பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜூன் 2024

சென்று வா-எம் பாசப்பறவையே-ராபர்ட் பயஸ்.

எனது அன்பு அண்ணன்
ராபர்ட் பயஸ் அவர்களுக்கு..

ஒரு பொன்னான விடியலின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் தாய் மண்ணில் கால் வைத்திருப்பீர்கள். 33 வருடங்களுக்கு முன்பாக பிரிந்த தாயின் கருவறைக்கு மீண்டும் ஒரு சேய் போய் சேர்ந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தாய் மண்ணை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘விடுதலைக்கு விலங்கு’ எழுதிய காலங்களில் இன்று விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை அன்று இல்லை. சிறைக்குள் இருந்து கொண்டே உங்கள் தாய் மண்ணைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தீர்கள். உங்கள் நிலத்திலிருந்து நீங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் உங்கள் உதட்டோரம் ஈழத்துத் தமிழை சற்றே தேக்கி வைத்திருந்தீர்கள்.

ஒரு நாள் என் தாய் மண்ணிற்கு திரும்புவேன் என்கிற உங்களது நம்பிக்கையை எழுத்தில் வடித்த உரிமையோடு இந்த இரவில் இன்பமுருகிறேன்.ஆம். உங்கள் நம்பிக்கையுடன் கலந்த என் எழுத்து நிஜமாகிவிட்டது. இவற்றையெல்லாம் நாம் சிந்தித்த நாட்களில் இதுவெல்லாம் நடக்குமா என்று கூட நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒரு மன உறுதி கொண்ட தீர்க்கதரிசி போல நீங்கள் விடுதலை நாளொன்றின் பொன் கிரகணங்களுக்காக காத்திருந்தீர்கள். உங்கள் மீது அது இன்று படும் பொழுதில் நான் கண்கலங்க உங்களை என் நினைவுகளால் முத்தமிடுகிறேன்.

நமக்குள்ளாக எவ்வளவோ உரையாடல்கள் இருந்திருக்கின்றன. பகிர்ந்து கொள்ள முடிந்த அனைத்தையும் நாம் பகிர்ந்திருக்கிறோம். சில சமயங்களில் எவரிடமும் பகிர முடியாத சிலவற்றை உங்களோடு மட்டும் நான் பகிர்ந்திருக்கிறேன். நின்று நிதானித்து எனக்கு நீங்கள் திசை காட்டியிருக்கிறீர்கள். என்னைக் காணும் போதெல்லாம் புன்னகை பூக்கும் உங்கள் முகம் என் ஆன்மாவில் ஒரு சித்திரமாக உறைந்து இருக்கிறது. குறிப்பாக நீங்கள் பரோலில் வந்த போது என் மைத்துனர் பாக்கியராசன் இல்லத்தில் நாம் இருந்த பொன்னான பொழுதுகள் தேன் வடியும் நினைவுகள்.

இனி உங்களது சிறகு விரும்பிய திசையெல்லாம் விரியட்டும். நிறைய வானம் பார்ப்பீர்கள். கடந்த காலங்களில் நத்தைப் போல ஒரு நாள் ஒன்று நகர்வது இனி குதிரை போல மாறும். கால மாறுதல்களின் வேகம் குறித்து நிறைய சிந்திப்பீர்கள். ஆனாலும் நள்ளிரவில் திடுக்கிட்டு விழிக்கும் போது எங்கே இருக்கிறோம் என்கிற மனப்பதட்டம் உங்களுக்குள் விரியும். உங்கள் அருகில் இருக்கும் அண்ணியும், அம்மாவும் உங்களுக்கு ஆறுதலை தருவார்கள். இதையெல்லாம் குறித்து என் வாழ்நாள் முழுக்க நான் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். என் நினைவுகளால் உங்களைப் பின்தொடர்ந்து கொண்டே இருப்பேன்.

நாம் வெவ்வேறல்ல.. ஒரே நினைவின் இரண்டு பிரதி என்றே உணர்கிறேன். அதனால்தான் உங்களின் உணர்வுகளை நான் உள்வாங்கி எழுத முடிந்தது என நிறைவுக் கொள்கிறேன்.

