நூல் வீதி 8
++++++++++

இந்த முறை புத்தக கண்காட்சியில் மலையாள மொழியின் மிக முக்கிய எழுத்தாளர் கே ஆர் மீரா அவர்களின் மொழிபெயர்ப்பு நூல்களை என் தம்பி எழுத்தாளுமை அகர முதலவனின் பரிந்துரையில் வாங்கினேன். “தேவதையின் மச்சங்கள் கருநீலம்” என்கிற அவரது சிறுகதை தொகுப்பு மோ செந்தில் குமாரின் மொழிபெயர்ப்பில் தமிழில் எதிர் வெளியீடு மூலமாக வெளியாகி இருக்கிறது.

சமகால மலையாள எழுத்துக்களில் புகழும் தனித்துவமும் கொண்ட படைப்புகளை கே ஆர் மீரா தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது கதைகளில் வரும் பெண்கள் தீர்க்கமானவர்கள். நரகமோ சொர்க்கமோ அவலமோ மகிழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் தங்கள் வாழ்விற்கான தேர்வுகளை முடிவு செய்யும் இடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள். தன் ஆன்மா முழுக்க காதலால் நிரம்பியவர்கள். உணர்ச்சிகளின் விளையாட்டாக காதலை கருதாமல் அதனால் தீவிர மன எழுச்சி அடைந்து எந்த எல்லைக்கும் செல்பவர்கள்.

அவரது படைப்புலகை பற்றி அவரின் மேற்கோள்களோடு வெளிவந்திருக்கிற ஒரு மிக முக்கியமான கட்டுரை இது.

https://www.vogue.in/culture-and-living/content/writer-k-r-meera-i-dont-write-for-feminists-i-write-so-that-my-book-will-convert-readers-into-feminists-jezebel

குறிப்பாக “தேவதையின் மச்சங்கள்” கதையைப் படித்து முடித்த நேற்றைய இரவினை கடப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டேன். வேதனை கொடுமை இப்படியெல்லாம் நடக்குமா என்கிற சொற்களையெல்லாம் தாண்டி நிஜமான வாழ்க்கை எப்படி கோரமாக இருக்கிறது என்பதை கவித்துவமான தன்மொழியில் மீரா கதையாடி இருப்பது இந்த தொகுப்பை‌ அனைவரும் வாசிக்கும்படியாக மாற்றுகிறது.

இரண்டே இரண்டு கதைகள் கொண்ட மிகச்சிறிய தொகுப்பான இந்த நூலின் இரண்டாவது கதை கருநீலம். “சதி சாவித்திரி களும் கண்ணியமான உத்தம புருஷர்களும் இதை வாசிக்காதீர்கள் வாசித்தால் ஏற்படக்கூடிய ஒழுக்க மீறல்களுக்கு நான் பொறுப்பல்ல” என்கிற முன் அறிவிப்போடு தொடங்குகிற இக்கதை காதலாகி கசிந்து உருகிய ஒரு பேரிளம் பெண்ணைப் பற்றியது. உணர்ச்சியற்ற வாழ்வொன்றினை நோக்கி பயணப்படுகிற ஒரு துறவிக்கும், கணவன் குடும்பம் என வாழ்ந்து வருகிற ஒரு பெண்ணுக்கும் இடையிலான உணர்ச்சிகளின் ஊசலாட்டத்தை பற்றி மிகுந்த நுட்பமான மொழியில் மீரா கதையாக்கியுள்ளார்.

தமிழில் பெண்களுக்கான புனை உலகத்தை அம்பை சல்மா லீனா மணிமேகலை குட்டி ரேவதி சுகிர்தராணி கிருத்திகா போன்ற பலரின் படைப்புகள் மூலமாக அறிந்திருந்தாலும் மீராவின் எழுத்துக்கள் பெண்களின் அக உலகின் பல்வேறு கோணங்களை மிக ஆழமாக வெளிப்படுத்தியது.

கே ஆர் மீராவின் எழுத்துக்களில் இன்னும் ஒரு சில புத்தகங்கள் வாசிப்பிற்காக இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக அவைகளையும் ஒரே மூச்சில் வாசித்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்தை இந்த சிறு நூல் ஏற்படுத்தி விட்டது.

கே ஆர் மீரா. சாகித்திய அகாதமி பெற்ற மலையாள மொழியின் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர். தற்போது கோட்டயத்தில் வசித்து வருகிறார். இவரது நூல்களில் பல தமிழில் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கின்றன.

ஜெயகாந்தனின் புகழ் பெற்ற பெண் கதாபாத்திரங்களில் இருந்து கே ஆர் மீராவின் கதை உலகில் வருகின்ற பெண்கள் வரைக்குமான தனித்துவமான பெண்களின் அக உலகு பற்றியே உண்மையில் ஒரு நூலை எழுதலாம்.

உண்மையில் நாம் அறிந்த பெண்கள் என்று எவருமே இல்லை. பெண்களைப் பற்றி நாம் அறிந்ததாக புரிந்து கொண்டிருப்பவை அனைத்துமே கற்பிதம்தான். படைப்பின் விசித்திரமும் அதுதான். நமக்கான ஏதோ ஒன்றை அவர்களிடத்தில் நாம் தேடிக் கொண்டிருப்பதை தான், நாம் அறிந்த பெண் உலகாக‌ நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அதுவெல்லாம் அவ்வாறு இல்லை என நம் நெற்றி பொட்டில் அடித்தாற் போல் விரிகிறது கே ஆர் மீராவின் புனைவுலகம்.