கொளுத்தும் வெயில் மழை போல ஒரு திரவமாக ஊற்றிக் கொண்டிருக்கிறது. எங்கள் வாகனம் அப்போதுதான் அந்த ஊருக்குள் நுழைகிறது. என் முன்னால் தான் என் தம்பிகள் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். கையில் துண்டறிக்கைகளோடு கழுத்தில் பச்சை துண்டுகளோடு கடந்த சில நாட்களாகவே அவர்கள் அவ்வாறு அலைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கடை வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நான் பேசத் தொடங்கினேன். எனது பக்கத்தில் எங்களது வேட்பாளர் சகோதரி சுபாஷினி அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நாங்கள் பேசிக்கொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போது எதிரே அதிமுக பிரச்சார வாகனம் ஒன்று வந்தது. அது எங்களுக்குப் பின்னால் நிறுத்தப்பட்டு அந்த வாகனத்தில் அழைத்து வரப்பட்ட நடனப் பெண்கள் உரத்து ஒலித்த எம்ஜிஆர் பட பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட தொடங்கினார்கள்.
ஒரு பக்கம் நாங்கள் மீத்தேன் திட்டத்தைப் பற்றியும், நிலத்தடி நீர் குறைகிற அபாயத்தை பற்றியும், மோடியின் உலகமயம் பன்னாட்டு வர்த்தக அரசியல் பற்றியும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்ற பொழுதில் அருகிலேயே எங்களை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒலித்த அந்தப் பாடலால் கூடி நின்ற மக்கள் சற்றே தடுமாற தொடங்கினார்கள்.
சிறிது நேரத்தில் நாங்கள் அந்த கடை வீதியை விட்டு அகன்றோம். என்னோடு பிரச்சாரத்துக்கு வந்திருந்த இளைஞர்கள் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக மௌனத்திருந்தார்கள். காலையிலிருந்து அலைந்து வியர்த்திருந்து கருத்திருந்த அவர்களது முகத்தில் எவ்வித சலனமும் இல்லை.
முதன்முதலாக இந்த சமூகத்தை பற்றி எனக்கு மாபெரும் பயம் ஏற்பட்டது. இப்படி மக்களை ஏதோ ஒரு வகையில் இவர்கள் ஏமாற்றும் போது நமது உண்மைகள் எல்லாம் சென்று சேருமா… என்கின்ற அச்சம். நாங்கள் எல்லோருமே ஒரு மாதிரியான வெறுப்புணர்வில் வாகனத்தில் அமைதியாக நின்றிருந்தோம்.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தம்பி சிவமாலன் சிறுவனுக்கும் இளைஞனுக்கும் நடுவில் இருக்கின்ற வயதுடையவன். இந்த மௌனம் அவனுக்கு ஏதோ செய்திருக்கும் போல..
சட்டென சுதாரித்து… எங்களது வேட்பாளர் அருமை சகோதரி சுபாஷினி க்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள். புதியதோர் உலகம் செய்வோம் மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம் என்று உரத்தக்குரலில் முழங்கத் தொடங்கினான் . அங்கிருந்த மற்ற இளைஞர்களும் அந்த சம்பவத்தை சட்டென மறந்துவிட்டு அடுத்த நொடிகளுக்குள் ஒரு பறவை போல பறந்து சென்று விட்டார்கள்.
ஏனெனில் அவர்கள் சீமானின் தம்பிகள்.
அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்கள் தான். ஆனாலும் ஒவ்வொருவரும் இலட்சிய ஆவேசம் நிரம்பிய தனித்தனி பொன்நிறத் துகள்களால் உருவாக்கப்பட்டவர்கள்.
