பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: டிசம்பர் 2025

சிறகுடைய தந்தைகள்.

♥️

“தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என வள்ளுவர் கூறுகிறார். அந்த அவைகளும் கூட பெரும்பாலும் தந்தையார்களின் அளப்பரிய தியாகத்தினால் தான் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் நான் எப்போதும் மகன் அதியனின் தந்தை என்னுடைய சகோதரன் புதுகை ஜெயசீலன் மற்றும் மகன் தி.த.தமிழவன் கோத்தகிரியின் தந்தை அண்ணன் தமிழ் தாசன் ஆகியோர் எனது பெருமதிப்பிற்குரியவர்கள். மகன்களுக்காக மேடைகள் ஆனவர்கள். அந்த மேடைகள் அவர்களின் ஆன்மாவால் ஆனவை. அவர்கள் மகன்களை உருவாக்குகிற அந்த போராட்டத்தை தாய்மையை விட புனிதமானது என்றே கருதுகிறேன்.

சமீபத்தில் எனது பெரியப்பா எழுத்தாளர் ச.கல்யாணராமன் தனது 89 வது வயதில் மரணம் அடைந்தார். அவரது பிள்ளைகளுக்காக மட்டுமல்ல அவரது தம்பி பிள்ளைகளுக்காகவும் கடுமையாக உழைத்த பெருமகன் அவர். வாழ்வில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை, விமர்சிக்க தகுந்த வாழ்க்கை முறையினை அவர் வாழ்ந்தாலும் பிள்ளைகளுக்கு அவர் ஒரு சிறந்த அப்பா. எங்கள் எல்லோரையும் வாழ்வின் உயரத்தில் அமர வைக்க வேண்டும் என அவர் கனவு கண்டார். சிலரும் அமர்ந்தார்கள்.
எங்களில் சிலரின் அளப்பரிய உயரத்திற்கு.. இரவு முழுக்க கை வலிக்க வலிக்க எழுதிய அவரது உழைப்பு மிக முக்கிய காரணம்.

ஆனால் காலம் கொடுமையானது தானே. எல்லா நினைவுகளையும் அழிப்பதுதான் கால வெள்ளத்தின் இயல்பு. மறப்பது மனித இயல்பாக இருக்கிறதோ இல்லையோ என்று இதுவரை எனக்கு சந்தேகம் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் அவ்வளவு எளிதாக மனித மனம் எதையும் மறக்காது. ஆனால் மறந்தது போல நடிக்கும். அதுவே வாழ்க்கை என நம்பி இயல்பாக வாழத் தொடங்கும்.

கடைசி காலத்தில் எனது பெரியப்பா உடல் நலிவோடு இருந்த காலகட்டத்தில் நான் அருகில் இல்லை என்கிற ஒரு குற்ற உணர்வு எனக்கு எப்போதும் உண்டு. எனக்கென்று குடும்பம் ஆகிவிட்ட நிலையில் அது சாத்தியமில்லைதான்.ஆனால் அவருடைய இறுதிக் காலத்தில் அவர் தனிமையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் என்பதுதான் எங்கள் வாழ்நாளெல்லாம் நாங்கள் சுமக்க போகிற பாவம்.

🔸

சுயநலம் என வந்துவிட்டால்.. தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் என எல்லோரும் அந்நியமாகி விடுகிறோம். எல்லோர் குறைகளும் மட்டும்தான் நம் கண்களுக்குத் தெரிகின்றன. மனிதன் தனித்த தீவாக மாறுவதுதான் அவன் வாழ்வில் அவன் அடைகிற மாபெரும் சீரழிவு. அதுவும் பெரிய குடும்பத்தில் பிறந்துவிட்டு தனியனாக அலைவது ஒரு பாவனை. நினைவுகளை விட்டு யாராலும் அவ்வளவு எளிதாக நிர்வாணமாகி விட முடியாது. ஒவ்வொரு நாளும் ஒன்றாக வாழ்ந்த நாட்களில் பகிர்ந்து கொண்ட அன்பின் ஈரம் மட்டும் உள்ளுக்குள் சுரந்துக் கொண்டே இருக்கும். அது ஒரு வகையான வலி தான்.

உலகத்திலேயே மோசமான கைவிடல் என்பது வயதான காலத்தில் பெற்றோரை விடுவதுதான்.

