பத்தாண்டுகள் கடந்து விட்டன.
ஆனாலும் கடக்க முடியாத பெரும் வலியாக இனத்தின் அழிவு ஆழ்மனதிற்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது.
10 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தப் போரின் இறுதிக் கால கட்டங்களில்.. யாராவது போராடி இந்தப் போரை நிறுத்தி விட மாட்டார்களா என்று ஒவ்வொரு அமைப்பும் நடத்திய போராட்டங்களில் உரத்த குரலில் முழக்கமிட்டது நினைவுக்கு வருகிறது.
என்னைப் போலத்தான் பலரும் அக்காலகட்டத்தில் இருந்தார்கள். மனதின் சமநிலை தவறுகிற ஏதோ ஒரு நொடியில் தன்னைத் தானே எரித்துக் கொள்ளலாம், அதுவே மிகப்பெரிய போராட்டத்தை உண்டாக்கலாம் என்கின்ற எண்ணத்தில் பலர் திரிந்து கொண்டிருந்தார்கள்.
போர்க் காட்சிகள் நிரம்பி வழிகிற குறுந்தகடுகளை காண சகிக்காமல் அழுத கண்களோடு பிரதி எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராய் பார்த்து கொடுத்துவிட்டு வருகிற இரவுகளில்… அயலகத்தில் இருந்து வருகிற அலைபேசி அழைப்புகளில் ஒவ்வொரு தளபதியின் பெயர் சொல்லி இவர் இன்று வீர மரணம், இந்தப் பகுதி இராணுவ வசம் ஆனது என்று சொல்லிவிட்டு புலிகள் தந்திரோபாயமாக பின்வாங்குகிறார்கள் என்ற நம்பிக்கையும் நமக்கு அளித்து விட்டு ஒய்கின்ற அந்தக் குரல்களில் தொனிக்கும் நடுக்கத்தினை பற்றி நாமும் அச்சப்பட்டு கொண்டிருந்த அந்த உறக்கமற்ற இரவுகள் மீண்டும் வரக்கூடாதவை.
நமக்கு இரண்டு நம்பிக்கைகள் இருந்தன.
1.புலிகள் ஒரு போதும் தோற்க மாட்டார்கள்.
2.அப்படி ஒரு பின்னடைவை அவர்கள் சந்தித்தாலும், அன்று இந்த மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த திமுக மக்களைத் திரட்டி, மத்திய அரசை உலுக்கி, சிங்களனை மிரட்டி போரை நிறுத்தும்.
இந்த இரண்டு நம்பிக்கைகளில் முதல் நம்பிக்கை மட்டுமே காப்பாற்றப்பட்டது.
உண்மையில் புலிகள் தோற்கவில்லை. உலக வல்லாதிக்கத்தின் யுத்த விதிகளை மீறிய கொடும் போரியல் பலமும், தாயகத் தமிழர்களான நமது கையாலாகத்தனமும் புலிகளை தோற்கடித்தன.
ஆழ்ந்து சொல்லப்போனால்.. சொந்த சகோதரர்கள் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் மதுக் கடைகளிலும் திரையரங்குகளிலும் குவிந்து கிடந்த நம்மால் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
விடுதலைக்காக நின்றார்கள் அவர்கள். உயிரையும் விலையாக கொடுத்து விண்ணேறிச் சென்றார்கள்.
லட்சக்கணக்கில் நம் இன மக்கள் கொன்று குவிக்கப்பட்ட காலகட்டத்தில் தான் நாமும் வாழ்ந்திருக்கிறோம். இசைப்பிரியா போன்ற எண்ணற்ற நம்முடன் பிறந்த தங்கைகள் நிர்வாணமாக இரு கையையும் விரித்து நடு சாலைகளிலே இறந்து கிடந்த போது, அதை நேரடியாக விழிகளால் பார்த்து, அந்த சாவை சகிக்க பழகிக் கொண்ட நாம் தான் உலகிலேயே கொடும் போர் குற்றவாளிகள்.
நம் தங்கைகளின் நிர்வாண உடலை சிங்களன் படம் பிடித்து சிரித்துக் காட்டி நம்மை ஏளனம் செய்த போது கடந்து போகக் கற்றுக் கொண்ட நாம் தான் உண்மையான குற்றவாளிகள்.
நமது மௌனம் சொந்த சகோதரர்களை கொன்றது.
சகோதரிகளை அழித்தது.
தமிழர்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள், எதையும் கடந்து விடுவார்கள் என்பதற்கு ஈழத்தில் நடந்த இனப்படுகொலை உதிர சாட்சியாக நம் முன்னால் இருக்கிறது.
இதைத்தான் திமுக தலைவர் கருணாநிதி நன்கு உணர்ந்திருந்தார். எப்படியும் தமிழர்கள் காசு வாங்கிக் கொண்டு நமக்கு ஓட்டு போட தான் போகிறார்கள்… எனவே நாம் பதவிக்காக காங்கிரசை ஆதரிப்போம் என்று தமிழர்களின் கையாலாகாத்தனத்தின் மீது நம்பிக்கை கொண்டு அன்று அவர் அரசியல் செய்தார்.