இந்த மகிழ்வான சமயத்தில் நம் மூத்தவர் தெய்வப் பெருமகன் தடா சந்திரசேகர் இல்லை என்கிற குறை மட்டும் எனக்கு ஏக்கமாய் தேங்கி நிற்கிறது. உங்களுக்கும் அது இருக்கும் தான். என்ன செய்ய.. மூத்தவரின் நிறைவேறாத ஆசையான உங்களது விடுதலை நிறைவேறி விட்ட மகிழ்வில் அவரது ஆன்மாவும் அமைதி அடைந்திருக்கும் என்று நினைவில் நாம் நிலைத்திருப்போம்.

இந்த சமயத்தில் விடுதலை கனவோடு நம்மிடமிருந்து விடைபெற்ற அண்ணன் சாந்தனை நினைவு கூர்கிறேன். அவர் இன்னும் சில காலம் நலமோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அண்ணன்கள் முருகன் ஜெயக்குமார் ஆகியோர் குடும்பங்களோடு இணைகிற இப்பொழுதுகளில் அவர்களது நலமும் வளமும் நீடிக்கட்டும்.

சொந்த ஊருக்கு சென்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள். நம் மூதாதை உங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பார். படையல் போடுங்கள். பரவசமாய் இருங்கள்.
பழையன கழித்து புது வாழ்வு ஒன்றை புத்துணர்ச்சியோடு வாழுங்கள். உங்கள் வலி துயர் தியாகம் ஆகியவற்றை உணர்ந்த எல்லாம் வல்ல தெய்வங்கள் உங்களை காப்பார்கள்.

போய் வாருங்கள் அண்ணா. உங்கள் பால்யத்தில் நீங்கள் திரிந்த நதிக்கரையில் பால் நிலா பொழுதுகளில் காலார நடந்து செல்லுங்கள். நீங்கள் நேசித்த தாய் மண்ணை உங்கள் நினைவுகளின் கண்ணீரில் குழைத்து நெஞ்சில் பூசிக்கொள்ளுங்கள்.

சுருங்கிவிட்ட இந்த உலகில் என்றாவது ஒரு நாள் மீண்டும் நாம் சந்தித்தே தீருவோம். அந்த நாளுக்காக இங்கே நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். இந்த பூமியின் ஏதோ ஒரு இடத்தில் கடற்கரை ஓரத்தில் மகிழ்வான பொழுதில் நாம் நினைத்து சிரித்துப் பேச நிறைய செய்திகள் அன்று பூத்துக் குலுங்கும்.

அன்றைய நாளுக்காக … இனி நாங்கள் காத்திருப்போம்.

நெகிழ்வான நினைவுகளோடும்.. நெஞ்சம் முழுக்க பேரன்போடும்..

என்றும் உங்கள் தம்பி..
மணி செந்தில்.

பிரேமலு-மெல்லிய புன்னகையின் மொழி.

ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு நிறைய பிறமொழித் திரைப்படங்களை மிக எளிதாக பார்க்க முடிகிறது. தேர்தல் பணிக்கு பிறகான காலத்தில் தொடர்ச்சியாக பார்க்க வேண்டும் என நினைத்திருந்த பல திரைப்படங்களை பார்க்க முடிந்தது. குறிப்பாக பிரேமலு.(Premalu -2024) நாம் பல படங்களில் பார்த்து அலுத்து தீர்த்த மிக மிக ஒரு சாதாரண திரைக்கதையை மிகவும் புதிதாக அதே சமயத்தில் வசீகரமாக எடுக்க முடிகிற வித்தை அசாத்தியமானது.

படம் நகரும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு மெல்லிய சிரிப்பினை நம் முகத்தில் தக்கவைத்து, படம் முடியும்போது “அட” போடவைத்து அட்டகாசப்படுத்தி விடுகிறார்கள். இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு சக்தி அதன் கதாநாயகன் தான். இத்தனைக்கும் அவன் கதாநாயகனுக்குரிய எவ்விதமான சாகச திறமைகளும் இல்லாதவன். அவன் நம்மில் ஒருவன். சொல்லப்போனால் நாம் தான் அவன். அதனால் படம் பார்ப்பவர்கள் அனைவரும் அந்த கதாநாயகனில் தன்னைக் கண்டு கொள்கிறார்கள். அவனது மூடத்தனங்களில், போதாமைகளில், இயலாமைகளில், தங்களின் வாழ்வை ஒப்பீடு செய்து தங்களுக்குள்ளாக சிரித்து வெட்கப்பட்டு கொள்கிறார்கள்.

