மழையாலானவனின்
மற்றுமொரு உரையாடல்..
——————————
நான் நிதானித்து
செய்கிற எதையும்
உனக்கான பாவனைகளாக
நீயே கற்பிதம்
செய்து கொள்கிறாய்..
என்னை எப்போதும்
ஒரு பியானோ வாசிப்பவனாக
நீ யோசிக்கிறாய்.
நானோ மூடிய
கைகளோடு
அலைபவன்.
அப்படி என்றால்
அந்த மூடிய கரங்களில்
உயிருடன்
துடிக்கும் நீல மீன்
குஞ்சு ஒன்று துடித்துக்
கொண்டு இருப்பதாக
நீ சொல்கிறாய்.
நான் வெற்றுக்கரங்களை
திறந்து காட்டுகிறேன்.
காற்றில் அந்த
நீல மீன் சிறு
தட்டானாய் மாறி
பறந்து விட்டதென
நீ பதைபதைக்கிறாய்.
முடிவாக
உன்னை நான்
கடலில்
தள்ளப்போவதாக
குற்றம் சாட்டுகிறாய்..
இல்லை.
அந்தக் கடலை
கூட
உனக்கென எழுதிய
சில வரிகளுக்கு
இடையே புதைத்து
வைத்திருக்கிறேன்
என்றேன்.
அப்படியென்றால்
நேற்று பெய்த மழையை
எங்கோ எடுத்துச்
சென்று அலட்சியமாக
தொலைத்து விட்டாய்
என விசும்பினாய்.
இல்லை இல்லை..
மழையை தான்
நான் சொற்களாக
மாற்றி உன்னோடு
உரையாடிக் கொண்டிருக்கிறேன்
என்றேன்.
கண்கள் கலங்க
என்னை
பார்த்த நீ
பார்வைகளால்
ஒரு கடலையும்..
மெல்லிய
சிரிப்பொன்றினால்
சிறு அலைகளையும்
அங்கேயே
உருவாக்கினாய்.
அந் நொடியில்..
நீ கொடுத்த
ஈர முத்தமொன்று
நீல மீன் குஞ்சாய்
அதே கடலில் நீந்திக்
கொண்டிருந்ததை
இறுதி வரை நீ
கவனிக்க வில்லை.