🛑

சில ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி வேலை சம்பந்தமாக கும்பகோணத்தில் புறவழிச் சாலைக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது..காரை நிறுத்திவிட்டு அலைபேசியில் யாரிடமோ நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எதிரே வந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் என்னை உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருப்பது போல எனக்குத் தோன்றியது.
நானும் அவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன். எங்கே என்றுதான் எனக்கு நினைவில்லை. அவர் தயங்கிவாறே அருகே வந்து “செந்தில் தானே நீங்க.. ? “எனக் கேட்டார். “மன்னார்குடி தானே..?” மறுபடியும் கேட்க என்றும் கேட்க, ஆமாம் என நான் தலையசைத்தேன்.
“என்னை தெரியலையா.. நான் தான்பா ராஜா” என்றார். ராஜா என்றால், நான் குழம்பிக் கொண்டிருந்த போது.. “அதான்பா மன்னார்குடி ஹவுசிங் யூனிட் ராஜா, ராக்கெட் ராஜா.. ” என சொன்னபோது நான் அப்படியே அதிர்ச்சியோடு வண்டியை விட்டு வெளியே வந்து விட்டேன்.

ஏனென்றால் ‘ராக்கெட் ராஜா’ எனது பதின் பருவத்து ஹீரோ. எங்கள் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் GCC ( Gavaskar cricket club) என்ற ஒரு அணி இருந்தது. அண்ணன் ஸ்டீபன் தான் கேப்டன். அதில் அண்ணன் ராக்கெட் ராஜா வேகப்பந்துவீச்சாளர். கூடுதலாக கபில்தேவ் போல பேட்ஸ்மேன்.

இன்னும் எனக்கு நினைவிருக்கிறது அவர் வேகமாக ஓடிவந்து பந்தை வீசும் போது, பந்து சீறிப் பாய்கையில் .. உண்மையிலேயே அது ராக்கெட் தான்.

அண்ணன் ராக்கெட் ராஜாவும், அண்ணன் காவுக்கனியும் எங்கள் GCC அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள். முதல் இரண்டு ஓவர்கள் வீசும் போதே எதிரணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களை வந்த வேகத்தில் திருப்பி அனுப்பி விடுவார்கள். அவ்வளவு திறமையான வேகப் பந்துவீச்சாளர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் குடியிருந்த B-6 பிளாக்கிற்கு பின்னால் இருக்கின்ற மிகப்பெரிய வயல்வெளி கிரிக்கெட் மைதானமாக மாற்றப்பட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.

மன்னார்குடியில் “பூவா” என்ற ஒரு அண்ணன் இருந்தார். அவர்தான் நடக்கின்ற கிரிக்கெட் போட்டியின் வர்ணையாளர். சுவாரசியமாக வர்ணனை செய்வார். ” ஹவுசிங் யூனிட் முனையை நோக்கி இதோ ராக்கெட் வருகிறது..” என்று பூவா அறிவிக்கும் போது ராஜா அண்ணன் பௌலிங் போட தயாராகி நிற்பார். நாங்கள் எல்லாம் பெரிய சத்தம் போட்டு ஆர்ப்பரிப்போம். இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

எங்களைப் பொறுத்த வரையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல. அது வாழ்வியலின் ஒரு அங்கம். நான் ஒரு நடக்க முடியாத மாற்றுத்திறனாளி என்றாலும் கூட,GCC அணி என்னை ஒருபோதும் ஒதுக்கியது இல்லை. குறிப்பாக அண்ணன்கள் ஸ்டீபன், ராஜா போன்றோரெல்லாம் அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க வந்த என்னை அழைத்து எனக்கு சுழற் பந்துவீச்சு கற்றுக் கொடுத்ததெல்லாம் என் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது. என் எதிர் பிளாக்கில் இருந்த விஜயகுமார் என்ற விஜி அண்ணன் தான் எங்கள் அணியின் விக்கெட் கீப்பர். அவர்தான் எனக்கு, என் நண்பர்கள் ராம்நாத், பாலு, சதனுக்கு கேட்ச் பிராக்டிக்ஸ் அளிப்பார். உடல் குறையை காட்டி என்னை எப்போதும் அவர்கள் ஒதுக்கியதே இல்லை.