கிரீஷ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை பகத் பாஸில் மற்றும் அவரது நண்பர்கள் தயாரித்திருக்கிறார்கள். கதாநாயகன் சச்சின் சந்தோஷாக நடித்துள்ள நஸ்லீன் தன் நுட்பமான முக பாவனைகளால் பிரமாதப்படுத்துகிறார். எப்போதும் ஏக்கமும் ஏமாற்றமும் தடுமாற்றமும் நிரம்பிய முகத்தோடு அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் “அட நாமும் இப்படி இருந்திருக்கிறோமே..” என நினைக்க வைக்கின்ற திரை மொழி பேரழகு.

கதாநாயகனின் நண்பன் அமல் டேவிஸாக வரும் சங்கீத் பிரதாப் மற்றும் ஏறக்குறைய வில்லன் கதாபாத்திரத்தில் ஆதியாக சியாம் மோகன் என ஆளுக்கு ஆள் அவரவர் பங்கிற்கு பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்.

நகைச்சுவை என்ற பெயரில் பிறரின் மூடத்தனங்களை, போதாமைகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம். முதன் முதலாக ஒரு திரைப்படம் வாயிலாக நம்மை பொருத்திப் பார்த்து நாம் சிரித்துக் கொள்கிறோம். அதுதான் பிரேமலு கொண்டிருக்கும் தனித்துவம்.

தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

அவசியம் பாருங்கள்.

ஒரு மகிழ்வான மாலை உறுதி.

❤️

மணி செந்தில்.

இசைஞானி 81

🟥

ஒரு மனிதன் தனித்துவிடப் படுகின்ற தருணங்களில் தான் தன்னை நோக்கி வரும் தேவ கரங்களை யாசிக்கிறான். தனிமையும் மௌனமும் கனத்திருக்கும் பொழுதுகளில் சங்கடங்களில் சரிந்திருப்பவன் சாய்ந்திருக்க தோள் ஒன்றை தேடுகிறான். அப்போதுதான் இளையராஜாவின் கிட்டார் மீட்டல்களோ, பியானோ தீட்டல்களோ அவனை மீட்க காற்றின் ரதம் ஏறி இதம் சுரக்க வருகின்றன.

உடலெங்கும் செடிகள் மேவிய பழங்கோவில் ஒன்றில் சிற்ப இடுக்கில் ஊடுருவிப் பாயும் ஒற்றை வெளிச்சம். சட்டென தட்டும் ஒரு கைத்தட்டலால் தாழ்வாரத்தில் தானியம் பொறுக்க வரும் பறவை ஒன்றின் சிறகடிப்பு. வயல் நிறைந்த பயிர்களில் தேங்கி இருக்கும் அதிகாலைப் பனி.பின்னிரவில் சாலை விளக்கு ஒன்றின் தனிமை.பள்ளி முடிந்து வரும் குழந்தைகளின் துள்ளல். என இளையராஜாவின் இசையால் உணர்த்தப்படாதவை எது.. எது..??

எல்லாராலும் கைவிடப்படுபவர் இளையராஜாவால் தத்தெடுக்கப்படுபவராகி தத்தளிப்பில் இருந்து மீள்கிறார். தோல்வியடைந்த பின்னிரவுகளில் தனித்திருக்கும் போது ” கண்ணே கலைமானே..” கேட்டு “உனக்கே உயிரானேன்.. எந்நாளும் எனை நீ மறவாதே..” என்று குழைந்து நெகிழாதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்..??

முதன்முதலாக காதலை உணர்ந்த ஒரு மழை மாலைப் பொழுதில் “காதலில் தீபம் ஒன்று..” கேட்டு கன்னக்கதுப்பில் மிளிரும் புன்னகையோடு வானத்தைப் பார்க்காதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்..??

இன்றும் “வருஷம் 16” படத்தின் டைட்டில் பிஜிஎம் இசையை கேட்டுப் பாருங்கள்.


https://youtu.be/bAnsu5udPDs?feature=shared

நாம் வாழ்ந்த வாழ்க்கையை, அப்படியே மீண்டும் சம்பவங்களோடு ரீவைண்ட் செய்து
நமது அகக் கண்களால் நாமே காண முடிகிற அந்த மேஜிக் தான் இளையராஜா.

