டிய அந்த திரைப்படத்தின் முதல் பாகம் நெட்ப்ளிக்ஸ் -சில் கிடைக்கிறது. இரண்டாம் பாகம் youtubeலயே இருக்கிறது. நோயற்ற பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களை பற்றி இந்த படம் பேசியது போல வேறு எந்த படமும் இவ்வளவு நுட்பமாக பேசியதாக தெரியவில்லை.

இளம் வயது நோய்மையின் மிக உக்கிரமான உச்சம் அது தருகிற தனிமை. இளம் வயதில் உளவியலாக அந்தத் தனிமை உணர்ச்சியை அடைந்தவர்கள் வாழ்நாள் முழுக்க எல்லா பொழுதுகளிலும் அந்த தனிமை உணர்ச்சி ஆன்மாவில் தேங்கி நிற்கும். “வேலையில்லாதவனின் பகல் பொழுது தான் உலகத்திலேயே மிக நீளமானது” என்ற வரியை எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருப்பார். நோயுற்றவனின் இரவும் அப்படித்தான். வலியும் தனிமை உணர்ச்சியும் நிரம்பிய அந்த இரவுகள் முடிவே இல்லாத ரயில் பெட்டிகளின் வரிசையை நினைவூட்டுபவை.

“ஆரோக்கிய நிகேதனம்” என்ற 1953இல் வெளியான புகழ்பெற்ற ஒரு வங்காள நாவல் இருக்கிறது. அதை எழுதியவர் தாரா சங்கர் பந்த்யோபாத்தியாயா. தமிழில் குமாரசாமி மொழி பெயர்த்திருக்கிறார். ‘சாகித்ய அகாதெமி’ சார்பில் வெளியாகி இருக்கும் இந்த நூல் நோய்மையின் வெவ்வேறு குணாதிசயங்களையும், குணப்படுத்தும் வெவ்வேறு வழிகளையும் பற்றி விவாதிக்கின்ற அந்த நூல் மரபு சார்ந்த மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் இடையே இருக்கின்ற முரண்களைளையும் அரசியலையும் நுட்பமாக காட்டுகிறது. அதில் ஜீவன் மசாய் என்கின்ற முதன்மை கதாபாத்திரம் உண்டு. தலைமுறை தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்து வரும் குடும்பத்தில் பிறந்த அவர் ஆங்கில மருத்துவப் படிப்பில் சேர்ந்து மஞ்சரி என்ற பெண்ணை காதலித்து பிரிந்து, நிறைவேறாத காதலின் காரணமாக படிப்பை கைவிட்டு, தந்தை வழி ஆயுர்வேதத்தை தொழிலாக மட்டுமல்ல வாழ்வியலாக மாற்றி பின்பற்றி புகழ் பெற்ற ஆரோக்கிய நிகேதனம் என்கின்ற மருத்துவமனையை நிறுவுகிறார். ஆத்தர் பவ் என்ற பெண்ணை மணமுடிக்கும் அவர் வாழ்நாள் முழுக்க மனைவியின் வெறுப்பை சுமந்து ஆங்கில மருத்துவம் படித்த காதலியின் பேரனுக்கு நோய்மையைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் புரிதலை உருவாக்கி மறையும் அவரது பாத்திரப்படைப்பு இந்திய நாவல் உலகில் தலைசிறந்தது . இளம் வயதிலேயே தன் மகனை பறிகொடுத்த ஜீவன் மசாய் “எல்லோருக்கும் எதிர்பாராத ஒரு நொடியில் மரணம் தான் முடிவு, அதை வெல்ல யாரும் இல்லை” என்பதை தன் வாழ்நாள் முழுக்க வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் அந்தக் கதை. நோயைப் பற்றி தமிழில் சமீபத்தில் வந்திருக்கும் மருத்துவ புதினம் அக்குபஞ்சர் மருத்துவர் உமர் பாருக் எழுதிய “ஆதுர சாலை” நவீன மருத்துவ முறைமைகளைப் பற்றி பல கேள்விகள் எழுப்புகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு புகழ் பெற்ற ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். அவரின் மகள் சிறு வயதிலேயே இன்சுலின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஊசி போடக்கூடிய நிலைக்கு ஆளானவர். பணியில் இருக்கும் நேரத்தில் கூட ஓடிப் போய் தன் மகளுக்கு ஊசி போட்டுவிட்டு வியர்த்து விறுவிறுத்து வேக வேகமாக திரும்பும் அவரின் துயரத்தை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன் . அவரும் அவரது மனைவியும், தன் மகளை வளர்த்து, படிக்க வைத்து திருமணம் செய்து வைத்த பொழுதில், ‌ அவர்களிடம் சென்று ‘நீங்கள் வென்று விட்டீர்கள்’ என சொல்லிவிட்டு நகர்ந்த போது அவர்களது விழிகள் கண்ணீரால் நிறைந்தன. அந்த நிறைவு தரும் முழுமை போல உலகில் வேறு எதுவும் முழுமையில்லை.

அந்த நேரத்தில் உதிர்க்கும் கண்ணீர் கூட உவர்ப்பு இல்லாத உவப்பு தானே..??