🔸

எனது தம்பி ஒருவன் இருக்கிறான். கட்சியின் மூலமாகத்தான் அவன் எனக்கு பழக்கம். சிறு வயதில் அவன் கட்சியில் இணைந்த போது அவன் தந்தை அவனிடத்தில் இல்லை. அவர் இன்னொரு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார். தம்பி தனது தாயுடனும் தன் தங்கையுடனும் வாழ்ந்து வந்தான். தந்தை இல்லாத தனிமையை கொல்வதற்காகத்தான் அவன் கட்சியில் இணைந்ததாக எனக்குத் தோன்றியிருக்கிறது. அந்த வயதில் அவன் எப்போதும் கட்சி வேலைக்காக அலைந்து கொண்டே இருப்பான். ஆனால் அப்பா மீது அவனுக்கு கடுமையான கோபம் இருந்தது. கோபம் என்பதை தாண்டி எல்லாம் அது ஒரு வகையான வன்மம். தந்தையைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால் கலங்கிய கண்களுடன் அந்த இடத்தை விட்டு அவன் நகர்ந்து விடுவான்.

அப்படி வாழ்ந்து கொண்டிருந்த அவன் வாழ்வில் ஒரு நாள் அவன் தந்தை எல்லாவற்றையும் இழந்து வந்து அவன் முன்னால் நின்றார். மன்னித்துவிடு என கதறினார். அவனுடைய தாயும் ஏறக்குறைய கண்கலங்கி மன்னிக்கும் மனநிலைக்கு வந்து விட்டார். அந்த நேரத்தில்தான் அவன் என்னை வந்து பார்த்தான். அண்ணா அந்த ஆளை எனக்கு பிடிக்கவே இல்லை.. ஆனாலும் அம்மா அழுவது என்னால் தாங்க முடியவில்லை. என்ன செய்வது எனக் கேட்டான்.

“சகித்துக் கொண்டு மன்னித்துவிடு. அது மட்டுமே உனக்கு நிம்மதியை தரும்.” என்று சொன்னேன்.

தம்பி இப்போது தாய் மற்றும் தந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்த தந்தையின் வயதான காலத்தில் அவருடைய மடியில் தம்பியின் மகன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.

🔸

இப்படி தன்னை சிறுவயதில் புறக்கணித்து காலப்போக்கில் எல்லாவற்றையும் இழந்த தந்தையை எதுவும் தண்டிக்காமல் ஏற்றுக் கொள்கின்ற மனதின் சூட்சமம் மிக நுட்பமானது. அது தந்தைக்கான பால்ய கால ஏக்கத்தை சார்ந்தது.

இன்றளவும் தவமாய் தவமிருந்து படம் பார்க்கும்போது கண்கள் கலங்காதவர்கள் யார் இருப்பார்கள்.. தீபாவளியின் முதல் நாள் இரவு வரை உழைத்து விட்டு பிள்ளைகளுக்கு துணிமணிகள் பட்டாசுகள் என வாங்கி வருகிற எத்தனையோ தந்தைகளை நாம் காலத்தோடு கொண்டாடி இருக்கிறோமா என்பதுதான் பெரிய கேள்வி.

தந்தைக்காக காத்திருப்பதுதான் பால்ய காலத்தின் பசுமையான நினைவுகளில் ஒன்று. பெரும்பாலான குழந்தைகளுக்கு தந்தை என்பவர் தான் வெளியே அழைத்துச் சென்று உலகத்தை அறிமுகப்படுத்துபவராக இருக்கிறார். அவர்களைப் பொறுத்தவரையில் மூடிய சுவர்களில் இருந்து முதன்முதலாக உலகத்தின் வெளிச்சத்திற்கு தந்தையின் கரங்கள்தான் அழைத்து செல்கின்றன.

எப்போதும் தந்தையின் கரங்கள் நம்பிக்கையின் கதகதப்புக்கு உரியவை. அந்த கைகளைப் பிடித்துக் கொண்டால் போதும். பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் எங்கேயும் போய் விடலாம் என குழந்தைகள் நினைக்கின்றன.