உங்களில் யார் யார் “கோபுர வாசலிலே” படத்தின் டைட்டில் பிஜிஎம் இசையை கேட்டிருப்பீர்கள்..??

கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூடிய உங்கள் கண்களுக்குள் ஒரு நொடியில் இருண்மையையும், அடுத்த நொடியில் வெளிச்சத்தையும் ஒருங்கிணைக்கிற அந்த குகை வழி ஞானப் பயணத்தை இளையராஜாவை விட யாரால் வழிநடத்த முடியும்..??

என்னைப் பொறுத்த வரையில் அவரை சார்ந்து இசை /மொழி என்றெல்லாம் விவாதங்கள் எழுப்பப்படுவது அர்த்தமற்றவை.
அவரது படங்களில் பின்னணி இசையில் கலாபூர்வமாக காட்சி இடைவெளியில் அவர் விடுகின்ற சிறு மௌனம் கூட அறிகிறவர்களுக்கு பேரிசை தான்..

“அழகி” படத்தில் சாலை ஓரத்தில் பார்க்க நேர்ந்து விட்ட காதலி அளிக்கும் உணவை சாப்பிடும் போது மழை பெய்யும் பொழுதில் அவன் நனையாமல் இருக்க காதலி ஒரு தடுப்பினை பிடிக்க.. அங்கே கொடுப்பார் பாருங்கள் கலை மேன்மை கொண்ட ஒரு மௌனம்..

அதற்குப் பிறகு அவரது கனத்த குரலில் “உன் குத்தமா என் குத்தமா” என இசை எழும்போது உள்ளுக்குள் உணர்ச்சியின் உருண்டை வயிற்றிலிருந்து உருண்டு வந்து தொண்டைக்குள் அடைத்து விழி நனையாதவர் யார் யார்..??

மௌனத்தை கூட தனது இசையின் பக்க வாத்தியமாகக் கொண்டவருக்கு ஏது மொழி.. ??

காதலுக்கு மரியாதை என்கின்ற படத்தின் உச்சக் காட்சியில் எந்த வசனமும் இல்லாமல் எந்த சண்டைக் காட்சியும் இல்லாமல் வயலின்களை வைத்தே கிளைமாக்ஸை நிறுவி இருப்பாரே.. அதற்கு ஏது மொழி..??

பசிக்கும், கனவிற்கும், காதலுக்கும், காமத்திற்கும், தோல்விக்கும், தவிப்புக்கும், வறுமைக்கும், வாழ்வின் இருண்மைக்கும், நெகிழ வைக்கிற தாய்மைக்கும் , நோக வைக்கிற நோய்மைக்கும், இன்னும்.. இன்னும்.. உள்ளுக்குள் ஊறுகிற ஓராயிரம் உணர்ச்சிக்கும் ஏதேனும் மொழி இருக்கிறதா என்றால்.‌.

இருக்கிறது..

அதன் பெயர் இளையராஜா.

அதுதான் எங்கள் மொழி.
அதுதான் எங்கள் வலி
மறக்க இருக்கும் வழி.

எம் வாழ்வின்
எல்லா
நொடிகளிலும்..

இமைக்க மறந்து,
இதயம் நனைந்து,
இசையில் எமை
நிறைக்கும்,
இசை இறைவன்
இளையராஜாவிற்கு,
இனிய பிறந்தநாள்.
வாழ்த்துகள்.

❤️

மணி செந்தில்.

இசைஞானி81

HBDIlayaraja

An Unread message…

❤️

இன்னும்
அலைபேசி திரையில்
நான் பார்க்காத
உனது
குறுஞ்செய்தி ஒன்று
பனிக்கால இரவில்
சாக்கு பையின்
கதகதப்பில்
படுத்திருக்கும்
பூனைக்குட்டி போல
உறைந்திருக்கிறது.

உடனே
திறந்துப் பார்க்க
முடியாமல்
படிக்காத குறுஞ்செய்தியை
உறைந்த பார்வையோடு
பார்த்துக் கொண்டே
இருக்கிறேன்.

அது விரல் படாத
பியானோ பொத்தான்கள்
போல ஏதேனும் இசைத்துளி ஒன்றை உள்ளுக்குள்
தேக்கி இருக்கக்கூடும்
என எண்ணுகிறேன்.

