–++++++-++——–++++–+————-_-

“ஒரு புத்தகம் என்பது உங்கள் உள்ளங்கையில் அமர்ந்திருக்கும் தனித்துவமான அற்புதம்.”

–ஸ்டீபன் கிங்

புத்தகங்கள் இல்லாத ஒரு உலகம் இதுவரை எனக்கு வாய்த்ததில்லை. உடன்பிறந்தார் யாருமில்லாத பிறப்பு, பிறப்பிலேயே வாய்த்துவிட்ட நோய் தந்த தனிமை, உறக்கமில்லா இரவுகள், பேச துணையற்ற மருத்துவமனை பொழுதுகள் என இயல்பு உலகத்திலிருந்து மாறுபட்ட இன்னொரு உலக வாழ்க்கை என்னுடையது. படுக்கையில் படுத்திருக்கும் என் விழிகள் நிலைகுத்தி கண்டு கொண்டிருக்கின்ற மின்விசிறியை பார்க்க சோரும் போதெல்லாம்..
அருகிலேயே வைக்கப்பட்டிருந்த புத்தக அலமாரியை என் விழிகள் மேயத் தொடங்கிய நொடிகளில் தான் புத்தகங்களோடு எனக்கு நெருக்கம் உருவாகத் தொடங்கியது.

என் தந்தை தீவிர வாசிப்பாளர். வீட்டிற்கு வருகின்ற என் தந்தையின் நண்பர்களும் தீவிர வாசிப்பாளர்கள். புத்தகங்களை வாசிப்பதும் அவைகளைப் பற்றி உரையாடுவது மான ஒரு சூழல் எப்பொழுதும் என் வீட்டில் நிலவிக் கொண்டே இருந்தது. என் வீட்டிற்கு வருகிற என் தந்தையின் நண்பர்கள் வரும்போதெல்லாம் எனக்கு புத்தகங்கள் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். குறிப்பாக என் தந்தையின் நெருங்கிய நண்பர்களான மறைந்த ஆசிரியர் நெடுவாக்கோட்டை இராஜேந்திரன், பேராசிரியரும் தமிழில் ஆகப்பெரும் நவீனத்துவ கவிஞருமான அபி,பேராசிரியர் அ மார்க்ஸ், மறைந்த பேராசிரியர் முனைவர் சௌ.மதார் மைதீன், எழுத்தாளரும் இயற்பியல் பேராசிரியருமான இராமசுப்பிரமணியன் என பேரறிஞர்கள் கூட்டம் என்னை சுற்றி இயல்பாகவே வாய்க்கப் பெற்றிருந்ததால் புத்தகங்கள் மீதான நெருக்கத்தை என்னால் தவிர்க்க முடியாத சூழலை எனது குடும்பம் எனக்கு ஏற்படுத்தியிருந்தது.

எனது பெரியப்பா ச. கல்யாணராமன் ஒரு எழுத்தாளர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணி புரிந்தாலும் புத்தகப் பையோடு அவர் திரிவதை ஒரு ரசிகனாக உணர்ந்து நேசித்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்காக ஏங்கியிருக்கிறேன்.

ஆரம்பகாலத்தில் அப்பா எனக்கு வாங்கி கொடுத்த அம்புலிமாமா, பாலமித்ரா கோகுலம், ராணி முத்து காமிக்ஸ்கள் என என் பால்ய கால நண்பர்கள் தான் எனக்கு இன்னொரு உலகத்தை அறிமுகப்படுத்தி கொடுத்தார்கள். இரும்புக்கை மாயாவியும், பறக்கும் குதிரையும், மாய மோதிரமும் , புராண இதிகாச சிறுகதைகளும் என்னை விரல் பிடித்து அக்காலத்து நோய்மை நெருக்கடிகளில் இருந்து மீட்டு வேறு உலகிற்கு அழைத்துச் சென்றார்கள்.

புத்தக வாசிப்பு என்பது ஒரு மாயச் சுழி. நேர,கால, இடத்தை மறக்க வைக்கிற பெரும் போதை. சிறு வயதில் படித்த பல்கேரிய நாட்டு தேவதைக்கதைகளும், அமர் சித்திரா வெளியிட்ட இந்திய மரபு புராணீக கதைகளும், சோவியத் ரஷ்யாவின் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட சிறுவர்களுக்கான கதைத்தொகுப்புகளும் எனது ஆரம்பகால வாசிப்பின் திறவுகோல்கள்.

