எப்போதும் இல்லாத அளவிற்கு திராவிட கருத்தாக்கம் வலுவான எதிர் தாக்குதலை தனது வரலாற்றில் முதன்முதலாக எதிர்கொள்கிறது. திராவிடம் ஆரியத்தை எதிர்த்த கதை என்பது.. ஏறக்குறைய தடவிக் கொடுத்தது போல.. மென்மையான ஏசல், கேலி ,கிண்டல் போன்ற அளவில் ராஜாஜி- பெரியார் இடையிலான உறவு போன்ற நட்பு முரண்களோடு இருந்தது.
காலப்போக்கில் ஆரியம் திராவிடத்தை செரித்துக் கொண்டதையும், திராவிடம் மிக எளிமையாக ஆரியத்தை உள்வாங்கி கொண்டதையும் ஒளிவு மறைவின்றி வரலாற்றின் ஓட்டத்தில் காண முடிகிறது.
ஆனால் தமிழ்த்தேசியக் கருத்தாக்கமோ தன் இயல்பிலேயே ஆரிய வைதிக எதிர்ப்பை மரபுவழியில் கொண்டிருக்கிறது. தமிழ்த்தேசியர்கள் நவீன அரசியல் களத்தில் ஆரியத்தையும், திராவிடத்தையும் சமமான தராசுத் தட்டில் வைத்து தகர்த்து வருகிறார்கள்.
ஆரிய- இந்துமத எதிர்ப்பில் விளைந்ததாக கூறப்படும் திராவிட கருத்தாக்கத்தின் மாபெரும் அரசியல் அமைப்பான திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் தனது கட்சியில் 90% இந்துக்கள் என பேசுகிறார். மதிமுகவின் தலைவர் வைகோ 99% கோவிலுக்கு போகிறார்கள் என்று பெருமிதம் கொள்கிறார்.
ஆனால் சமகால தமிழ்த் தேசிய அரசியல் அமைப்பான நாம் தமிழர் கட்சி தமிழர்கள் இந்துக்கள் அல்ல என தீர்மானம் இயற்றுகிறது.
திராவிடத்தை பொறுத்தவரையில் இந்து என்பது மாபெரும் அடையாளமாக, பெருமிதமாக மாற்றப்பட்டு விட்டது. திராவிடத் தலைவர்களின் குடும்பத்தினர் அத்திவரதரை பார்க்க வரிசைக் கட்டி அணிவகுத்து நின்றதை அனைவரும் பார்த்தோம். இந்து மத எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு ,கடவுள் மறுப்பு போன்ற முனைகளில் திராவிடத்தின் முனைகள் மழுங்கி .. வலுவிழந்து, வழக்கொழிந்து போய்விட்டது.திராவிடக் கட்சிகளுக்கு பெரியாரே ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வாகவும், பலசமயங்களில் தர்மசங்கடம் ஏற்படுத்துகிற தத்துவத் தொந்தரவாகவும் கருதப்படுகிறார்.
முன்னுக்குப் பின்னான கருத்தியல் முரண்களாலும், அரசியல் சமூக வெளிகளில் சுயநலம் சார்ந்த சமரசங்களாலும் பலமுனைகளில்.. தத்துவப் போதாமை ஏற்பட்டு தள்ளாடுகிற திராவிடக் கருத்தாக்கத்தை தூக்கி நிறுத்த கலைஞர் டிவியின் திருமாவேலன் போன்றோர் கிளம்பி இருப்பது புரிந்து கொள்ள முடிகிறது. இது வழக்கமான செஞ்சோற்றுக்கடன் என்றாலும் வரலாற்றை மாற்றி எழுதுகிற வழக்கமான திராவிட யுக்தியை திருமாவேலனும் செய்யத் துணிந்திருக்கிறார். .. முழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில்.. விளக்கு ஏற்றுகிற வில்லங்க வேலையை விபரீதமாக செய்திருக்கிறார்.
அவர் எழுதுகிற எழுத்துக்களே அவருக்கே எதிராக அமைகிற.. பெரியாருக்கு பெரியாரையே எதிராக நிற்க வைக்க முயல்கிற வில்லங்க பதிவு ஒன்றை.. சமீபத்தில் அவர் பேசியிருக்கிறார்.22.9.2019 அன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இணையதளங்களில் கிடைக்கிறது.