எனது மூத்த மகன் பிறந்த காலத்தில் நான் ஒரு ஸ்கூட்டி வைத்திருந்தேன். பிறந்த ஆறேழு மாதங்களில் என் வீட்டின் ஹாலில் தான் அவனை படுக்க வைத்து இருப்பார்கள். வாசலில் என் ஸ்கூட்டி சத்தம் கேட்டால் போதும். அவனது முகம் புன்னகைக்க துவங்கும். கை கால்களை விரைத்துக் கொண்டு தனது மகிழ்ச்சியை அவன் வெளிப்படுத்தும் போது .. அவனை அழைக்கும் விதமாக ” “”குட்டி பாப்பா ..டிங்..டிங்””” என ஒலி எழுப்புவேன். அவனும் சிறிய ஒலி எழுப்பி குதூகலிப்பான்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவனை வெளியே அழைத்துச் செல்ல தொடங்கினேன். எனது இரண்டு மகன்களும் வித்தியாசமானவர்கள். என் உடல் நிலையை கருதி எப்போதும் என்னை அவர்கள் தூக்க சொன்னதே இல்லை. தந்தை தூக்கிக் கொண்டு நடப்பார் என்ற அனுபவம் அவர்களுக்கு ஏற்பட்டதே இல்லை. என்னை பிடித்துக் கொண்டு நடப்பார்கள். இப்போது நான் அவர்களை பிடித்துக் கொண்டு நடக்கிறேன். அந்தக் காலத்தில் நான் பயன்படுத்திய எனது ஸ்கூட்டி மாற்றுத்திறனாளி ஓட்டக்கூடிய மூன்று சக்கர வண்டி அல்ல. இரண்டு சக்கரங்கள் தான். அதில் மிகுந்த திறனுடன் ஓட்ட பழகி நான் நகரையே வலம் வந்து கொண்டிருந்தேன். என் நண்பர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு ஊர் சுற்றி இருக்கிறேன். ஆனால் என் மகனை முன்னால் நிற்க வைத்து ஓட்டும் போது மட்டும் கொஞ்சம் பதட்டமாக இருக்கும்.

ஒரு நாள் திரைப்படத்திற்கு அழைத்து செல்லும்போது எதிர்பாராத விதமாக எனது வண்டி விபத்துக்குள்ளாகிவிட்டது. நான் கீழே விழுந்து விட்டேன். ரோட்டில் விழுந்த அடுத்த நொடி என் மகனுக்கு என்னானது என எனக்குள் துடித்த துடிப்புதான் தாய்மைக்கு நிகரானது தந்தைமை என நம்ப வைத்தது. சட்டென எழுந்து நின்ற எனது மகன் என் அருகில் ஓடி வந்து “எனக்கு ஒன்றும் ஆகவில்லை அப்பா” என தழுதழுத்த குரலில் சொன்னபோது நான் உடைந்து விட்டேன். அவனுக்கு தன் வலியை பற்றி சொன்னால் தன் தந்தை உடைந்து விடுவான் என்கிற நுட்பமான அறிவு அந்த வயதிலேயே இருந்தது கண்டு நான் நெகிழ்ந்து போனேன். அதிலிருந்து என் மகனை நான் இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்து செல்வதில்லை. அவனுக்காகவே நான் கார் வாங்கினேன்.

என் அப்பாவை கொரோனா காலத்தில் மருத்துவமனையில் சேர்த்த போது நினைவில்லாமல் அவர் இருந்தார். அப்போது ஒரு நொடியில் அவரது உள்ளங்கைகளை நான் பற்றிக் கொண்டேன். மீண்டும் பற்ற முடியுமோ என்கிற பயம் எனக்கு. அந்தக் கைகளில் இருந்து நான் நம்பிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்க்கை முழுக்க என்னை அழைத்துச் செல்லும் என்று எண்ணினேன். நல்லவேளை அம்மா அப்பாவை மீட்டுக் கொண்டு வந்து விட்டார்.

🔸

தந்தை மகன் உறவைப் பற்றி மிக நுட்பமாக எழுதி இருப்பவர் மெக்சிகோ எழுத்தாளர் யுவான் ரூல்ஃபோ.

மிகக் குறைவாக எழுதிய எழுத்தாளர். ஆனாலும் அவர் எழுதியவை எல்லாம் உலகத்தின் தரமான எழுத்துக்கள் என கொண்டாடப்படுகின்றன.

1918 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு ஆறு வயதானபோது அவரது தந்தை கொல்லப்பட்டார். அதன் பிறகு அடுத்த நான்காண்டுகளில் அவரது தாய் மாரடைப்பினால் காலமானார். அதற்குப் பிறகு சிறிது காலம் உறவினர்கள் மத்தியிலும் பிறகு ஒரு அனாதை இல்லத்திலும் தன் வாழ்க்கையை வாழ்ந்த யுவான் ரூல்ஃபோ எப்போதும் உணர்ச்சி கொந்தளிப்பான மனநிலையை கொண்டவர்.

மெக்சிகோ நவீன இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளராக விளங்கிய ரூல்போ பற்றி இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்கோஸ் “எல்லா காலத்திற்குமான, எல்லா இடங்களுக்குமான நீடித்து நிற்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் யுவான் ரூல்ஃபோ” என கொண்டாடுகிறார். அவரது நாவல் “பெட்ரோ பரமோ” உலகப் புகழ்பெற்றது. திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

அவருடைய சிறுகதைத் தொகுப்பு “எரியும் சமவெளி” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு எதிர் பதிப்பகத்தின் வழியாக வெளியாகி உள்ளது. தமிழில் இல. சுபத்ரா மிக சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். 17 கதைகளும் மிக முக்கியமானவை. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நம்மால், இக்கதைகளால் மிக எளிதாக மெக்சிகோவின் பண்பாடு மற்றும் நிலத்தில் பொருத்திக் கொள்ள முடிகிறது என்பதுதான் யுவான் ரூல்ஃபோவின் தனித்துவம்.

