அண்ணன் சீமான் மீது பல முற்போக்கு முகமூடி அணிந்திருக்கும் பல அறிஞர் பெருமக்களிடம் தோ

 

ன்றி இருக்கிற ஒவ்வாமை குறித்து பல இளம் தலைமுறையினருக்கு வியப்பு ஏற்பட்டிருக்கலாம்.

இதில் பெரும்பாலும் பெரியாரிஸ்டுகள் நிறைய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எதனால் சீமானை வெறுக்கிறோம் என்பதற்கான எந்தவிதமான நேர்மையான பதிலும் அவர்களிடத்தில் கிடையாது.

நான் அறிந்த வரையில் இந்த பெரியாரிஸ்டுகள் மத்தியிலிருந்து ஒருவர் 2009 இன அழிவிற்கு பிறகு அடைந்த மற்றும் அடைகிற மக்கள் செல்வாக்கே இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.

நான் மதித்த எனக்குத் தெரிந்த ஒரு பெரியாரிஸ்ட் அண்ணன் இருக்கிறார். அந்தக் காலத்தில் சீமான் திரைப்படம் எடுத்துக்கொண்டு பெரியாரிய மார்க்சிய அம்பேத்கரிய மேடைகளில் பேசிக் கொண்டிருக்கின்ற ஒரு சாதாரண பேச்சாளர் அவ்வளவே.

2009 இன அழிவு காலத்தில் அந்த மதிப்பிற்குரிய அண்ணன் தான் இந்த திமுகவும் அதிமுகவும் கொண்டிருக்கிற அரசியல் அதிகாரம் நம்மைப்போன்ற எளியவர்களுக்கும் கிடைக்க வேண்டும். நம்மைப் போன்றகளிடம் இந்த அரசியல் அதிகாரம் கிடைக்கும் போதுதான் இன அழிவு, மொழி அழிவு, நம் நில அழிவு ஆகியவற்றை தடுக்க முடியும் என்று என்னைப் போன்ற எண்ணற்ற தம்பிகளிடம் வாதாடினார். சொல்லப்போனால் அன்றைய ஆட்சி காலத்தில் இருந்த திமுகவை அழிப்பதே தன் லட்சியம் என்றெல்லாம் வாதாடினார். அதனால்தான் அண்ணன் சீமான் உள்ளிட்ட நாங்கள் அனைவரும் நாம் தமிழரை ஒரு அரசியல் அமைப்பாக உருவாக்க திட்டமிட்டு தொடங்கினோம்.

மேலும் 2009 காலத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வெளிப்படையாக பல பெரியாரிய அமைப்புகள் தீர்மானம் இயற்றி அண்ணா திமுகவிற்கு ஆதரவு அளித்தன என்பதும் பலரும் அறியாத வரலாற்று உண்மை.

இன்று அதே பல பெரியாரிய அமைப்புகள்தான் திராவிடத்தை காக்க திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து நிலைப்பாடு எடுத்திருப்பதை காணும்போது வேடிக்கையாக இருக்கிறது.

2009 இன அழிவு காலத்தில் எங்களைப் போன்ற தமிழுணர்வாளர்களும் பெரியாரிய அமைப்புகளின் தோழர்களும் ஈழத்தில் நடைபெற்ற வந்த இனப்படுகொலை காணொளி காட்சிகளை குறுந்தகடுகளாக எடுத்துக்கொண்டு வீதிவீதியாக அலைந்தபோது இதே திமுக தனது காவல்துறையை வைத்துக்கொண்டு எங்களை விரட்டி விரட்டி வேட்டையாடியதை பெரியாரிய தோழர்கள் எப்படி மறந்து போனார்கள் என்பது எனக்கெல்லாம் ஆச்சரியம். அக்காலகட்டத்தில் இன அழிவை அதன் பாதிப்பை கொடூரத்தை மக்களிடையே பிரச்சாரம் செய்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக பல பெரியாரிய தமிழ் உணர்வாளர்கள் மீது கடுமையான வழக்குகள் திமுகவால் தொடுக்கப்பட்டது பலர் சிறை பட்டார்கள் என்பதை நமது அண்ணன்மார்கள் மறந்துவிட்டது இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது.

சரி. அது அவர்களது மறதி நோயாக எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் திராவிடத்தை காக்கத்தான் சமூக நீதியை காக்க தான் நாங்கள் திமுகவை ஆதரிக்கிறோம் என்று சொல்வது எப்படிப்பட்ட நிலைப்பாடு என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இனத்தின் அழிவை விட திராவிடக் கோட்பாடு எந்த வகையில் உயர்ந்தது என்று யாரேனும் விளக்கினால் நலம். திராவிடத்தை காக்க இனத்தை அழித்த காங்கிரசோடு கைகோர்க்க முடிகிறது என்றால்… எந்த இனத்திற்காக ..யாருக்காக.. திராவிடம் என்பதை இளையோர் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.

நம் அண்ணன்மார்கள் பலருக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது. காலம் அனைத்தையும் மறக்கடித்து இருக்கும்.நாம் பேசிய எழுதிய அனைத்தையும் அனைவரும் மறந்திருப்பார்கள். எளிதாக பல்டி அடித்து நாம் ஏற்கனவே எழுதிய, பேசிய ஒன்றுக்கு எதிராக தற்போது பேசியும், எழுதியும் விடலாம் என்கின்ற பலத்த நம்பிக்கை இருக்கிறது.

மேலும் அவர்களுக்கும் பசிக்கும் இல்லையா..??

வளரும் நாம் தமிழரை பார்த்து எதிர்த்து எகிறி ஏதாவது உளறினால் தான் இதுவரை உழைத்த உழைப்பிற்கும் இனி பிழைக்க வேண்டிய பிழைப்பிற்கும் ஏதாவது கிடைக்கும் இல்லையா..??

பாவம் அவர்கள்.

இன்னும் நினைவிலும், கனவிலும் ,உதிரத்திலும், இன அழிவை ஆழ்ந்த கோபமாக சிவப்பேறிய விழியிலும் சுமந்து திரிகிற ஒரு தலைமுறை அவர்களுக்கும் தெரியாமல் உருவாகிவிட்டது.

அந்தத் தலைமுறை இன்னும் நூறாண்டு அல்ல.. அதற்கும் மேலாக .. இனம் அழிந்ததை தாங்கள் பார்க்க நேரிட்ட அவலத்தை.. அந்த நிமிடங்களில் மனதில் முளைத்த வன்மத்தை.. தாயக விடுதலை தாகத்தை ஆறாமல் தங்கள் வழித்தோன்றல்களிடம் எடுத்துச் சொல்லிக் கடத்திக்கொண்டே கால வீதிகளில் விதைகளாய் தூவும். இது உறுதி.

மணி செந்தில்.