அல்லது

ஒரு பெரு மழையோ
ஒரு சுடும் பாலையோ
இன்னும் ஏதாவது
இருக்கக்கூடும்.

இந்தக் குறுஞ்செய்தியைப்
படிக்க நான்
தனிமையும்
பனியும் நிறைந்த
ஒரு மலைமுகட்டை
தேட வேண்டி இருக்கிறது.

சில சமயங்களில்
உன்
குறுஞ்செய்திகளை
படிக்கும்போது
என் கழுத்தை கவ்வும்
ஒரு ஓநாய்
காத்திருப்பது என்பது
எதேச்சையானது அல்ல‌.

பிரிபடாத
அந்தக் குறுஞ்செய்தியில்
ஏதேனும் காரணங்கள்
இருந்து விடக் கூடாது என அஞ்சுகிறேன்.

காரணங்கள் இல்லாமல் குறுஞ்செய்தி
அனுப்பி
கொண்ட காலங்கள்தான்
பொன்னிழைப் பொழுதுகள்.

காரணங்கள்
அலுப்புட்டுகின்றன.
காரணங்கள்
சுயநல ஒப்பனையோடு
துருத்திக் கொண்டு தெரிபவை.

காரணங்களே
இல்லாமல்
அனுப்பப்படும்
குறுஞ்செய்திகள் தான்
காதலின் மது அருந்தி
பேரன்பின் நிர்வாணத்தோடு
இமைகள் கிறங்க
வந்திறங்கி
நம் இதயம் இடறுபவை.

காரணங்கள்
இல்லாமல்
குறுஞ்செய்தி அனுப்புவது
என்ன
காரணத்திற்காக
என்று கேட்கிறார்கள்.

நீயும் நானும்
இருக்கிறோம்
என்கிற காரணம்
ஒன்றே ஒரு
குறுஞ்செய்தி
அனுப்புவதற்கு போதாதா..

அவர்களுக்குத்
தெரியாது.
எழுத்துக்கள் இல்லாத
வெறுமை
குறுஞ்செய்திகளில் கூட
வாசிக்கக்கூடிய செய்திகள் இருக்கின்றது என்று.

அதையும் தாண்டி..
யாருக்கேனும்
காரணங்கள் தேவைப்பட்டால்
நம்மிடம் உதிர்த்துக்கொள்ள
ஒரு கன்னக் கதுப்புப்
புன்னகையும்,
பின்னணியில்
இசைந்துக்கொள்ள
ஒரு இளையராஜாவின் இசைத்துண்டும்
தயாராகவே இருக்கின்றன
என்பதே காரணங்களாக இருக்கின்றன என்று
அவர்களுக்கு எப்படி
உணர்த்துவது..??

பிரிவின் கதகதப்பு.

❤️

கனவுகளை
துரத்திய காலம்
முடிந்து
கனவுகள்
இப்போது துரத்திக் கொண்டிருக்கின்றன.

நான்
அஞ்சி ஓடிக்
கொண்டிருக்கிறேன்.

❤️

அப்போதே சொல்லி
இருக்கலாம் தான்‌.

அப்போது
சொல்லி இருந்தால்
நீ சற்றே
ஏக்கத்தோடு
அப்போதே
சொல்லி இருக்கலாமே
என இப்போது
சொல்லி
இருக்க மாட்டாய்.

அதனால்தான்
அப்போது
சொல்லவில்லை.

❤️

பிரிந்து
செல்வதற்கு முன்
செயற்கையான
சிரிப்போ
ஒப்பனையான
கை குலுக்கல்களோ
தயாரிக்கப்பட்ட
கண்ணீர் துளியோ
என்னை
அவமானப்படுத்துகின்றன.

நிர்கதியான
ஒரு மௌனம்.
நிராதரவான
ஒரு பார்வை.

இது போதாதா..

நீயும் நானும்
நாமாக இருந்ததற்கு.

❤️

பிரிவின்
மழைநாளில்
நீ இறுதியாய் அமர்ந்த
அந்த உணவக
இருக்கையின்
எதிரே
நான் தனியே
அமர்ந்திருந்தேன்.