அதில் இரண்டு கதைகள் இருக்கின்றன. ” என்னை கொல்ல வேண்டாம் என அவர்களிடம் சொல்.” மற்றொன்று “நாய்கள் குரைப்பது உனக்கு கேட்கவில்லை.”

ஒரு காலத்தில் கொலை செய்துவிட்டு இன்னொரு ஊருக்கு ஓடி வந்த ஒருவன் வாழ்நாள் முழுக்க தன்னை தேடி காவலாளிகள் வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கொந்தளிப்போடு ஒவ்வொரு நொடியும் மரணித்து விடுவோமோ என்ற சாவின் விளிம்பில் துடிப்பது தான் அந்தக் கதை. இறுதியாக அவர்கள் வந்துவிடுவார்கள். அவன் தன் மகனிடம் அவர்களிடம் சொல்ல அந்தத் தந்தை கேட்பதுதான் ‘என்னை கொல்ல வேண்டாம் என அவர்களிடம் சொல்.”

ஆனால் மகன் மறுத்து விடுவான். ஏனெனில் அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கும். எங்கே அவரது மகன் என்று சொன்னால் தன்னையும் சுட்டு விடுவார்களோ என பயந்து அவன் மறுத்து விடுவான். இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் அந்தக் கதை. மரண நொடியில் வாழ்வின் முதுமையில் வாழ்வதற்கான வேட்கை எப்படி கொப்பளிக்கிறது என்பதை பற்றி அவ்வளவு நுட்பமாக எழுதி இருக்கும் யுவானின் இந்த கதை நவீன இலக்கியத்தின் உச்சம்.

அதேபோல , வாழ்நாள் முழுக்க தீமைகளை மட்டும் செய்து வந்த மகனுக்கு உடல்நிலை மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்ட நிலையில் அவனைத் தூக்கிக் கொண்டு ஒரு மலை மீது ஏறி ஒரு அங்கே இருக்கின்ற ஒரு மருத்துவமனையில் மகனை சேர்ப்பதற்காக முதுகில் சுமந்து கொண்டு போகிற முதிய தந்தையைப் பற்றிய கதைதான் ” நாய்கள் குரைப்பது உனக்கு கேட்கவில்லை”. இந்தக் கதை முழுக்க தந்தைக்கும் மகனுக்குமான உரையாடல் அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும். தீமையை மட்டும் செய்த மகன் தந்தையின் சொற்களை கேட்டு கண்ணீர் வடிக்க தொடங்கும் போது அந்த ஊர் வந்து விடும். இரவு நேரத்தில் நாய்கள் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிற அப்பொழுதில் அந்தத் தந்தை சொல்வதுதான் “நாய்கள் குரைப்பது உனக்கு கேட்கவில்லை.”

உண்மையில் பிள்ளைகளுக்காக “எரியும் சமவெளி” தந்தைகளின் ஆன்மாக்கள் தான்.

🔸

விவாகரத்து வழக்குகளுக்கு மகள்களை அழைத்து வரும் பெற்றோர்களில் பெரும்பாலும் மிகுந்த பதற்றத்தோடு இருப்பது தந்தைகள் தான். பெரிய சிறகு இருந்தால் இப்படி துயரத்திற்கு உள்ளாகி இருக்கிற தன் பிள்ளைகளை போர்த்திக் கொள்ளலாமே என்பது போல அவர்கள் துடிக்கின்ற துடிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

தாய் பிள்ளைகளை வயிற்றில் சுமக்கிறாள். தந்தை பிள்ளைகளை தோளில் சுமக்கிறான்.

தோளுக்கு அருகே தானே இதயம் துடிக்கிறது..?

♥️

மணி செந்தில்.
www.manisenthil.com

அவர்களுக்காகவும் பேசுங்கள்.

நேற்று காலை கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய பதிவு ஒன்று என்னை மிகவும் பாதித்தது.

https://www.facebook.com/share/p/1D5A5tTmjP

திமுகவை சேர்ந்த அவரது அரசியல் நிலைப்பாடுகள் எனக்கு முற்றிலும் எதிர்ப்பானவை. அந்த நிலைப்பாடுகளை பொருத்தவரையில் அவர் எனக்கு எதிரி. அவரது கடுமையான ஆவேசமும் படபடப்பும் எனக்கு உவப்பானவை அல்ல. இவரா இது போன்ற கவிதைகளை, படைப்புகளை எழுதுகிறார் என்று நானே வியந்திருக்கிறேன்.