திராவிடம் என்றாலே தமிழ் தானாம்.அப்படிதான் பாவாணர் சொன்னாராம். பாவாணர் சொன்னதையாவது ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று திருமாவேலன் பரிதாபமாக கேட்கிறார். பாவேந்தர் பாரதிதாசன் தொடக்க காலங்களில் திராவிடப் பண் என்றெல்லாம் எழுதி திராவிட இயக்கங்களுக்கு தன்னுடைய மகத்தான ஆதரவை வழங்கியவர். அதே பாவேந்தர் தான் இறுதிகாலத்தில் முழுமையான தமிழ்த் தேசியராக மாற்றமடைந்து திராவிடம், திராவிடர் என்பதான சொற்களை நீக்கி தன் கவிதைகளில் தமிழ், தமிழர் என்ற சொற்களை இணைத்து நாம் தமிழர்.. நாம் தமிழர் என்று முழங்கியவர்.
அதேபோலத்தான் பாவாணரும்.. திராவிடத்திற்கு ஆரம்பகாலத்தில் சில ஆதரவு பதிவுகள் செய்தாலும்.. இறுதி காலத்தில் திராவிடம் என்பதையே ஒழிக்க வேண்டும் என்றும், திராவிடத்தை கடைபிடித்தால் தமிழ் தாழும் என்றும் தமிழியற் கட்டுரைகள் எழுதியவர். பாவாணரின் சிந்தனைப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்கள் அவரது நூல்கள் முழுக்க பரவிக்கிடக்கின்றன. தமிழின உணர்வோடு திராவிட எதிர்ப்போடு தமிழியல் கட்டுரைகளை எழுதிய பாவாணரை சுட்டிக்காட்டுவதும், மேற்கோள் காட்டுவதும் திருமாவேலன் சொல்ல வந்த கருத்திற்கு எதிராக அவரே மாறக்கூடிய அபாயம் இருக்கிறது.
மறைமலை அடிகள் சொன்னார்.., பாவாணர் சொன்னார்.. என்றெல்லாம் சாட்சிக்கு ஆள் கூப்பிட்டு வந்து வலுவில்லாத வழக்கை வலுக்கட்டாயமாக திருமாவேலன் நடத்தி பார்க்கிறார். மறைமலை அடிகளின் ஆரிய எதிர்ப்பு புத்தகம் பெரியார் இயக்கத்தவர்களின் கூட்டத்தில் தான் அதிகம் விற்றது என்று மறைமலை அடிகள் மகிழ்ச்சி அடைந்தாராம். நல்ல வேளை அவர் அப்போதே இறந்துவிட்டார்.
அவர் ஆரிய எதிர்ப்பு புத்தகம் ஜெயலலிதாவுக்கு தி.க சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்த கூட்டத்திலும், பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து திமுக நடத்திய பல்வேறு கூட்டங்களிலும் விற்கப்பட்டதா என்பதைப் பார்க்க அவர் இல்லை.
முதலில் தேசியம், மொழி, இனம் குறித்து பெரியார் சொன்ன கருத்துக்களை சுட்டிக்காட்டி பெருமித கதையாடல்கள் பேசுவது என்பது மிகுந்த ஆபத்தானது. ஏனெனில் பெரியாரே அவைகளிலிருந்து கடுமையாக முரண்பட்டு எழுதியும் பேசியும் இருக்கிறார்.
பெரியாரின் கருத்துக்கள் ஐயா ஆனைமுத்து அவர்கள் தொகுத்தளித்த பெரியார் சிந்தனைகள் தொகுப்புகள் மூலம் நமக்கு கிடைக்கின்றன. பெரியார் தன் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் மேடைகளில் பேசியும், விடுதலை, குடியரசு போன்ற அவரது இதழ்களில் எழுதியும் தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். அவை அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு நமக்கு காணக் கிடைக்கின்றன.