திடீரென எங்கிருந்தோ
வந்த ஒரு இளைஞன்
அலைபேசியில்
யாரிடமோ
கோபமாக பேசிவிட்டு
ஒரு முழு பிரியாணியை
ஆர்டர் செய்து
பொறுமையாக
சுவைத்து சாப்பிட
தொடங்கினான்

எனக்கு ஏனோ
நிம்மதியாக இருந்தது.

❤️

ஏதோ ஒரு வாழ்க்கை
நீ இல்லாத
அர்த்தமற்ற பொழுதுகள்
என்றெல்லாம்
விம்மி வெடித்து
நீ அலைபேசியில்
கண்ணீர் உகுத்த
அந்தக் குளிர்கால இரவில்..

அதுவரை
நான்
நினைக்க முடியாமல்
வெறுத்த நம் பிரிவு
கதகதப்பாய்
ஒரு போர்வை போல
என் மீது போர்த்தத்
தொடங்கியது.

❤️

நாசுக்கு பார்க்காமல்
இடம் பொருள் எண்ணாமல்
தகுதி வயது
காலம் மறந்து
அடக்கி
வைத்து முழுங்கத்
தோன்றாமல்
நேர்மையாய்
அழுது விட முடிவது
எவ்வளவு சுகமானது…

❤️

“சாட்டை”க்கு பாராட்டுக்கள்..

LGBTQ+ வினரை பற்றி தம்பி சாட்டை துரைமுருகன் மிக முக்கியமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. முதலில் இதை விவாத பொருளாக மாற்றியதற்கே தம்பி துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும், வரலாற்றால் வஞ்சனை செய்யப்பட்டவர்களுக்கும் வழங்கப்படுவது தான் நீதி. பாதிக்கப்பட்டவர்களோடு நிற்பது தான் அறம். அதைஉணர்ந்து தம்பி துரைமுருகன் செயல்பட்டிருப்பதை மனதார பாராட்டுகிறேன்.

1960களில் ஓரின பால் ஈர்ப்பு என்பது மனநலம் சார்ந்த பிரச்சனையாக கருதப்பட்டு வந்த நிலையில் நவீன மருத்துவம் அது “ஹார்மோன் மாறுபாட்டினால் ஏற்படுகிற நிலைமை” என்பதை கண்டறிந்த பிறகு உலகளாவிய அளவில் LGBTQ+ வினரைப் பற்றி பார்வைகள் மாறி இருக்கின்றன.

1870களில் இயற்றப்பட்ட ஆங்கிலேய சட்டத்தின் பிரதியான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 ஓரின பால் ஈர்ப்பை இயற்கைக்கு மாறான உறவு என வரையறுத்து தண்டனைக்குரிய குற்றமாக வைத்திருந்ததை 2018 ல் உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து ஓரின பால் ஈர்ப்பு குற்றச் செயல் அல்ல என அறிவித்தது. ஆனால் சமத்துவத்திற்கு எதிரான பிரிவு 377 ஐ ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதையும் அது பாராளுமன்றத்திற்கு தான் உண்டு என்பதையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதேபோல் உலகளாவிய முறையில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் ஓரின சேர்க்கை திருமணங்களை அங்கீகரித்து இருக்கின்றன. இந்த முற்போக்கு வரலாற்றின் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் இயற்றி அவர்களுக்கான கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு போன்றவற்றில் காட்டப்படும் பாகுபாட்டை தடுக்கிறது.

நவீன அறிவியல் /மருத்துவ சிந்தனைகளால், கண்டுபிடிப்புகளால் பழைமை நிறைந்த பிற்போக்கு கருத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. காலம் காலமாய் புறக்கணிக்கப்பட்ட சமூகமாய் இருந்த LGBTQ+ வை சேர்ந்தவர்கள் பொதுச் சமூகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதற்கு நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தை அவர்கள் ‘பெருமை மாதமாக” ( Pride Month) அறிவித்து பேரணிகள் நடத்துகிறார்கள்.

பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து தங்களுக்கான உரிமைகளை, தங்களுக்கான வாய்ப்புகளை அவர்கள் கோருகிறார்கள். இது மனநலம் சார்ந்த பிரச்சனை அல்ல, ஹார்மோன் மற்றும் உடல் மாறுதல்களால் ஏற்படுகின்ற விளைவு என்பதை பொதுச் சமூகத்திற்கு புரிய வைக்க அவர்கள் மிகுந்த அவமானங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும் நடுவில் நீண்ட காலம் பயணித்திருக்கிறார்கள்.