ஆனால் அவரது உடல்நிலை குறித்தும், தன் எண்ணங்களுக்கும் தன் உடல் குறைபாடுகளுக்கும் இடையே நடக்கின்ற போராட்டங்கள் குறித்து அவர் எழுதுகிற பதிவுகளை நான் மிக உன்னிப்பாக வாசிப்பேன். ஏனெனில் அதே அவஸ்தைகளை நானும் அனுபவித்து வருகிற காரணத்தினால் அவை கொஞ்சம் எனக்கு நெருக்கமானவைகளாக இருக்கும். அதேபோல் அபிலாஷ் எழுதிய “கால்கள்” நாவல் தமிழ் நவீன இலக்கியத்தில் மிக முக்கியமான பதிவு.

உண்மையில் நடக்க முடியாதவர்களுக்கு மிகப்பெரிய துயரம் அவர்கள் கொண்டிருக்கின்ற முதுகு வலி தான். குனிந்து பிடித்து நடப்பது அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது போன்றவை எல்லாம் அந்த முதுகு வலிக்கு மூலமான காரணங்கள்.முதுகு வலியின் மிகப்பெரிய தந்திரமே உங்களை தூங்க விடாது என்பதுதான். எப்படி புரண்டு படுத்தாலும் முதுகு வலிக்கும். எனவே உங்களால் தூங்க முடியாது. பின்னிரவு ஏறக்குறைய விடியற்காலை மூன்று மணிக்கு முதுகு வலி தாங்க முடியாமல் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஒவ்வொரு நாள் இரவும் ஏற்படும்போதெல்லாம் நான் மனுஷ்ய புத்திரனை பற்றி நினைத்துக்கொள்வேன். என்னை விட மோசமான நிலைமை அவருக்கு. அவர் சக்கர நாற்காலியில் நீண்ட காலமாக பயணித்து வருகிறார். அவருக்கு வருகின்ற பிரச்சனைகளை நானும் எதிர்கொண்டு வருவதால் அவருடைய பதிவுகள் எப்போதுமே எனக்கு ஒரு முன்னறிவிப்புகள் தான். அதற்காக நானும் மனதளவில் தயாராகி விடுவேன்.

இதுபோன்று போலியோவால் பாதிக்கப்படுபவர்கள் இளம் வயதை எளிதாக கடந்து விடுவார்கள். ஆனால் வயதாக வயதாக கீழே விழும் ஆபத்து அதிகரித்துக் கொண்டே போகும். எனவே நடப்பதை பெரும்பாலும் தவிர்ப்பார்கள். அதில் மிக முக்கியமான பிரச்சனை என்னவெனில் இதனால் எடை கூட தொடங்கும். எடை கூட கூட முற்றிலுமாக நடை தடைப்படத் தொடங்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சக்கர நாற்காலியை நோக்கி பயணம் தான்.

குவைத் செந்தமிழர் பாசறை பயணத்திற்கு நான் சென்றிருந்தபோது நான் உபயோகிப்பதற்காக உறவுகள் எனக்கு சக்கர நாற்காலி ஒன்று வாங்கி அளித்திருந்தார்கள். உண்மையில் அது எனக்கு பெரும் வசதியாக இருந்தது. கொஞ்சம் முதுகு வலி குறைந்தது போல எனக்கும் தோன்றியது. இதனால் அதை நான் இந்தியாவுக்கும் எடுத்து வந்து விட்டேன். இங்கே வந்தவுடன் என் தம்பி ஆனந்த் ( வழக்கறிஞர் மோ.ஆனந்த் ) அதைக் கோபமாக எடுத்து மேலே கட்டி வைத்து விட்டான். என் அம்மாவும் அதை விரும்பவில்லை.

என்னை மிகவும் விரும்புகிறவர்களின் மிகப்பெரிய பிரச்சனையே, எனக்கு இருக்கும் சிக்கல் மற்றும் வலி போன்றவை எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியாது என்பதுதான். அவர்களிடம் கேட்டால் நான் அவ்வாறு நினைக்கக் கூடாது, நினைக்க உரிமையற்றவன் என்பதுதான் அவர்களின் பதிலாக இருக்கும்.

