உனக்கும்
எனக்கும் நடுவே
கைப்பிடி இல்லா
ஒரு கதவு.

அடிக்கடி
கதவு
பூட்டப்பட்டிருப்பதை
நாம் இருவருமே
உறுதி செய்து
கொள்கிறோம்.

இருபுறமும்
பூட்டப்பட்ட பூட்டுக்களின்
உறுதியை
அடிக்கடி
இழுத்துப்
பார்த்து
பரிசோதிக்கிறோம்.

என் சாவி உன்னிடமும்,
உன் சாவி என்னிடமும்,
இருப்பது
நன்றாக தெரிந்தும்
தொலையாத சாவியை
தொலைத்து விட்டதாக
தேடிக் கொண்டிருக்கிறோம்.

கதவு முழுக்க
துளை போட முயன்ற
தழும்புகள்.

குளிர்கால
பின்மாலையில்
கதவின் இடுக்கில் இருந்து
செந்நிற வெளிச்சம்
கசிவதை அச்சத்துடன்
பார்க்கிறேன்.

பாசிப்படர்ந்த
அந்தக் கதவின் மேல்
நீலக்கடல்
ஒன்றின் படம்
வரையப்பட்டு இருக்கிறது.

உடலில்
கருஞ்சிவப்புக்
கோடுகளோடு
ஒரு வெள்ளை மீன்
அதில் நீந்துவது போல
என்னை
பார்த்துக்
கொண்டிருக்கிறது.

அனேகமாக மறுபுறத்தில்
இதே போல
இன்னொரு மீனும்
உன்னையும்
பார்த்துக் கொண்டிருக்க கூடும்.

நள்ளிரவின் திடுக்கிடலில்
பின் கழுத்து வியர்க்க
நான் விழித்துப் பார்த்த போது
அந்த மீன் என்னை பார்த்து இமைத்ததாக தோன்றியது.

உனக்கும் அவ்வாறு தோன்றியிருக்கக்கூடும்.

சில நொடிகள் கழித்து
எனக்கு முன்னால்
தொங்கிக் கொண்டிருந்த
அந்தப் பூட்டை
உடைத்து விடலாமா
என்று எனக்குத் தோன்றியது.

அதே நொடியில்
அந்தப் பக்கம் பூட்டை
உடைக்கும்
சத்தம் எனக்கு கேட்டது.