என்னால் ஓட முடியாது எனத் தெரிந்து நடக்கும் பயிற்சி ஆட்டங்களில் என்னையும் சேர்த்துக்கொண்டு என்னை ஸ்லீப்பில் விஜி அண்ணன் நிற்க வைப்பார். அப்போது நான் நடப்பதற்கு இடது காலில் பித்தளையிலான காலிஃபர் அணிந்திருப்பேன். நான் நடக்க முடியாதவன் என்பதை அந்த வயதில் நான் உணர்ந்ததே இல்லை. ஏனெனில் அந்த அண்ணன்மார்கள் என்னை பறக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த உலகம் எவ்வளவு கருணையானது , வாழ்வின் பல தருணங்களில் என்னை காயப்படாமல் காப்பாற்றி இருக்கிறது என நெகிழ்வுடன் கருதி இன்றளவும் நான் நன்றியோடு இருப்பது எங்கள் GCC அணி அண்ணன்களை நினைத்துதான்.

ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சர்பட்டா பரம்பரை போல எங்கள் GCC அணிக்கு ஒரு பாரம்பரியம் உண்டு ‌. பெரும்பாலும் எங்கள் வீட்டு வசதி வாரிய குடியிருப்பத்தை சேர்ந்தவர்கள் தான் அதில் இடம்பெற முடியும். சில அபூர்வமான பிளையர்கள் வெளியே வந்தும் எங்கள் அணியில் விளையாடினார்கள்.

ஒருமுறை மன்னார்குடி நகரத்தின் உயரிய அணிக்கும், எங்களது GCC அணிக்கும் நடந்த இறுதிப் போட்டியின் போது, முன்னணி வீரர்கள் எல்லோரும் அவுட் ஆகி வெளியேறிய பிறகு, விக்கெட் கீப்பரான அண்ணன் விஜியும், பேட்ஸ்மேன் ஆன அண்ணன் ராக்கெட் ராஜாவும் களத்தில் இருந்தார்கள். கடைசி மூன்று பந்துகள். ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி. அண்ணன் விஜி விக்கெட் கீப்பர் என்பதால் தொடர்ந்து சிரமப்பட்டு கொண்டிருந்தார். எதிரணியின் வேகப்பந்துவீச்சாளர் அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்து மிரட்டிக் கொண்டிருக்கும்போது, இங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் எல்லாம் அழ ஆரம்பித்து விட்டேன். அருகில் நின்ற அணியின் கேப்டன் ஸ்டீபன் அண்ணன்
” விளையாட்டுல யாரு ஜெயிச்சா என்னடா.. நல்லா விளையாடுறவங்க ஜெயிப்பாங்க.. விடு. எப்போதும் நாமே ஜெயிக்கணும்னு நினைக்காதே..” எனச் சொல்லி என்னை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கிறார். அருகில் என் நண்பர்கள் ராம்நாத், சதன், பாலு, செந்தில் , மாரிமுத்து என பலரும் கண்கலங்கி அமர்ந்திருக்கிறார்கள். கடைசி ஓவரில் முதல் மூன்று பந்துகளையும் அடிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் அண்ணன் விஜி திணற நாங்கள் எல்லாம் “விஜிண்ணே.. ஒரே ஒரு ரன் அடி” என்று கத்தியது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அதேபோல் மூன்றாவது பந்தில் அண்ணன் விஜி ஒரு ரன் எடுத்துக் கொண்டு ஓட, மறுபுறம் வந்த ராக்கெட் ராஜா அண்ணன் தன் அக்மார்க் ஸ்டைலில் ஸ்கொயர் கட்டில் ஒரு நான்கு அடித்து போட்டியில் வென்றது மறக்க முடியாத நினைவு.