என் உயிர் அண்ணன் சீமான் என் மீது எந்தவித அனுதாபத்தையும் காட்டாதவர்.எல்லோருக்கும் இணையாக சொல்லப்போனால் இன்னும் சிறப்பாக நான் பணியாற்ற வேண்டும் என்று என்னை வற்புறுத்துபவர். அது என்னால் முடியும் என நம்புபவர்.தாய்மைக்கு நிகரான அந்த கள்ளம் கபடம் அற்ற அந்த உச்ச உணர்விற்காகத்தான் உயிர் உள்ளவரை அவருக்கு நேர்மையாக இருக்கத் துடிக்கிறேன். என் அம்மாவிற்கும் அவருக்கும் ஒரே மாதிரியான மனநிலை. வலிகள், உடல் குறைபாடுகளை எல்லாம் தாண்டி நான் இந்த உலகத்தில் எல்லா சூழ்நிலைகளிலும் போராடி உயர வேண்டும் என்பதில் இருவருமே பிடிவாதமாக இருப்பவர்கள்.

பிறகு , என் ஆருயிர் மைத்துனர் பாக்கியராசன், என் தம்பிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி, செந்தில்நாதன், துருவன், போன்ற என்னை மிக ஆழமாக நேசிப்பவர்களுக்கும் இதே எண்ணம்தான். பெரிய பிரச்சினையே நான் அவர்களோடு அடிக்கடி எல்லா ஊர்களுக்கும் வர வேண்டும் என அவர்கள் நினைப்பதுதான். மிக ஆழமான அந்த அன்பிற்கு என்னிடத்தில் பதில் இல்லை . அவர்கள் மத்தியில் இருக்கும் போது நான் என்னையும் மறந்து என் வலியையும் மறந்து நிற்கிறேன் தான். அந்தப் பேரன்பில் நான் நிம்மதி அடைகிறேன் தான்.ஆனாலும் அவர்கள் உலகத்தில் நான் இருந்தே ஆக வேண்டும். எனக்கும் வருவதற்கு ஆசைதான். ஆனால் நீண்ட தூரம் வாகனத்தில் அமர்ந்து வரும்போது கடுமையான முதுகு வலியில் சிக்குவேன். எங்கேயாவது வெளியூர் சென்று விட்டு வந்தால் அடுத்த மூன்று நாட்கள் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. படுத்தே இருப்பேன். என்னை எப்போதும் பாதுகாப்பாக அழைத்து வரும் ஐயா மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்களுக்கு இந்த பிரச்சனை சற்று புரியும்.‌ அதேபோல் பெரும்பாலும் உடன் இருக்கும் அண்ணன் ஹீமாயூன் அவர்களும் இதைப்பற்றி புரிந்து வைத்திருப்பார்.

அந்த வலி போவதற்கு வலி நிவாரணிகளும் எடுக்க முடியாது. அதிகம் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்தால் சிறுநீரகம் பாதிக்கும் என்ற பயம். எனவே வலியை பொறுத்துக் கொள்ளல் என்பது வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

உடல் எடையை குறைப்பதற்கு காலை உணவு கவுனி அரிசி கஞ்சி தான் பெரும்பாலான நாட்களில் எடுத்துக் கொள்கிறேன். மதியம் ஒருவேளை உணவு. இரவு 7 மணிக்குள்ளாக உணவு எனத் திட்டமிட்டாலும் பல நாட்களில் அதைப் பின்பற்ற முடிவதில்லை. சிறிய உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமாக பெரிய பலன்களை எதிர்பார்க்க முடியாது.

இனி இருக்கும் காலங்களில் நலமாக ஒவ்வொரு நொடியையும் வீணாக்கி விடக்கூடாது என அஞ்சுகிறேன். நேற்று காலை நாம் தமிழர் கட்சியின் குடந்தை வேட்பாளர் வழக்கறிஞர் தம்பி ஆனந்த் அழைத்து கும்பகோணம் திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக வைக்கப்பட்டிருக்கின்ற சாய்வுகள் மற்றும் ஏற்பாடுகள் சரிவர இல்லை என சொல்லி எல்லா திரையரங்கு உரிமையாளர்களை சந்தித்து அரசு அலுவலர்களை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக சொன்னார்.

உண்மையில் இது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. எனக்கு திரைப்படங்கள் பார்க்க பேராவல் உண்டு. ஆனால் திரையரங்கில் இருக்கின்ற படிகளை நினைத்து மிகுந்த அச்சப்படுவேன். ஒருமுறை “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்கு சென்னையில் தம்பி சாட்டை துரைமுருகன் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விட்டான். அங்கே போய் பார்த்த பிறகு தான் தெரிந்தது அந்த இருக்கை அந்த திரையரங்கில் உச்சத்தில் படிக்கட்டுகளின் மேலே இருந்தது. ஆனாலும் தம்பியின் பேரன்பு, திரைப்படங்களின் மீது இருக்கின்ற பெரும் காதல் இவையெல்லாம் தூண்டிவிட நானும் அவனை பிடித்துக் கொண்டு படி ஏறி விட்டேன். அன்று இரவு ஊருக்கு திரும்பிய பிறகு கடுமையான முதுகு வலி. அதற்குப் பிறகு கும்பகோணம் இயன்முறை மருத்துவர் தம்பி கார்த்தியிடம் ஒரு வாரம் மருத்துவம் எடுத்துக் கொண்டேன்.

