❤️

சம காலத்தில் திராவிட/தேசிய தத்துவங்களை சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும் எதிராக நிற்பது என்பது உண்மையில் சற்றே திமிர் கலந்த பெருமிதமாகத்தான் இருக்கிறது. இவர்கள் நம்மை பார்த்து பதற பதற நமக்கு ஆர்வம் கூடுகிறது. பதற்றத்தோடு நம் மீது அவதூறுகளை அள்ளி வீசி அழித்துவிடுவோம், முடித்து விடுவோம், தனித்து விடுவோம் என இவர்கள் துள்ளி குதிக்கும் போது நமக்கு பரவசம் கூடுகிறது. இவர்கள் எதிர்க்கும் போதெல்லாம் மனம் உற்சாகம் அடைந்து உயிர் கொள்கிறது.வரலாற்றில் நம்மைப்போன்ற உறுதி கொண்ட ஒரு கூட்டத்தை தமிழக அரசியல் இப்போதுதான் எதிர்கொள்கிறது.

இந்த மன உறுதி இன அழிவினால் ஏற்பட்ட அறிவினால் உண்டானது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் உண்டானது. 60 ஆண்டு காலமாய் நாம் ஏமாற்றப்பட்டதன் பின்னால் உள்ள அவமானத்தால், காயத்தால், வலியால், உண்டானது.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 2009 டிசம்பர் மாதத்தில் நாம் தமிழர் மிகச்சிறு அமைப்பாக ஊருக்கு ஊர் முளைவிடத் தொடங்கிய காலகட்டத்தில்.. அண்ணன் சீமான் உள்ளிட்ட நாங்கள் பலரும் ஊர் ஊராய் அலைந்து கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் உணர்வாளர்களை ஒன்று திரட்டிய காலக்கட்டம் அது. அப்போதுதான் பெரம்பலூர் கலந்தாய்வு கூட்டத்தில் அண்ணன் சீமான் தீர்க்கதரிசி போல ஒரு கருத்தை வெளியிட்டார்.”கடந்த 50 ஆண்டு கால அரசியல் என்பது கருணாநிதி வாழ்க, கருணாநிதி ஒழிக என்கிற இரண்டு மட்டும் தான்.

அடுத்து வருகிற 50 ஆண்டுகால அரசியல் என்பது நாம் தமிழர் வாழ்க, நாம் தமிழர் ஒழிக என்கிற இரண்டு மட்டும்தான்.”இப்போது அதுதான் நடக்கிறது. எல்லோருக்கும் நாம் எதிரி. ஆனால் நாமோ இவர்களில் 99 சதவீதத்தினரை பொருட்படுத்துவது கூட இல்லை. அண்ணன் சீமான் சொன்னது போல “எங்களை எதிர்பபவர் எல்லாம் எங்கள் எதிரியல்ல ‌. நாங்கள் யாரை எதிர்க்கிறோமோ அவர் மட்டுமே எங்கள் எதிரி.”இந்த மண்ணில் தமிழ்த்தேசியம் என்ற கருத்துரு ஒரு சிறு குழுவாக எழுந்து,இருந்து முடிந்துவிடும் என இவர்கள் நம்பினார்கள்.

கடந்த கால வரலாறும் அப்படித்தான். எங்களுக்கு முன்னால் இருந்த எத்தனையோ தமிழ்த்தேசிய மூத்தவர்கள் கூட தமிழ்த்தேசியம் ஒரு வெகுசன கருத்தியலாக மலராது என நம்பினார்கள். ஏனெனில் திராவிடம் என்ற மகா பூதம் காலம் காலமாய் தமிழ்த் தேசியம் என்ற மலரத் துடித்த இனமான உணர்ச்சியை ஒவ்வொரு காலகட்டத்திலும் விழுங்கி செரித்துக் கொண்டிருந்தது.ஆனாலும் விடாப்பிடியாக அண்ணன் சீமான் இந்த முறை வழமை விதியை மாற்றி எழுத தொடங்கினார். அசாத்திய உழைப்பினால் இவர்களது நம்பிக்கையை பொய்ப்பித்தார். தன்னம்பிக்கை கொண்ட ஒரு மனிதனின் தனி வரலாறு அது.இவர்கள் எல்லோரும் இத்தனை ஆண்டுகாலம் கேள்வி கேட்க முடியாத புனித பிம்ப முகங்களோடு உலா வந்தார்கள். ஊடகங்களில் எல்லாம் தாமே என்று படம் காட்டினார் கள். ஆனால் உலகம் உள்ளங்கையில் அலைபேசி வழியாக வந்து உட்கார தொடங்கும்போது பேருந்து செல்லாத கிராம வீதிகளில் கூட அண்ணன் சீமான் அலைபேசி திரைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்.

எங்கிருந்தோ வந்த எதிர்பாராத தொழில்நுட்ப வளர்ச்சி தமிழ்த்தேசிய எழுச்சிக்கு உரம் இட்டது.இனி இவர்கள் இறுதியாக நம்பியது, நம்புவது அவதூறு என்கின்ற ஆயுதத்தை மட்டுமே. இளைஞர்கள் வெகுவாக உள்ள சமூக வலைதளங்களை ஏறக்குறைய தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற அமைப்பாக நாம்தமிழர் எழத் தொடங்கியபோது இவர்கள் அவதூறு ஆயுதங்களைக் கொண்டு பொய்களை வீசத் தொடங்கினார்கள். எதிர்வினை ஆற்ற இளைஞர்கள் எழுந்தபோது இவர்கள் கட்டுப்பாடற்றவர்கள், திட்டுகிறார்கள், கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றெல்லாம் கத்தி கூப்பாடு போட்டார்கள். கூட்டம் சேர்க்க முயன்று சோர்ந்தார்கள். கடைசியில் தாங்களே ஒரு கூட்டம் என தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக் கொண்டார்கள்.

ஆனாலும் ஒரு புறம் நாம் தமிழர் இவர்கள் கண்ணெதிரே வளர்ந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய இளைஞர்கள். ஒவ்வொரு ஊரிலும் புலிக் கொடி மரங்கள்.இவர்களும் நம்பிக்கை இழக்காமல் அவதூறு சளி பிடித்து இருமிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் இளைஞர்களோ, ஒவ்வொரு நாளும் பல்கி பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்.முடிவாக நாம் உணர்வது இதுதான்.இவர்கள் எதிர்க்கவில்லை என்றாலும் நாம் வளர்வோம். எதிர்த்தாலும் நாம் வளர்வோம்.

ஏனெனில் இது நம் காலம்.

நாம் தமிழர் காலம்.