……

1983 கிரிக்கெட்டில் இந்தியா உலகக் கோப்பை வென்ற பிறகு கிரிக்கெட் என்ற விளையாட்டு இந்திய பெருநிலத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்தது. எண்பதுகளில் ட்ரான்சிஸ்டர் ரேடியோக்கள் மூலமாக கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்கிற ஒரு புதிய தலைமுறை உருவானது. கொஞ்சம் சிரமமான ஆங்கிலம் தான். ஆனாலும் கண்டிப்பாக உற்றுக் கேட்டால் 4, 6, அவுட் போன்றவற்றை புரிந்து கொள்ளலாம். பொங்கல் விழாவின்போது பெரும்பாலும் சென்னை சேப்பாக்கத்தில் ஏதோ ஒரு நாட்டோடு இந்திய அணி கிரிக்கெட்டில் மோதும். அப்போதெல்லாம் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகள் தான். சென்னையில் கிரிக்கெட் நடக்கும் போது மட்டும் தமிழில் வர்ணனை கேட்கலாம். “வாலாஜா சாலை முனையில் இருந்து கபில்தேவ் பந்து வீச வருகிறார்..” என தொடங்கும் போது இன்பத் தேன் வந்து நம் காதுகளில் சத்தியமாக பாயும். பிறகு தொலைக்காட்சிகள் வந்து எல்லாம் மாறிப்போனது.

எண்பதுகளின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் தமிழகத்தின் எல்லா தெருக்களிலும் கிரிக்கெட் விளையாடக்கூடிய அணிகள் இருந்தன. அப்படித்தான் எங்களது GCC அணியும் மன்னார்குடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தோன்றியது. அதன் வெற்றிக்கு அங்கே குடியிருந்த ஒவ்வொரு குடும்பமும் வேண்டுவார்கள். என் அம்மா மற்றும் எதிர் வீட்டில் இருந்த திலகவதி‌ அத்தை, அதேபோல் எதிர்பிளாக்கில் இருந்த லதா அக்கா எல்லோரும் மாடியில் நின்று மேட்ச் பார்ப்பார்கள். இங்கே அணி வெற்றி பெறும் போதெல்லாம் அவர்கள் மாடியில் இருந்து கைத்தட்டி ஆர்ப்பரிப்பது எல்லாம் ஒரு கனவு காட்சி போல இருக்கின்றன.

….

சமீபத்தில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்த “லப்பர் பந்து” பார்த்தேன். அதில் வருகின்ற “கெத்து” தினேஷ் எனக்கு பல ஹவுசிங் யூனிட் அண்ணன்களை நினைவூட்டினார். இசைஞானி இசையில்” நீ பொட்டு வைத்த தங்க குடம்‌..” எனப் பாட்டு ஒலிக்கும் போது தினேஷ் நடந்து வருகிற அந்தக் காட்சி எங்கள் தலைமுறையில் நாங்கள் அடிக்கடி எங்கள் கண்களால் பார்த்து சிலிர்த்த காட்சி. உண்மையில் எங்கள் அண்ணன்கள் கெத்து தினேஷ் போலத்தான் கதாநாயகர்களாக இருந்தார்கள். நாங்கள் எல்லாம் அவர்களது ரசிகர்கள்.

எங்கள் நிலங்களான மன்னார்குடி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்ட “களவாணி” திரைப்படம் மிக முக்கியமான பண்பாட்டு வாழ்வியல் ஆவணம். அதற்குப் பிறகு “லப்பர் பந்து” போல தமிழ் நிலத்தின் மிக முக்கியமான “விளையாட்டு” என்கிற ஒரு பண்பாட்டுக் கூறினை எடுத்துக்கொண்டு இவ்வளவு சுவாரசியமாக அடையாளப்படுத்திய திரைப்படம் வேறு எதுவும் இல்லை.