பெரியாரை அறிதல் என்பது நமக்கு பல தன்மைகளில் நிகழ்கிறது. தலைவர்கள் அறிஞர்கள் பேச்சின் ஊடாக, பெரியாரின் சிந்தனைகள் தொகுப்பு நூல்கள் மூலமாக, பெரியாரைப் பற்றி பலர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்கள் மூலமாக பெரியாரை அறிதல் நமக்குள்ளாக நிகழ்கிறது.
எனவே தெரிந்ததை வைத்து பெரியாரை ஒரு சட்டகத்துக்குள் அடக்க துணிவது என்பது பெரும்பாலும் பிழையாகவே முடிந்திருக்கிறது. இதுபோன்ற மயக்கங்கள்/விபத்துகள் எனக்கும் நிறைய நடந்திருக்கின்றன.நானும் இதே மயக்கங்களோடு பல நூறு பக்கங்கள் இவ்வாறெல்லாம் எழுதி இருக்கிறேன். ஆனால் பெரியாரின் தொடர்ச்சியாக வாசிக்கும்போது தான் பெரியார் கட்டமைக்கப்பட்ட எதற்கும் எதிராக இருந்திருக்கிறார் என்பதும் மதம், சாதி, கிராமம், இனம், குடும்பம் ,மொழி, தேசியம் போன்ற பல கட்டமைப்புகளை பெரியார் பகிரங்கமாக எதிர்த்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
சாதி ஒழிய கிராமம் ஒழிய வேண்டும் என்ற பெரியார், பெண்ணடிமை தீர குடும்பம் என்ற அமைப்பு அழிய வேண்டும் என்றார். ஒரு கட்டத்திற்கு அதிகமாக சென்று பெண்கள் தங்கள் அடிமை நிலை ஒழிய தங்கள் கருப்பைகளை நீக்கிக்கொள்ள வேண்டும் என்றும் முழங்கினார்.
மொழி இனம் தேசியம் போன்ற கருத்துக்களில் தனது நம்பிக்கையின்மையை பெரியார் பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
திராவிட கருத்தாக்கத்தின் தந்தை என அழைக்கப்பட்டவரை தமிழ்த்தேசியத்தின் மூலவர் என கலைஞர் டிவியின் திருமாவேலன் திடீர் பட்டம் சூட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கெல்லாம் என்ன பயம் என்றால்.. எங்கே உதயநிதியை தமிழ்தேசிய தத்துவத்தின் இளவரசர் என்று திருமாவேலன் சொல்லி விடுவாரோ என்றுதான்..
எதற்காக எந்த விபரீத முயற்சி என்று யோசித்தால்.. வலுவிழுந்து கிடக்கும் திராவிட தத்துவத்தை நிமிர்க்கும் வேலை இல்லை இது.. எந்தப்பக்கம் வலுவாக இருக்கிறதோ.. அந்தப் பக்கம் வான்டட் ஆக வண்டியில் ஏறுகிற வாய்ச்சாங்குளி வேலை.
இது தான் பெரியார் மண் ஆயிற்றே.. இங்கே தமிழ் தேசியம் எல்லாம் எடுபடாதே.. திராவிட தீரர் வைகோ சொல்வதுபோல தமிழ் தேசியம் என்ற பெயரில் சிலர் வருகிறார்கள் அது இங்கே எடுபடாது என்ற வகையில் எதற்காக இந்த வீண் வேலை என்று திருமாவேலனிடம் சர்வ யோக்கியதை அம்சங்கள் உள்ள எந்த திராவிடராவது கேட்பாரா என்பது தனிக் கேள்வி.
இன்னும் இதை ஆழமாக கேட்க வேண்டும் என்றால் ஒரே ஒரு கேள்வி தான் நினைவுக்கு வருகிறது.
பயமா இருக்கா குமாரு..??
*********
மொழி பற்றி பெரியார் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.அவர் குறிப்பிட்ட கருத்துக்களிலியே அவர் முரண்பட்டு இருக்கிறார்.
மொழி என்பது உரையாடுவதற்கான கருவி மட்டுமே என்றும் அதில் பெருமிதம் கொள்ளவோ பெருமையடையவோ எதுவுமே இல்லை என்றும் பெரியார் பல இடங்களில் பேசி இருக்கிறார்.