அதேபோல பதின் வயதுகளில் மக்சிம் கார்க்கியின் தாய், தாஸ்தாவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள், டால்ஸ்டாய் சிறுகதைகள், ஷேக்ஸ்பியர் கதைகள், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என வாசிப்பு வழக்கம் பெரிய பெரிய கதைகளில் தொற்றத் தொடங்கியது .

அந்த காலத்து தொலைக் காட்சி தொடர்களாக படமாக்கப்பட்ட அகிலனின் சித்திரப்பாவை, கரிப்பு மணிகள் போன்றவைகளை வாசிக்கும்போதுதான் நவீன இலக்கிய மரபு எழுத்துக்கள் மீது ஆர்வம் பிறந்தது. அந்த காலத்தில்தான் பேராசிரியர் அ.மார்க்ஸ் பேராசிரியர் கேசவன் ஆகியோர் தீவிர அரசியல் மற்றும் இலக்கிய வகைகளை சார்ந்த நிறப்பிரிகை என்ற இதழைத் தொடங்கி நடத்தி வந்தார்கள் . அந்த இதழை தொடர்ச்சியாக என்னுடைய தந்தையார் வாங்கி வருவார். அதுதான் எனக்கு மாற்று வகை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய முதல் பெருவழி.

பிறகு கல்லூரிக்காலங்களில் புதுமைப்பித்தன் சிறுகதைகள், கு அழகிரிசாமியின் கதைகள், ‌தி.ஜா வின் மோகமுள், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம், சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள், வண்ணநிலவன் வண்ணதாசன் கதைகள், நகுலன் அபி கல்யாண்ஜி கவிதைகள், என ரசனை மாறத் தொடங்கிய பிறகு அதுவரை நான் பெரிதும் வியந்து வந்த திராவிட இயக்க வகைமை பிரச்சார எழுத்துக்களாக கலைஞர், வைரமுத்து , கோவி மணிசேகரன், போன்றோரின் இலக்கியங்கள் சற்றே என்னை விட்டு விலகத் தொடங்கின.

பிறகு இரண்டாயிரத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் விடியல் பதிப்பகம் வெளியிட்ட எண்ணற்ற மொழிபெயர்ப்பு அரசியல் புத்தகங்கள் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. சே குவேரா வாழ்வும் மரணமும், மாவோ வாழ்க்கை வரலாறு, அல்ஜீரிய விடுதலைப் போராளி பனான்,ரெஜி
டெப்ரேவின் புரட்சிக்குள் புரட்சி , போன்ற பல நூல்களின் எண்ணற்ற பக்கங்களுக்குள் இரவு பகல் பாராது வீழ்ந்து கிடந்தேன். அண்ணன் அறிவுமதியின் உறவு கிடைத்த பிறகு மேத்தா அப்துல் ரகுமான் இன்குலாப் எழுத்துக்கள் மற்றும் சங்கக் கவிதைகள் ஆகியவை மீதான ஆர்வம் அதிகரித்தது.

இதனிடையே எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நட்பு கிடைத்த பிறகு.. எனது வாசிப்பு பழக்கம் வேறு வடிவத்தில் மாறிப்போனது. உலகத் திரைப்படங்கள், நவீன இலக்கியங்கள் என ஒரு பெரும் உலகத்திற்குள் எஸ்.ரா என் கையை பிடித்து அழைத்துப் போனார்.

இன்றளவும் என் வாசிப்புப் பழக்கத்தை நேர் செய்து என்னை வழி நடத்தும் மூத்தவராக எஸ்.ராதான் இருக்கிறார்.