எண்பதுகளில் வெளியான ஒரு தலை ராகம் திரைப்படத்தில்
” கொக்கரக்கோ கோழி கூவுற வேளை” என கிண்டலும், அவமானமும் நிறைந்த சின்னங்களாக பொதுச் சமூகத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டவர்கள் அடைந்த இழிவுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று அவர்களையும் மனிதர்களாக பார்க்கின்ற சக உயிரிகளாக பார்க்கின்ற குரல்கள் ஆங்காங்கே எழ தொடங்கியிருக்கின்றன.

திருநங்கைகள் பெரும்பாலும் கண்ணியமானவர்களாக காட்டக்கூடிய திரைப்படங்கள் வெளியாக தொடங்கி இருக்கின்றன. சரத்குமார், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் கூட திருநங்கைகளாக நடிக்க முன்வருவது அனைத்தும் மாறி வருகிற முற்போக்கு சிந்தனைகளின் வெளிப்பாடுகளே. ஒரு தலை ராகம் தொடங்கி காஞ்சனா/ சூப்பர் டீலக்ஸ் வரையிலான காட்சி அமைப்பு மாறுதல்களின் வரலாற்றுக்குப் பின்னால் எண்ணற்றவர்களின் துயர நிறைந்த போராட்டக் கதைகள், அவமான வலிகள், ஒதுக்கப்பட்டவர்களின் காயங்கள் ஒளிந்து இருக்கின்றன.

சமீபத்தில் ப்ரைமில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்கின்ற தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்று லெஸ்பியனாக வடிவமைக்கப்பட்டு அவர்களின் துயரம் பற்றி காட்சி அமைப்புகள் இருந்ததும் , பல வெப் தொடர்களில் ஓரின பால் ஈர்ப்பு பற்றி வெளிப்படையாக பேச தொடங்கி இருப்பதும் ஆரோக்கியமான காட்சிகளே.

நம்மோடு பிறந்தவர்கள் அவர்களை ஏன் நாம் அருவெறுப்பாக பார்த்து ஒதுக்க வேண்டும் என்கிற கேள்வி இன்று பரவலான பொதுக் கேள்வியாக மாறி இருக்கிறது. அவர்களையும், பாலியல் குற்றவாளிகளையும் இணைத்து பேசுவது போன்ற பிற்போக்குத்தனங்கள் குறைந்து இருக்கின்றன. காலங்காலமாக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிய திரைப்படங்கள் எவ்வாறு இன்று குறைந்து போயிருக்கிறதோ, பிற்போக்கு சிந்தனைகளின் வடிவமாக பார்க்கப்படுகிறதோ அதேபோல LGBTQ+ வினரை தவறாக காட்டுகின்ற திரைப்படங்களும் குறைந்திருக்கின்றன என்பது ஆறுதலான மாறுதல்.

பாலியல் தேர்வு என்பது அவரவர் தனிநபர் சார்ந்தது.LGBTQ+ வினரில் ஒரு பாலின ஈர்ப்பாளர்கள், இரு பாலின ஈர்ப்பாளர்கள் இருப்பது போல எந்த பாலினத்தின் மீதும் ஈர்ப்பு இல்லாதவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இயல்பான மனிதர் வாழும் சாதாரண வாழ்விற்காக, எல்லோருக்கும் கிடைக்கும் சாதாரண உரிமைகளுக்காக சமத்துவ சமூகம் வேண்டி அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு இப்போதைய தேவையெல்லாம் நம் புரிதல் மட்டுமே.

மற்றபடி பிற்போக்குத்தனங்களின் பிதற்றல்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுவே கத்தி தானாக ஓய்ந்துவிடும். இது வரலாற்றில் எப்போதும் நடப்பது தானே.

மற்றபடி புரிந்துணர்வு மிக்க, ஆகச் சிறந்த, மனம் நிறைந்த பாராட்டப்பட வேண்டிய காணொளி வெளியிட்ட Saattai- சாட்டை க்கும், என் ஆருயிர் இளவல் சாட்டை துரைமுருகனுக்கும், எனது மனமார்ந்த பாராட்டு‌. பேரன்பு.

அவன் என் தம்பி என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

மணி செந்தில்.

Powered by WordPress & Theme by Anders Norén