திமுக முதன்முதலில் ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறது. பதவி ஏற்பதற்கு முன் திமுக தலைவர் அண்ணா அவர்கள் தனது அரசியல் குருவான பெரியாரை தனது அமைச்சரவை யோடு நேரடியாக சந்தித்து இந்த ஆட்சியே உங்களுடையதுதான் என்று சொல்லி ஆசி பெற்று பதவி ஏற்கிறார்
அண்ணா ஆட்சிக்காலத்தில் 1968-ம் வருடம் ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் உலக தமிழ் மாநாடு நடந்தது. மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அறிஞர்கள் சிலைகள் அந்த மாநாட்டில்தான் நிறுவப்பட்டன.
அந்த மாநாடு குறித்து.. 15.12.1967 தேதிய விடுதலை நாளேட்டில் பெரியார்..
உலகத் தமிழ் மாநாடாம்.. வெங்காய மாநாடாம்.. இது எதற்கு.. கும்பகோணம் மாமாங்கத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்க போகிறது என்று மிகக்கடுமையாக சாடி அறிக்கை விட்டார்
மொழி பற்றி பெரியாரின் கருத்துக்கள் திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழும் தமிழரும் என்ற நூலின் வாயிலாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூல் முதன்முதலாக வெளியிடப்பட்டபோது இதன் தலைப்பு தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்.. எப்படி..?? .. பிறகுதான் இந்த நூலின் தலைப்பு தமிழும் தமிழரும் என்று மாற்றப்பட்டது.
அந்த நூலில் பல கருத்துக்கள் காணப்படுகின்றன. தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என கடந்த 40 வருடங்களாக கூறி வருகிறேன் என பெரியார் தன்னிலை விளக்கம் அளித்து அதற்கான தர்க்கத்தை பல்வேறு பத்திகளில் விவரிக்கிறார்.
தமிழை விலக்கி தமிழருக்கு என்ன நஷ்டம்.. வேற்று மொழியை ஏற்றுக் கொள்வதால் என்ன பாதகம் வந்துவிடப்போகிறது என்றெல்லாம் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
மொழி என்ற ஒரு தேசிய இனத்தின் அடிப்படை பண்பினை பெரியார் ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கிறார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதை கடுமையாக விமர்சித்த பெரியார் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
மொழியின் மீது ஒரு நாடு எதற்காக பிரியவேண்டும்.. மொழியினால் பெருமை சிறுமை லாப நஷ்டம் ஒன்றுமே இல்லை.. சாதியின் மீது மதத்தின் மீது இனத்தின் மீது பிரிவதாக இருந்தால் கூட அதற்கு அர்த்தம் உண்டு.ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட பொருத்தமற்ற ஒற்றுமையற்ற கொள்கைகள் திட்டங்கள் உண்டு. மொழிகளில் அப்படி கொள்கையோ, திட்டமோ, அனுபவமோ, கலாச்சாரமோ, பழக்கவழக்கமோ, மாற்றமாய் இருக்கும்படி நமக்குள் எந்த மொழியுமே இல்லை. ஆதலால் இதை காரணம் காட்டி பிரிந்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை.(பெரியார் சுயமரியாதை சமதர்மம் எஸ்விஆர் பக்கம் 824)
தன்னுடைய தமிழ் ஆதரவு பற்றியும் இந்தி எதிர்ப்பு பற்றியும் மிகத்தெளிவாக பெரியார் ஒரு கருத்தினை முன் வைக்கிறார்.
எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்காகவோ தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல என்பதை தோழர்கள் உணர வேண்டும். மற்றெதற்கு என்றால் ஆங்கிலமே பொதுமொழியாக ,அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
ஆகையால் தமிழர் தோழர்களே..! உங்கள் வீட்டில் மனைவியுடன் குழந்தைகளுடன் வேலைக்காரிகள் உடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள் பேசப் பழகுங்கள்.(27.01.69 விடுதலை)
தமிழை காட்டுமிராண்டி மொழி என 40 ஆண்டுகளாக கூறி வருகிறேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும் அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன். என பெரியார் தெளிவாக தெரிவிக்கிறார்.