அரசியலில் எனது தலைமையாக நான் கொண்டுள்ள அண்ணன் சீமானும் மாபெரும் புத்தக வாசிப்பாளர். சிறந்த நூலகம் ஒன்றை அவர் மிகப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். அரசியல் நோக்கில் மட்டுமல்லாமல் அவரது இலக்கிய நூல்கள் சேகரிப்பு மகத்தானது.ஒவ்வொரு முறையும் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல் அதை படித்து அடிக் குறிப்பிட்டு அந்த நூல்களைப் பற்றி எங்களிடம் விரிவாகப் பேசுவார் . இன்று காலை கூட எஸ்ரா எழுதி சமீபத்தில் சாகித்திய அகாதமி விருது வாங்கிய சஞ்சாரம் புத்தகப் பிரதி ஒன்று அவசரமாக தனக்கு வேண்டும் என அலைபேசியில் கேட்டார்.

சென்ற புத்தக கண்காட்சி, களம் பதிப்பகம் தொடக்கம் என புத்தகங்கள் சார்ந்து இயங்க தொடங்கி இருப்பது என் வாழ்வின் நிறைவான கணங்கள். சாத்தியப்படுத்தி தந்த அண்ணன் சீமான் அவர்களுக்கும் அருமை மைத்துனர் பாக்கிய ராசன் அவர்களுக்கும் எனது பேரன்பு. நெகழ்ச்சி தழுவல்கள் .

இப்போதும் கூட தமிழில் வெளிவந்துள்ள வேட்டை இலக்கியங்களை தேடித் தேடி வாசித்து வருகிறேன். ஜிம் கார்பெட்டின் எனது இந்தியா,குமாயுன் புலிகள் எனத் தொடங்கி ஓநாய் குலச்சின்னம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை படித்து வருகிறேன். ஒரு மிருகத்தை ஒரு மனிதன் எதிர்கொள்கிற அசாத்திய கணங்களை என்னாலும் உணர வைக்க முடிகிற அந்தப் புத்தகங்களால் நடுநிசியில் எனது அறையின் மூலையில் புலியின் பெருமூச்சு கேட்டுக்கொண்டே இருக்கிறது.

….

வாழ்வின் ஓட்டத்தில் சறுக்கி விழும் போதெல்லாம் புத்தகங்களே என்னை உணர்ச்சிகளின் புதைகுழியில் இருந்து மீட்கிற மீட்பராக இருந்து வந்திருக்கின்றன. பெரும் தவறுகளிலிருந்து அவை என்னை காப்பாற்றி இருக்கின்றன. குற்ற உணர்விலிருந்து மீட்டெடுத்திருக்கின்றன.
என் தவறுகளை எனக்கு உணர்த்தி இருக்கின்றன. மகத்தான காயங்களில் இருந்து என்னை தேற்றி இருக்கின்றன.ஆற்றுப் படுத்தி இருக்கின்றன.

புத்தகங்கள் இருக்கும் என் நூலக அறைதான் நான் பாதுகாப்பாக உணருகிற என் தாயின் கருவறைக்கு நிகரான இடமாக கருதுகிறேன். மழைக்கால பொழுதுகளில் ஒரு தேனீரும் பிடித்த புத்தகம் கையில் இருக்கின்ற நேரம்தான் என் வாழ்வின் உச்சகட்ட மகிழ்ச்சி பொழுது.

புத்தகங்கள் எனக்கு சிறகுகளை அளிக்கின்றன. கதகதப்பையும் கண்ணீரையும் அளித்து என் விழிகளுக்கு வேறு உலகை தரிசிக்க கற்றுத் தருகின்றன. புத்தகங்களே எனது ஆசிரியர். புத்தகங்களே எனது தோழன் .
ஒரு காதலியின் அருகாமை போல புத்தகங்கள் எப்போதும் என்னை கிறக்கத்திலும் உற்சாகத்திலும் ஒருங்கே நிறுத்தி.. என்னை நானே உணர வைக்கின்றன. ஒரு புது புத்தகத்தின் வாசனை என்பது என்னை உன்மத்தம் கொள்ள செய்கிறது. புத்தகப் பக்கங்களைப் புரட்டும் ஓசையில் இசையின் தாள லயங்களை உணர்ந்திருக்கிறேன்

புத்தகங்கள் என்கின்ற பெரும் நதியின் மீது மிதக்கின்ற சிறு சருகாய் நான் தத்தளிக்கிறேன். அந்த தத்தளிப்பே என் வாழ்வு என நான் உணருகிறேன்.

மணி செந்தில்.
உலக புத்தக நாள் ஏப்-23 /2019