🟥

ஒரு மனிதன் தனித்துவிடப் படுகின்ற தருணங்களில் தான் தன்னை நோக்கி வரும் தேவ கரங்களை யாசிக்கிறான். தனிமையும் மௌனமும் கனத்திருக்கும் பொழுதுகளில் சங்கடங்களில் சரிந்திருப்பவன் சாய்ந்திருக்க தோள் ஒன்றை தேடுகிறான். அப்போதுதான் இளையராஜாவின் கிட்டார் மீட்டல்களோ, பியானோ தீட்டல்களோ அவனை மீட்க காற்றின் ரதம் ஏறி இதம் சுரக்க வருகின்றன.

உடலெங்கும் செடிகள் மேவிய பழங்கோவில் ஒன்றில் சிற்ப இடுக்கில் ஊடுருவிப் பாயும் ஒற்றை வெளிச்சம். சட்டென தட்டும் ஒரு கைத்தட்டலால் தாழ்வாரத்தில் தானியம் பொறுக்க வரும் பறவை ஒன்றின் சிறகடிப்பு. வயல் நிறைந்த பயிர்களில் தேங்கி இருக்கும் அதிகாலைப் பனி.பின்னிரவில் சாலை விளக்கு ஒன்றின் தனிமை.பள்ளி முடிந்து வரும் குழந்தைகளின் துள்ளல். என இளையராஜாவின் இசையால் உணர்த்தப்படாதவை எது.. எது..??

எல்லாராலும் கைவிடப்படுபவர் இளையராஜாவால் தத்தெடுக்கப்படுபவராகி தத்தளிப்பில் இருந்து மீள்கிறார். தோல்வியடைந்த பின்னிரவுகளில் தனித்திருக்கும் போது ” கண்ணே கலைமானே..” கேட்டு “உனக்கே உயிரானேன்.. எந்நாளும் எனை நீ மறவாதே..” என்று குழைந்து நெகிழாதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்..??

முதன்முதலாக காதலை உணர்ந்த ஒரு மழை மாலைப் பொழுதில் “காதலில் தீபம் ஒன்று..” கேட்டு கன்னக்கதுப்பில் மிளிரும் புன்னகையோடு வானத்தைப் பார்க்காதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்..??

இன்றும் “வருஷம் 16” படத்தின் டைட்டில் பிஜிஎம் இசையை கேட்டுப் பாருங்கள்.


https://youtu.be/bAnsu5udPDs?feature=shared

நாம் வாழ்ந்த வாழ்க்கையை, அப்படியே மீண்டும் சம்பவங்களோடு ரீவைண்ட் செய்து
நமது அகக் கண்களால் நாமே காண முடிகிற அந்த மேஜிக் தான் இளையராஜா.

உங்களில் யார் யார் “கோபுர வாசலிலே” படத்தின் டைட்டில் பிஜிஎம் இசையை கேட்டிருப்பீர்கள்..??

கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூடிய உங்கள் கண்களுக்குள் ஒரு நொடியில் இருண்மையையும், அடுத்த நொடியில் வெளிச்சத்தையும் ஒருங்கிணைக்கிற அந்த குகை வழி ஞானப் பயணத்தை இளையராஜாவை விட யாரால் வழிநடத்த முடியும்..??

என்னைப் பொறுத்த வரையில் அவரை சார்ந்து இசை /மொழி என்றெல்லாம் விவாதங்கள் எழுப்பப்படுவது அர்த்தமற்றவை.
அவரது படங்களில் பின்னணி இசையில் கலாபூர்வமாக காட்சி இடைவெளியில் அவர் விடுகின்ற சிறு மௌனம் கூட அறிகிறவர்களுக்கு பேரிசை தான்..

“அழகி” படத்தில் சாலை ஓரத்தில் பார்க்க நேர்ந்து விட்ட காதலி அளிக்கும் உணவை சாப்பிடும் போது மழை பெய்யும் பொழுதில் அவன் நனையாமல் இருக்க காதலி ஒரு தடுப்பினை பிடிக்க.. அங்கே கொடுப்பார் பாருங்கள் கலை மேன்மை கொண்ட ஒரு மௌனம்..

அதற்குப் பிறகு அவரது கனத்த குரலில் “உன் குத்தமா என் குத்தமா” என இசை எழும்போது உள்ளுக்குள் உணர்ச்சியின் உருண்டை வயிற்றிலிருந்து உருண்டு வந்து தொண்டைக்குள் அடைத்து விழி நனையாதவர் யார் யார்..??

மௌனத்தை கூட தனது இசையின் பக்க வாத்தியமாகக் கொண்டவருக்கு ஏது மொழி.. ??

காதலுக்கு மரியாதை என்கின்ற படத்தின் உச்சக் காட்சியில் எந்த வசனமும் இல்லாமல் எந்த சண்டைக் காட்சியும் இல்லாமல் வயலின்களை வைத்தே கிளைமாக்ஸை நிறுவி இருப்பாரே.. அதற்கு ஏது மொழி..??

பசிக்கும், கனவிற்கும், காதலுக்கும், காமத்திற்கும், தோல்விக்கும், தவிப்புக்கும், வறுமைக்கும், வாழ்வின் இருண்மைக்கும், நெகிழ வைக்கிற தாய்மைக்கும் , நோக வைக்கிற நோய்மைக்கும், இன்னும்.. இன்னும்.. உள்ளுக்குள் ஊறுகிற ஓராயிரம் உணர்ச்சிக்கும் ஏதேனும் மொழி இருக்கிறதா என்றால்.‌.

இருக்கிறது..

அதன் பெயர் இளையராஜா.

அதுதான் எங்கள் மொழி.
அதுதான் எங்கள் வலி
மறக்க இருக்கும் வழி.

எம் வாழ்வின்
எல்லா
நொடிகளிலும்..

இமைக்க மறந்து,
இதயம் நனைந்து,
இசையில் எமை
நிறைக்கும்,
இசை இறைவன்
இளையராஜாவிற்கு,
இனிய பிறந்தநாள்.
வாழ்த்துகள்.

❤️

மணி செந்தில்.

இசைஞானி81

HBDIlayaraja