நம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து, நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளை தமிழில் நடத்துகிறோம். சமயத்தை ,சமய நூல்களை, இலக்கியத்தை தமிழில் கொண்டிருக்கிறோமே..! சரி ..இதற்கு மேல் சரியான தமிழுக்கு என்ன வேண்டும்..(ஈவேரா சிந்தனைகள் பாகம் 2 பக்கம் 985)
தான் ஒரு தேசியவாதியாக அல்ல ஒரு சீர்திருத்தவாதியாகவே அழைக்கப்பட விரும்புகிறேன் என பகிரங்கமாக அறிவித்தவர் பெரியார். அவரைப் பொறுத்தவரையில் எல்லாவற்றையும்விட சமூக சீர்திருத்தமே முதன்மையான கருப்பொருளாக இருந்தது.
பெரியார் தன் வாழ்வில் தன் கருத்துக்களில் நிறைய முரண்பட்டு இருக்கிறார். அதை அவர் ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்.
நான் மாறுதல் அடைந்து விட்டேன் என சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. இந்தமாதிரி மாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும் நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றாற் போல் நடந்து தான் தீரும். நாளை நான் எப்படி மாறப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால் நான் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
-குடியரசு 11.10.1931.
பெரியார் தன் வாழ்வில் மூன்று நிலைப்பாடுகளை அவ்வப்போது எடுத்திருக்கிறார். 1930 களில் தொடங்கி ஏறத்தாழ 1938 வரையிலான காலங்களில் தமிழ்நாடு தமிழருக்கே என்றார். 1939 தொடங்கி 1957 வரையிலான காலகட்டங்களில் திராவிடநாடு என்ற முழக்கத்தை முன் வைத்தார். 1958 ல் இருந்து தன் வாழ்நாள் முடிய தனித்தமிழ் நாடு, தமிழ்நாடு தமிழருக்கே போன்ற முழக்கங்களை முன்வைத்தார்.
இவை ஒவ்வொன்றும் பெரியாரிடம் புறச்சூழல் சார்ந்து ஏற்பட்ட சிந்தனை மாற்றங்களாகும். மொழி இனம் தேசியம் ஆகியவை குறித்து நிரந்தரமான கொள்கை முடிவு எதையும் பெரியார் தன் வாழ்வில் எடுத்ததில்லை.
பெரியாரை அவரது கருத்துக்கு மூலமாகவே அணுகவேண்டுமே ஒழிய, அவரவர் கருத்திற்கேற்ப பெரியாரை மொழிபெயர்ப்பது என்பது பெரியாருக்கே எதிரானது.
எனக்கு எந்த மொழி இனம் மீதும் பெரியப் பற்றில்லை.
ஒரு கட்டத்தில் நான் உலகளாவிய மனிதனாக மாறி விடுவேன் என்று சொன்ன பெரியாரை தான் திருமாவேலன் தமிழ்த்தேசியத்தின் மூலவராக அமர வைக்க முயற்சிக்கிறார். எவ்விதமான அரசியல் சுயநல கணக்குகள் இன்றி பெரியாரை மிகச்சரியாக வாசித்தவர்களுக்கு திருமாவேலனின் இந்த முயற்சி அடிப்படையிலேயே எவ்வளவு பிழையானது என்று நன்கு புரியும்.
நம்மால் ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது. மிகத்தீவிர திராவிட ஆதரவாளர் திருமாவேலனுக்கு கூட பெரியாரையும் தமிழ்த் தேசியராக அடையாளப்படுத்தவே விருப்பம் இருக்கிறது.
இனி திராவிடம் என்பது இல்லாத அழிந்துப்போன ஒரு தத்துவமாக தகர்ந்து விட்டது. இனி திராவிடத்தின் மூலவராக பெரியாரை காட்டி எந்த அரசியல் ஆதாயம் பெற முடியாது என்ற காரணத்தினால் .. தற்காலத்திய இளைஞர்களின் மாபெரும் ஈர்ப்பான பூர்வகுடிகளின் அரசியல் தத்துவமான தமிழ்த்தேசியத்தின் மூல இருக்கையில் பெரியாரை அவரது உளமார்ந்த கருத்தியல் அம்சங்களுக்கு விரோதமாக அமர்த்தி விட முயற்சிக்கிறார்.