இருப்பதிலேயே மிகப்பெரிய ஆபத்து படிக்கட்டுகள் தான். எல்லா திரையரங்குகளிலும் எல்லா திருமண மண்டபங்களிலும் சாய்வுத்தளம் வைக்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது.ஆனால் அரசு விதிகளுக்காக பெயரளவில். வைக்கப்படும் சாய்வுத் தளங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத இடத்தில் வைக்கப்படுகின்றன. இவை பெயரளவில்தான் வைக்கப்படுகின்றன என்பதை கண்காணிப்பதற்கு எந்த அரசு அலுவலரும் இல்லை. கூடுதலாக அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் திருமண மண்டபங்கள் திரையரங்குகளில் பயன்படுத்தப்படும் மார்பிள்ஸ் டைல்ஸ் கிரானைட் போன்ற வழுவழுப்பான தரைதளங்கள். அதில் தங்க நேரிடும் சிறு மண் துகள்கள் கூட உடல் குறைபாடு கொண்டவர்களை வழுக்கி கீழே தள்ளிக் காயம் ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை.

இதில் என்னைப் போன்றவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். பேரன்பு குடும்பம். மிகச்சிறந்த நண்பர்கள். என் தம்பிகள் ஆனந்த் லிங்கதுரை அருண் போன்ற எண்ணற்றத் தம்பிகள் நான் மகிழ்வாக வாழ அவர்கள் தன்னையே அர்ப்பணித்து நிற்கிறார்கள்.
உயிருக்குயிராக நேசிக்கும் நாம் தமிழர் உறவுகள் என எனது குடும்பம் என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

என்னை தீவிரமாக அரசியலாகவோ தனிப்பட்ட முறையிலோ எதிர்க்கும் என் எதிரிகள் கூட என்னை ஆழமாக நேசிப்பவர்கள் தான். ஒருபோதும் என் உடல் குறைபாடுகள் அவர்கள் கண்களுக்கு படாமல் இருப்பது தான் எனக்கு ஆச்சரியம். அவ்வளவு தீவிரமாக எதிர்க்கும் அவர்களின் எதிர்ப்பைக் கூட நான் மிகவும் நேசிப்பது தான் நகை முரண்.

இது போன்ற சூழ்நிலையில் வாழாமல் எந்த ஆதரவும் இல்லாமல் தனித்து துன்பப்படும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் அடைகிற துன்பங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. குறிப்பாக பெண் மாற்றுத்திறனாளிகள் அடைகின்ற துயரங்களைப் பற்றி இதுவரை பெரிதாக பதிவில்லை என்பதே மிகப்பெரிய கொடுமை. மாதவிடாய் காலங்களில் பெண் மாற்றுத்திறனாளிகள் அடைகின்ற வேதனைகள் இதுவரை பேசாப் பொருள்.

அதேபோல மாற்றுத்திறனாளிகள் என்றால் உடல் குறைபாடுகள் கொண்டவர்கள் மட்டுமல்ல. செவித்திறன் சவால் கொண்டவர்கள், விழித்திறன் சவால் கொண்டவர்கள், பேச்சுத்திறன் சவால் கொண்டவர்கள், சிந்திக்கும் திறன் சவால் கொண்டவர்கள் என அது பல்வகை சவால் மனிதர்களை உள்ளடக்கிய சொல்.

எனது குடும்பத்திலேயே ஆட்டிசம் பாதிப்பில் ஒரு குழந்தையை நாங்கள் வைத்திருக்கிறோம். அவனைப் பாதுகாக்க, பராமரிக்க அவன் தாய், அவனது தாத்தா படுகிற பாடு, நான் அடைந்திருப்பதில் மிகப்பெரிய துயரம் அதுதான்.

ஒருமுறை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கம்பீரமாக அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சகோதரி சட்டென நாற்காலியில் இருந்து இறங்கி தவழ்ந்தவாறே கழிவறைக்கு போன காட்சி என்னை நிலைகுலைய வைத்தது. சில நொடிகளில் என்னை நானே தேற்றிக் கொண்டேன். பரவாயில்லை தங்கை அந்த அளவு கடும் உழைப்பினால் உயர்ந்திருக்கிறார் என.