இதை ஒரு சாதாரண தேர்தல் களமாக எண்ணிவிட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த எந்த ஒரு இளைஞனும் விரும்புவதில்லை. உண்மையில் அவர்களுக்கு அது ஒரு மிகப் பெரிய பாலைவன பயணம் தான். எவ்வித பொருளாதார பின்புலமுமற்று, சாதி மத அடையாளங்களை துறந்து விட்டு.. கடும் உழைப்பினையும் வியர்வையினையும் கோருகிற வெப்பக்கால அனல் காற்றில் பயணிக்கிற பணி. ஆனாலும் எதையும் அவர்கள் இலகுவாகவே எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை அவர்கள் அண்ணனிடமிருந்து எடுத்துக் கொண்டு விட்டார்கள். குறைந்தது ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டருக்கு மேலாக பயணிக்க வேண்டும். பதினைந்து கிலோமீட்டருக்கு மேலாக நடக்க வேண்டும். குறுகிய சாலைகள், ஓய்வெடுக்க முடியாத பயண அவசரம்,அறிமுகமற்ற மனிதர்கள், ஒரு மாதிரியான உள்ளுக்குள் வியப்பும் அதே சமயத்தில் வெளியே அலட்சிய சிரிப்போடும் கடக்கிற எதிர்க்கட்சியினர், வெயில் காலத்தின் மதியப்பொழுதுகளில் ஆளரவமற்ற வீதிகள் மூடிக்கிடக்கும் கதவுகள் என கடுமையான சோர்வினை உண்டாக்கும் அனுபவங்களை அந்த இளைஞர்கள் சந்தித்தார்கள். இருந்தாலும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாயச் சூழலுக்குள் அந்த இளைஞர்கள் கட்டுப்பட்டு நடந்தார்கள். அவர்களின் ஒவ்வொரு ஆன்மாவும் இத்தனை காலமாக இந்த நிலம் அழிந்த கதையை அறிந்திருந்தது.
அவர்கள் மிக எளிமையானவர்கள். மற்ற கட்சியினரைப் போல குடித்துவிட்டும் பிரியாணி சாப்பிட்டுவிட்டும் செரிப்பதற்காக பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் அல்ல. அவர்களைப் பொறுத்தவரை அரசியல் என்பது ஒவ்வொரு தனிநபரின் கடமை என உணர்ந்திருக்கிறார்கள். இறுதிவரை உழைத்துப் பார்ப்பது என்ற உறுதியோடு நிற்கிற அவர்களைப் போன்ற இளைஞர்களை இந்த அரசியல் களம் சமீபமாக சந்திக்கவில்லை.
அனைத்திற்கும் பதில்களை அவர்கள் பெற்றிருந்தார்கள். எல்லாவித துரோகங்களுக்கும் அவர்கள் முகம் கொடுக்க பழகியிருந்தார்கள். எந்த சூழ்நிலைகளுக்கும் அவர்கள் தயாராகவே வந்திருந்தார்கள். சிற்சில சலுகைகளை காட்டி அவர்களை மலினப்படுத்த எவராலும் முடியாது. துண்டறிக்கைகள் வழங்கும் ஒவ்வொருவரையும் தன் வாக்காக மாற்றிட சில உண்மைகளை பேசிட அவர்கள் தேர்ந்திருந்தார்கள்.
அவர்களை யாராலும் அலட்சியப்படுத்த முடியாது. ஒரு அசாதாரண கனவை நிறைவேற்றிட சாதாரண எளிய கரங்கள் கை கோர்த்திருப்பது உண்மையில் எதிரிகளை கொஞ்சம் பயமுறுத்தி தான் வைத்திருக்கிறது. அதனால்தான் அவர்களை எந்த ஊடகமும் காட்டுவதில்லை. எந்தவிதமான கணிப்பிலும் அவர்களை இணைப்பதில்லை. சொல்லப்போனால் அவர்கள் சின்னம் கூட வாக்கு எந்திரத்தில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்ட சூழலில்.. அதிகார நிலைகளால் அனைத்து விதத்திலும் புறக்கணிக்கப்பட்ட இளைஞர்கள் அவர்கள். ஆனாலும் எளிய மக்களுக்கு நெருக்கத்தில் அவர்களே நின்றார்கள்.
இதில் அவர்கள் வெற்றி அடையலாம். தோல்வியடையலாம். ஆனாலும் புதிய சரித்திரத்தை அவர்களின் கரங்கள் தான் எழுதிக் கொண்டிருக்கிறது என்பதை எதிரியும் தன் தொண்டைக்குழிக்குள் தான் விழுங்கும் அச்ச மிடறினால் உறுதிப் படுத்திக் கொள்கிறான்.
இந்த மண் நீண்ட நாட்களுக்கு பிறகு அந்தப் புதிய இளைஞர்களின் பாதச் சுவடுகளால் சிலிர்த்துக் கொள்கிறது. அந்தப் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்கிறது.
உங்கள் வீதிகளுக்கும் அவர்கள் வருவார்கள் உறவுகளே..
ஒருமுறை அவர்களை கவனித்துப் பாருங்கள்.
என்ன ஆச்சரியம்..
அவர்களுக்குப் பின்னாலோ.. அல்லது முன்னாலோ நீங்களும் நடக்கக் கூடும்.
இதோ அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்..