பெரியாரின் சமூக பங்களிப்பு என்பது வேறு. பெரியாரின் மொழி, தேசிய இன சிந்தனைகள் என்பது வேறு. முன்னது போற்றத்தக்கது. பிந்தையது புறக்கணிக்கத் தக்கது.
தமிழர் என்ற சொல் எவ்வாறு தமிளொ த்ரமிள த்ரமிட திராவிட என திரிந்து திராவிடர் ஆனது என்கின்ற கால்டுவெல்லின் பழைய பஞ்சாங்கத்தை பாவாணரை மேற்கோள்காட்டி திருமாவேலன் பயன்படுத்தி இருப்பது அவலச்சுவையானது. மொழி அறிஞர் கால்டுவெல் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்ந்து ஒப்பிட்டு ஆய்வு நடத்தி திராவிட இனம் என்கின்ற ஒன்றை புதிதாக கண்டறிந்தார். வரலாற்றில் அதற்கு முன்பாக திராவிட இனம் என்ற ஒன்று இல்லவே இல்லை. அதே பாவணர் தான் தமிழுக்கு திராவிடம் தீது என்றவர்.
மொழிகளுக்கு அடிப்படையே இருக்கக்கூடிய ஒற்றுமைகளை வைத்துக்கொண்டு வரலாற்றையும் இனத்தையும் முடிவு செய்வதென்பது கற்பனையானது என்று மொழி அறிஞர் தாமஸ் டிரவுட்மன் தெரிவித்திருக்கிறார்.
கால்டுவெல் காலத்தில் சுமார் 12 மொழிகள் திராவிட மொழிகள் என அடையாள படுத்தப்பட்டன. கால்டுவெல் முறைமையிலேயே மொழி ஒப்பியல் ஆராய்ச்சி நடைபெற்று தற்காலத்தில் ஏறத்தாழ 85 மொழிகளை திராவிட மொழிக் குடும்பத்தில் மொழி அறிஞர்கள் இணைத்துள்ளனர்.
அதைத்தான் பாவாணர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்..
திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும் , தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடுகூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.
(பாவாணர் 1959)
ஏறக்குறைய 85 மொழிகள் பேசுபவர்கள் அனைவரையும் திராவிடர்களாக மாற்றிவிட்டோம் என்றால்.. அண்ணா அறிவாலயம் அகிலத்தின் அறிவாலயம் ஆக மாறிவிடும் இல்லையா.. திருமாவேலனின் எஜமானர்கள் ஏறக்குறைய அரைவாசி உலகத்தின் தலைவர்களாக ஆகிவிடுவார்கள் இல்லையா.. அதைத்தான் திருமாவேலன் தமிழ் என்றால் திராவிடம் ..திராவிடம் என்றால் தமிழ் ..என்றெல்லாம் எழுதியும் பேசியும் புலம்பியும் வருகிறாரோ.. (?)
வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழர் என்கின்ற தனித்த தேசிய இனம் தனது அடையாளங்களை காப்பாற்றிக்கொள்ள எழும்பி வருகிறது.
அந்த மீளெழுச்சிக்கு வலுவூட்ட கீழடி போன்ற முதுபெரும் தமிழின அடையாளங்கள் பெருமித வலிமையை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை திராவிடத்தின் பெயராலும் அதன் அரசியலின் பேராலும் தமிழர்கள் வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டதை நினைத்து விழித்துக்கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். இந்த விழிப்பு தான் பிழைப்புவாதிகளான திராவிட அரசியல் தலைகளுக்கு சாவு மணியாக அலாரம் அடிக்க தொடங்கியிருக்கிறது.
அதனால் தான் தனக்கு சேவகம் செய்கிற திருமாவேலன் போன்ற சேவகர்களை வைத்து இல்லாததையும் பொல்லாததையும் பேசியும் எழுதியும் அற்று விழும் திராவிடத்தை கட்டி எழுப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள்.
அது திருமாவேலனால் மட்டுமல்ல..இனி எவராலும் முடியாது.
இனி திராவிடர்களுக்கு சொல்வதற்கு உண்மை ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.
முடிந்துவிட்டது. கிளம்புங்கள்.