எளிய மனிதர்களில் மின்னக்கூடிய விளையாட்டு வீரர்கள் அந்தப் பகுதியில் கதாநாயகர்களாக இருந்தார்கள் என்பதை “லப்பர் பந்து” ஆவணப்படுத்தி இருக்கிறது. அவர்களால் Pad கட்ட முடியாது. ஒழுங்கான ஆடைகள் இருக்காது. ஆனால் அடிக்கிற அடி ஒவ்வொன்றும் இடிதான்.

குறிப்பாக கதாநாயகியாக வருகிற கெத்து தினேஷ் மனைவி கதாபாத்திரம் மிக நுட்பமாக வரையப்பட்டிருப்பது வியக்க வைக்கிறது.
பிள்ளைகள் வளர்ந்த பிறகு மனைவியை தாயாக நேசிக்கின்ற குணம் பெருகுவதை பலரும் உணர்கிறார்கள். ஊரில் கதாநாயகனாக இருந்தாலும், வீட்டின் நான்கு சுவர்களுக்கு உள்ளாக அவன் அன்பின் அடிமை.
குறிப்பாக இந்த திரைப்படத்தில் “மாமியார் -மருமகள்” இடையிலான உறவு இவ்வளவு அழகாக கலாபூர்வமாக வேறு எந்த திரைப்படத்திலும் இதுவரை காட்டப்பட்டதில்லை.
அதேபோல் எப்போதும் முட்டித்திரியும் “மாமனார்-மருமகன்” உறவும் அவ்வாறுதான்.ரசனையாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

படம் சாதி அரசியலுக்கான அனைத்தையும் கொண்டிருந்தாலும், எதையும் போதிக்காமல் வாழ்வின் ஓட்டத்தோடு சாதி மறுப்பியலை உளவியலாக மாற்றுகிற வித்தையை ஒரு கவிதை போல நிகழ்த்தி இருக்கிறது. உண்மையில் திரைமொழியின் அழகு இதுதான்.

திரைப்படம் என்பது ஒரு காட்சி மொழி ஊடகம். அங்கே வார்த்தைகளுக்கு வேலை இல்லை. மாறாக கலையம்ச காட்சிகளின் மூலமாக கதாபாத்திரங்கள் ஊடாக கதையை நிகழ்வாக மாற்றி சொல்வது என்பது பல பிரம்மாண்ட திரைப்படங்களில் தவறும் சவால்.

ஆனால் “லப்பர் பந்து” இதை அனாசியமாக தூக்கி போடுகிறது. ஒரு எளிய கதையின் மூலம் , எத்தனை திரை மொழி அடுக்குகளையும் (Screen Play layers) சுவாரசியமாக உருவாக்க முடியும் என்பதற்கு சமீபத்திய வெற்றிகரமான உதாரணம் “லப்பர் பந்து”. படத்தில் ஒரு காட்சி கூட தேவையற்ற காட்சி இல்லை. Editor வித்தைக்காரர். ஒளிப்பதிவும் அப்படித்தான். ஒரு திரில்லர் படம் போல ஒவ்வொரு காட்சியிலும் இருக்கை நுனியில் நம்மை அமர வைத்து அட்டகாசம் செய்து விடுகிறார்கள். இதற்கு நடுவில் சாதி மறுப்பு /பெண்ணியம்/அரசியல் என அனைத்தையும் போகிற போக்கில் சொல்லி அதற்கான தீர்வுகளையும் சொல்லி, ஆனால் எதையும் போதிக்காமல், நதியோட்டம் போல இயல்பாக கடத்துகிறார்கள்.இசை ஷான் ரோல்டன். அளவான அழகான எளிய இசை. அதுதான் சமீப காலங்களில் இல்லாதது.

இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் கெத்து தினேஷ் மனைவியாக நடித்த சுவாசிகா என்பவரின் நடிப்பு. மிரட்டி இருக்கிறார். தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் கதாநாயகனை துரத்திக் கொண்டு ஓடும் வழமை கதாநாயகி அல்ல அவர். அவர் மலையாளத்தில் நடித்த “சதுரம்” என்கின்ற ஒரு சுமாரான திரைப்படத்தை ஏற்கனவே நான் பார்த்திருக்கிறேன். அதையும், இதையும் ஒப்பிட்டால் இது அசுரப் பாய்ச்சல். ஏறக்குறைய பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த் வருவது போல இதில் சுவாசிகா வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கம் அதிர்கிறது. அன்பு பாசம் நெகிழ்ச்சி காதல் கோபம் தாய்மை கண்டிப்பு என அனைத்தையும் கலந்து கட்டி பிரித்து மேய்ந்து இருக்கிறார் சுவாசிகா‌.

அட்டக்கத்தி தினேஷ் என்கின்ற ஒரு அற்புதனை “கெத்து தினேசாக” “லப்பர் பந்து” மாற்றிவிட்டது. இதுவரை அவரது வாழ்க்கையில் திறக்காத பல கதவுகள் இனி திசையெல்லாம் திறக்க கூடும். ‌அதேபோல் ஹரிஷ் கல்யாண், சஞ்சனா என யாரும் ஒரு சிறிய தவறை கூட செய்யாமல் முழுமையான ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார்கள்.

எனக்கெல்லாம் லப்பர் பந்து பார்த்துவிட்டு இரவு தூங்க முடியவில்லை . காதெல்லாம் பூவா அண்ணன் கமெண்ட்ரி பண்ணுவது போல எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. ஸ்டீபன் அண்ணன் பேட்டிங் செய்வது போலவும், ராஜா அண்ணன் ரன்னர் அப் நிற்பது போலவும் பலவிதமான காட்சிகள் நினைவில் தோன்றி கொண்டே இருந்தன.

எங்கள் தலைமுறையில் “என்றும் அன்புடன்” என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் “துள்ளித் திரிந்ததொரு காலம்” என்ற கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடல் உண்டு. அதன் பல்லவி இப்படி வரும்.

“அன்னை மடி தனில் சில நாள்,
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்,
உண்ண வழியின்றி சில நாள்,
நட்பின் அரட்டைகள் சில நாள்,”

…. என நீளும் அந்தப் பல்லவி,

“ஓடி முடிந்தது காலங்கள்
காலங்கள்..
பூங்கொடியே …!”

என இவ்வாறு முடியும்.

கால ஓட்டத்தைப் பற்றி ஒருவித வலியோடு “வேறு என்ன செய்ய முடியும்..” என்பதான பெருமூச்சுதான் அந்தப் பாடல்.

அது போல நம் வாழ்வும் ஏதேதோ புரியாத நம்பிக்கைகளோடு கொண்டே இருக்கிறது. நாமும் பெருமூச்சோடு அதன் ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அசாத்திய அந்த ஓட்டத்தில் எங்கோ காயம் பட்டு நாம் கலங்கி நிற்கும் போதெல்லாம், இளைப்பாறுதல் தருவது கடந்த கால நினைவுகளே..!

நம் நினைவோடையில் கடந்த காலம் ஒரு செம்பருத்தி மலராக மிதந்து கொண்டிருக்கிறது. அதைவிட அழகான மலர் உலகில் வேறு உண்டா என்ன..?!

படம் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் நினைவோடையின் செம்பருத்தி பூ ஒன்றினை தருகிறது
“லப்பர் பந்து.”

அதற்காகவே படத்தை இயக்கிய தமிழரசனுக்கு பரவசத்தோடு தரலாம் பேரன்பின் பூங்கொத்து.

❤️

மணி செந்தில்.