ஆனால் சிறு உதவி, அவர்கள் இந்த உலகை சீராக அணுகுவதற்கான வசதி போன்றவை கூட அரசும் பொதுச் சமூகமும் இவர்களுக்கு செய்யவில்லை என்பது தான் இருப்பதிலேயே மிகப்பெரிய கொடுமை.

இந்த பதிவு கூட யாருடைய அனுதாபத்திற்கும் போடப்படுகின்ற பதிவு அல்ல. ஒரு சரிநிகர் சமுதாயத்தில் வாழ வேண்டும் சுதந்திர மனப்பான்மையோடு எல்லோரும் எல்லோரும் போல தாங்களும் பிறர் துணையின்றி உரிய மதிப்போடு வாழ வேண்டும் என நினைக்கின்ற கோடிக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் சிறிய பக்கத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

இந்த புரிதல் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் அருகில் இருக்கக்கூடிய உடல் குறைபாடு கொண்டவர்களை நேர்மையாக அணுகுவதற்கு உதவக்கூடும். உண்மையில் அவர்களுக்காக பேச யாருமே இல்லை. உலக சுகாதார நிறுவனம் கணக்கின்படி 130 கோடி பேர் உலகில் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதாவது மனித இனத்தில் ஆறு பேரில் ஒருவர் ஏதேனும் ஒரு குறைபாட்டுடன் வாழ நேரிடுகிற சூழல் நிலவுகிறது.

எனவே இதைப் பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது.வெளிநாடுகளில் மாற்றுத்திறனாளிகள் மிக இயல்பாக மற்றவர்கள் போல வாழ்வதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு நாடும் எவ்வளவு தாய்மை உள்ளதோடு செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நாம் வாழும் நாட்டின் மீது எதுபோன்ற மதிப்பு ஏற்படும் என்பதை நினைத்துப் பாருங்கள். அங்கே முடியாதவர்களுக்கென தனி நடை பாதைகள். உதவுவதற்கான நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள். தாழ்ந்த தளம் கொண்ட பேருந்துகள். படிக்கட்டுகள் இல்லாத அலுவலகங்கள். கண்ணியமாக நடத்தும் சமூகம், என மாற்றுத்திறனாளிகளுக்கு மேலைநாடுகள் சொர்க்கம் தான். இங்கே எளிதாக வசவு சொற்களில் கூட மாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்துகின்ற உடல் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகின்ற சொற்களை மிக எளிதாக பயன்படுத்தி விடுகிறார்கள். இதுவும் சட்டப்படி குற்றமாக்கப்பட வேண்டும். எப்படி சாதியை சொல்லி சக மனிதனை இழிவாகப் பேசுவது குற்றமோ அதே போலத்தான் உடல் குறைபாடுகளை முன்வைத்து ஒரு மனிதனை வசை பாடுவது. இதற்கான சட்டத்திருத்தமும் இயற்றப்பட வேண்டும் . பொது வழக்கில் மிக எளிதாக பயன்படுத்தப் படும் உடல் குறைபாடுகளை முன்வைக்கிற சொற்கள் முற்றிலுமாக மனிதப் பழக்கத்தில் இருந்து அகல வேண்டுமெனில் உரிய சட்ட திருத்தம் இயற்றப்பட வேண்டும்.

முடிவாக சொல்வது இதுதான்.

.

கண்ணியமாகவும் மதிப்புடனும் ‌உரிமையுடனும் உங்களோடு எல்லா இடங்களுக்கும் வந்து சரிநிகர் சமமாக வலிகள் இல்லாமல் வாழ வேண்டும் என உங்கள் மத்தியில் வாழ்கின்ற சிலர் நினைக்கிறார்கள். அவர்களையும் உள்ளடக்கியதுதான் சமூகம். அவர்களும் மகிழ்வுடன் வாழ இந்த உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் இது போன்ற பதிவுகளின் நோக்கம்.

இது குறித்து இன்னும் விரிவாக போர்த்தொழிலில் பேசியிருக்கிறேன்.
அதற்கான இணைப்பையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

இதில் நான் பேசியுள்ள விவரங்கள் அனைத்தும் முக்கிய விவாதப் பொருளாக மாற வேண்டும் என விரும்புகிறேன். அதன் மூலமாக பல நல்ல மாற்றங்கள் நடக்கக்கூடும்.

அதன் முடிவில் சொன்னது தான் இதன் முடிவிலும்.

அவர்கள் கேட்பது அனுதாபம் அல்ல.உரிமை !!

( நேற்று முழுக்க இது குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் நேற்று டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம். )

♥️

மணி செந்தில்.

Powered by WordPress & Theme by Anders Norén