அது ஒரு பல்கலைக்கழக வகுப்பு அல்ல. ஆனால் வகுப்பு எடுப்பவர் குறைந்தது 30க்கும் மேற்பட்ட நூல்களை மேற்கோள்காட்டி பேசுகிறார். கனிம வள கொள்ளை நீர் மேலாண்மை, மத்திய மாநில உறவுகள், தமிழரின் தொன்மை, திருக்குறள், பாரதியார் கவிதை, பாரதிதாசன், ஜேசி குமரப்பா எழுதிய தாய்மை பொருளாதாரம் உள்ளிட்ட நூல்கள் என பலவற்றை எடுத்து உரிய இடத்தில் பொருத்தி ஒவ்வொரு நொடியும் தகவல்களை அள்ளித் தரும் இடமாக அந்த அரங்கை மாற்றுகிறார்.
சமகாலத்தில் இத்தனை நூல்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் அதை தன் பேச்சுத் திறனால் மேம்படுத்தி எளிமைப்படுத்தி சொல்கிற திறன் கொண்ட ஒரே ஆளுமையாக அண்ணன் சீமான் தான் இருக்கிறார்.
அவரது பேச்சை பாராட்டுவதற்காக உரை முடிந்த பிறகு எடுத்துப் பேசினேன். இப்போது அந்தப் பேச்சின் தொடர்ச்சியை அதே உத்வேகத்தோடு என்னோடு அவர் விவாதிக்க தொடங்கினார்.
என்னோடு பேசும் போது சிறியதே அழகு என்ற நூல் தொடங்கி தி ஸ்பீச் ஆஃப் சரண்டர் என்கிற நூல் வரை பல விஷயங்களைப் பற்றி தெளிவாக உரையாடுகிறார். எங்கள் உரையாடலில் ஊடே என்னை அப்படியே தொடர்பில் காத்திருக்க சொல்லி அவரை சந்திக்க வருபவர்களிடம் பேசிவிட்டு மீண்டும் எந்த புள்ளியில் உரையாடல் நின்றதோ அதே புள்ளியில் அவர் தொடங்கி பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு அவைக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை அவர் கடுமையாக திட்டமிடுகிறார்.
அவர் அடிக்கடி சொல்வது போல
“கடுமையான பயிற்சி, எளிதான வெற்றி.”
இன்னும் பல மணி நேரம் பேசுவதற்கான தகவல்களோடு அவர் தயாராகி வந்திருக்கிறார். கடும் வாசிப்பு மற்றும் உழைப்பின் வாயிலாக அடைந்த மேன்மை அது.
இரவு பகலாக குறிப்புகள் எடுத்து ஒவ்வொரு அரங்கிற்கும் அவர் தயாராகும் முறைமை போர்க்களத்திற்கு தயாராகும் திறன்பட்ட அரசனுக்குரியது.
அண்ணன் சீமானிடம் எனக்குக் கவர்ந்த பிடித்தமான விஷயம் எதுவெனில் அவருடைய கடும் வாசிப்பு. சில நேரங்களில் நான் மிரண்டு போயிருக்கிறேன். அரசியல் தொடங்கி சூழலியல், நவீன இலக்கியம், சங்க நூல்கள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் பாடல்கள், வரலாற்று ஆய்வுகள், பாவாணர் ஆய்வுகள் என எல்லாவற்றையும் படிக்கிற திறன். படித்தவற்றை உரிய இடத்தில் பயன்படுத்துகிற பாங்கு. கடுமையான அந்த நினைவாற்றல். இதையெல்லாம் ஒன்று சேர்க்கும் அந்த யுக்தி. இவைகள் தான் மற்ற தலைவர்களை தாண்டி அண்ணன் சீமானை பலராலும் வியக்க வைக்கிறது. விரும்ப வைக்கிறது. பொறாமையினால் எதிரிகளை அதிகம் சம்பாதித்து தருகிறது.
முடிவாக எனக்கு ஒன்று தோன்றியது.
அண்ணன் சீமானை வெல்வதற்கு அவரைப் போலவே படிக்க, பேச, உழைக்க, பல்கலைக்கழக வகுப்பு போல புள்ளி விபரங்களோடு வகுப்பு எடுக்க, நெருப்பு தமிழில் உரையாற்ற,
இன்னொரு சீமான் தான் வேண்டும்.
கண்ணுக்கு எட்டிய தொலைவில் சமகாலத்தில் அப்படி யாரும் இல்லை என்பது தான் நமது பலம்.
அந்த பலத்தோடு நாம் எதிரியோடு மோதுவோம்.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.-குறள்
அண்ணன் சீமான் என்னும் சொல்வல்லான்.
நெல்லையில் நடந்த தமிழக மக்கள் தன்னுரிமை மாநாட்டில் அண்ணன் சீமான் அவர்கள் நிகழ்த்திய இன்றைய மிக அற்புதமான பேச்சு இதோ..
மறுமொழி இடவும்