ஆனால் திமுக மீது நம்பிக்கை கொண்டிருந்த என்னைப் போன்ற எண்ணற்றோர்.. இனத்தின் கொடும் அழிவை காண சகிக்காது மனம் பிழன்று போனோம். நாங்கள் மீண்டுவர சீமான் என்ற தனி மனிதனின் உழைப்பு களமாக எங்கள் முன்னால் விரிந்தது. எங்களது ஆழ்மன குற்ற உணர்ச்சியின் வடிகாலாக நாம் தமிழர் எழுந்தது.
திமுக காங்கிரசோடு சேர்ந்து கொண்டு அன்று நடத்தியவை அனைத்தும் சிங்களனின் இனப் படுகொலையை விட கொடுமையானவை. இதை மறக்க மாட்டேன் என்கிறீர்கள் கடக்க மாட்டேன் என்கிறீர்கள் என்பது போன்ற பசப்பு வார்த்தைகள் வேறு.
எத்தனை மாதிரியான பித்தலாட்டங்கள்..
மனித சங்கிலி, ஐயகோ தீர்மானம், இரண்டு மணிநேர (?) சாகும் வரை உண்ணாவிரதம் மல்லாக்கப் படுத்துக்கொண்டு முதுகிலே ஆப்பரேஷன்,…. அயோக்கியர்களே.. எதை மறக்க சொல்கிறீர்கள்..??
எதை கடக்கச் சொல்கிறீர்கள்..??
சாலையில் எதிரெதிரே சந்திக்கும் நண்பர்கள் கூட பேசிக் கொள்ளாது குற்ற உணர்ச்சியோடு கடந்து போனோமே… நள்ளிரவுகளில் எழுந்து உட்கார்ந்து கொண்டு.. இணையத்தில் ஈழத்தின் அழிவை காண சகிக்காமல் கை பிசைந்து கண்கலங்கி இருந்தோமே..
எதை மறக்க சொல்கிறீர்கள்..?
ஈழம் ..அங்கு வாழ்ந்திருந்த தமிழருக்கான தேசம் மட்டுமா.. இல்லை. இந்த உலகத்தில் வாழும் 12 கோடி தேசிய இனமான தமிழர் என்கின்ற இனத்திற்கான தாய்நாடு. தமிழர்களின் இறையாண்மையை உலகத்திற்கு அறிவிக்கின்ற பேரறிவிப்பு.
அப்படி ஒரு நாட்டை தலைவர் அந்த மண்ணிலேயே கட்டி எழுப்பினார். காட்டிலே இருந்தாலும் விமானப்படை கட்டிக்கொண்டு புலிகள் விண்ணில் பறந்த போது… ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்தான். இதுவரை தன்னை அசுரன் அடிமை அகதி என்றெல்லாம் உணர்ந்திருந்த அவனது ரத்த நாளங்களில் உறைந்திருந்த உதிரத்தில் உயிர்ப் பாய்ச்சினார் தலைவர்.
அந்த ஈழம் தான் அழிந்தது. அழித்தது காங்கிரஸ். சோனியா காந்தி என்கின்ற தனி பெண்ணின் கொடும் வன்மம். அந்த காங்கிரசு கட்சிக்கு தான் இந்த தமிழ்நாட்டை தாரைவார்த்து பதவிக்காக அடகு வைத்தது திமுக.
இதை மறக்க முடியுமா.. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த கதையை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால் இவர்கள் உண்ட வீட்டையே உருண்டையாக உருட்டி தின்றவர்கள்.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சரி. தலைமுறை தலைமுறையாக இந்த இந்த உண்மையை, இனம் அழிந்த வலியை நாங்கள் கொண்டு செல்வோம்.
உடன்பிறந்த சகோதரியின் நிர்வாணத்தைப் பார்த்த பாவ விழிகள் எங்களுடையது.
குற்ற உணர்ச்சியும் கையாலாகாத்தனமும் இந்தப் பத்தாண்டுகளில் இம்மியளவும் குறையவில்லை.
வன்மம் ஏறியிருக்கிறது . மீண்டும் உயிர்ப்போடு ஒரு தாய் நாட்டை உருவாக்க வேண்டிய கடமை முன்னே இருக்கிறது. அதற்கான அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தேவை இந்த நிலத்தில் நமது கரங்களில் இருக்கிறது.
எம் ஈழ உறவுகளே..
உங்கள் முன்னால் நாங்கள் குற்ற உணர்வோடு தலைகுனிந்து நிற்கிறோம்.
எங்களது உள்ளங்கைகளிலும் ஈழத்தின் உதிரம் இன்னும் உலராமல் தான் இருக்கிறது.
ஒரு நாள் ஈழ நிலத்தில் வீசும் விடுதலைக் காற்று.. ஒவ்வொரு தமிழனின் சுவாசக் காற்றாய் மாறும்.
அந்த பெருமித கணம் வரை.. இந்த சினம் அடங்காமல் களத்தில் நிற்க உறுதி ஏற்கிறோம்.
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.
மணி செந்தில்.
மே 17/18-2019